adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
my cart
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 1 (19.8.2014)

மணிகண்டன் சுப்ரமண்யன்.

நெய்வேலி.
கேள்வி:-
குருஜி அவர்களுக்கு வணக்கம். இத்துடன் 42 வயதான திருமணமாகாத என் நண்பரின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். இவருக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதை பாரம்பரிய ஜோதிட முறைப்படி விளக்கும்படி பணிவுடன் கேட்கிறேன்...
செவ் சந் சனி கே
ராசி
சுக் குரு
ரா சூ பு
பதில்:
மீனலக்னம், ரிஷபராசி, மிருகசீரிட நட்சத்திரம். சனிதசை சுயபுக்தி நடப்பு. (10.12.1973 12.42pm ராணிப்பேட்டை)
லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். ராசிக்கு இரண்டில் சனி. ராசிக்கு எட்டில் ராகு. ராசிக்கு ஏழில் சூரியன் நிற்க, ராசிக்கு ஏழுக்குடையவன் ராசிக்கு பனிரெண்டில் மறைவு. களத்திரஸ்தானாதிபதி புதனுடன் ஆறுக்குடையவன் இணைவு, செவ்வாயின் பார்வை. களத்திரகாரகன் சுக்கிரனுடன் நீசகுரு இணைவு. பாவகப்படி ராசியில் சனி, ராசிக்கு ஏழில் ராகு. லக்னத்திற்கு சனிபார்வை. திருமணம் ஜீவனம் போன்ற மிக முக்கிய அமைப்புகளுக்கு லக்னம் ராசி இரண்டின்படியும் இணைத்து பலன் பார்க்கப்பட வேண்டும். இங்கே லக்னம் ராசி இரண்டின்படியும் திருமண குடும்ப பாவங்கள் வலுவிழந்தன.
அதோடு ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி கெடக்கூடாது. லக்னாதிபதி கெட்டு லக்னமும் பாபர் பார்வை பெறக்கூடாது. அப்படிக் கெட்டால் வாழ்க்கைக்கு ஆதாரமான அடிப்படை சுகங்கள் சரியான நேரத்தில் நேர்மையான முறையில் ஜாதகருக்கு கிடைக்காது.
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி குரு நீசம் பெற்றதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. அவரது ஜென்மவிரோதியான சுக்கிரனுடனும் எட்டு டிகிரியில் இணைந்தார். எனவே இங்கு குரு முழுமையாக வலு இழந்தார். மேலும் வாழ்க்கையின் சரியான பருவமான இருபத்தி நான்கு வயது முதல் நாற்பது வயது வரை பலவீனமான லக்னாதிபதி குருதசை நடந்ததால் லக்னாதிபதியால் ஜாதகருக்கு தேவையானவைகளை செய்ய முடியவில்லை.
 குருவோடு இணைந்த சுக்கிரனும் தன் காரகத்துவங்களை செய்ய மாட்டார்.
  இரா. ஏழுமலை
நாமக்கல்.
கேள்வி:-
இது எனது ஒரே மகள் பிரியதர்ஷினியின் ஜாதகம். பெங்களூரில் வேலை செய்கிறாள். வரும் வரன்கள் அனைத்தையும் ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறாள். நானும் என் மனைவியும் மிகுந்த கவலையில் இருக்கிறோம். என் மகளுக்கு திருமணம் எப்போது? எந்த திசையில் வரன் அமையும்? மாப்பிள்ளை என்ன தொழில் செய்பவர்?
ரா ல குரு சந்
ராசி
 சூ செவ்
சனி பு,சுக் கே
பதில்:
மீனலக்னம் ரிஷபராசி ரோகினி நட்சத்திரம் ராகுதசை புதன்புக்தி நடப்பு. (13.9.1987 7.15pm நாமக்கல்)
லக்னத்தில் ராகு ஏழில் கேது. குடும்பாதிபதி செவ்வாய் ஆறில் சூரியனுடன் மறைவு. ராசிக்கு ஏழில் சனி. களத்திரகாரகன் சுக்கிரன் ஏழில் நீசம். அவரே அஷ்டமாதிபதி. செவ்வாயும் சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள தற்போது லக்னத்தில் உள்ள ராகுவின் தசை நடக்கிறது. ராகுவை செவ்வாய், புதன், நீசசுக்கிரன் பார்க்க சனியின் சாரத்தில் இருக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் மகள் ஒரு அந்நியமத, வேற்று மாநில பையனை காதலித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் பையன் நல்லவனாக, புத்திசாலியாக, சாப்ட்வேர் துறையை சேர்ந்தவனாக இருப்பான். உங்கள் மகளிடம் பக்குவமாய்க் கேளுங்கள். அடுத்த 2015ம் ஆண்டு ஆவணி மாதம் உங்கள் மகளின் இஷ்டப்படியே உங்கள் சம்மதத்துடன் அவருக்கு திருமணம் நடக்கும்.
எச். சர்புதீன்.
பிள்ளையார் கோவில் வீதி,
மேட்டுப்பாளையம் 641301.
கேள்வி:-
இருபது வருடமாக காப்பித்தூள் வியாபாரம். முன்னேற்றம் இல்லை. வேறு தொழில் ஏற்பட்டு தொழிலதிபர் ஆவேனா? ராகுதசை யோகம் என்றார்கள். ஒன்றும் இல்லை. தைமாதம் காளஹஸ்தி சென்று வந்தேன். 
ஜோதிடப்புத்தகம் படித்து ஓரளவு ஜோதிடம் தெரியும். மனைவி, மகள், மகன் ஜாதகம் இணைத்துள்ளேன். சமீபத்தில் வண்டியிலிருந்து விழுந்து கால் உடைந்து இப்பொழுதுதான் சுகமாகி வருகிறேன். என்ன தடை உள்ளது? எந்த ஸ்தலம் எனக்கு யோகம்? பரிகாரஸ்தலம் எது? குருஜி அவர்கள் நல்ல தீர்வு சொல்ல வேண்டுகிறேன்.
சூ சந்,பு சனி
சுக் ராசி கே
ரா
செவ் குரு
பதில்:
ரிஷபலக்னம், மேஷராசி, பரணி நட்சத்திரம். (29.03.1971. 10.45பகல் மேட்டுப்பாளையம்) ராகுதசை சனிபுக்தி நடப்பு.
ராகுதசை நடப்பில் உள்ளதால் அந்நிய மதமான இந்து மதத்தின் மீதும், ஜோதிடத்தின் மீதும் அதீத ஈடுபாடு. காபித்தூள் வியாபாரம் சரியே. இதிலேயே முன்னேற முடியும். ராகுவிற்கு செவ்வாய், சனி, தொடர்பு இருந்தால் யோகம் செய்வது கடினம். ஆயினும் அவர் மகரராகு என்பதால் கெடுதல் செய்ய மாட்டார். உங்களுக்கு ராகு செவ்வாய் சாரம் வாங்கி நீச சனியின் பார்வையில் இருக்கிறார். தசையின் பிற்பகுதியில் யோகம் இருக்கும்.
ஜோதிடம் தெரியும் என்கிறீர்கள்... பனிரெண்டில் நீசமாகி மறைந்து, சந்திரனுடன் இணைந்து எனது தியரிப்படி சூட்சும வலுப்பெறாமல் ஆறாம் வீட்டைப் பார்க்கும் சனி தன் புக்தியில் காலை நொண்டி ஆக்கத்தானே செய்வார்? அதிலும் மகன் அகமதுவின் மீனராசிக்கு கடந்த இரண்டரை வருடமாக அஷ்டமச்சனி. குடும்பத்தில் மகன், மகளின் அஷ்டமச்சனி தந்தையைப் பாதிக்கத்தான் செய்யும்.
அடுத்து மகளும், நீங்களும் மேஷராசி என்பதால் இருவருக்கும் அஷ்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது. இருக்கின்ற தொழிலை நல்லபடியாக கண்ணும், கருத்துமாக பார்த்து வந்தாலே போதும். புது முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.
அஷ்டமச்சனி முடிந்ததும் யோகம் உண்டு. ராசிக்கும் லக்னத்திற்கும் பத்திற்குடையவரான ஜீவனாதிபதி சனி பலவீனம் அடைந்தது தோஷம்தான். அதிலும் அவர் சந்திரனுடன் இணைந்ததால் நீங்களே ஸ்டெடி மைன்ட் இல்லாதவராக இருப்பீர்கள். லக்னாதிபதி பத்தில் உள்ளதால் பெரிய கஷ்டங்கள் எதுவும் வந்து விடப்போவது இல்லை. நிரந்தர தொழில் இருக்கும்.
ராகுதசை முடியும் வரை வருடம் ஒரு முறை ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்யவும். உங்களுக்கு உகந்த யோகஸ்தலம் கஞ்சனூர் மற்றும் ஸ்ரீரங்கம்.
பி. முத்துக்காளி.
சேலம்.
கேள்வி:
விவாகரத்தான எனக்கு மீண்டும் எப்பொழுது திருமணம் ஆகும்? குடும்பச் சொத்து வழக்கு எப்பொழுது தீரும்? இதுவரை நல்ல தொழில் இல்லை. பத்து பைசா கையில் தங்குவதும் இல்லை. முன்னேற்றம் எப்பொழுது? பரிகாரம் என்ன?
சந் கே
 ல ராசி குரு
 சனி
பு செவ் சூ சுக்  ரா
பதில்:
கும்பலக்னம் மீனராசி உத்திரட்டாதி நட்சத்திரம் (11.11.1978. 1.30 பகல் சேலம்) சுக்கிரதசையில் சந்திர புக்தி நடப்பு.
லக்னத்திற்கு ஏழில் சனி, ஏழுக்குடைய சூரியன் நீசம், ராசிக்கு ஏழில் ராகு. ராசிக்கு எட்டில் சுக்கிரன் ஆட்சி வக்ரமாகி நீச சூரியனுடன் இணைவு.
ஒரு ஆணின் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் களத்திரகாரகனான சுக்கிரன் கெட்டால் அவருக்கு தசரதமகாராஜாவை போல அறுபதினாயிரம் மனைவிகள் இருந்தாலும் ஒரு மனைவியிடம் கூட நிம்மதி இருக்காது.
உங்களுக்கு கும்பலக்னமாகி ஆறுக்குடைய சந்திரன் இரண்டாம் வீட்டில் அமர்ந்ததால் குடும்பபாவமும், ஏழில் சனி அமர்ந்ததால் மனைவி பாவமும் கெட்டது. தவிர உங்கள் லக்னத்தை பத்தில் உள்ள செவ்வாயும் ஏழில் உள்ள சனியும் பார்ப்பதால் நீங்களே எதற்கும் ஒத்துவராத ஆளாகத்தான் இருப்பீர்கள்.
சுக்கிரன் ஆட்சி வக்ரமாகி, கெட்டும் போனால் மனைவி சுகம் கிடைப்பது கடினம். மேலும் ஒரு பெண்ணை நல்லபடியாக பார்த்துக்கொள்ளும் திறனும் இருக்காது. உங்களுக்கு புத்திரகாரகன் குரு உச்சம் பெற்று புத்திர ஸ்தானாதிபதி புதனை பார்ப்பதால் குருபுக்தியில் குழந்தை பிறக்கும் அமைப்பு உள்ளது. உரிய பரிகாரங்களை செய்யுங்கள். ஏழுக்குடைய சூரியனின் சாரம் பெற்று ராசிக்கு ஏழில் அமர்ந்த ராகு புக்தியில் அடுத்த திருமணம் நடக்கும்.
குரு புக்தியிலேயே வழக்கும் முடிவுக்கு வரும். பரிகாரங்கள் எழுத மாலைமலரில் இடம் போதாது.
எஸ். ராஜ்குமார்.
சேலம் - 2
கேள்வி:
குருஜி அவர்களுக்கு வணக்கம். படிப்பு, மனைவி, குழந்தை, தொழில், உறவு, நண்பர்கள் யாரும் எனக்கு சரியாக அமையவில்லை. உள்ளூர் ஜோதிடர் எனது ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் கெட்டு விட்டது என்கிறார். பரிகாரம் என்ன? அல்லது வேறு காரணம் என்ன? எனது வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள்..
பதில்:
துலாம் லக்னம், கன்னிராசி, சித்திரை நட்சத்திரம், குருதசையில் ராகு புக்தி நடப்பு.
மற்றது எல்லாம் சரி.... குழந்தை கூடவா அய்யா உங்களுக்கு சரியாக அமையவில்லை? கடவுள் உங்களை ரொம்பத்தான் சோதித்து விட்டார். படிக்க வேண்டிய வயதில் ஊர் சுற்றினால் இப்படித்தான்.
இருபது வயது முதல் முப்பத்தியாறு வயது வரை துலாம் லக்னத்திற்கு வரவே கூடாத குருதசை நடக்கிறது. அடுத்து நடக்க உள்ள சனிதசை அனைத்தையும் சரியாக்கும். உங்களை மனிதனாக வாழவைக்கும். கவலை வேண்டாம். வரும் நவம்பரில் கன்னிராசிக்கு நடக்கும் ஏழரைச்சனியும் முடிவதால் இனிமேல் தொழில் உள்ளிட்ட எல்லாம் சீராகும்.
ஆர். லிங்கபாண்டி.
எருமைகுளம் - 627 651.
கேள்வி:
இன்ஜினியரிங் முடித்துள்ள எனக்கு காவல்துறையில் உயர் அதிகாரியாக வேண்டும் என்பது லட்சியம். தற்பொழுது வங்கி வேலைக்கு படித்துக் கொண்டு இருக்கிறேன். போலிஸ் ஆபீசர் ஆக முடியுமா?
கே ல
சனி ராசி
செவ் சந்,சூ,பு சுக்,ரா குரு
பதில்:
ரிஷபலக்னம், விருச்சிகராசி, அனுஷ நட்சத்திரம் (12.12.1993. 5.43பகல் நெல்லை) கேதுதசையில் சுக்கிரபுக்தி நடப்பு.
போலிஸ் ஆபிசர் ஆகவேண்டும் என்று இலட்சியத்தை வைத்துக்கொண்டு ஏன் வங்கி வேலைக்கு படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்? பறவையைக் குறி பார்ப்பவனுக்கு ஏன் மரமும் கிளையும் தெரிகிறது?
உங்களுக்கு செவ்வாய் எட்டில் மறைவு. லக்னாதிபதி சுக்கிரனும், அரசு வேலைக்கு அதிபதியுமான சூரியனும் ராகுவுடன் இணைந்து சனி பார்வையில் இருக்கிறார்கள். லக்னத்தில் கேது இருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கு ஏழரைச்சனியும் நடக்க இருக்கிறது. லக்னாதிபதியும், லக்னமும் பலவீனமாக இருந்தாலே இலட்சியத்தில் உறுதி இருக்காது.
காவல்துறை அதிகாரி ஆவதற்கு செவ்வாய் வலுவாக இருக்க வேண்டும். உங்களுக்கு பத்தாம் வீட்டை ஆறில் மறைந்த குரு பார்ப்பதால் வங்கித் துறையில் வேலை கிடைக்கும்.
ஆர். கோவிந்தன்.
பொன்னம்மாபேட்டை,
சேலம் - 1
கேள்வி:-
ஆறாவது தசையாக கேதுதசை 2020ல் வரவிருக்கிறது. கேதுவில் மரணம் உண்டா? அல்லது 2027 ல் வரும் சுக்கிரதசை வரை ஆயுள் நீடிக்குமா? எனது மரணம் நல்லவிதமாக இருக்குமா? நடப்பு புதன்தசையில் குரு சனி புக்திகள் நல்லது செய்யுமா? தங்களின் அருள் வாக்கினை வேண்டுகிறேன்.
சுக் சூ, பு சந் செவ் சனி,ல
ராசி குரு ரா
கே
பதில்:
மிதுனலக்னம், ரிஷபராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் (26.04.1944 11பகல் ஸ்ரீரங்கம்) புதன்தசையில் ராகுபுக்தி நடப்பு.
நான்கு கிரகங்கள் உச்சம் பெற்று அட்சயதிருதியைக்கு அடுத்தநாள் பிறந்த நல்ல யோகஜாதகம். ஆனால் லக்னத்தில் சனி, செவ்வாய் அமர்ந்து லக்னம் வலுவிழந்ததால் யோகபங்கம்.
தற்பொழுது லக்னாதிபதி தசை என்பதால் அதில் மரணம் இல்லை. அடுத்து வரவிருக்கும் கேதுதசை மூன்றுக்குடைய சூரியனின் சாரம் பெற்று குரு செவ்வாய் பார்வையுடன் எட்டில் இருக்கிறார்.
ராகுகேதுக்கள் தங்களது தசையில் தங்களைப் பார்க்கும் கிரகத்தின் பலனை எடுத்துச் செய்வார்கள். மிதுன லக்னத்தின் பாதகாதிபதியான குருபகவான் உச்சவலுப்பெற்று மாரக வீடான இரண்டாம் வீட்டில் அமர்ந்து கேதுவைப் பார்க்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் விரய வீட்டில் உச்சமாக இருக்கிறார். கேதுவிற்கு வீடு கொடுத்த சனியும் பாவகப்படி பனிரெண்டில் இருக்கிறார்.
மிதுனத்திற்கு வலுப்பெற்ற குருபகவான் பாதகம் செய்வார் என்பதின்படி குருவின் பார்வையைப் பெற்ற அஷ்டமகேது குருவாக மாறி மரணம் தருவார். பனிரெண்டுக்குடைய சுக்கிரன் உச்சம் பெற்று, பனிரெண்டில் ஒரு உச்சகிரகம் உள்ளதால் “எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்” என்று கம்பன் சொல்லியது போல இரவு படுத்தார், காலையில் இல்லை என்று உங்கள் இறுதி சுபமாக இருக்கும்.
குரு சனி புக்திகள் தர்மகர்மாதிபதிகள் என்பதாலும், நடப்பது லக்னாதிபதி தசை என்பதாலும் நல்ல பலன்களையே தரும்.
என். சிவபாலகிருஷ்ணன்.
வீரபட்டி,
எட்டயபுரம்
கேள்வி:-
இப்போது பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறேன். என் ஜாதகப்படி என்ன படித்தால் முன்னேற்றம் கிடைக்கும்?
பதில்:-

இப்போது படிக்கும் படிப்பே உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *