adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
சந்திரனின் செயல்பாடுகள் என்ன? C-010 – Chandhiranin Seyalpaadukal Enna?
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 
 
கைப்பேசி எண் : 8681 99 8888
 
சந்திரன் நீரைக் குறிக்கும் ஜலக்கிரகம் என்பதாலும் அவருடைய ராசியான கடகம் நீர் ராசி எனப்படுவதாலும், ஒருவருக்கு கடகத்தில் இருக்கும் கிரகத்தின் தசை நடைபெற்றாலோ அல்லது சந்திரன், சர ராசிகள் எனப்படும் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தாலோ ஒருவர் சந்திரனின் தசையில் கடல் தாண்டி வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்.
 
அதேபோல கடல் சம்பந்தப்பட்ட இடங்களிலும், ஆற்றோரங்களிலும், நீர் நிலைகளிலும், கப்பல் மற்றும் துறைமுகங்களிலும் ஒருவரை வேலை செய்ய வைப்பவரும் சந்திரன்தான்.

ஜாதகத்தில் சந்திரன் பத்தாமிடத்திற்கு அதிபதியாகியோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலோ அவருக்கு திரவப் பொருட்கள் மூலமான தொழில் அமையும். சந்திரனின் வலுவுக்கு ஏற்றார் போல ஜாதகர் ஜூஸ்கடை, மினரல் வாட்டர், பால் வியாபாரம், மதுபானங்கள் போன்ற தொழில்களைச் செய்வார்.
 
ஒன்பது கிரகங்களிலும் சந்திரன் ஒருவர் மட்டுமே வேகமான இயக்கம் உடைய சீக்கிரக் கிரகம் என்பதால், சந்திரனை ராசிப்படியோ, லக்னப்படியோ தொழில் ஸ்தானாதிபதியாகக் கொண்டவர்கள், அல்லது சந்திரன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டவர்கள் உற்பத்தியாகி உடனே அழியும் பொருட்களை விற்பவர்களாக, அதன் மூலம் லாபம் அடைபவர்களாக இருப்பார்கள்.
 
சந்திரனின் சில குறிப்பிட்ட யோகங்கள் மகரம், கும்பம், துலாம், விருச்சிகம், மிதுனம், கன்னி எனப்படும் ஆறு லக்னங்களுக்கும் முழுமையான பலன்களைத் தராது. அதிலும் சனியின் மகரம், கும்பம் லக்னங்களுக்கு சந்திரன் நல்ல பலன்களைத் தரமாட்டார் என்பதால் சந்திரன் சம்பந்தப்பட்ட யோகங்கள் இவர்களுக்கு வேலை செய்வது கடினம்.
 
அதேபோல கேந்திராதிபதிய தோஷமும் சந்திரனுக்கு அதிகமாக உண்டாவது இல்லை. அவர் பூரணச் சந்திரன் நிலை பெற்று அல்லது பவுர்ணமிக்கு மிக நெருங்கியிருந்து, கடகம் கேந்திரமாகி அதில் அமரும்போது மட்டுமே கேந்திராதிபத்திய தோஷ நிலை பெறுவார். பெரும்பாலும் மகர லக்னத்திற்கு மட்டுமே இந்த தோஷத்தைச் செய்து வாழ்க்கைத் துணையைக் கெடுக்கிறார்.
 
உத்தரகாலாம்ருதத்தின் பதினேழாவது ஸ்லோகத்தில் மகாபுருஷர் காளிதாசர் கிரகங்களின் சுப, அசுபத் தன்மையைக் குறிப்பிடும்பொழுது சூரியனுக்கு நேர் எதிரில் பவுர்ணமியன்று இருக்கும் பூரணச் சந்திரன் குருவுக்கு நிகரான முழுச் சுபர் என்று சொல்லியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சந்திரன் தனது நண்பர்களின் லக்னங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை செய்வார்.
 
அதேபோல ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி தவிர்க்க முடியாத அமைப்பாகக் கருதப்படுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் என்னவெனில், உலகின் வேறு எந்த ஜோதிட முறைகளிலும் இல்லாத, வேத ஜோதிடத்திற்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பான உடுமகா தசை எனப்படும் தசா,புக்தி அமைப்பு, ஒருவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதுதான்.
 
அதாவது ஒருவர் இந்தப் பூமியில் பிறந்தது முதல் அவர் இறக்கும் வரையிலான, அவரது வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தும் அவர் பிறக்கும் நேரத்தில் சந்திரனுக்குப் பின் இருக்கும் நட்சத்திரத்திலும், அதனையடுத்து அவர் இருக்கப் போகும் நட்சத்திரங்களின் தொடர்ச்சியிலுமே அமைகிறது.
 
