adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 141 (27.6.2017)

கே. பழனிவேல், சேலம்.

கேள்வி :

கடந்த 4 வருடங்களாக கடுமையான கடன், மற்றும் நோய்த்தொல்லையால் அவதிப்படுகிறேன். வீட்டில் தினமும் சண்டை, சச்சரவுதான். 2007 முதல் 2012 வரை ரியல்எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைத்தது. அதன் பிறகு அனைத்துமே லாக்” காகிவிட்டது. இப்போது செய்யும் ஆட்டோமொபைல்   தொழிலை நிலையாகச் செய்யலாமா? அல்லது மீண்டும் ரியல் எஸ்டேட்டுக்கு திரும்பலாமா? ரிக் லாரி எனப்படும் வாகனத் தொழில் எனக்கு ஒத்து வருமா?

சனி ரா
சுக் ராசி  லக்
பு  சந்
 சூ செவ் குரு
 பதில்:

(கடக லக்னம், சிம்மராசி. 3-ல் குரு, கேது. 4-ல் செவ். 6-ல் சூரி. 7-ல் புத. 8-ல் சுக். 9-ல் சனி, ராகு. 8.1.1969, இரவு 8.20, சேலம்)

லக்னாதிபதியை சுபச் சுக்கிரன் பார்த்து, 9, 10-ம் இடங்களை அந்த பாவங்களுக்குரியவர்கள் பார்த்த தர்மகர்மாதிபதி யோகம் உள்ள யோகஜாதகம் உங்களுடையது. கடக லக்னத்திற்கும், சிம்ம ராசிக்கும் ஒத்து வராத சனியின் தொழிலான ஆட்டோமொபைல் தொழிலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

தற்போது சனியுடன் இணைந்த ராகுவின் தசை நடப்பதுடன், 2012 முதல் ஒரே மகனுக்கு விருச்சிக ராசியாகி ஏழரைச்சனி நடப்பதால் உங்களுக்கு தொட்டது துலங்கவில்லை. ரியல் எஸ்டேட் தொழில் எந்தக் காலத்திலும் உங்களுக்கு கை கொடுக்கும். அதேபோல பூமியை தோண்டும் ரிக் லாரி தொழிலும் ஏற்றதுதான்.

ஆட்டோமொபைல் தொழிலில் சாப்பாட்டிற்கு மட்டும்தான் வரும். கடன் தொல்லைகளையும் கொடுக்கும். வரும் அக்டோபர் முதல் ராகுதசையில், சூரிய புக்தி ஆரம்பிப்பதால் கடன்கள் தீருவதற்கான வழிகள் பிறக்கும். அடுத்து நடக்க இருக்கும் குருவின் தசை முதல் படிப்படியாக கடனைத் தீர்த்து நிம்மதியாக இருப்பீர்கள். எதிர்காலம் கவலைப்படும்படி இருக்காது.

என். பாலா, திருநெல்வேலி.

கேள்வி :

எனது ஜாதகத்தில் சி. . . சி. டபிள்யூ போன்ற படிப்பிற்கான அமைப்பு இருக்கிறதா? அந்தப் படிப்பினை என்னால் முழுமையாக முடிக்க முடியுமா? என்னுடைய ரிஷப லக்னத்திற்கு அடுத்து வரப் போகும் குருவின் தசை அஷ்டமாதிபதி தசை என்பதால் என்ன பலனை செய்யும் என்று ஓரிரு வரிகள் சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சனி கே சந் லக்
ராசி  செவ்
 பு சுக்
 குரு சூ ரா
பதில்:

(ரிஷப லக்னம், மேஷ ராசி. 3-ல் செவ். 4-ல் புத, சுக். 5-ல் சூரி, ராகு. 8-ல் குரு. 11-ல் சனி, கேது. 12-ல் சந். 30.9.1996, இரவு 9.28, சிவகாசி.)

ரிஷப லக்னமாகி, யோகாதிபதி புதன் 4-ம் வீட்டில் திக்பலம் பெற்ற லக்னாதிபதி சுக்கிரனுடன் இணைந்து, குருபார்வையும் பெற்று பரிவர்த்தனை அமைப்பில் உச்சநிலை பெற்றுள்ளதால் உங்களால் சி.ஏ. ஐ.சி.டபிள்யூ படிப்புகளை முழுமையாக படித்து முடிக்க முடியும்.

புதன் 10-மிடத்துடன் தொடர்பு கொள்வதால், புதன் சம்பந்தப்பட்ட துறையில்தான் எதிர்காலத்தில் இருப்பீர்கள். குரு தசை வருவதற்கு இன்னும் 20 வருடங்கள் இருப்பதால் அது வரும் போது என்ன செய்யும் என்பதைப் பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு நல்லபடியாக படித்து முடியுங்கள்.

வி. ஜானகிராமன், சென்னை.

கேள்வி :

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நானும் என் மனைவியும், இரண்டு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக சந்தோஷமாகவே  இருந்தோம். எதிர்பாராத விதமாக நல்ல சம்பளத்தில் இருந்த இளைய மகன் கடந்த 4 வருடங்களாக, வேலைக்குப் போகாமல் ஊர் சுற்ற ஆரம்பித்தான். சம்பளத்தை முழுதாக கொண்டு வந்து அம்மாவிடமோ, அண்ணனிடமோ கொடுத்துக் கொண்டிருந்தவன் அப்படியே மாறிவிட்டான். அவனது போக்கால் கூட்டுக் குடும்பத்தில் பிரச்சினைகள்  உண்டாகி இளையவனும், நானும், மனைவியும் தனியாகப் பிரிந்து  தனிக்குடித்தனம் வந்து விட்டோம்.

எனது சம்பளம் மட்டும் என்பதால் கஷ்டங்கள் அதிகமாகி விட்டது. கடந்தஆண்டு நவம்பர் மாதம் என் மனைவி திடீரென தீக்குளித்து தற்கொலைசெய்து கொண்டார்கள். எங்களுக்குள் இதுநாள் வரை ஒரு சண்டை,சச்சரவும் இல்லை. அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மனைவி தற்கொலை செய்துகொண்ட சமயத்தில் அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். எனது மனைவி கேட்டை நட்சத்திரம் 2- ம் பாதம். என் இளைய மகனும் கேட்டை நட்சத்திரம் 1- ல் பாதம். இது மட்டும்தான் தெரியும். ஜாதகம் இல்லை. தற்கொலை செய்யும் முடிவிற்கு என் மனைவி ஏன் வந்தார்கள் என்பதை ஜோதிட ரீதியாக சொல்லும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

மாலைமலர் கேள்வி-பதிலை தொடர்ந்து படிப்பவர்களுக்கும், ஓரளவு ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நான் பதில் சொல்லாமலேயே ஜோதிடரீதியாக உங்கள் மனைவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் புரியும். கடுமையான மனஅழுத்தம்தான் உங்கள் மனைவியின் முடிவிற்கு காரணம். மனைவிக்கும், மகனுக்கும் கேட்டை நட்சத்திரமாகி ஒரு வீட்டில் இரண்டு ஏழரைச் சனி அமைப்பு வந்து கடுமையான இழப்பு உங்களுக்கு நேர்ந்து விட்டது.

தற்போது கேட்டையில் இருக்கும் சனி வரும் அக்டோபர் 26-ந்தேதி முதல் விலக இருப்பதால் அதுமுதல் உங்களுடைய இளைய மகன் போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும் வேலைக்குச் செல்ல ஆரம்பிப்பார். அடுத்த வருடத்திலிருந்து இறந்து போன மனைவியை தவிர, இழந்து போன சந்தோஷங்கள் திரும்பவும் கிடைக்கும்.

கே. எஸ். எஸ், பரமக்குடி.

கேள்வி :

சிறுதொழில் செய்து வருகிறேன். தொழில் நல்லபடியாக இருந்தாலும் சரியான தொழிலாளர்கள் இல்லாத காரணத்தினால் உயர்வு பெறமுடியவில்லை. வங்கிக்கடனை திருப்பி செலுத்த கஷ்டப்படுகிறேன். ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் இருப்பதால் முன்னேற்றம் இருக்காது என்றுசொல்கிறார்கள். ராகு - கேதுவால் என் வளர்ச்சி தடையாகுமா? எனக்கு நல்லவழியும், பரிகாரங்களும் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

பிறந்த நேரத்தைக் குறிப்பிடாமல் தவறான வாக்கியப் பஞ்சாங்கத்தில் கணிக்கப்படும் உங்கள் ஊர் ஜாதகத்தை வைத்து துல்லியமான பலனைச் சொல்ல முடியாது. பிறந்த நேரத்தோடு மீண்டும் அனுப்பினால் பதில் சொல்கிறேன்.

பி. கே. பவித்ரா, ஆழ்வார்திருநகர்.

கேள்வி :

குருஜி அய்யாவிற்கு வணக்கம். பிளஸ் 2 படித்து வருகிறேன். மேற்கொண்டு என்ன படிப்பு, என்ன தொழில் என்பதை சொல்லி எதிர்காலத்திற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

 சனி  குரு ரா
ராசி சுக்
ல,சூ
சந்,கே செவ் பு
பதில்:

(சிம்ம லக்னம், தனுசு ராசி. 1-ல் சூரி. 2-ல் புத. 5-ல் சந், செவ், கேது. 10-ல் சனி. 11-ல் குரு, ராகு. 12-ல் சுக். 28.8.2001, காலை 5.52, சென்னை)

லக்னத்தில் லக்னாதிபதி சூரியன் ஆட்சியாகி வலுத்து, ராசிக்கு பத்தாம் இடத்தில் புதன் உச்சமானதால் நீ மிகுந்த புத்திசாலிக் குழந்தையாக இருப்பாய். பரம்பொருளால் ஆசிர்வதிக்கப் பட்டவள் நீ. எதையும் கிரகிக்கும் திறன் இருப்பதால் நன்கு படித்து முன்னுக்கு வருவாய். செவ்வாய், புதன் ஜாதகத்தில் வலுத்துள்ளதால் பயோ-மேத்ஸ் சம்பந்தப்பட்ட துறை உனக்கு ஏற்றது. 24 வயதிற்கு பிறகு லக்னாதிபதி சூரியனின் தசை நடக்க இருப்பதால் நன்கு படித்து நிலையான வேலை அமைப்புகளில் சிறப்பான எதிர்காலத்தோடு இருப்பாய். வாழ்த்துக்கள்.

. செந்தில், திண்டுக்கல்.

கேள்வி :

எனது குருநாதர்களில் அதிகம் தெரிந்து கொண்டது உங்களிடம்தான். மகனின் ஜாதகத்தில் 3- மிடத்தில் செவ்வாய், சனி, மாந்தி. மூவரும் சேர்ந்து 9- ம் இடத்தைப் பார்க்கிறார்கள். இதனால் அவனுக்கும் எனக்கும் பிரச்னை எதுவும் இருக்குமா? விபத்துக்கள் ஏதாவது வருமா? குடும்பத்தில் தற்போது இருக்கும் ஒற்றுமை நிலைத்திருக்குமா? மகனின் ஜாதகம் யோக ஜாதகம்தானா?

கே ராசி  சந், சூ
 பு,சு,ரா குரு
செவ் சனி லக்
பதில்:

(கன்னி லக்னம், கடக ராசி. 3-ல் செவ், சனி, மாந்தி. 6-ல் கேது. 11-ல் சூரி, சந். 12-ல் புத, சுக், குரு, ராகு. 2.8.2016, காலை 9.50, கோவில்பட்டி.)

பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் 3, 6, 11-ம் இடங்களில் இணைவது தீமைகளைத் தருவது இல்லை. மாந்திக்கும் ஜாதகபலனுக்கும் சம்பந்தம் இல்லை. கேரளாவில் பார்க்கப்படும் ஆரூட முறைகளில் மட்டுமே மாந்திக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

உபய லக்னத்தில் பிறப்பவர்களுக்கு குருவும், புதனும் மறைவது யோகம் என்பது முக்கிய விதி. அதன்படி உங்கள் மகனின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதனும், குருவும் தங்களுக்கு மிகவும் பிடித்த அதிநட்பு ஸ்தானமான சிம்மத்தில் மறைந்து திக்பலத்திற்கு அருகில் இருப்பது சிறப்பு. அதேபோல பகை வீடானாலும் 12-ம் இடம் சுக்கிரனுக்கும் சிறப்பானதுதான். பிறந்தது முதல் சனி, புதன், சுக்கிரன் என யோகாதிபதிகள் தசை நடக்க இருப்பதால் மகனின் ஜாதகம் நல்ல யோக ஜாதகம். இவன் வளர, வளர குடும்பம் வளர்ச்சி அடையும்.

அப்பா, மகன் சண்டை தீருமா?

எம். ஜே. ராமலிங்கம், மதுரை – 16.

கேள்வி :

70 வயதான எனக்கு நீண்டகாலமாக மனஅழுத்தம், கஷ்டம், அவமானத்தை தவிர நல்லது எதுவும் நடக்கவில்லை. மகன் மூலம் எந்தஉதவியோ, பண வரவோ கிடையாது. 40 வயதாகியும் வேலைக்குசெல்லாமல் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருக்கிறான். என் ஆயுள் முடிவதற்குள் ஏதாவது நல்லமாற்றங்கள் மகனுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதா? அல்லது இதே கஷ்டம்தானா? வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உள்ளது. போகலாமா? தனியாக இருந்து வாழ முடியுமா? அல்லது அடுத்தவர்உதவி தேவைப்படுமா? என் தலைவிதி என்ன? எனது ஆயுள் காலம்எவ்வளவு?.

சந்,சூ சு,செவ் ராசி
பு ல, சனி
குரு கே
பதில்:

(சிம்ம லக்னம், கும்பராசி. 1-ல் சனி. 3-ல் கேது. 5-ல் குரு. 6-ல் புத. 7-ல் சூரி, சந், சுக், செவ். 27.2.1949, மாலை 6.30. மதுரை).

உங்களுக்கு சிம்ம லக்னமாகி கடந்த 40 வருட காலமாக லக்னத்தில் அமர்ந்த சனியின் தசையும், சனியின் 6-ம் வீட்டில் அமர்ந்த புதனின் தசையும் நடப்பதால் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கின்றன. உங்களுக்கும், மகனுக்கும் சிம்மம், மகரம் என சஷ்டாஷ்டக லக்னமாக அமைந்ததாலும் மகனின் ஜாதகத்தில் சூரியனும், சனியும் அசுபத்துடன் இணைந்ததாலும் கடைசி வரை உங்கள் இருவருக்கும் ஒத்து வராது.

மகனின் ஜாதகத்தில் லக்னத்தை சனி பார்க்கிறார். உங்கள் ஜாதகத்தில் லக்னத்திலேயே சனி இருக்கிறார். இந்த அமைப்பினால் இருவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டனாகத்தான் இருப்பீர்கள். லக்னத்தில் சனி அமர்ந்து ராசியை பார்த்து பரிவர்த்தனையாகி, செவ்வாயின் பார்வையும் சனிக்கு இருப்பதால் நீங்களும் லேசுப்பட்ட ஆளாக இருக்கமாட்டீர்கள். தந்தை, மகன் இருவரின் ஜாதகத்திலும் சனி வலுத்து, சூரியன், சனி தொடர்புகள் சரியாக இல்லாததால் வாழ்நாள் முழுவதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள்.

இது போன்ற ஜாதக அமைப்புள்ளவர்கள் அடுத்தவர்களின் கருத்தையோ, மனதையோ புரிந்து கொள்ளாமல், தான் சொல்வதுதான் சரி. அதைத்தான் மற்றவர்கள் எதிர்ப்பேச்சு பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். மகனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அவர்களும் சக மனிதர்கள்தான். அடிமைகள் அல்ல. அவர்களுக்குள்ளும் ஏதேனும் ஒரு திறமையோ, நல்லவையோ இருக்கும் என்று மதித்து நடந்து கொள்பவனை வாழ்க்கை ஒருபோதும் தனித்து விட்டதில்லை.

ஜாதகப்படி இனிமேல் நீங்கள் குணங்களை மாற்றி கொள்ள முடியாது. அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் புதன் புக்தி முதல் குடும்பத்தில் நெருக்கடிகள் உங்களுக்கு அதிகரிக்கவே செய்யும். குடும்பத்தை விட்டு வெளியேறிப் போகும் எண்ணத்தைக் கைவிட்டு, குறைகள் இருந்தாலும் மற்றவர்களையும் புரிந்து கொண்டு அனுசரித்துப் போக முயற்சி செய்யுங்கள். “கூடி வாழ்வது கோடி நன்மை” என்பது உங்களைப் போன்றவர்களுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதைக் கவனத்தில் வையுங்கள். சனி வலுத்ததால் ஆயுளுக்கு குறையில்லை. இன்னும் சில வருடங்கள் இருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *