ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
மற்ற கிரகங்களைப் போலவே செவ்வாயும் ஒரு ஜாதகரின் பூர்வ ஜென்ம பலன்களைப் பொருத்து அந்த ஜாதகருக்கு தன்னுடைய காரகத்துவ மற்றும் ஆதிபத்திய வழிகளில் நல்ல, கெட்ட பலன்களைச் செய்பவர் என்பதால் அவருக்கென்று தனியாக தோஷம் என்பது வழி வழியாக வரப்படும் ஒரு கருத்து என்று வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாமே தவிர அதுவே மாறாத விதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மிகப் பழமையான நூல்களில் செவ்வாய் மேற்கண்ட பாவங்களில் இருக்கும் அமைப்பைப் பற்றி கெடுதலாகக் குறிப்பிடப்படவில்லை. பிறகு வந்தவர்கள் செவ்வாய் சுபத்துவமின்றி இந்த இடங்களில் இருக்கும்போது திருமண பந்தத்தைப் பாதிப்பதை அனுபவத்தில் கண்டதால்தான் இந்நிலை செவ்வாய் தோஷமாக சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ இது மிகைப்படுத்தப் பட்டு ஒரு பயமுறுத்தும் ஜோதிட விதியாக மாறி நிற்கிறது.
செவ்வாய் தோஷத்தைக் கணக்கிடுவதில், அதாவது அது தோஷம்தானா என்று கணிப்பதில் ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவம் தேவைப்படும்.
ஏன் இந்த விஷயத்தை மீண்டும் அழுத்திச் சொல்கிறேன் என்றால் செவ்வாய், குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவால் பார்க்கப்பட்டோ இருந்தால் தோஷமில்லை என்ற விதிவிலக்கு உண்மையில் குருவின் பலத்தைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும்.
குருவின் வீடுகளான தனுசு, மீனத்தில் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் பெறுவார் என்பது மாறாத விதி.
ஆனால் தனுசு, மீனம் தவிர்த்து வேறு இடங்களில் செவ்வாய் இருந்து குருவுடன் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ அங்கே குருவின் வலிமை கணக்கிடப்பட்டு அதன் பிறகே செவ்வாயின் நிலை கணிக்கப்பட வேண்டும்.
உதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் எட்டில் உச்சமாகி, நீச குருவுடன் இணைந்திருக்கும் செவ்வாயை புனிதப்படுத்தும் வலிமையை குரு இழப்பதால் செவ்வாய் தசை நடக்கும்போது, அந்த ஜாதகருக்கு குடும்பத்திலோ வாழ்க்கைத் துணை வழியிலோ செவ்வாய் ஆதிபத்திய விசேஷம் இல்லாத பாபி என்பதால் பாதிப்புகளை ஏற்படுத்துவார். அதேநேரத்தில் இந்த பாதிப்புகள் செவ்வாயே நீசனுடன் இணைந்து வலுவிழப்பதால் குறைவாகவும் இருக்கும். ஆனால் இருக்கும்.
அதேநேரத்தில் கன்னி லக்னத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயை, தனுசில் ஆட்சி பெற்ற குரு பார்வையிட்டால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். கடக லக்னத்திற்கு செவ்வாய் ராஜ யோகாதிபதியாகவே இருந்தாலும் கூட ஏழில் தனித்து எவ்வித சுபத்துவோ, சூட்சும வலுவோ பெறாமல் உச்சம் பெற்றால் கண்டிப்பாக ஏழாம் பாவத்தைக் கெடுத்து திருமண வாழ்வில் நிம்மதியற்ற நிலையைத் தருவார்.
எனவே இங்கு அனைத்து விதிவிலக்குகளும் அதன் உள்ளர்த்தம் புரிந்து கணிக்கப்பட வேண்டுமே தவிர, ஏழிலோ எட்டிலோ செவ்வாய் இருந்தால் தோஷம்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லக் கூடாது.
ஆனால் தனக்குத் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்ள இங்கு யாருக்கும் மனம் வருவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கே மிகச் சிலர்தான்.
எந்த ஒரு ஜோதிடராலும் வேத ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியவே முடியாது. ஜாதகம், ஆரூடம், பிரச்னம் முகூர்த்தம் எனப் பலவகைப் பிரிவுகளை உள்ளடக்கிய இந்த மாபெரும் சமுத்திரமான ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் கடினமான ஒரு மனிதனின் எதிர்கால பலனைச் சொல்லும் ஜாதக முறையைத் தெரிந்து வைத்துள்ள எனக்கு, மிகவும் சுலபமான முகூர்த்தம் குறிப்பதில் அனுபவம் குறைவு.
ஒருவருக்கு எப்போது திருமணமாகும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கத் தெரிந்த என்னிடம் திருமணம் நடத்த தேதியைக் குறித்துக் கொடுங்கள் என்று கேட்டால் திணறுவேன். தனித்து முகூர்த்த நாட்கள் கணிக்க எனக்குத் தெரியாது.
இன்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகூர்த்த தேதிகளையே நான் தருகிறேன். பஞ்சாங்கம் இன்றி முகூர்த்தம் சொல் என்றால் கணக்குப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.
பொதுவாக தோஷம் என்ற வகையில் பார்ப்பதை விட செவ்வாய் இருக்கும் பாவம் பல வகையில் வலிமை இழந்திருந்தால் மட்டுமே அது மணவாழ்வைக் கெடுக்கக்கூடிய வகையில் அமையும் என்பதால் செவ்வாய் தோஷம் என்பதை விட செவ்வாய் இருக்கும் அந்த பாவம் கெட்டிருக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டு பார்ப்பது நல்லது.
உதாரணமாக ஏழில் செவ்வாய் அமர்ந்த வீட்டிற்கு அதிபதியான அந்த ஜாதகத்தின் களத்திர ஸ்தானாதிபதி ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்தோ, நீசம் பெற்றோ, ராகு-கேதுகளுடன் இணைந்தோ பலவீனமாகி, ஏழாம் பாவத்திற்கு சுப கிரகங்களின் பார்வை இல்லாமல், சனி பார்வையோ, சம்பந்தமோ இருந்து ஏழாம் பாவத்தில் அமர்ந்த செவ்வாயின் தசையோ, ஏழுக்குடையவனின் தசையோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் ஏழாம் பாவத்தோடு சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசை நடக்கும் போது மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கைத் துணை பாதிக்கப்படும்.
எனவே இதற்கு செவ்வாயின் மேல் மட்டும் பழியைப் போடாமல் மற்ற கிரகங்களையும் பார்ப்பது நல்லது.
மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை என்று சொல்லப்படுவதும் பொதுவானதுதான். இது முன்னிரு லக்னங்களுக்கு செவ்வாய் லக்னாதிபதியாகவும், பின்னிரு லக்னங்களுக்கு அவர் ராஜயோகாதிபதியாக வருவதாலும் சொல்லப்பட்டது. இதிலும் செவ்வாயின் சுபத்துவம் மற்றும் சூட்சும வலு கவனிக்கப்பட வேண்டும்.
மேஷ, விருச்சிகத்திற்கு செவ்வாய் எட்டில் இருப்பது மற்றும் கடக, சிம்மத்திற்கு ஏழில் இருப்பது ஆகிய நிலைகள் நுணுக்கமாக கணிக்கப்பட வேண்டியவை. இந்த நிலைகளில் செவ்வாய் நன்மை செய்யும் அமைப்பில் இருந்தால் மேற்கண்ட லக்னங்களுக்கு கண்டிப்பாக தீமைகள் இருக்காது. இங்கே செவ்வாய் தோஷம் என்பதும் கிடையாது.
இன்னுமொரு விதிவிலக்கான செவ்வாய், சூரியனுடன் இணைந்தாலும் ராகு,கேதுக்களுடன் இணைந்தாலும் தோஷம் இல்லை என்பது இவர்களுடன் இணையும் செவ்வாய் வலுவிழப்பார் என்பதால் ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
மிகக் கெடுதல் தரும் நிலைகளில் லக்னத்திற்கோ, ராசிக்கோ ஏழு, எட்டு என்ற அமைப்பில் செவ்வாய் இருந்து அங்கே சூரியன் அல்லது ராகு,கேதுக்களுடன் இணைந்திருந்தால் கெடுதல் செய்ய மாட்டார். அதேநேரத்தில் செவ்வாய் தன் வலிமையை இழக்கும்படி இவர்களுடன் மிகவும் நெருங்கி இருக்க வேண்டும்.
சூரியனுடன் செவ்வாய் மிக நெருங்கும் நிலையில் அவர் அஸ்தமனம் அடைந்து வலுவிழப்பார். ராகுவிடம் எட்டு டிகிரிக்குள் இணைந்தால் கிரகணமாகி முற்றிலும் பலவீனமாவார்.
எனவே ஒரு ராசியில் இவர்களுடன் செவ்வாய் இணைந்திருந்தாலே தோஷம் இல்லை என்று கருதாமல் இவர்களுடன் குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கி பலம் இழந்திருக்கிறாரா என்பதைக் கணிக்க வேண்டியது அவசியம்.
சில நிலைகளில் செவ்வாய், சூரியனுடனோ, ராகு, கேதுக்களுடனோ ஒரே ராசியில் இணைந்திருப்பதைப் போலத் தோன்றினாலும் இவர்களுக்கிடையே இருபது டிகிரிக்கு மேல் இடைவெளி இருந்தால் நிச்சயம் செவ்வாய் வலுவுடன் இருப்பார். அப்போது கணிக்கும் பலன் தவறிப் போகும். எனவே செவ்வாய் இணைந்திருக்கும் தூரத்தைப் பார்க்க வேண்டியது மிக முக்கியம்.