இதற்கு கோட்சாரம் எனப்படும் சந்திரனின் அடிப்படையிலான தினசரி கோள் இயக்கங்கள் துணை நிற்கின்றன.
 
மனிதனின் வாழ்வை நூற்றியிருபது வருடங்களாகத தொகுத்து, அதனைச் சமமற்ற ஒன்பது பங்குகளாகப் பிரித்து, ஒருவனின் துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம் முதல் தூக்கிக் கொண்டு போகும் கிழப்பருவம் வரை அவனுக்கு என்ன பலன்கள் நடக்கும் என்று ஜோதிடத்தில் கணிக்க முடிவது சந்திரனுக்குப் பின் நிற்கும் நட்சத்திரங்களை வைத்துத்தான்.
 
கிரகங்களின் ஒளியை வைத்து ஒருவனின் உடல், மனம், குணம் போன்றவைகள் வடிவமைக்கப்படும் போது, அதைவிட மகத்தான சூரியனைப் போன்ற நட்சத்திரங்களின் நிரந்தர ஒளியை உள்வாங்கி, ஒரு இரட்டைப் பிரதிபலிப்பான் போல செயல்பட்டு, செயல்களையும் அதன் மூலம் சம்பவங்களையும் உருவாக்கி மதி எனும் சந்திரன் மனிதனை வழிநடத்துகிறான்.
 
இங்கு இரட்டைப் பிரதிபலிப்பான் என்ற வார்த்தையை ஏன் உபயோகப் படுத்துகிறேன் என்றால், மற்ற கிரகங்கள் அனைத்தும் சூரியனின் ஒளியை மட்டுமே வாங்கி ஒளிக் கலப்பு செய்து பூமியின் உயிரினங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில், சந்திரன் ஒருவர் மட்டுமே சூரிய ஒளியையும், சூரியனைப் போன்ற நமது கேலக்சியின் மற்ற முக்கிய நட்சத்திரங்களின் ஒளியையும் உள்வாங்கி பூமியில் செயல்களை நடத்தி வைக்கிறார்.
 
இதற்கு சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருப்பதும், அவர் மட்டுமே இருப்பதும் அதாவது மற்ற கிரகங்களுக்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட துணைக் கோள்கள் இருக்கும் நிலையில், பூமிக்கு, சந்திரன் ஒருவர் மட்டுமே எனற நிலை அமைந்ததும் ஒரு காரணம். இதைப் பற்றிய என்னுடைய ஆய்வுகளை பின்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விளக்குகிறேன். இப்போது சந்திரனுடன் நிறுத்திக் கொள்வோம்.
 
நிறைவாக சந்திரன் ஒரு ஜாதகத்தில் நன்மை தரும் அமைப்பில் இருந்து அவர் நல்ல நிலையிலும் இருந்தால் கீழே நான் குறிப்பிடும் விஷயங்களில் ஜாதகருக்கு நன்மைகளும், கெடுதல் தரும் அமைப்பில் இருந்தால் தீயபலன்களும் நடைபெறும். இவற்றையே ஜோதிடம் ஒரு கிரகத்தின் செயல்பாடுகள் என்ற அர்த்தத்தில் காரகத்துவங்கள் என்று குறிப்பிடுகிறது.
 
இதையே வேறுவிதமாக, சந்திரன் ஒருவரின் ஜாதகத்தில் சுபத்துவமாக இருப்பின் கீழ்க்காணும் அமைப்புகளில் நன்மைகளும், பாபத்துவமாக இருப்பின் இதே விஷயங்களில் தீமைகளும் நடக்கும் என்றும் சொல்லலாம்.
 
மனம் அல்லது புத்தி, அம்மா, காய்கறிகள், பூ, இளம்பெண், கலைகளில் ஆர்வம், நீர் சம்பந்தமானவை, கடல், கப்பல், நெல், அரிசி, பால், வெள்ளி, வெண்கலம், அடிக்கடி பிரயாணம், கிணறு, குளம், ஆறு போன்ற நீர் நிலைகள், ஆஸ்துமா போன்ற நோய்கள், வெளிநாட்டுப் பயணம், இரவு, முத்து, தயிர், வெள்ளை, நாற்பத்தெட்டு நிமிடம் கொண்ட ஒரு முகூர்த்த நேரம். உப்பு, களையான முகம். தேன், உடனே முடிவை மாற்றுதல், அழகு மற்றும் அழகு சாதனப் பொருட்கள், பனி, இரவில் வேலை செய்தல், மேற்குத் திசை சம்பந்தமான விஷயங்கள், மீன் உள்ளிட்ட நீரில் வாழும் உயிரினங்கள், பட்டு, மெல்லிய துணி.போன்றவை சந்திரனின் காரகத்துவங்கள் ஆகும்.
 
