வி. சரண்யா தேவி, கோவை - 2.
கேள்வி :
ஜோதிட அரசனின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். நான் தங்களின் நீண்டநாள் மாலைமலர் வாசகி. 15-3-2016 அன்று ஜோதிட கேள்வி-பதில் பகுதியில் எனக்கு ஒரு பெண் குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தைபிறக்கும் என்று கூறினீர்கள். அதன்படியே 11-5-2017 அன்று எனக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. தங்களுக்கும் மாலைமலருக்கும் நன்றியைதெரிவித்துக் கொள்கிறேன். என் போன்ற எளியோர்களுக்கும் தாங்கள்தரும் பதில்கள் தெளிவாகவும், புரிந்துகொள்ளும்படியாகவும் இருக்கிறது. என் மகனின் ஜாதகத்தில் ஆயுள், கல்வி ஸ்தானங்கள் எப்படி உள்ளது, கடக லக்னத்திற்கு சனியும், புதனும் நன்மை செய்யமாட்டார்கள் என்று எழுதி வருகிறீர்கள். மகனுக்கு அடுத்து அவர்களின் தசைகளே வருவதால் நன்மையா? தீமையா? குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
சுக் | சூ பு | செவ் | |
கே | 11-5-2017, காலை 11.15, திண்டுக்கல் | ல | |
ரா | |||
சனி | சந் | குரு |
ஒரு லக்னத்தின் பாபிகள் என்று சொல்லப் படக்கூடிய அவயோக கிரகங்கள் நன்மை செய்ய வேண்டுமென்றால் ஜாதகத்தில் உபசய ஸ்தானங்கள் என்று சொல்லப் படக்கூடிய 3,6,10,11-ல் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்களால் தீமைகளை விட நன்மைகள் அதிகம் இருக்கும்.
உன்னுடைய மகனின் ஜாதகத்தில் அவயோகர்களான சனி, புதன் இருவரும் 6,10-ம் இடங்களில் இருப்பதால் தீமைகளை செய்ய மாட்டார்கள். மகனுக்கு மேலோட்டமாக பார்த்தால் லக்னாதிபதி நீசமான ஜாதகமாக தெரிந்தாலும் லக்ன நாயகன் சந்திரன் பவுர்ணமிக்கு மிக அருகில் வலுவான அமைப்பில் ராஜ யோகாதிபதியான செவ்வாயின் பார்வையில் இருப்பது யோகம். மேலும் ஐந்தாம் அதிபதி, ஐந்தை பார்ப்பதும். ஒன்பதாம் அதிபதி, ஒன்பதை பார்ப்பதும் சந்திரன் அம்சத்தில் ஆட்சி பெற்றதும் சிறப்பு என்பதால் மகனின் ஜாதகம் எதிர்காலத்தில் கஷ்டம் இல்லாமல் நன்றாக வாழக்கூடிய ஜாதகம்தான். லக்னாதிபதி வலுவாக இருப்பதால் ஆயுள் பாவம் நன்றாகவே இருக்கிறது. நான்காம் அதிபதி உச்சமாகி புதன் உச்சனுடன் சேர்ந்திருப்பதால் நன்றாகப் படிப்பான்.
மணிவண்ணன் நம்பியப்பன், புதூர்பாளையம்.
கேள்வி :
நூற்றாண்டின் பெருஞ்ஜோதிடர் குருஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 2015-ல் கல்லூரி படிப்பை முடித்ததில் இருந்து சரியான வேலை அமையவில்லை. என் அண்ணனும் 2013-ல் டிப்ளமோ முடித்தும் வேலையின்றி வீட்டில் இருந்து வருகிறார். மிகவும் கோபக்காரரான அப்பாவும் இரண்டு வருடங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்ததால் தினமும் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் சென்ற மாதம் என் அப்பா தன் உயிரைத் தானேமாய்த்துக் கொண்டு எங்களை பாவிகளாக்கி தனியே தவிக்க விட்டுச் சென்றுவிட்டார். தகப்பனை இழந்த நிலையில் திக்கற்று நிற்கிறோம். இனி தாயை நல்லபடியாக பார்த்துக் கொள்ள முடியுமா? நல்லதொரு எதிர்காலம் அமையுமா?
பதில்:
கே | |||
சனி | 1-1-1995 அதிகாலை 12.05, திருச்சி | ||
செவ் | |||
சந் சூ,பு | குரு | சுக் ரா | ல |
கன்னி லக்னமாகி தந்தையைக் குறிக்கும் ஒன்பதுக்குடைய சுக்கிரன் அந்த பாவத்திற்கு ஆறில் மறைந்து, ராகுவுடன் இணைந்து தசை நடத்தி எட்டில் அமர்ந்த கேதுவின் புக்தியில் தந்தை தற்கொலை செய்து கொண்டார். ராகு கேதுக்கள் பாபத்துவம் பெற்றாலே இணைந்த கிரகத்தின் ஆதிபத்தியத்தை பாதிப்பார்கள்.
ஜாதக அமைப்பின்படி சிம்மத்தில் சனி, செவ்வாய் சம்பந்தப்பட்டு சூரியன் திக்பலம் இழந்து, அமாவாசை யோகத்தில் இருப்பதால் அடுத்து நடக்க இருக்கும் சூரியதசையில் உனக்கு தந்தை இருக்க கூடாது என்பது ஜோதிட விதி. தகப்பனை இழந்ததால் கலங்க வேண்டாம். எல்லா காரியங்களுக்கும் காரணங்கள் இருக்கின்றன. அனைத்தையும் அறிந்த அவனுக்கு மட்டுமே நடப்பவைகளுக்கான விளக்கங்கள் தெரியும். அடுத்து நடக்க இருக்கும் தசாநாதர்கள் சூரியனும், சந்திரனும் நவாம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றிருப்பதாலும், இருவரும் லக்னாபதி புதனுடன் இணைந்து பத்தாம் இடத்தோடு தொடர்பு கொண்டிருப்பதாலும் உனக்கு மேன்மையான எதிர்காலத்தை தருவார்கள்.
நீ தனுசுராசி என்பதால் அடுத்து வரப் போகும் ஜென்மச்சனி இன்னும் மூன்று வருடங்களுக்கு உன்னை முன்னேற அனுமதிக்காது. சோதனைகள்தான் இருக்கும். கவலைப்படாதே. எதையும் உன்னால் சமாளிக்க முடியும் அளவிற்கு ஜாதகம் வலுவாக இருக்கிறது. வீண் மனக் கோட்டைகள் கட்டுவதை விடுத்து கிடைக்கும் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்று. சந்திரன் வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் உன்னுடைய தாயை உன்னால் நன்றாக வைத்துக் கொள்ள முடியும். மூன்று வருடங்கள் கழித்து நல்ல நிலைமைக்கு வருவாய்.
அ. பழனிவேல், கரடிகுளம்.
கேள்வி :
நானும், மனைவியும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி 2001-ம் வருடம் திருமணம் செய்து கொண்டோம். குழந்தை பிறந்ததும் பிரச்சினை வந்து விவாகரத்துஆகி 16 வருடங்களாக பிரிந்து வாழ்கிறோம். இருவருமே மறுமணம் செய்து கொள்ளவில்லை. நான் மனைவி, மகனுடன் சேர்ந்துவாழ விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? எப்போது சேரமுடியும்?
பதில்:
சுக் | சூ,பு கே | குரு | |
சந் செவ் | 14-4-1977 மாலை 5.30 நெல்லை | சனி | |
ரா | ல |
கன்னி லக்னமாகி ஏழில் தனித்து உச்ச சுக்கிரன் அமர்ந்து களத்திர தோஷம் உண்டான ஜாதகம் உங்களுடையது. கடந்த 19 ஆண்டுகளாக நடந்த பாபவலுப் பெற்ற சனி தசை தற்போதுதான் முடிந்திருக்கிறது. இரண்டாம் திருமணத்தை குறிக்கும் 11-க்குடையவன் ஆறில் செவ்வாயுடன் அமர்ந்து, 11-ல் சனி இருப்பதால் உங்களுக்கு இரண்டு திருமண அமைப்பு இல்லை.
தற்போது லக்னாதிபதி புதனின் தசை ஆரம்பித்து இருப்பதாலும், கும்ப ராசிக்கு கோட்சாரப்படி யோகநிலைமைகள் வந்திருப்பதாலும், மனைவி, மகனுடன் நீங்கள் உறுதியாக இணைய முடியும். லக்னத்தை செவ்வாய், சனி பார்ப்பதால் நீங்கள் பிரிந்ததற்கு உங்களுடைய நடவடிக்கைகள்தான் காரணமாக இருந்திருக்கும். தற்போதைய நீண்ட பிரிவினால் கொஞ்சம் பக்குவப்பட்டிருப்பீர்கள். உங்களுடைய நிலைமை மற்றும் எண்ணத்தை சரியாக மனைவிக்கு எடுத்துச் சொல்லும் பெரியவர்களின் துணையுடன் மனைவியை வரும் தை மாதத்தில் அணுகவும். அடுத்த வருடம் நல்ல விஷயம் நடக்கும்.
சிந்துபைரவி, கொன்றைக்காடு.
கேள்வி :
கோடானுகோடி மாணவர்களுக்கு ஜோதிட சூட்சுமங்களை உணர்த்தும் குருவின் பாதம் பணிகிறேன். சமீபத்தில் ஒரு ஆன்மீக இதழில் ராகுவிற்கு ஆட்சி வீடு கும்பம் எனவும், ஜாதகத்தில் ராகு கும்பத்தில் இருந்தாலும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக் காலில் ராகு இருந்தாலும் தோஷம் இல்லை என்று படித்தேன். இது உண்மையா? கடக லக்னத்திற்கு சுக்கிரம் நீசம் அடைவது நல்ல அமைப்புத்தானா என்பதைப் பற்றியும் விளக்க வேண்டுகிறேன்.
பதில்:
ஜோதிடத்தை வெறுக்க வைக்கும் விஷயங்களில் ஜோதிடர்களின் பங்குதான் அதிகமானது. இந்த மகா சாஸ்திரத்தை விளக்குகிறேன் என்ற நினைப்பில் மூலத்தில் ஞானிகள் சொல்லாத, ஏற்றுக் கொள்ள முடியாத சில விஷயங்களை புத்தகங்களில் எழுதி ஜோதிடத்தை பொய்யாக்குவதே ஜோதிடர்கள்தான்.
உங்களைப் போன்ற மாணவர்களுக்கு அடிக்கடி நான் சொல்வது ஞானிகள் அருளிய மூலநூல்களின் மொழிபெயர்ப்பைத் தவிர வேறு எந்த விளக்க நூல்களையும் படிக்காதீர்கள். படித்தால் ஜோதிடம் வராது. தவறாக திசை திரும்பி நீங்களும் குழம்பி ஜோதிடத்தையும் குழப்புவீர்கள்.
இங்கே ஜோதிடர்கள் என்ற பெயரில் தங்களுடைய மேதாவிலாசத்தை காட்ட ஏராளமானோர் யானையைப் பார்த்த குருடனைப் போல விளங்கங்களை எழுதி ஜோதிடத்தை குழப்பியவர்களே அதிகம். இன்றைய சூழ்நிலையில் ஜோதிட புத்தகங்களை எழுதுவது மிகவும் எளிதானது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரை தவிர யாரும் நீண்ட காலம் ஆய்வு செய்து அனுபவப்பூர்வமாக எழுதுவது இல்லை. உண்மையைச் சொல்லப் போனால் பழைய புத்தகங்களில் இருந்து காப்பி அடித்து எழுதுபவர்கள்தான் எப்போதும் அதிகமாக இருக்கிறார்கள். இது போன்றவைகளால்தான் ஜோதிடம் கேலிக்கூத்தாகி விடுகிறது.
ராகு-கேதுக்களுக்கு ஆட்சி வீடு, உச்சவீடு கிடையாது. ஞானிகளின் மூல நூல்களிலேயே இது பற்றிய கருத்துபேதங்கள் உள்ளன. குருவின் கருத்தையே சிஷ்யர் மறுப்பது ராகுவின் விஷயங்களில் இருக்கிறது. ஆட்சி, உச்ச வீடுகள் என்பது முழுமையான பருப் பொருளுடைய கல், மண், பாறை, திரவம், வாயு போன்றவைகளால் ஆன கிரகங்களுக்கு மட்டும்தான்.
ராசிமண்டலம் பனிரெண்டு வீடுகளாக பகுத்தாய்ந்து பிரிக்கப்பட்டு அனைத்து கிரகங்களுக்கும் ஒதுக்கப்பட்டு விட்டன. முழுமையான கிரகங்களாக இல்லாமல் பூமி, சந்திரனின் நிழல் தோற்றங்களான ராகு-கேதுக்களுக்கு ஆட்சி உச்ச வீடுகள் கிடையாது. இதைப்பற்றி ஏற்கனவே மாலைமலரில் எழுதிய ஜோதிடம் எனும் தேவரகசியம் கட்டுரைகளில் தெளிவாக எழுதி இருக்கிறேன். தற்போது அவைகள் புத்தகமாகவும் ஜோதிடம் எனும் தேவரகசியம் என்ற தலைப்பிலேயே வெளி வந்து இருக்கிறது. அவைகளை படித்து பாருங்கள் இன்னும் விளக்கம் கிடைக்கும். எந்த நட்சத்திரத்தில் இருந்தாலும் ராகு தோஷம் தரும் அமைப்பில் இருந்தால் கெடுக்கவே செய்வார். கடக லக்னத்திற்கு சுக்கிரன் நீசமடைவது பாதகாதிபதி வலுவிழக்கிறார் என்ற ஒரு நிலையில் மட்டும் நல்ல அமைப்புதான்.
மகனை மறுபடி பார்ப்பேனா?
ஆர். எம். சிராஜூதின், கோவை.
கேள்வி :
முதல் திருமணத்தில் ஒரு மகன் பிறந்த பின்பு மனைவி கருத்து வேறுபாடு கொண்டு 20 வருடங்களுக்கு முன் மகனை அழைத்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்றுவிட்டாள். மகனைப் பார்க்க அனுமதிக்கவில்லை. நானும் பெரியவர்களையும், நீதிமன்றத்தையும் அணுகியும் பலனில்லை. ஏழு வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் போய் அவனை அழைத்தேன். நான்தான் கூப்பிடுகிறேன் என்று தெரியாமல் வெளியே வந்தவன் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் என்னை திட்டி விட்டுச் சென்றுவிட்டான். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையுடன் இருக்கும் அமைப்பு கிடையாது. அப்படியே ஒன்றுசேர்ந்தாலும் தந்தை இறந்து விடுவார் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா? மாலைமலரில் உங்கள் கேள்வி-பதிலை தவறாமல் படிப்பவன் என்பதால் என் மகனை மீண்டும்சந்திப்பேனா? அவனுடன் இருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று உங்கள்மூலம் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பதில்:
கே | |||
சந் | 15-9-1959 காலை 5.30 கோவை | ||
ல | |||
சனி | குரு | செவ் ரா |
உங்கள் ஜாதகப்படி புத்திர ஸ்தானமான ஐந்தாம் பாவத்தில் சனி அமர்ந்து, அவரை செவ்வாய் பார்க்கிறார். ராசிக்கு ஐந்தாம் இடத்தை சனியும் பார்க்கிறார். புத்திர ஸ்தானாதிபதியான குரு ஐந்திற்கு விரைய பாவமான நான்கில் அமர்ந்திருக்கிறார். ஐந்தில் பாபக்கிரக தொடர்பு இருப்பது கடுமையான புத்திர தோஷம். மகன் பிறந்ததுமே ஐந்தில் அமர்ந்த சனியின் தசை உங்களுக்கு ஆரம்பித்து விட்டதால் மகனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இல்லாமல் போய்விட்டது.
மகனின் ஜாதகத்திலும் தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து, ராசிக்கு ஒன்பதில் சனி இருக்க, ஒன்பதாம் பாவாதிபதியான புதன் அஷ்டமாதிபதியுடன் இணைந்திருக்கிறார். இது தந்தையைப் பிரிகின்ற அமைப்பு. ஆகவே நீங்கள் இருவரும் சேர்ந்து தகப்பன்-மகனாக இருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் உங்கள் இருவரையும் பிரித்த சனிதசை முடிந்திருப்பதால் மீண்டும் மகனை பார்க்கவும், பேசவும் வாய்ப்பு கிடைக்கும். கோட்சாரரீதியாக கும்ப ராசிக்கு நல்ல நிலைமைகள் உள்ளதால் மீண்டும் மகனை பார்க்க முடியும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் இருக்க முடியாது என்பதெல்லாம் முழுமையாக தவறானது. இதுபோன்ற பலன்கள் எல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. ஜோதிடர்களாக சொல்லிக் கொள்வதுதான். எத்தனையோ திருவாதிரை மகன்கள் பெற்ற தகப்பனுடன் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மதிப்பிற்குரிய குருஜீ அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்..
தங்களது பதிலை மாலைமலர் பத்திரிகையில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் குருஜீ. தங்களிடம் வரும் கேள்விகளுக்கு ஆறு வாரங்களுக்குள் பதில் வரவில்லை எனில் அந்த கேள்வி நிராகரிப்பட்டது என தாங்கள் ஒருமுறை மாலைமலரில் எழுதி இருந்தீர்கள். என் விண்ணப்பமும் நிராகரிப்பட்டதோ! என ஐயமுற்றேன் குருஜீ. இருந்தபோதும் நம்பிக்கையோடு காத்திருந்த எனக்கு தங்களது பதில் மிகவும் மகிழ்ச்சியளித்தது. நன்றி குருஜீ!
/// வீண் மனக் கோட்டைகள் கட்டுவதை விடுத்து கிடைக்கும் வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்று.///
என்னும் வரிகளில் தாங்கள் சூட்சமமாக அரசு வேலைக்கான முயற்சிகளை விடுத்து கிடைக்கும் வேலைக்கு செல் என அறிவுறுத்தியதாகவே புரிந்துக்கொள்கிறேன் குருஜீ.
சிம்மம் சனி மற்றும் செவ்வாய் தொடர்பை பெற்று இருப்பதும், சூரியன் திக்பலம் இழந்து நிற்பதும் பலவீனமான அமைப்பு என புரிந்துக்கொள்கிறேன் குருஜீ.
நல்லதொரு சந்தர்ப்பத்தில் என் தாயோடு வந்து தங்களை சந்திக்கிறேன் குருஜீ.
நன்றி!
மகிழ்ச்சிகளுடன்,
மணிவண்ணன் நம்பியப்பன்.
Guruji’s Analysis is too attractive even for a common man like me.
You are asset to all Astrology professionals who are having insufficient exposure and not following Thirukanitham.
Wish you to excel in your Analytics