அடுத்து சூரியன், செவ்வாய் இணைவு என்றவுடன் “இடுகதிர் செவ்வாய் கூடி எங்கிருந்தாலும் இவள் வாலிபந்தன்னில் அமங்கலையாவாள்” என்ற பாடலைப் பாடி அந்த ஜாதகத்தை ஒரு ஜோதிடர் ஒதுக்குவாரேயானால் அந்த ஜோதிடரை ஒதுக்கி வைப்பது நலம்.
சூரியன், செவ்வாய் இணைந்த எத்தனையோ இல்லத்தரசிகள் தொங்கத் தொங்க தாலி கட்டிக் கொண்டு தன் எண்பத்தைந்து வயதில் தனது தொண்ணூறு வயதுக் கணவரைப் பரிதவிக்க விட்டு சுமங்கலியாகப் போயிருக்கிறார்கள்.
ஏற்கனவே நான் எழுதியிருப்பதைப் போல ஜாதக அலங்காரம் உள்ளிட்ட விளக்க நூல்களில் நாம் காணும் பெரும்பாலான பாடல்கள் முன்னர் வாழ்ந்து மறைந்த தனி மனிதர்களின் ஜாதகங்களில் இருந்த நிலைகள்தான். அதே ஜாதக நிலைகள், அதே அமைப்புகளில் இன்னொரு மனிதனுக்கு வரப் போவது இல்லை.
மிக அரிதாக ஒரு ஐந்த சதவிகித நிலைகளில், மேற்படி அமைப்புள்ள ஜாதகத்தில் அதைவிட வலுவான வேறு கிரக நிலைகளின் காரணமாக, ஒரு பெண் தன் மாங்கல்யத்தை இழந்திருக்கலாம். அதற்காக பழம் பாடல்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பது தன் ஜோதிட ஞானத்தை வளர்த்துக் கொள்ள நினைக்கும் ஒரு ஜோதிடருக்கு அழகல்ல.
இதுபோன்ற பாடல்கள் நமக்கு ஒரு உதாரணமாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே தவிர நிச்சயமான விதியாக அல்ல. இவைகள் மூலம் ஒரு ஜோதிடர் பலவிதமான கிரக நிலைகளை ஆராய்ந்து தன் திறமையை மேம்படுத்திக் கொள்ளவே அவைகள் சொல்லப்பட்டுள்ளன.
செவ்வாய் தோஷத்திற்கும் தாம்பத்ய சுகத்திற்கும் சம்பந்தம் உண்டா ?
செவ்வாய் தோஷம் பற்றிய இன்னொரு கருத்தையும் சொல்கிறேன்.
பொதுவாக செவ்வாய் வலுப் பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும், ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.
செவ்வாய் வீரியத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் ஒரு ஆணும், பெண்ணும் தாம்பத்திய சுகத்தில் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இருவரின் ஜாதகத்திலும் செவ்வாயின் நிலை கவனிக்கப் படுகிறது.
அதாவது இருவருக்கும் உறவு வைத்துக் கொள்ள தேவைப்படும் பலம் எனும் வீரியம் சமமாக உள்ளதா அல்லது தாம்பத்திய சுகத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுமா, அதாவது ஒருவருக்கு உறவில் அதிக ஆசையும், இன்னொருவருக்கு குறைவான நாட்டமும் இருக்குமா என்பதைக் கணிக்கவும் இந்த செவ்வாய் தோஷம் பார்க்கப்படுகிறது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
அருமையாகவும்,அழகாகவும் அங்காகரகன் பற்றி விளக்கியுள்ளீர்கள்.நன்றிகள் பல.
ஐயா…எனக்கு மேஷ லக்னம் உத்திர நட்சத்திரம் கண்ணி ராசி.7ல் செவ்வாய் இருந்து அதை சனி பார்த்தால் தோசம் இல்லை என்று சொல்கிறார்கள்.சிலர் தோசம் உண்டு என்றும் சொல்கிறார்கள்…தயவுகூர்ந்து தாங்கள் விளக்கங்கள் ஐயா..(இரா.இரத்னராஜா.ஆவுடையார்கோயில்.
உண்மை-நான் கன்னி லக்னம்-செவ்வாய் தசையின் போது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சந்திராஷ்டமம் தான்.
Very nice
Dear sir i want to learn direct classes from you where is ur classes goingon
வணக்கம்
ஏதேனும் சந்தேகங்களுக்கு எனது 8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
வணக்கம்
தேவி
ADMIN
காலசர்ப்ப தோஷம்
Thanks.your every words are excellent.
wonderful explanation
This article is very useful and also more informative. Hats off sir.