adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 135 (16.5.2017)

ரவி, மதுரை – 9.

கேள்வி :

என் சொந்தக்காரர் மூலம் பார்ட்னர்ஷிப்பாக ரத்தபரிசோதனை நிலையம் நடத்தி வந்தேன். அவர் என்னை ஏமாற்றி பணத்தை வைத்துக் கொண்டு தனியாக தொழில் நடத்துகிறார். இப்போது என் தொழில் மோசமாக உள்ளது. எனக்கு பணம் திரும்ப கிடைக்குமா? தொழில் நன்றாக நடக்குமா?

பதில்:

உங்களின் விருச்சிக ராசிக்கு தற்போது ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதால் 2012 முதல் பண விஷயங்களில் நல்லது எதுவும் நடந்திருக்காது. உறவு, நட்பு, விஷயங்களில் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று அடையாளம் காட்டப்படும் நேரம் இது. குறிப்பாக பணம் பற்றிய விழிப்புணர்வு இப்போது தான் கிடைக்கும். வரும் அக்டோபர் மாதம் 26 ம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு அனைத்தும் சீராகும். ஏமாந்த பணம் இரண்டு வருடங்களில் படிப்படியாக கிடைக்கும்.

என். சரவணன், புதுச்சேரி.

கேள்வி :

18 வயதில் இருந்தே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறேன். சொந்த வீடு, நிலம் என அனைத்தும் போய்விட்டது. தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். பேன்சி ஸ்டோர் வைத்திருக்கிறேன். வருமானம் சரியில்லை. மகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலையாக இருக்கிறது. மாலைமலரில் வரும் உங்களுடைய பதில்களை வாரந்தோறும் காத்திருந்து படிக்கும் நான் எனக்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பு சூ,சு ரா சந்
ராசி
குரு  செவ், சனி
 பதில்:

(கன்னி லக்னம் மிதுன ராசி. 2-ல் செவ், சனி. 4-ல் குரு. 8-ல் புதன். 9-ல் சூரி, சுக், ராகு. 1.6.1984, மாலை 3.05, புதுச்சேரி).

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியை விட ஆறுக்கு அதிபதி அதிக வலுப் பெற்றால் கடன், நோய், எதிர்ப்பு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று அதிகமாக இருக்கும். சிலருக்கு இவைகள் அனைத்துமே சேர்ந்தாற் போலத் தொல்லையாக இருக்கும்.

உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி புதன் எட்டில் மறைந்த நிலையில், ஆறாம் அதிபதியான சனி உச்ச நிலையில் 2-ல் அமர்ந்து புதனை பார்ப்பதால் 18 வயதில் ஆரம்பமான குருதசை, சனிபுக்தியில் இருந்தே உங்களுக்கு கடன் தொல்லைகள் உருவாகி விட்டன. ஜீவனாதிபதியான புதனுக்கு ஏற்றதுதான் தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் பேன்சித் தொழில். இதனையே தொடர்ந்து செய்யலாம்.

சனி 6-க்கு அதிபதி என்றாலும், உங்களின் கன்னியா லக்னத்திற்கு அவர் 5-க்கும்   உடைய யோகாதிபதி என்பதால் தன்னுடைய தசையில் முதல் பாதி வருடங்கள் கடன் தொல்லைகளையும், பிற்பாதி வருடங்கள் கடனில்லாத வாழ்க்கையும் தருவார். இன்னும் 8 வருடங்களுக்குப் பிறகு கடன் தொல்லைகள் இருக்காது.

ஆயினும் ஒரு வியாபாரி கடன் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் 8 வருடங்களுக்கு பிறகு சனியால் அமையும் கடன் சுபக் கடனாக, வியாபாரத்தை விருத்தி செய்யக் கூடிய கடனாக அமையும். அடுத்தடுத்து யோக தசைகள் நடைபெற உள்ளதாலும், மகளின் ஜாதகம் யோகமாக இருப்பதாலும் வாழ்க்கையில் நன்றாக இருப்பீர்கள். மகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

பி. மகேஸ்வரன், மதுரை – 19.

கேள்வி :

சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என் ஜாதகத்தில் 8- மிடத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். அது மறைவுஸ்தானம் என்று படித்திருக்கிறேன். இதற்கு என்ன பலன்? அரசு வேலை எனக்கு கிடைக்குமா? அல்லது தனியார் நிறுவனம்தானா? எப்போது திருமணம் நடக்கும்?  மனக்குழப்பம் அதிகமாக உள்ளது. நல்ல பதிலைத் தாருங்கள்.

பதில்:

ஜாதகத்தின் முதல் பக்கத்தை மட்டும் அனுப்பி விட்டு பிறந்த நேரம் கொடுக்கா   விட்டால் என்னால் தெளிவான பதில் கொடுக்க முடியாது. வரும் ஜாதகங்கள் அனைத்தையும் திருக்கணிதப்படி புதிதாக கணித்தே பதில் தருகிறேன் என்பதால் பிறந்த நேரம் இல்லாத ஜாதகங்களுக்கு என்னால் பதில் தர முடிவதில்லை. உங்களின் முதல்பக்க ஜாதக அமைப்பின்படி உங்களுக்கு கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசி என்பதால் தற்போது மனக்குழப்பம் அதிகமாகத்தான் இருக்கும். கடந்த நான்கு வருடங்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்.

தனுசு லக்னமாகி 8-ல் குரு உச்சம் பெற்றிருந்தாலும், நீச செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். குருவை 2-ல் உள்ள சனி பார்க்கிறார். ஒரு கிரகம் உச்சமாக இருந்தாலும் அது நீசனுடன் இணையுமானால் சூன்ய பலத்தை அடைகிறது, அதாவது பலமில்லாத நிலையை அடைகிறது என்று நமது மூலநூல்கள் சொல்கின்றன. அதன்படி செவ்வாய்க்கு நீசபங்கத்தை கொடுத்த குரு, உச்சநிலையில் இருந்து இறங்கி விடுகிறார்.

இதற்கு என்ன பலன் என்று கேட்டிருப்பதால் தாயார், வீடு, வாகனம் இவைகளைக் குறிக்கும் நான்காம் அதிபதி குருபகவான் உச்சத்தில் இருந்து இறங்கி சூன்ய பலத்தை அடைந்து, செவ்வாய், சனி ஆகிய இரண்டு பாப கிரகங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாலும், மாதா காரகனாகிய சந்திரன் நீசம் பெற்றுள்ளதாலும், சிறு வயதிலேயே நீங்கள் தாயை இழந்திருக்க வேண்டும். குரு மறைந்ததற்கான பலன் இது. மற்ற கேள்விகளுக்கு பிறந்த நேரத்தோடு மீண்டும் ஜாதகத்தை அனுப்புங்கள்.

எம். சின்னச்சாமி, வேடந்தவாடி.

கேள்வி :

பிறந்ததில் இருந்தே கஷ்டம்தான். என்ன தொழில் செய்யலாம்? பால்பண்ணை அல்லது கோழிப்பண்ணை இரண்டில் எது கை கொடுக்கும்? குலதெய்வம் முனீஸ்வரன்தான் துணை இருக்கிறார். ஆயினும் துன்பங்கள் அதிகமாக இருக்கிறது. அடிக்கடி தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?

செவ் சூ, சுக் பு
ராசி  ரா
சந்
குரு, சனி
பதில்:

(மீன லக்னம், மகர ராசி. 2-ல் செவ். 3-ல் சூரி, சுக். 4-ல் புதன். 5-ல் ராகு. 7-ல் குரு, சனி. 25.6.1981, அதிகாலை 2.30, திருவண்ணாமலை).

பத்துக்குடையவன் குருவாகி சனியுடன் இணைந்திருப்பதாலும், பால் பண்ணை தொழிலுக்குரிய கிரகமான சந்திரன், ராகு-கேதுக்களுடன் இணைந்து பலவீனமாகி இருப்பதாலும் பால் தொழிலை விட கோழிப்பண்ணை உங்களுக்கு கை கொடுக்கும். ஆயினும் உங்களது மகர ராசிக்கு தற்போது ஏழரைச்சனி ஆரம்பிக்க உள்ளதால் இன்னும் 3 வருடங்களுக்கு தொழில் நிலைமைகள் சுமாராகத்தான் இருக்கும். எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி தொழில் செய்யாதீர்கள். அதைவிட ஏதேனும் ஒரு வேலைக்குச் செல்லுங்கள். அது பாதுகாப்பானது.

லக்னாதிபதி குருபகவான் சனியோடு இணைந்து, ஆறுக்குடைய சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் இருப்பதால் இந்த தசையில் உங்களை கடன்காரன் ஆக்குவார். எனவே கடன் வாங்கி தொழில் செய்யாமல் இருப்பது நல்லது. லக்னத்தை லக்னாதிபதி பார்ப்பதாலும், லக்னாதிபதிக்கு வீடு கொடுத்த புதன் ஆட்சியாக இருப்பதாலும், ஏழரைச்சனி முடிந்த பிறகு உங்களுடைய வாழ்க்கை கஷ்டம் இல்லாமல் நன்றாகவே இருக்கும். தற்கொலை எண்ணம் வரும் அளவிற்கு ஜாதகத்தில் ஒன்றுமில்லை. எதிர்காலத்தில் சிறப்பாகவே இருப்பீர்கள்.

படிக்காத மகனை என்ன செய்யலாம்?

எஸ். கோவிந்தராஜன், ராசிபுரம் - 637 408.

கேள்வி :

எனது இளைய மகன் பறவைகள், நாய், பூனை, மீன்கள் வளர்ப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறான். படிப்பில் ஆர்வம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த வருடம் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். அவரை மேற்கொண்டு உள்ளூரில் படிக்க வைக்கலாமாவெளியூரில் ஹாஸ்டலில் தங்கவைத்து படிக்க வைக்கலாமா?  எந்தத் துறையில் படிக்க வைத்தால் நன்கு வருவார்? இவரது எதிர்காலத்தை பற்றிய கவலை மிகவும் அதிகமாக இருக்கிறது.

பதில்:

ஒரு மனிதனுடைய வளர்ச்சி என்பது அவனுடைய அனுபவ அறிவில்தான் உள்ளதே தவிர அவனது கல்வியில் இல்லை. தற்போதைய நமது கல்வி முறைப்படி ஒரு மாணவனுக்கு கொடுக்கப்படும் கல்வியறிவு படிக்கும் அனைவருக்குமே பயன் தரும் என்று யாருமே ஒத்துக் கொள்ள மாட்டோம்.

உலகின் மெகா பணக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே 10-வது கூட படிக்காதவர்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உலகின் நம்பர்-1 பணக்காரரான பில்கேட்ஸ் 10-வது தாண்டாதவர். இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பள்ளி இறுதி வகுப்பைக் கூட முடிக்காதவர்கள்தான்.

நான்கு வயதில் அம்மாவால் கொடுக்கப்பட்ட பத்து முட்டைகளால்தான் அமெரிக்க பெரும் பணக்காரர் ராக்பெல்லர் உருவானார். பத்தை நூறாக்கும் வித்தை அதில்தான் வந்தது. “படிக்காமலேயே இவ்வளவு பெரிய பணக்காரராக இருக்கிறீர்களே.. படித்திருந்தால் இன்னும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்திருப்பீர்கள்?” என்ற கேள்விக்கு “படித்திருந்தால் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு இருந்திருப்பேன்” என்று ராக்பெல்லர் சொன்னார்.

கிராமங்களில் பெரியவர்கள் “சரஸ்வதி இருக்கும் இடத்தில் லட்சுமி இருக்க மாட்டாள். லட்சுமி இருக்கும் இடத்தில் சரஸ்வதி இருக்கமாட்டாள்” என்று சொல்வார்கள். அனுபவம்தான் படிப்பு. அதை அறிவதுதான் அறிவு. 10 வது கூட படிக்காத ஒரு தொழிலதிபர்தான் தனக்கு கீழே பத்தாயிரம் எம்பிஏ பட்டதாரிகளை வேலைக்கு வைத்திருக்கிறார். உலகில் உள்ள ஏராளமான முரண்பாடுகளில் இதுவும் ஒன்று.

“படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்” என்கிற ஒரு பழமொழி தமிழில் உள்ளது. மெத்தப் படித்த ஒரு கல்வியாளன் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பில் ஒருமுகப்பட்ட முனைப்பு இன்றி, எல்லாவற்றிலும் அரைகுறையாக முயற்சி செய்து வாழ்க்கையில் தோற்றுப் போவதை கண்ணெதிரே பார்க்கிறோம்.

ஆனால் படிக்காத ஒருவரிடம் தான் படிக்கவில்லை என்ற எச்சரிக்கை உணர்வு எப்போதும் இருக்கும். படித்தவர்களைப் பார்க்கும்போது இவர்களை விட நான் பின் தங்கி விடுவோனோ என்கிற பயத்தில் தனக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு துறையைப் பிடித்துக் கொண்டு, தன் எண்ணங்களை ஒருமுகமாக அதில் செலுத்தி முன்னேறி விடுவார். இதுவே கல்வியறிவு இல்லாதவர்களின் முன்னேற்ற ரகசியம்.

எப்படி ஒரு லென்சின் மூலம் குவிக்கப்படும் சூரிய ஒளி காகிதத்தை எரிக்கிறதோ, அதுபோல உங்களுடைய எண்ணங்களை ஒருமுகமாக எங்கு குவிக்கிறீர்களோ அங்கு நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். இதுவே ஆழ்மனதின் ரகசியம். இதுதான் வெற்றியின் உச்சக்கட்ட தத்துவம். பள்ளிப்பருவத்தில் இருக்கும் மகனுக்கு என்ன பிடிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அவனுக்கு ஆர்வம் உள்ள துறையில் அவனை உற்சாகப்படுத்துவதே ஒரு நல்ல பெற்றோரின் கடமையாக இருக்க முடியும்.

தனக்கு ஈடுபாடு உள்ள, பிடித்தமான துறையை, தொழிலாக வைத்துக் கொண்டவன் தோற்றதே இல்லை. எதில் நீங்கள் ஈடுபாட்டோடு இருக்கிறீர்களோ அதில் ஜெயிக்கிறீர்கள். உங்கள் மகனுக்கு பறவைகள், நாய், பூனை, மீன்கள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கிறது என்பதை இப்போதே நீங்கள் தெரிந்து கொண்டது மிகவும் நல்லது.

அவருக்கு கல்வி பிடிக்கவில்லை என்றால் அவருக்கு ஆர்வமான விஷயத்தில் கவனத்தை செலுத்த வையுங்கள் அதிலேயே அவர் ஒரு பெரிய தொழிலதிபராகவோ, அல்லது சாதனையாளராகவோ வருவார். மகனின் ஜாதகப்படி கன்னி லக்னமாகி, லக்னாதிபதி புதன் சனியுடன் இணைந்து 9-ம் இடத்தில் அமர்ந்து, 10-ல் சூரியன், குரு இணைந்திருப்பதால் தொழில் நிலைமையில் முன்னேற்றமாக வருவார்.

பொதுவாக வியாபாரக் கிரகமான புதனை 10-ம் அதிபதியாகக் கொண்டவர்கள் வேலைக்கு செல்வதை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் என்ற விதிப்படி உங்கள் மகன் தொழிலதிபராக வருவர் என்று ஜாதகம் காட்டுகிறது. படிக்கும் ஆர்வம் இருக்கின்ற வரை அவரை பள்ளி, கல்லூரிக்கு அனுப்புங்கள். உள்ளூரிலேயே படிக்க வையுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *