பி. மோகன்ராம், திண்டுக்கல்.
கேள்வி:
எனக்கு திருமண யோகம் உண்டா? எப்போது நடக்கும்? அடுத்த குருதசை நன்றாக இருக்குமா? அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் தலை தூக்குகிறது. அதற்கு என்ன தீர்வு? பிறந்ததில் இருந்து வறுமையிலேயே வாழ்கிறேன். வாழ்க்கை இப்படியே முடிந்து விடுமா? சொந்தமாக வீடு, வாகன யோகம் உண்டா?
10.30pm 17.12.1981 திண்டுக்கல் | ராகு | ||
சுக் கேது | லக் சந் | ||
சூரி புத | குரு | செவ் சனி |
பதில்:
லக்னமும், ராசியும் ஒன்றாகி இரண்டாமிடத்தில் செவ்வாய், சனி இணைந்திருப்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. வருகின்ற அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் ராகுதசை, சுக்கிரபுக்தியில்தான் தாம்பத்திய சுகம் அனுபவிக்கும் அமைப்பே உருவாகிறது. 2018-ல் திருமணம் நடக்கும்.
தசாநாதன் ராகு யோகத்துவம் இல்லாமல் இருப்பதாலும், சிம்ம லக்னத்திற்கு அவர் கடும்பாவி என்பதாலும் தற்கொலை எண்ணங்கள் தோன்றுகின்றன. ஒருமுறை ஶ்ரீகாளகஸ்தி சென்று வழிபட்டு வரவும். இதுபோன்ற நினைவுகள் வராது. திருமணத்திற்கும் வழி பிறக்கும். அடுத்து நடக்க இருக்கும் குருதசை முதல் வாழ்க்கை சுகப்படும். குருதசையில் சொந்த வீடு, மனைவி, குழந்தைகள் என்று சுகமாக இருப்பீர்கள்.
திருமலை, திருச்சி – 1.
கேள்வி:
நான் கடினமான உழைப்பாளி. 18 வயதில் இருந்தே தொழில் செய்து வருகிறேன். 2006-ல் ஒரு விபத்து நடந்து கால்முறிவு ஏற்பட்டது. அதன் பிறகு 2 ஆப்ரேஷன் செய்து விட்டேன். இன்னமும் கால் சரியாகவில்லை. உழைப்பை மட்டுமே நம்பியுள்ளேன். மிகப்பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. போகாத கோவில் இல்லை. இருக்காத விரதமும் இல்லை. எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? எந்தக் கோவிலுக்குச் சென்றால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்? உடல்நிலை எப்போது சீராகும்? ஆரம்பித்து இருக்கும் சுக்கிரதசையாவது முன்னேற்றமாக இருக்குமா?
சனி | |||
சூரி | 4.10am 18.2.1971 திருச்சி | கேது | |
புத ராகு | |||
லக் சுக் | செவ் குரு | சந் |
பதில்:
நீசம் பெற்று பாபத்துவம் மட்டும் அடைந்த சனியின் வீட்டில் அமர்ந்த புதன் தசையில், சனியைப் போன்று பலன் தரக்கூடிய ராகுவின் புக்தியில் சனியின் செயலான காலை நொண்டியாக்குதல் நடைபெற்றது. அடுத்து நடைபெற்ற கேதுவின் தசையும் எட்டாமிடத்தில் இருந்து தசை நடத்தியதால் இதுவரை கால் குணமடையவில்லை.
தனுசு லக்னத்திற்கு பொதுவாக சுக்கிரன் நன்மைகளை செய்யமாட்டார் என்றாலும் அவரே உங்களுக்கு ராசிநாதன் என்பதாலும், குருவின் வீட்டில் சுபத்துவமாகி தனது ஆறாம் வீட்டிற்கு எட்டில் மறைந்துள்ளதாலும் நல்ல விஷயங்களை உங்களுக்குச் செய்வதோடு காலையும் குணமாக்குவார். சுக்கிரதசை முதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். இன்னும் ஒரு வருடம் சமாளிக்கவும்.
வருடம் ஒருமுறை ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் அல்லது இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் ஒரு யானைக்கு விருப்பமான உணவை உங்கள் கையால் கொடுங்கள். அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தியை வியாழன்தோறும் வழிபடுங்கள். ஒருமுறை ஆலங்குடி சென்று வழிபட்டு வாருங்கள்.
சு. ராமையா, அம்பாசமுத்திரம்.
கேள்வி:
சஞ்சலம் கொண்ட நெஞ்சங்களுக்கு அஞ்சனம் தந்து ஒளியேற்றி வரும் குருஜி அவர்களுக்கு வணக்கம். அளப்பரிய நம்பிக்கையோடு வாழ்ந்து வந்த நிலையில் கடந்த வருடம் என் எட்டு வயது மகள் சிறுநீரக பாதிப்பால் இறைவன் திருப்பாதம் பற்றினாள். ஏற்கனவே மனநலப் பாதிப்பு இருந்த மனைவிக்கு அதுமுதல் நோய் தீவிரமாகி, நான்கு முறை தற்கொலைக்கு முயன்று தற்போது அவளது தகப்பனார் வீட்டில் இருக்கிறார்கள். அனைவருக்கும் ஆலோசனை வழங்கி வந்த எனக்கு தனிமைத் துயரும், மகளின் இழப்பும் வாட்டுகிறது. வயதான பெற்றோரைக் கவனிக்க வேண்டிய நான் அவர்கள் என்னைப் பார்க்கும் நிலையில் இருக்கிறேன். மகள் இறக்க காரணம் என்ன? மனைவி நலம் பெற்று என்னோடு வாழ்வாரா? மனைவியைத் தவிர இதுவரை வேறு பெண்ணை தீண்டாத எனக்கு இப்போது மனம் சலனப்படுகிறது. விதவைப்பெண் பார்த்து மறுமணம் செய்து கொள்ளலாமா? அப்படிச் செய்தால் எங்கள் மகள் மீண்டும் பிறப்பாளா?
பதில்:
கடந்த பத்து வருடங்களாக பகைவரான கேதுவின் சாரம் பெற்று ஆறாமிடத்தில் மறைந்த லக்னாதிபதி சந்திரனின் தசை நடப்பதால் சோதனைகள் அதிகம் இருக்கிறது. புத்திரசோகம் என்பதற்கு ஜோதிடத்தில் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. இறந்து போன மகளின் ஜாதகம் அற்பாயுள் அமைப்பைக் கொண்டிருப்பதாலும், உங்கள் ஜாதகத்தில் ஐந்தில் ராகு அமர்ந்து ஐந்தாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் இந்த புத்திர சோகம் உங்களுக்கு நேர்ந்தது.
மனைவியின் ஜாதகப்படி அவரது மனநலப் பாதிப்பு உடனடியாக குணமாக வழியில்லை. உங்கள் ஜாதகப்படி ஏழாமிடம் சனியின் பார்வையால் பலவீனமாகி பதினொன்றாம் இடம் வலுத்துள்ளதால் உங்களால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். 2018-ம் ஆண்டு இறுதியில் ஒரு குறைப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொள்வீர்கள். மறுபடியும் புத்திர பாக்கியம் கிடையாது.
வெங்கடேசன், இரும்பை.
கேள்வி:
இரும்புக் கடைகளுக்கு பிளாஸ்டிக் பைப் சப்ளை செய்து கொண்டிருக்கிறேன். வியாபாரம் மிகவும் மோசமாக இருக்கிறது. அண்ணனுடன் பாகப்பிரிவினை தகராறுகள் இருக்கின்றன. திருமணமாகி 6 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் மனைவிக்கும் எனக்கும் சண்டை, சச்சரவு நடக்கிறது. உறவினர் கேள்விக்கும் பதில் சொல்ல முடியவில்லை. மருத்துவ பரிசோதனையும், பரிகாரங்களும் பலன் தரவில்லை. கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன். எங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டா?
செவ் | சூரி சுக் | புத | |
கேது | 10.35am 10.6.1979 விழுப்புரம் | குரு | |
லக்,சனி ராகு | |||
சந் |
பதில்:
விருச்சிக ராசியாகி கல்யாணம் ஆனதில் இருந்து கடுமையான ஏழரைச்சனி நடப்பதாலும் ஐந்திற்குடைய புத்திரக்காரகன் குரு பனிரெண்டில் மறைந்ததாலும் இதுவரை குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. வரும் அக்டோபர் 26-ந்தேதி முதல் ஜென்மச்சனி முடிந்ததும் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர ஆரம்பிக்கும்.
நாற்பது வயதிற்கு உட்பட்ட எல்லா கேட்டை நட்சத்திரக்காரர்களும் ஏதாவது ஒருவகையில் கடுமையான மன அழுத்தத்தில் தான் இருக்கிறீர்கள். வரும் தீபாவளிக்குப் பிறகு பிரச்னைகள் அனைத்திற்கும் முடிவுகள் வர ஆரம்பிக்கும். 2019 ம் ஆண்டு பிற்பகுதியில் கையில் குழந்தை இருக்கும். தகப்பன் ஆனதும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
ப. அருள்வாசகம், கோட்டார்.
கேள்வி:
நாங்கள் கிறித்துவர்கள் என்பதால் பெற்றோர்கள் ஜாதகம் எழுதவில்லை. ஆனால் பிறந்த தேதி, நேரம் குறித்து வைத்திருக்கிறார்கள். பிறந்தவுடன் ஜாதகம் எழுதாமல் இத்தனை நாள் கழித்து ஜாதகம் எழுதலாமா? அப்படி எழுதினால் அது பலிக்குமா?
பதில்:
ஜோதிடம் என்பது மதங்களைக் கடந்த ஒரு எதிர்காலம் சொல்லும் காலவியல் விஞ்ஞானம். எல்லாவற்றிலும் உள்ளதைப் போல இந்த புனிதக் கலையிலும் குறை, நிறைகள் இருக்கின்றன. ஜோதிடத்தை வைத்து பயமுறுத்தலும், சுயநலத்திற்காக பயன்படுத்தி பொருள் தேடலும் அதிகமானதால்தான் புனித மார்க்கங்கள் ஜோதிடத்தை தவிர்க்க அறிவுறுத்தின.
ஜாதகம் எப்போது எழுதுகிறோம் என்பது முக்கியம் அல்ல. பிழையின்றி சரியாக எழுத வேண்டும் என்பதுதான் முக்கியம். அருகில் இருக்கும் ஜோதிடரிடம் சென்று திருக்கணித முறைப்படி ஜாதகம் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் ஊரில் உள்ள கம்ப்யூட்டர் சென்டர்களிலும் கணித்துத் தருவார்கள்.
ஜென்மம் முழுதும் இதே நிலைதானா?
எம். பி. குணசேகரன், செல்லூர்.
கேள்வி :
கடந்த ஒரு வருடமாக உங்களுடைய வார, மாத, வருட பலன்கள் மற்றும் கேள்வி-பதில்களை படித்து பிரமித்துப் போய் இருக்கிறேன். உங்கள் ராசிபலன் எனக்கு துல்லியமாக பொருந்துவதை உணர்வுப்பூர்வமாக உணர்ந்துள்ளேன். 22 வருடங்களாக, வண்டியில் பாத்திர வியாபாரம் செய்கிறேன். வருடங்கள் கடந்து வயதும் கூடிக் கொண்டே போகிறது. தொழிலில் எனக்குப் பிறகு வந்தவர்களும், 10 வருடம் கழித்துப் பிறந்தவர்களும் அடைந்துள்ள வளர்ச்சியைக் கண்டு விக்கித்து போகிறேன். ஆனால் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டையும், முடக்குச் சந்துமாக எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? மற்றவர்களைப் பார்த்து பொறாமைப் படவில்லை. அது சுட்டுப் போட்டாலும் வராது. கடிதம் எழுத உட்காரும் நேரம் வரை உழைத்துச் சம்பாதித்த பணம் எனது சட்டைப் பையில் உள்ளது. அந்த சட்டைப் பை தான் என் பீரோ. என் கல்லாப் பெட்டி எல்லாம். அதில் என் பேங்க் பேலன்ஸ். என் இருப்புத்தொகை 50 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை. இதுதான் என் வாழ்க்கை. என் நிலையில் மாற்றம் வருமா? ஜென்மம் முழுவதும் இதே நிலைதான் தொடருமா? மனக் குழப்பத்தில் இருக்கிறேன். உதவுங்கள்.
புத | சனி | கேது | |
சூரி சுக் | 26.2.1973 11.15pm மதுரை | ||
குரு | |||
சந்,செவ் ராகு | லக் |
பதில்:
சென்ற பிறவி கர்மாவின் அடிப்படையில்தான் இப் பிறவி வாழ்க்கை அமைகிறது என்பதுதான் ஜோதிடத்தின் அடிநாதம். ஒருவர் காரணமே இல்லாமல் கஷ்டப் படுவது போன்ற விடை தெரியாத கேள்விகளுக்கான பதிலை வேதஜோதிடம் இப்படித்தான் சொல்கிறது. சிலநிலைகளில் அதுவே பொருத்தமாகவும் இருக்கிறது.
ஜோதிடத்தில் 1, 5, 9-ம் வீடுகள் சென்ற பிறவியில் நாம் செய்த பாவ, புண்ணியங்களைக் குறிப்பதாக சொல்லப்பட்டு, இந்த வீடுகள் வலுப்பெற்ற நிலையில் இருந்தால் அவர் புண்ணியம் செய்தவராகவும், பலவீனமாக இருந்தால் அவர் நற்கர்மங்களைச் செய்யாதவராகவும் அடையாளம் காட்டப்படுகிறார்.
பகுத்தறிவு ரீதியில் இதனை நோக்கினால் இது அறிவுக்கு பொருந்தாததாக தோன்றலாம். சென்ற பிறவி என்பதே நிரூபிக்கபடாத ஒன்றுதானே என்று நினைக்கவும் செய்வோம். ஆயினும் மனிதர்கள் இன்னும் அனைத்தையும் அறிந்து விடவில்லைதானே? எல்லாம் நமக்கு தெரிந்து விடவில்லையே? ஒன்று நிச்சயமாக தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று ஆகிவிடாதுதானே?
சென்ற பிறவியின் செயல்களால் இப்போது கஷ்டப்படுகிறேன் என்றால் இதை மாற்ற வழியே இல்லையா என்ற கேள்விக்குத்தான் நீ செய்த அனைத்தையும் அறிந்த அவனிடம் முறையிடு, அவன் கருணை வடிவானவன், உனக்கு உறுதியாக செவி சாய்ப்பான், உன் கர்மாவை, இன்றைய நிலையை நிச்சயம் மாற்றுவான் என்றும் ஜோதிடம் வழி காட்டுகிறது.
உங்கள் ஜாதகப்படி துலாம் லக்னமாகி, ஐந்துக்குடைய பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி எட்டில் மறைவு, ஒன்பதுக்குடையவன் ஆறில் மறைந்து நீசம் என்பதோடு, லக்னாதிபதிக்கு சனி பார்வை உள்ளதும் சென்ற பிறவி கர்மாவை சுட்டிக் காட்டுகிறது. வாழ்வின் மிக முக்கிய பருவத்தில் கடந்த 15 ஆண்டுகளாக நீசனின் வீட்டில் அமர்ந்த சந்திர, செவ்வாய் தசைகள் நடந்து கொண்டிருப்பதும் சரியல்ல. அடுத்து வரப் போகும் ராகுவும், நீச குருவின் வீட்டில்தான் இருக்கிறார்.
சனிபகவான் யோகராகி எட்டில் மறைந்து ஜீவன ஸ்தானத்தை பார்ப்பதால்தான் சிறு அளவில் பாத்திர விற்பனையாளராக இருக்கிறீர்கள். லக்னாதிபதி சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்வதன் மூலம் உங்களுடைய பொருளாதார நிலைமையை நிச்சயமாக மாற்றிக் கொள்ள முடியும்.
சுக்கிர ஸ்தலமாக நம்முடைய ஞானிகளால் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு அடிக்கடி செல்லுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் போகலாம். அங்கே படுத்துக் கிடப்பவனின் பாதம் தாங்கி நிற்கும் அன்னை ரங்கநாயகியின் திருவடிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். என் அன்னை உங்கள் வாழ்வு நிலையை மாற்றி அருள்வாள்.
Miga elimaiyana vilakkam sir very nice sir
Is there any future in my Sukra Desa, I am ur fan, I am learning astrology, I have not seen happiness in life.My father was also an astrologer, he was giving astrological advice free of cost.