சந்திரன் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவருக்கு மேலே சொன்ன விஷயங்களில் சாதகமற்ற பலன்கள் நடக்குமானால் சந்திரனின் பாதிப்பு நீங்க கீழ்கண்ட பரிகாரத்தைச் செய்வது நல்லது.
 
ஒரு வளர்பிறைத் திங்கட்கிழமை சந்திர ஹோரையான இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள், ஒரு எவர்சில்வர் தட்டில், கேரளப் பெண்கள் அணிவது போன்ற பாதி வெண்மை நிறம் கொண்ட சேலை ரவிக்கை, ஒரு லிட்டர் பால், ஒரு வெள்ளிக்காசு, ஒரு முத்து, இரண்டு முழம் மல்லிகைப்பூ வைத்து முப்பத்தைந்து வயதிற்கு மிகாத ஒரு இளம் வயது சுமங்கலிப் பெண்ணிற்கு ஓடும் நீருக்கருகில் வைத்து தானம் செய்ய வேண்டும்.
 
ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருக்கும் நிலையிலும், சந்திரன் தீயவராகி வலுக் குறைந்திருக்கும் நிலையிலும் இந்தப் பரிகாரத்தைச் செய்யக் கூடாது. பலன்கள் தலைகீழாக மாறும்.
 
சந்திரனுடைய திருத்தலங்கள் எவை..?
 
சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, நன்மை தரும் பாவங்களுக்கு அதிபதியாகி பலவீனம் அடைந்திருந்தாலோ, அவருக்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் சந்திர வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும். கும்பகோணம் அருகில் உள்ள திங்களூர் என்ற ஊரில் இருக்கும் திருக்கோவில் சந்திர ஸ்தலம் எனப் புகழ் பெற்றது. இந்த ஸ்தலத்தில் சந்திரனை லக்னாதிபதியாகவோ, யோகாதிபதியாகவோ கொண்டவர் தன்னுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வழிபட்டு குறைந்தது ஒரு ஜாமநேரம் கோவிலுக்குள் இருப்பது சந்திர வலுவைக் கூட்டும். சென்னையில் இருப்பவர்கள் குன்றத்தூரில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் செல்லும் வழியில் உள்ள சோமங்கலம் என்ற ஊரில் அருள் பாலிக்கும் சோமநாதீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று வழிபடலாம். திங்கள்கிழமைதோறும் செல்வது சிறப்பு. குறைந்தது ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் உள்ளே இருக்க வேண்டும். சேக்கிழார் பெருமானால் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இத்திருத்தலம் வடதிங்களூர் என்று புகழ்பெற்றது. தென்மாவட்டங்களில் இருப்பவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதியாகி அருள் புரிந்து வரும் சோமப்பா சாமிகளின் திருவிடத்தில் திங்கட்கிழமையோ அல்லது பவுர்ணமி தினமன்றோ சென்று வழிபடலாம். திருவண்ணாமலையில் பவுர்ணமியன்று கிரிவலம் செல்வதும் சந்திர பரிகாரம்தான். எல்லாம் வல்ல இறைவன், ஏழுமலைகளும் குனிந்து நிற்க தானுயர்ந்து நிற்கும் பெருமாள், என்னைத் தரிசிக்க உனக்கு ஒரு நொடி போதும் என சிக்கனம் காட்டி குபேர சம்பத்தை வள்ளலாக அள்ளித் தரும் அய்யன், அலர்மேல்மங்கைத் தாயாரை மார்மீது கொண்ட எம்பெருமான், வேங்கடமுடையான் வீற்றிருக்கும் புனிதத் தலமான திருப்பதியும் சந்திரனின் வலுவைக் கூட்டும் திருவிடம்தான்.
 
மார்ச் 19, 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது )
 
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

5 thoughts on “சந்திரனின் செயல்பாடுகள் என்ன? C-010 – Chandhiranin Seyalpaadukal Enna?

  1. லக்லத்தில் குரு ஏழில் சனி இருக்க சபசப்த பார்வையால் சனி புதமடைவாரா அல்லது சனியின் பார்வையால் குரு பாதிக்கபடுவாரா குரு சனி இனைவு தோஷமா .

    1. வணக்கம்,

      குருஜி அவர்களின் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் உண்டு. இலவச பதில்களுக்கு மாலைமலர் முகவரிக்கு தபால் அனுப்பவும். ஏதானும் சந்தேவங்களுக்கு எனது
      8681 99 8888 அல்லது 8870 99 8888 என்ற எண்ணிற்கு தொடர் கொள்ளுங்கள்.

      வணக்கம்,

      தேவி
      -Admin

  2. Ayya but rasi chartla charndran thulam la irunthu navamdathula makaram la chandran irunthu sani yoda thasai nadakum pothu marine field la win panna mudiyatha…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *