adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மீனத்திற்கு சனி தரும் பலன்கள் C-045 -Meenathirku Sani Tharum Palangal.

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

சனிக்கும், குருவுக்கும் ஒருவிதமான நெருக்கமான புரிதல் உண்டு. எவருக்கும் கட்டுப்படாத இருள் கிரகமான சனி, குருவின் இணைவிற்கும், பார்வைக்கும் மட்டுமே கட்டுப்பட்டு, சுபத்துவமாகி நல்ல பலன்களை அளிப்பார்.
குருவின் வீடுகளான தனுசு, மீனத்தில் தனித்திருக்கும் சனி தன்னுடைய பாப காரகத்துவங்களைத் தருவதில்லை. ஆனால் செவ்வாயுடனோ, ராகுவுடனோ இணைந்தால் பாப விஷயங்களைச் செய்வார்.

பொதுவாக சனி லக்னத்தில் இருப்பது நல்ல அமைப்பு அல்ல என்றாலும் மீனத்திற்கு அவர் லக்னத்தில் இருப்பது கெடுதல்களைத் தராது.


அதேநேரம் சனி லக்னத்தில் இருந்து குரு, ஐந்து, ஒன்பதாம் இடங்களில் உச்சம், நட்பு எனும் நிலைபெற்று சனியைப் பார்த்தால் சனி தசையில் நன்மைகள் இருக்கும். மீனத்தில் சனி அமர்ந்து குருவின் தொடர்பைப் பெறும் போது சனி தசையில் ஜாதகருக்கு ஆன்மிக ஈடுபாட்டினைத் தருவார்.

ஒருவருடைய லக்னம் அல்லது ராசியில் குருவின் பார்வை அல்லது தொடர்போடு, சனி சுபத்துவமும், சூட்சும வலுவும் பெற்று அமரும் போது அந்த ஜாதகருக்கு குரு, சனியின் தசை,புக்திகள் நடக்குமானால் அதீதமான ஆன்மிக ஈடுபாடும், ஞானத் தேடல்களும் உண்டாகும்.

இதுபோன்ற அமைப்பில் ஜாதகர் பூரண ஆன்மிகவாதியாக இருப்பார். அதே நேரத்தில் குருவின் தொடர்பற்று, பாபக் கிரகங்களின் சம்பந்தம் பெற்ற சனி லக்னம் அல்லது ராசியில் இருப்பது நல்ல நிலை அல்ல.

லக்னத்தில் பாபத்துவம் பெற்ற சனி ஒருவரின் குணக்கேடுகளுக்கு காரணமாவார். ஒருவரை கடுமையான பிடிவாதக்காரராக இருக்கச் செய்வதும் , ஊரோடு ஒத்துப் போகாதவராக மாற்றுவதும், சராசரிக்கும் குறைவான உயரத்தைக் கொடுத்து குள்ளனாக்குவதும் லக்னத்தில் இருக்கும் பாபத்துவம் பெற்ற சனி என்பது குறிப்பிடத்தக்கது.

மீனத்திற்கு ஒரு முக்கிய அமைப்பாக லக்னத்தில் சனி அமர்ந்து ஐந்தாமிடத்தில் குரு உச்சமாகும் போது பூரட்டாதி அல்லது தனது சுய நட்சத்திரமான உத்திராட்டாதியில் சனி இருந்தால் தனது தசையில் நல்ல பலன்களைத் தருவார். இதற்கு சனிக்கு வீடு கொடுத்த குரு உச்சமானதும், உச்ச குருவின் பார்வை சனிக்கு ஏற்பட்டதுமான இரட்டிப்பு நிலைகள் காரணம்.இரண்டாமிடத்தில் சனி நீசம் பெறுவது மீனத்திற்கு நல்ல பலன்களைத் தராது. இங்கு இந்த வீட்டின் நாயகனான செவ்வாயுடன் சனி இணைந்திருந்தால் குடும்ப வீட்டில் இரண்டு பெரும் பாபர்கள் இருக்கிறார்கள் என்ற நிலையாகி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் கெடும்.

இந்த அமைப்பினால் தாமத திருமணம் அல்லது இரண்டு திருமணம், பொருளாதார நிறைவு இல்லாத சூழல், பேச்சுக் குறைபாடு அல்லது திக்குவாய், பொய் பேசுதல் போன்ற போன்ற பலன்கள் ஜாதகருக்கு இருக்கும். இங்கே சனி, செவ்வாய் இணையும்போது சனி நீசபங்கம் பெறுவார் என்பதால் ஒரு பாபக்கிரகம் குடும்ப வீட்டில் நீசபங்க வலுப் பெறுவதும் சரியான நிலை அல்ல.

அதேநேரத்தில் உபய லக்னங்களுக்கு லக்னாதிபதி மறைவது நல்ல நிலை என்ற விதிப்படி ஆறாமிடமான சிம்மத்தில் மறைந்து வலுப் பெற்ற குரு இவர்கள் இருவரையும் பார்ப்பது இந்த இடத்தில் சனி, செவ்வாய் அமர்ந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும்.

ஆறாமிடத்தைத் தவிர்த்து துலாத்தில் அமர்ந்து பகை பெற்று குரு இவர்கள் இருவரையும் பார்த்தாலும் பலன் இருக்காது. ஏனெனில் குரு, சுக்கிரனின் வீட்டில் வலுவிழப்பார் என்பதோடு லக்னாதிபதி எட்டாம் வீட்டில் மறைவது ஜாதகத்திற்கே வலுவில்லாத நிலையாகி நீசச் சனியும் குருவைப் பார்ப்பார் என்பதால் ஜாதகருக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

இரண்டில் இருக்கும் சனியை பத்தாமிடத்தில் ஆட்சி பெற்ற குரு பார்ப்பது சனியை புனிதப்படுத்தும் மிக நல்ல நிலை. இதனால் சனி மிகுந்த சுபத்துவம் அடைவார். ஆனால் பத்தாமிடம் எனப்படும் கேந்திர ஸ்தானத்தில் குரு தனித்திருந்தால் அது கேந்திராபத்திய தோஷமாகி ஜாதகரின் தொழில் அமைப்புகளில் நன்மைகள் இருக்காது.

மீனத்திற்கு மூன்றாமிடத்தில் நட்பு வலுப் பெற்று சனி அமர்வது ஒரு அவயோகக் கிரகம், உபசய ஸ்தானத்தில் இருப்பது நல்லது என்ற விதிப்படி நன்மைதான் என்றாலும் இந்த இடத்தில் அமரும் சனி ஐந்து, ஒன்பதாம் இடங்களைப் பார்த்து ஜாதகரின் தந்தையைக் கெடுப்பதோடு, குழந்தை பாக்கியத்திற்கும் தடை செய்வார் என்பதால் மூன்றாமிடத்தில் அமரும் சனி மீனத்திற்கு கொடுத்துக் கெடுப்பார்.

நான்காமிடத்தில் அவர் நட்புநிலை பெற்று அமர்வது நல்ல அமைப்புத்தான். இங்கே அவர் செவ்வாய் அல்லது குருவின் நட்சத்திரமான மிருகசீரிஷம் அல்லது புனர்பூச நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் நல்லவைகளைச் செய்வார். நான்கில் சனி அமர்வதன் மூலமாக ஆறாமிடம் கெட்டு ஜாதகருக்கு நோயற்ற, கடனற்ற நிலை இருக்கும். இதற்கு சூரியனின் அமைப்பும் முக்கியம்.

ஐந்து மற்றும் ஆறாமிடங்களான கடகமும், சிம்மமும் சனிக்கு பகை வீடுகள் என்பதால் இந்த வீட்டில் சனி இருப்பது சனி தசையில் நன்மைகளைத் தராது. நமது மூல நூல்களில் ஆறாமிடத்தில் சனி இருப்பது நன்மையாகச் சொல்லப்பட்டாலும், மீனத்தின் ஆறாமிடமான சிம்மத்தின் நாயகன் சூரியன் சனியின் எதிரி என்பதால் மீன லக்னத்திற்கு சனி ஆறில் இருப்பது பலன் தராது.

அதேநேரத்தில் ஆறில் இருக்கும் சனி பதினொன்றாம் இடத்தில் பரிவர்த்தனையோ, அல்லது குருவோடு தொடர்போ பெற்றிருந்தால் பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார்.

ஏழாமிடத்தில் சனி திக்பலம் பெறுவார் என்பதாலும் இந்த வீடு அவரது நண்பரான புதனின் வீடு என்பதாலும் மீனத்திற்கு ஏழில் இருக்கும் சனி தாமத திருமணம், முறையற்ற திருமணம் போன்றவைகளை ஏற்படுத்துவாரே தவிர மனைவி விஷயங்களில் கெடுபலன்களைத் தருவது இல்லை.

இங்கே சனி அமர்ந்து புதன் நான்கில் ஆட்சி பெற்றோ அல்லது இந்த இடத்திலேயே சனியோடு சேர்ந்து உச்சம் பெற்றோ, சனியோடு இங்கே குரு இணைந்திருந்தாலோ ஜாதகருக்கு தனது தசைகளில் நன்மைகளைத் தருவார்.மீனத்திற்கு எட்டில் இருக்கும் சனி அதிக வலுவான உச்சநிலையை அடைவார் என்பதால் இது நல்ல நிலை அல்ல. பாபக் கிரகங்கள் மறைவிடங்களில் உச்சமடைவது பெரிய கெடுபலன்களைத் தராது என்றாலும் இந்த இடத்தில் உச்சமடையும் சனி தனது கொடிய பார்வையால் குடும்பத்தைக் குறிப்பிடும் இரண்டாமிடம், குழந்தைகளைக் குறிப்பிடும் ஐந்தாமிடம், தொழிலைக் குறிப்பிடும் பத்தாமிடம் ஆகிய இடங்களை பார்ப்பார் என்பதால் உச்சமடையும் சனியால் மேற்கண்ட மூன்று பாவங்களும் கெடும்.

இந்த அமைப்பில் ஜாதகருக்கு தாமத திருமணம், ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண அமைப்பு, வாழ்க்கைத் துணையை இழத்தல் ஆகிய பலன்களும், தாமத புத்திர பாக்கியமும், தொழில் சரிவுகளும் இருக்கும். எனினும் உச்சமடையும் சனியை குரு வலுப் பெற்று பார்த்தால் அவரது கெடுபலன்கள் குறைக்கப்படும்.

மீனத்திற்கு அவயோகியான சனி உபசய ஸ்தானங்களான மூன்று, ஆறாமிடங்களில் மறைந்திருப்பது மட்டுமே நல்ல பலன்களை தரும். எட்டாமிடத்தில் சனி வலுப் பெறுவது நல்ல நிலை இல்லை. மேலும் எட்டில் மறையும் சனியை குரு வலுப் பெற்றுப் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு நேராக சம சப்தம அமைப்பில் மேஷத்தில் நட்பு நிலையில் இருந்து மட்டுமே பார்க்க முடியும்.

இதுபோன்ற சமசப்தம அமைப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது குரு பலவீனமாவார் என்பதாலும், எந்த ஒரு நிலையிலும் சனி தனித்து உச்சம் பெறுவது மீனத்திற்கு நல்ல நிலை ஆகாது.

சில நிலைகளில் சனி சுபத்துவம் பெற்றிருக்கும் போது ஜாதகரை தனது தசையில் வெளிநாட்டிற்கு அனுப்பி பொருள் தேட வைப்பார். இதற்கு இந்த இடம் வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாமிடமாகவும், வெளிநாட்டில் பிழைக்க வைக்கும் சர ராசியாகவும் இருப்பதே காரணம்.

அதேநேரத்தில் ஜாதகர் நிரந்தரமாக வெளிநாட்டில் இருப்பாரா? அல்லது வெளிநாட்டு வேலைக்கு தற்காலிகமாகச் சென்று திரும்புவாரா? என்பதை சுக்கிரன் இருக்கும் நிலை மற்றும் அமைப்பை வைத்தே கணிக்க வேண்டும்.ஒன்பதாமிடத்தில் சனி இருக்கும் நிலையில் இது செவ்வாயின் வீடு என்பதால் அவருக்கு எதிர்த்தன்மையுடைய வீடாக அமையும். மேலும் பாக்கிய ஸ்தானத்தில் சனி இருப்பது நல்ல அமைப்பு அல்ல. இந்த அமைப்பினால் ஜாதகருக்கு நியாயமாக கிடைக்க கூடிய பாக்கியங்கள் அனைத்தும் தடைப்படும்.பாபத்துவம் பெற்ற சனி இங்கிருந்தால் ஜாதகருக்கு தந்தையின் அன்பு மற்றும் ஆதரவு கிடைக்காத சூழல் இருக்கும். தகப்பனார் இருந்தும் இல்லாதவராக இருப்பார். சில நிலைகளில் ஜாதகர் இளம்வயதிலேயே தந்தையை இழப்பார்.பத்தாம் வீடான குருவின் வீட்டில் சனி இருப்பது நல்ல அமைப்புதான் என்பதால் இங்கிருக்கும் சனியை மேஷம் அல்லது சிம்மத்தில் இருந்து குரு பார்க்கும் போது ஜாதகருக்கு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட தொழில் அல்லது சட்டத்துறையில் பணி இருக்கும். சனி அல்லது குரு இருவரின் வலுவைப் பொறுத்து இருவரின் காரகத்துவங்களின் ஏதேனும் ஒன்றில் ஜாதகரின் ஜீவனம் அமையும்.

பதினொன்றாமிடமான மகரத்தில் சனி ஆட்சி பெறுவது நல்லதுதான். பொதுவாக பாபக் கிரகங்களுக்கு பதினொன்றாமிடம் நல்ல இடம் என்பதாலும் பதினொன்றில் இருக்கும் அனைத்துக் கிரகங்களும் நன்மைகளைச் செய்யும் என்பதாலும் பதினொன்றாமிட சனி நல்லவரே.

சர ராசியில் இருக்கும் எந்த ஒரு கிரகமும் வலுவானது எனும் அடிப்படையில் இங்கே மீனத்திற்கு பதினொன்றாமிடம் சர ராசியானதால், சனி இங்கிருப்பது நல்ல நிலைமைதான். இங்கிருக்கும் சனியை குரு ஐந்தில் உச்சம் பெற்று பார்த்தால் குருவும், சனியும் வலுப் பெற்று ஒருசேர லக்னத்தைப் பார்ப்பார்கள். இந்த அமைப்பில் ஜாதகர் ஆன்மிகவாதியாகவும், ஆன்மிகத் துறையிலும் இருப்பார்.

நிறைவாக பனிரெண்டாமிடத்தில் சனி ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலையை அடைந்தாலும் சுப வலுப் பெற்றிருந்தால் ஜாதகர் வெளிநாட்டில் பிழைப்பவராக இருப்பார். லக்னாதிபதி குரு மற்றும் அஷ்டமாதிபதி சுக்கிரனின் வலுவைப் பொருத்து இந்த அமைப்பு அமையும். பனிரெண்டில் சனி சுபத்துவம் பெற்றால் ஒருவர் வக்கீலாகவோ, சட்டத்துறையில் உச்ச பதவியிலோ இருக்க முடியும்.

( ஜன 14 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *