adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 92 (28.06.2016)

ஒரு பக்தன், சென்னை-8.

கேள்வி :

என்னைப் போன்ற ஒன்றும் தெரியாதவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனும், ஜோதிடஉலகின் சூப்பர்ஸ்டாருமான குருநாதருக்கு கோடி நமஸ்காரங்கள். இருபத்தி ஒன்பது வயதில் பத்தொன்பது வயது பெண்ணிடம் காதல்வயப்பட்டு முன்பின் யோசிக்காமல் நானும் அவளும் பலமுறை உடலால் இணைந்து விட்டோம். தவறு செய்யும்வரை அமைதியாக இருந்த அந்தப்பெண் பிறகு கர்ப்பமாக இருக்கிறேன் திருமணம் செய்துகொள் என்று மிரட்ட ஆரம்பித்தாள். அவளைப் பற்றி விசாரித்ததில் அவள் சரியில்லை என்பதால் நான் திருமணம் செய்ய மறுத்து காவல்நிலையத்தில் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதன்பிறகு நாங்கள் எலியும் பூனையுமாக வாழ்ந்ததில் மூன்றுமாதத்தில் என் மனைவி தற்கொலை செய்து கொண்டாள். என்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நான்குமாதம் ஜெயிலில் இருந்து ஜாமீனில் வந்திருக்கிறேன். செய்த தவறினால் எல்லாவற்றையும் இழந்து அனாதையாக தனிமரமாக நிற்கிறேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப்போகும் நேரத்தில்தான் மாலைமலர் கேள்விபதில் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் படித்து மனதை மாற்றிக் கொண்டேன். நாலாவதாக வரும் சனிதசை மாரகத்திற்கு ஒப்பான கண்டங்களைக் கொடுக்கும் என்பது உண்மையா? எட்டில் செவ்வாய் இருப்பது தோஷமா? ஏழில் ராகு விதவைப் பெண் திருமண அமைப்பா? கொஞ்ச நாட்களாக ஆன்மீக நாட்டம் அதிகமாகி கோவில்களுக்கு அடிக்கடி செல்கிறேன். சில நேரங்களில் என் காதல்மனைவி அருகில் இருப்பதைப் போல் உணர்ந்து உணர்ச்சிகளால் கொந்தளிக்கிறேன். மீண்டும் மனிதனாக வாழ முடியுமா? வழக்கு எப்போது முடியும்? இனியாவது நல்ல பெண், நல்ல வாழ்க்கை அமையுமா? ஆயுள்பலம் எப்படி? எளிய இதயங்களின் கண்ணீரைத் துடைத்து நல்வழி காட்டும் இறைவனே.. என் கவலைக்கும் வழிகாட்டுங்கள்..

 சந்
ராசி குரு
 சனி
 சூ,சுக், செவ்,பு ரா
 பதில் :
(மீனலக்னம் மிதுனராசி ஐந்தில் குரு ஆறில் சனி ஏழில் ராகு எட்டில் சூரி சுக் செவ் புத 21-10-1978 5.30 மாலை ஜெயங்கொண்டம்)

உபய லக்னங்களான மிதுனம் கன்னி தனுசு மீனம் ஆகியவற்றிற்கு லக்னாதிபதி தனித்து நின்று கேந்திரகோணங்களில் வலுப்பெறுவது யோகங்களைத் தராது. உங்களுக்கு இந்த அமைப்பு இருக்கிறது. சுக்கிரன் வக்ரமாகி ஒரே டிகிரியில் செவ்வாயுடன் இணைந்ததும் குற்றம். இந்த அமைப்பால் பெண்ணால் பிரச்னை.

நான்காவது தசையாக சனிதசை வந்தால் நன்மை இல்லை என்பது பொது விதிதான். உங்களுக்கு தசாநாதன் சனி சுபத்துவ, சூட்சுமவலுவின்றி தனது பனிரெண்டாம் வீட்டைப் பார்த்து பாபத்துவ வலுப்படுத்துவதாலும், அஷ்டமாதிபதி சுக்கிரனின் சாரம் வாங்கியிருப்பதாலும் கீழ்க்கோர்ட்டில் வழக்கு பாதகமாக இருக்கும் என்பதால் கவனம் தேவை.

சனிதசையில் சூரியபுக்திவரை உங்களுக்கு பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். நடப்பவை அனைத்தும் பூர்வஜென்ம கர்மவினையால் நடப்பவை என்பதாலும் கடுமையான சில அமைப்புகளுக்கு இறைவழிபாட்டைத் தவிர வேறு பரிகாரங்கள் கிடையாது என்பதாலும் பரம்பொருளிடம் மனமுருகி பிரார்த்திப்பதைத் தவிர உங்களுக்கு வேறு பரிகாரங்கள் இல்லை.

எட்டில் செவ்வாய் நீசனுடன் இணைந்து தோஷ அமைப்பில் இருப்பதால்தான் உங்களுக்கு இதுபோன்ற வாழ்க்கைச் சிக்கல்கள் வந்தன. ஏழில் ராகு உங்கள் அமைப்பில் விதவைப்பெண்ணைக் குறிக்காது. லக்னத்தில் கேது குரு பார்வையுடன் அமர்ந்து தற்போது சனிதசை நடப்பதால் ஆன்மீகநாட்டம் அதிகமாக இருக்கும். இஷ்ட தெய்வமாக அந்த சிவனையே சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். துன்பங்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். வழக்கு முடிந்ததும் இன்னொரு நல்லவாழ்க்கை கிடைக்கும். லக்னாதிபதி உச்சம், ஆயுள் ஸ்தானாதிபதி ஆட்சி என்பதால் ஆயுள்குற்றம் இல்லை.

கே. கணேசன், சிந்தாமணி.

கேள்வி :
இந்த ஜாதகருக்கு எப்போது திருமணம் நடக்கும்? குடும்பத்தில் எல்லோரும் கவலையாக உள்ளோம்.
பதில் :

லக்னத்திற்கு இரண்டில் ராகு அமர்ந்து தற்போது ராகுபுக்தி நடப்பதால் உங்கள் மகனுக்கு இது திருமண நேரம்தான். உடனடியாக ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளகஸ்தி சென்று ஒரு முழுஇரவு தங்கி அதிகாலை ருத்ராபிஷேகப் பூஜையில் கலந்து கொள்ளவும். இன்னொரு ஜென்ம நட்சத்திரம் அன்று திருவெண்காட்டில் மூலவரை முதலில் வழிபட்டு பின்னர் புதனைத் தரிசித்து இரண்டரை மணிநேரம் உங்கள் மகனை அந்தக் கோவிலுக்குள் இருக்கச் செய்யவும். உடனடியாக திருமணம் நடக்கும்.

என். திருமலைசாமி, தாராபுரம்.

கேள்வி :

படிப்பு பிளஸ் டூ, சம்பளமும் குறைவு என்பதால் முப்பத்தி ஆறு வயது மகனுக்கு திருமணம் செய்ய எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. எனக்கு எழுபத்தி ஆறு வயதாகிறது. சர்க்கரை நோயினால் ஒரு கண் பார்வை இல்லை. வீட்டு வாடகை கொடுக்க ஏதோ தொழில் செய்கிறேன். முப்பது வருடமாக அரசு நன்மை ஒன்று வேண்டி விண்ணப்பித்து வருகிறேன். கிடைக்குமா? பரிகாரம் ஏதாவது செய்ய வேண்டுமா?

பதில் :

மகனுக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிகராசியாகி ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதால் அனைத்திலும் தடங்கல்கள் இருக்கின்றன. ஜாதகப்படி அடுத்த வருடம் தை மாதத்தில் இருந்து சித்திரைக்குள் திருமணம் நடந்து விடும். சனிக்கிழமைதோறும் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் இருக்கும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வாருங்கள். நீங்கள் கேட்கும் அரசாங்க உதவி அடுத்த வருடம் ஜூலை மாதத்தில்தான் கிடைக்கும்.

கே. பொன்னையன், பெருவிளை.

கேள்வி :

என் மகன் குவைத்தில் தனியார் பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். முப்பத்தி ஐந்து வயது ஆகிறது. திருமணம் அமையவில்லை. எப்போது திருமணம் என்பதைக் கூறவும்.

செவ்   சந்
 சூ,பு சு ராசி
கே  ல
 சூ,சுக், செவ்,பு குரு, சனி
பதில் :

(சிம்மலக்னம் ரிஷபராசி இரண்டில் குரு சனி ஆறில் கேது ஏழில் சூரி சுக் புத எட்டில் செவ் 12-3-1981 மாலை 5 மணி நாகர்கோவில்)

மகனுக்கு இரண்டில் சனி, எட்டில் செவ்வாய் என்பது தாமததிருமண அமைப்பு. நடக்கும் தசாநாதன் குருபகவான் எட்டுக்குடையவனாகி எட்டாமிடத்தையே பார்த்து பெட்ரோலுக்குரிய சனியுடன் இணைந்ததால் வெளிநாட்டில் பெட்ரோல் கம்பெனியில் வேலை செய்கிறார். அவரது ரிஷபராசிக்கு ஆகஸ்டு மாதம் குருபலம் வருவதாலும் கடந்த மார்ச் மாதம் முதல் குருதசையில் தாம்பத்திய சுகத்தைக் கொடுக்கக் கூடிய சுக்கிர புக்தி ஆரம்பித்துள்ளதாலும் வரும் தைமாதம் திருமணம் நடக்கும்.

காதல் திருமண வாய்ப்பு இருக்கிறதா?

க. ராஜேஷ், மார்த்தாண்டம்.

கேள்வி :

கலியுக காளிதாசர் குருஜி அவர்களுக்கு வணக்கங்கள். நான் பெற்றோரை வெறுத்து, என்னைப் பெற்றோர் வெறுத்து தனியாக வாழ்ந்து வருகிறேன். அரசாங்க நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை பார்த்தேன். என்னுடன் வேலை செய்தவர்கள் எல்லோருக்கும் பணி நிரந்தரம் ஆகிவிட்டது. ஆனால் எனக்கு ஆகவில்லை. அரசுவேலை கிடைக்க வாய்ப்பு உண்டா? நாற்பத்தி நான்கு வயதானாலும் பார்ப்பதற்கு முப்பது வயது தோற்றம்தான் இருப்பேன். காதல் திருமண வாய்ப்பு இருக்கிறதா? பெற்றோர்களிடம் சொத்துத் தகராறு இருப்பதால் எனக்கு சொத்தில் பங்கு தரவேண்டுமே என்பதற்காக என் தாய் தந்தை சகோதர்கள் எனக்குத் திருமணமாவதை விரும்பவில்லை. காதல் திருமணம், அரசுவேலை கிடைக்குமா என்பதைத் தெரிவியுங்கள். என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

சூ,பு     ல சனி ,சு செவ்
ராசி கே
குரு  சந்
பதில் :

(மேஷலக்னம், துலாம்ராசி இரண்டில் சுக் செவ் சனி, நான்கில் கேது ஒன்பதில் குரு பனிரெண்டில் சூரி புத 2-4-1972 7.மணி காலை குமரி)

முதலில் இப்படி பெற்றவர்களைக் குறை சொல்வதை நிறுத்துங்கள். எந்தத் தாய், தகப்பனும் சொத்துக்காக தன் மகனுக்கு திருமணம் ஆகக்கூடாது என்று நினைக்க மாட்டார்கள். சில சூழ்நிலைகளில் தகப்பன் மகனுக்கு எதிரியாகி இப்படி நினைத்தாலும் தாய் ஒருபோதும் இப்படி நினைக்க மாட்டாள். சக மனிதர்களை முதலில் நம்பக் கற்றுக் கொள்ளுங்கள். ஏமாற்றங்கள் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இருந்தாலும் ஏமாற்றமே எப்போதும் வாழ்க்கையாகி விடாது.

உங்களுக்கு லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய் சனி மிக நெருக்கமாகி ஒரு டிகிரிக்குள் இணைந்ததும், அதுவே ராசிக்கு எட்டாம் வீடானதும் கடுமையான தாரதோஷம். அதைவிட மேலாக மேஷ லக்னத்திற்கு வரக்கூடாத புதன் தசை முப்பது வயது முதல் நடந்து கொண்டிருக்கிறது. புதபகவான் நீசபங்கமும் வக்ரமும் பெற்று வலுவாகி தனது ஆறாம் வீட்டையே பார்த்து வலுப்படுத்தியதால் உங்களைச் சுற்றிலும், ஊரிலும் ஒருவரைக் கூட விடாமல் எதிரியாக்கி வைத்திருப்பீர்கள்.

எல்லோருமே ஆகாதென்றால் யார் பெண் தருவார்கள்? எந்த ஒரு மனிதனுமே தனியாக வாழ்ந்து விடவே முடியாது. தனிமரம் தோப்பாகாது என்பதை விட தனிமரம் காய்க்காது, பலன் தராது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். காதல் திருமணம் என்றால் கூட அதற்கும் ஒரு பெண் வேண்டும். தனியாக எதையும் செய்ய முடியாது. இந்த வயதில் எந்தக் கன்னிப்பெண் ஆதாயம் இல்லாமல் உங்களைக் காதலிப்பாள்?

கடந்த ஆறுவருடங்களாக ஆறுக்குடையவன் தசையும் ஏழரைச்சனியும் சந்தித்ததாலும் உங்களுக்கு வாழ்க்கையில் வேலை திருமணம் போன்ற ஆதார அமைப்புகளில் நல்லவை நடக்கவில்லை. தற்போது புதன் தசையில் இறுதிப் பகுதியான சனி புக்தி வரும் ஜூலை மாதம் முதல் ஆரம்பிக்க இருப்பதாலும் சனிபகவான் சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும் இன்னும் ஒரு வருடத்திற்குள் உங்களுக்கு திருமணம் நடக்க வேண்டும்.

“தாயிற் சிறந்த கோவில் இல்லை” என்பது மூத்தோர் வாக்கு. எனவே நடந்தவை எல்லாவற்றுக்கும் பெற்ற தாயிடம் சென்று மன்னிப்புக் கேட்பதே உண்மையான பரிகாரம். தாயின் மனம் குளிர்ந்தால் அரசுவேலை திருமணம் இரண்டும் கிடைக்கும். உடனடியாக அதைச் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *