adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 109 (25.10.2016)

கா. கி. வீரன், எழும்பூர்.

கேள்வி :

குருஜி அய்யாவின் பக்தர்களின் நானும் ஒருவன். கல்லூரியில் படிக்கும் 18 வயதான எனது அக்கா மகள் கடந்த ஆகஸ்ட்மாதம் காதலனுடன் சென்று விட்டாள். என் அக்கா காவல்நிலையத்தில் அவள் காலில் விழுந்து கதறியும் பெற்ற அம்மாவை தூக்கி வீசிவிட்டாள். நாங்களும் அவளுக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டோம். பெண் இனத்திற்கு பாதுகாப்பு இல்லாத இந்தக்காலத்தில் கன்னிப்பருவம் வந்ததும் வராததுமாய் காதல்மயக்கம் கொண்டு காதலனே தெய்வம் என்று மாற்று இன ரோமியோவுடன் சென்று விட்ட என் மருமகள் காதல்வாழ்க்கை கசந்து மீண்டும் திரும்பி வருவாளா? அவள் தற்போது எங்கு எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. ஓடிப்போன என்மருமகளுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும்?

சந்,கே சனி ல,பு சூ சுக்
ராசி
குரு  செவ்
பதில் :

(திருக்கணிதப்படி மேஷலக்னம், மீனராசி. 1-ல் புத. 2-ல் சூரி. 3-ல் சுக். 5-ல் செவ். 10-ல் குரு. 12-ல் சனி, கேது. 31.5.1997, 3.15 அதிகாலை, தேவகோட்டை)

பருவவயது பெண் குழந்தைகளுக்கு சுக்கிரனின் தசை புக்திகள் நடந்தாலே ஜோதிட நம்பிக்கையுள்ள பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி எழுதி வருகிறேன். மருமகளுக்கு சென்ற வருடம் ஜூன்மாதம் முதல் புதன்தசையில் சுக்கிரபுக்தி நடப்பதால் சிறுவயதிலேயே காதலில் விழுந்து விட்டாள். ராசிக்கு ஏழாம் வீட்டை சனி பார்த்து, அங்கே ராகுவும் இருப்பது காதல், கலப்புத் திருமண அமைப்பு என்பதால் அவளுக்கு சீக்கிரமாகவே திருமணமும் நடந்து விட்டது.

உங்கள் மருமகளுக்கு மேஷலக்னத்திற்கு வரக்கூடாத ஆறுக்குடைய பாவி புதன்தசை தற்போது நடைபெறுகிறது. புதபகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருப்பதால் காதலனே பெரிது என்று நினைக்க வைத்து விட்டார். இளம்வயது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படவேண்டும் என்றால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி போன்றவைகள் நடக்க வேண்டும். மருமகளின் ஜாதகத்தில் ஏழாமிடம் வலுவாகி, புதனும் திக்பலம் பெற்று, பாவசம்பந்தம் பெறாததாலும், அஷ்டமச்சனி முடிந்து விட்டாலும், மிகப்பெரிய கஷ்டங்கள் எதுவும் அவளுக்கு வரப்போவது இல்லை.

அடுத்து நடக்க இருக்கும் ஐந்துக்குடைய சூரியபுக்தியில் அவள் ஒரு ஆண்குழந்தைக்கு தாயான பிறகு அனைத்து கசப்புகளும் விலகி விடும். தாயைக் குறிக்கும் நான்காம் அதிபதி சந்திரன் பனிரெண்டில் மறைந்து, தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமதிபதி நீசமானதால் அவளுக்குப் பெற்றோர் முக்கியமில்லாமல் போய்விட்டார்கள். ஜாதகம் ஓரளவு நன்றாக இருப்பதால் பெரிய சிக்கல்கள் எதுவுமில்லாமல் எதிர்காலத்தில் நன்றாகவே இருப்பாள்.

ஜி. ராமமூர்த்தி, சென்னை – 40.

கேள்வி :

கடக லக்னம், மேஷராசியில் பிறந்து 70 வயதாகும் எனக்கு யாரும் இல்லை. தற்சமயம் தனியாக உள்ளேன். கடைசிக்காலத்தில் காசிக்குப்போய் தங்கி விடலாம் என்று நினைத்திருக்கிறேன். எப்போது நிறைவேறும் என்று பதில் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில் :

வடக்குத் திசையைக் குறிக்கும் கிரகமான குருபகவான் தற்போது ஐந்தாமிடத்தில் கேதுவுடன் இணைந்து தசை நடத்துவதாலும், அஷ்டமச்சனி நடப்பதாலும் அடுத்த வருடம் கேதுவின் புக்தியில் காசிக்கு சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவீர்கள்.

என். ராமகிருஷ்ணன், சென்னை – 2.

கேள்வி :

ஜோதிடச் சக்கரவர்த்திக்கு நான் எழுதும் நான்காவது கடிதம் இது. மகன்பத்து வருடமாக சினிமாவில் உதவி இயக்குனராக உள்ளார். டைரக்டர் ஆகவேண்டி பலரிடம் கதை சொல்கிறான். தயாரிப்பாளர்கள் நன்றாக உள்ளது என்று சொன்னாலும் வாய்ப்பு தருவது இல்லை. இவனுக்கு தனியாக திரைப்படம் டைரக்ட் செய்யும் வாய்ப்பு உள்ளதா? ஒரு படம் இயக்கிய பின்தான் திருமணம் என்று சொல்கிறான். இப்போதே 37 வயது ஆகிவிட்டது. திருமணம் எப்போது நடைபெறும்?

பதில் :

திருக்கணிப்படி மகனுக்கு ரிஷபலக்னம், கும்பராசியாகி தற்போது சனிதசை ஆரம்பித்துள்ளது. ஏழில் சுக்கிரன் தனித்திருப்பது களத்திரதோஷம் என்பதாலும் ராசிக்கு ஏழில் சனி, ராகு இணைந்திருப்பதாலும் மகனுக்கு தாமத திருமணம்தான். 2018 வரை திருமணத்திற்கு வாய்ப்பு இல்லை. ஜாதகம் யோகமாக இருப்பதாலும் சினிமாவிற்குரிய ராகுபகவான் தசாநாதன் சனியுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்திருப்பதாலும் அவருக்கு சினிமாத்துறை தொடரும். சனிதசை புதன் புக்தியிலிருந்து தனித்து இயங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். சினிமாவில் சாதிப்பார்.

ஜி. ஏழுமலை, ஊத்துக்கோட்டை.

கேள்வி :

காய்கறி, பழம் வியாபாரம் செய்கிறேன். ஐந்து வருடமாக தொழிலில் நஷ்டம் வருகிறது. எந்த தொழில் செய்தால் முன்னேற்றம் வரும்? எப்போது கஷ்டம் நீங்கும்?

பதில் :

துலாம்லக்னம், மேஷராசியாகி கடந்த ஐந்து ஆண்டுகளாக எட்டாமிடத்தில் இருக்கும் ராகுவின் தசையில், ஆறாமிடத்தில் இருக்கும் சனி, புதன்புக்திகள் நடந்ததாலும், மேஷராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதாலும் வியாபாரத்தில் நஷ்டம் வருகிறது. ஜாதகத்தில் நடக்கும் தசை,புக்திகளுக்கு 6, 8 தொடர்பு ஏற்பட்டாலே நன்மைகள் நடக்காது. துலாம்லக்னத்தின் தொழில்ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால் அவருக்குரிய காய்கறி, பழம் வியாபாரம் நீங்கள் செய்வது பொருத்தமானதுதான். வேறு தொழில் தேவையில்லை. அஷ்டமச்சனி முடிந்ததும் அடுத்த வருடம் நவம்பர் முதல் தொழில் சீராகும். பிரச்சினைகள் விலகும்.

ஆர். மோகன சுந்தராம்பாள், சேலம்.

கேள்வி :

குருவிற்கு சிஷ்யையின் நமஸ்காரம். உங்கள் மாலைமலர் ரசிகை நான். என் தங்கைமகளுக்கு 37 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. இந்தக் கவலையில் தங்கை கணவரும் இறந்துவிட்டார். ஏன் இந்த பெண்ணிற்கு திருமணம் நடக்கவில்லை? என்ன தோஷம்? என்ன பரிகாரம் செய்யவேண்டும்? திருமணம் நடக்குமா? எப்பொழுது? என்ற பதிலோடு உங்கள் ஆசீர்வாதத்தையும் கூறுங்கள்.

ல,பு சு,செ சூ சந்
ராசி குரு
சனி, ரா

பதில் :

(மீனலக்னம். ரிஷபராசி. 1-ல் புத, சுக், செவ். 2-ல் சூரி. 5-ல் குரு. 6-ல் சனி, ராகு. 28.4.1979, அதிகாலை 5 மணி, சேலம்)

தங்கைமகளுக்கு மீனலக்னமாகி ஐந்தில் குரு தனித்து உச்சமாகி இருப்பது கடுமையான புத்திரதோஷம் மேலும் உச்சகுரு, உச்சசுக்கிரனை பார்ப்பதும் தாம்பத்திய சுகம் கிடைப்பதற்கு தடை செய்யும் ஒரு அமைப்பு. ஏழுக்குடைய புதன் நீசமாகி, ஏழாமிடத்தை செவ்வாய் பார்த்து, குடும்பஸ்தானத்தில் ஆறுக்குடையவன் உச்சமானதும் களத்திரதோஷம்.

ஆயினும் வரும் டிசம்பர் முதல் இந்தப் பெண்ணிற்கு ராகுதசையில் குடும்பாதிபதி செவ்வாய்புக்தி ஆரம்பிக்க உள்ளதாலும், அடுத்து 2018 முதல் தாயாகும் பாக்கியத்தை கொடுக்கும் குருதசை ஆரம்பிக்க உள்ளதாலும், ரிஷபராசிக்கு கோட்சார நிலைமைகள் சாதகமாக உள்ளதாலும் வருகின்ற 2017 ஆவணி மாதத்திற்குள் கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல்நாள் மாலையே ஶ்ரீகாளகஸ்திக்கு சென்று தங்கி அதிகாலையில் ருத்ராபிஷேகபூஜையில் கலந்து கொள்ளவும். அங்கு கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் தைமாதத்திற்கு பிறகுதான் இதைச் செய்ய முடியும். ஒரு வியாழக்கிழமை பகல் 1 மணியில் இருந்து 2 மணிக்குள் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவை கொடுக்கவும். 16 வியாழக்கிழமைகள், 16 லட்டு தொடர்ந்து பழமையான ஈஸ்வரன் கோவிலில் உள்ள தட்சணாமூர்த்தி சன்னதியில் நைவேத்தியம் செய்து தானம் கொடுக்கவும். மகளுக்கு என் ஆசீர்வாதங்கள் எப்போதும் உண்டு. இனிமேல் யோகவாழ்வு வாழ்வாள்.

மகளைப் பார்க்கும் நாளை எப்படித் துல்லியமாகச் சொன்னீர்கள்?

எஸ். தமிழ்செல்வன், திருப்பூர்.

கேள்வி :

சென்றமுறை தங்களிடம் என் மூன்றுவயது பெண்குழந்தையைப் பார்க்க முடியுமா? என்று கேள்வி கேட்டிருந்தேன். அதற்கு குழந்தையின் 4 வயது மாதங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்க முடியும் என்று பதில் கொடுத்திருந்தீர்கள். இரண்டு வருடங்களுக்கு முன் எட்டயபுரத்தில் இருந்து குழந்தையுடன் பஸ்சில் ஏறிய என் மனைவியையும், குழந்தையையும் தமிழ்நாடு முழுக்க நான் தேடியும் கிடைக்காத நிலையில், சரியாக நீங்கள் சொன்ன என் குழந்தைக்கு 4 வயது 7 மாதமான அன்று இரவு 9 மணிக்கு. இதே திருப்பூரில் இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருப்பதாக அறிந்து. இரவு 11 மணிக்கு என் குழந்தையைப் பார்த்துக் கண்ணீர்விட்டு அதேஇடத்தில் தங்களின் ஜோதிடக்கணிப்பை எண்ணியும் மெய்சிலிர்த்தேன். எப்படி இவ்வளவு துல்லியமாக நான் குழந்தையைப் பார்க்கும் நாளைக்கூட உங்களால்சொல்ல முடிந்தது என்று இன்னமும் பிரமிக்கிறேன். என்னுடைய முன்கோபத்தினால் என் மனைவி வேறு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துவிட்டாள். தற்போது ஒரு முஸ்லீம் பெண் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்கிறாள். இந்தப்பெண்ணிடம் என்னுடைய பிரச்சினையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கிறேன். என்ன செய்வது என்று தெரியாமல் தந்தைக்குச் சமமான உங்களிடமிருந்து தீர்வை எதிர்பார்க்கிறேன். சென்னைக்கு வந்து உங்களை சந்திக்கவேண்டும் என்று எடுத்த அத்தனை முயற்சிகளும் உங்களின் அப்பாய்ன்மெண்ட் கிடைக்காமல் தோல்வியில் முடிந்தன. என் முதல்கேள்விக்கு துல்லியமான பதிலைத் தந்தது போலவே இதற்கும்பதில் தந்து என் வாழ்க்கைக்கு ஒரு நல்வழியை காட்டும்படி பாதம் பணிகிறேன்.

பதில் :

நூறுசதவிகித துல்லியமான பலனை எந்த ஒரு ஜோதிடராலும் சொல்ல முடியாது. நீங்கள் இணைத்திருக்கும் அந்த கேள்வி-பதிலில் உங்கள் குழந்தையின் ஜாதக அமைப்புப்படி அவளுக்கு கடகலக்னமாகி, உச்சம் பெற்ற எட்டுக்குடைய சனிபகவான், பத்தாம் வீட்டிலிருக்கும் பிதுர்க்காரகனாகிய சூரியனையும், அவருடன் இணைந்திருக்கும் ஒன்பதாமதிபதி குருவையும் பார்த்து, தந்தை அமைப்பு வலுவிழந்ததால், குழந்தைக்கு சனிதசை முடியும் காலமான அவளது 4 வயது 7 மாதங்கள் வரை நீங்கள் அவளைப் பார்க்க முடியாது என்று கணித்திருந்தேன்.

இதைப் பலிக்க வைத்தது பரம்பொருளின் கருணை. இதில் என் பங்கு எதுவும் இல்லை. ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிய துணை நிற்கும் இதுபோன்ற ஒரு மாபெரும் கலையை நமக்கு அருளிய நமது ஞானிகளை நினைத்தே நீங்கள் மெய்சிலிர்க்க வேண்டும். என்னைப் போன்ற எளியவனை நினைத்து அல்ல. ஜோதிடம் மட்டுமே நிரந்தரமானது. ஜோதிடன் வந்து செல்பவன்தான்.

நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகங்களின்படி உங்களுக்கு முதல் வாழ்க்கை நிலைக்காது. தற்போது பதினொன்றாமிடத்தில் இருக்கும் கேதுதசை உங்களுக்கு நடப்பதால் இஸ்லாமியப் பெண்ணின் தொடர்பு கிடைத்திருக்கிறது. கேதுவிற்கு குரு பார்வை இருப்பதால் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு நல்ல வாழ்க்கை வாழ முடியும். கோபத்தைக் குறைத்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *