எஸ். கணேசன், சென்னை - 2.
கேள்வி :
மாலைமலரில் சமீப காலமாகத்தான் உங்கள்கட்டுரைகளையும், பதில்களையும்படிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஜோதிடக்கலை அரசுஇல்லை. ஜோதிடச்சக்கரவர்த்தி என்பதுதான் உண்மை. சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிடர் உன் மனைவி பணப்பேராசைபிடித்தவள் என்றார். அது மிகவும் சரி. மனம் இல்லாத மனைவி எனக்கு அமைந்தாள். பணம் இருந்தால்தான் அவளோடு சேர்ந்து வாழ முடியும். கடந்த இரண்டு வருடங்களாக கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வந்து தனியாக வாழ்கிறேன் . இரண்டு மாதமாகத்தான் மகன்என்னோடு பேசுகிறான். மிகவும் கஷ்டம், வறுமை. எனக்குப் பிடித்தஇறைவன் சாட்சாத் பரமேஸ்வரன்தான். லிங்காஷ்டகம், கோளறுபதிகம், திங்கட்கிழமைகளில் படிக்கிறேன் . எதிர்காலம் எப்படி இருக்கும் ?
சந் |
பு,கே |
சூ,சு |
ல,செவ் |
|
ராசி |
|
|
குரு |
|
சனி |
|
|
பதில்:
(மிதுனலக்னம், மீனராசி. லக்னத்தில் செவ். மூன்றில் குரு. ஆறில் சனி. பதினொன்றில் புத, கேது. பனிரெண்டில் சூரி, சுக். 24.5.1957, 8 காலை, விருத்தாசலம்)
குடும்பம் நடத்துவதற்கு புருஷன் பணம் கொடுக்காவிட்டால் பெண்டாட்டி என்ன செய்வாள்? குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை ஒரு கணவன் சரியாகக் கவனித்துக் கொண்டால் எந்த மனைவியும் பேராசையும் படமாட்டாள். கேள்வியும் கேட்கமாட்டாள். பணம் கேட்கிறாள் என்பதற்காக பொறுப்பைத் தட்டிக்கழித்து இப்படி ஓடிவந்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
உங்கள் ஜாதகத்தைப் பொறுத்தவரை குருபகவான் ஏழுக்குடையவராகி ஏழாமிடத்தைப் பார்ப்பதால் உங்கள் மனைவி குடும்பப் பொறுப்புள்ளவராக இருப்பார். லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னாதிபதி புதன் செவ்வாய் வீட்டில் அமர்ந்து பரிவர்த்தனையாகி இருப்பதால் நீங்கள்தான் கோபக்காரராகவும், யாரும் கேள்வி கேட்டால் பிடிக்காதவராகவும் இருப்பீர்கள். ராசிக்கு ஏழாம் வீட்டையும், லக்னத்திற்கு ஏழாம் வீட்டையும் செவ்வாய் பார்ப்பதால் எப்படிபட்ட மனைவியுடனும் நீங்கள் ஒத்துப் போக மாட்டீர்கள்.
அஷ்டமச்சனி நடந்ததால் குடும்பத்தை விட்டுப் பிரிந்த நீங்கள் வரும் சூரியதசை சந்திரபுக்தியில் குடும்பத்துடன் இணைவீர்கள். கடந்த இருபது வருடங்களாக நடக்கும் விரைய சுக்கிரதசை அடுத்த வருடம் முடிவதால் சூரியதசையில் இருந்து நல்ல மாற்றங்கள் உங்களிடம் இருக்கும். என்னுடைய கணிப்புப்படி உங்கள் குடும்பத்தில் மற்றவர்களுக்கும் ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும். 2018_ம் ஆண்டு முதல் கஷ்டத்தையும், வறுமையையும் பரமேஸ்வரன் நீக்கி அருள்வார்.
என். ஆர். எஸ். வேலன், புதுச்சேரி.
கேள்வி :
மகள் சென்னையில் பிரபல கம்பெனியில் நல்ல வேலை, நல்லசம்பளத்தில் பணியாற்றி வருகிறது. ஜோதிடர்கள் நல்ல மணமகன்கிடைப்பார் என்று கூறுகின்றனர். ஆனால் திருமணம் தடைப்படுகிறது. ஐயா அவர்கள் என் மகளுக்கு எப்போது திருமணம்? நல்ல வரன்அமையுமா? வெளிநாடு போகும் அமைப்பு உள்ளதா? என்பதை கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
|
பு |
சந்,சூ |
சு,கே
செவ் |
|
ராசி |
ல,குரு |
சனி |
|
|
|
|
|
பதில்:
(கடகலக்னம், ரிஷபராசி. லக்னத்தில் குரு. ஏழில் சனி. பத்தில் புத. பதினொன்றில் சூரியன், பனிரெண்டில் சுக், செவ், கேது. 15.5.1991, 11 காலை, பாண்டி)
லக்னத்திற்கு ஏழில் சனி, பனிரெண்டில் செவ்வாய் என்பதோடு ராசிக்கு எட்டில் ராகு, இரண்டில் செவ்வாய் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன், செவ்வாய் கேதுவுடன் இணைவு என்ற ஜாதக அமைப்புள்ள உங்கள் மகளுக்கு தாமத திருமணமே நல்லது. இதுபோன்ற ஜாதகர்களுக்கு இருபத்தியெட்டு வயது போலத்தான் திருமணம் நடக்கும்.
புத்திரஸ்தானதிபதி செவ்வாய் பனிரெண்டில் மறைந்து ராகுகேது சம்பந்தப்பட்டு, புத்திரகாரகன் குருவும் சனிபார்வையில் உள்ளது புத்திரதோஷம் என்பதாலும் திருமணம் தாமதமாகும். ராகுதசை நடப்பதால் உங்கள் மகள் வெளிநாடு செல்வார். அடுத்து நடக்க இருக்கும் குருதசை ஜலராசியான கடகத்தில் இருப்பதாலும் அடுத்த தசானாதன் சனிபகவான் எட்டுக்குடையவனாகி சரராசியான மகரத்தில் உள்ளதாலும் உங்கள் மகள் வெளிநாட்டுக் குடிமகளாக கடைசிக்காலம் வரை அந்நியதேசத்தில் வசிப்பார். மருமகன் அந்தஸ்தான குடும்பத்தைச் சேர்ந்த இதேபோல வெளிநாட்டில் செட்டிலாகும் அமைப்புடையவர்.
எஸ். அம்சவர்தன், உடுமலைப்பேட்டை.
கேள்வி:
என் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்தான். தற்போது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் நிலையில் படிப்பில் மந்தநிலை தெரிகிறது. சொன்னபடி கேட்பதில்லை. பிரண்ட்ஸ் சர்க்கிள் வேறு தடையாக இருக்கிறது. ராகுதசை நடப்பதால் இப்படி என்று சொல்கின்றனர். எப்படிப் படிப்பான்? வெளிநாடு செல்வானா? இவன் ஒரு பையன்தான். இவன் அம்மாவிற்கு வேறு அடிக்கடி உடம்பு சரியில்லை. இவன் யோகமான பையனா? கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்யலாமா?
குரு |
சனி |
சூ,பு |
சு |
|
ராசி |
ரா |
|
|
|
|
ல,செவ் |
சந் |
பதில்:
(துலாம்லக்னம் கன்னிராசி லக்னத்தில் செவ்,, ஆறில் குரு, ஏழில் சனி, எட்டில் சூரி புத, ஒன்பதில் சுக், பத்தில் ராகு. 25-5-1999 மாலை 4 உடுமலைப்பேட்டை)
பள்ளிப்பருவத்தில் ராகுதசை நடந்தாலே படிப்பில் கவனம் சிதறும் என்பதை அடிக்கடி எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது உங்கள் மகனுக்கு கடகராகு என்பதாலும் ராகுவிற்கு வலுப்பெற்ற குருவின் பார்வை இருப்பதாலும் கெடுதல்கள் செய்ய மாட்டார். நீசசனியின் புக்தி நடக்க இருப்பதால் பையன் படிப்பில் மந்தமாகத்தான் இருப்பான். ஏழாமிடம் பலவீனமாக இருப்பதால் நண்பர்களால் அவப்பெயர் வரும் என்பதால் அவனைக் கவனமாக வழி நடத்துங்கள். கடகத்தில் உள்ள ராகுதசை என்பதால் படித்து முடித்து வெளிநாட்டில் வேலை செய்வான். புத ஆதித்யயோகம் எட்டில் ஏற்பட்டுள்ளதால் படிப்பில் மந்தமாக இருந்தாலும் நல்லபடியாக படித்து முடித்து விடுவான்.
தாயாரைக் குறிக்கும் நான்காமிடத்து அதிபதி சனி நீசமாகி நான்காமிடத்தையும் அதன் அதிபதி சனியையும் செவ்வாய் பார்த்து நான்காமிடத்தோடு ராகுகேது சம்பந்தப்பட்டு சந்திரனும் பனிரெண்டில் மறைந்ததால் இவன் தாயாருக்கு உடல் மனம் இரண்டுமே நன்றாக இருக்காது. ராகுதசை நடப்பதால் வருடம் ஒருமுறை ஸ்ரீகாளஹஸ்தியில் வழிபடவும்.
அடுத்தவரிடம் ஆண்குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?
ஒரு சகோதரி.
கேள்வி:
அண்ணா... பிறக்கும்போதே அம்மாவை முழுங்கியவள் நான். அக்காக்களோடு வறுமையும் என் கூடப் பிறந்ததுதான், அக்காக்களும் நன்றாக இல்லை. நானும் நன்றாக இல்லை. படிக்கும்போதே எனக்குத் திருமணம் செய்து வைத்து அப்பா கடமையை முடித்து விட்டார். ஒரு பெண்குழந்தை இருக்கிறது. என் கணவர் நல்லவர். அம்பாள் பக்தர். அவருக்கு அம்பாளைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் இல்லை. குழந்தை உருவான பிறகு என் கணவர் என்னைத் தொடவில்லை. சிலமாதங்களாக என் மாமியார் ஆண்குழந்தை பெற்றுக்கொடு என்று என்னை சொல்லமுடியாத வகையில் கொடுமைப்படுத்துகிறார். இல்லாவிட்டால் என்னைத் துரத்திவிட்டு என் கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கப் போவதாகப் பயமுறுத்துகிறார். ஏற்கனவே மூத்தஅக்கா வாழாவெட்டியாக என் அப்பாவுடன் இருக்கும் நிலையில் எனக்கும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் என் அப்பா செத்துப்போவார். நின்றால் குற்றம் நடந்தால் குற்றம் என்று நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அன்புக்காக ஏங்கி ஏங்கி ஏமாந்துபோன நான் இப்போது என் மனதைப் புரிந்து கொண்ட பக்கத்து வீட்டு காலேஜ் படிக்கும் ஒருவரோடு “பேசிக்” கொண்டிருக்கிறேன். இவரும் என் இனத்துக்காரர்தான். ஜாதகப்படி எனக்கு ஆண்குழந்தை உண்டா? இவர் மூலமாக நான் ஆண்குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? என் வாழ்க்கையில் பிரச்னை வருமா? என் முடிவு சரிதானா?
|
|
|
செவ் |
சனி |
ராசி |
சூ |
|
பு |
|
சந் |
ல,குரு
ரா |
சு |
பதில்:
(துலாம்லக்னம் விருச்சிகராசி லக்னத்தில் குரு ராகு, ஐந்தில் சனி, ஒன்பதில் செவ், பத்தில் சூரி, பதினொன்றில் புத, பனிரெண்டில் சுக்)
சில கடிதங்களைப் படிக்கும்போதே கையும் மனதும் நடுங்குகிறது... முத்து முத்தான கையெழுத்தில் பக்கம்பக்கமாக தெளிவாகக் கடிதம் எழுதத் தெரிந்த பெண்கள் வாழ்க்கையில் மட்டும் தெளிவின்றித் தடுமாறுகிறீர்களே ஏன்?
நமது முன்னோர்கள் பூமியை எதற்கு பூமிமாதா என்று பெண்ணோடு ஒப்பிட்டார்கள் தெரியுமா? தன்னை வெட்டிக் காயப்படுத்துபவனையும் பொறுத்துக் கொண்டு நன்மைகளையே நிலம் தருவதைப் போல தன்னைக் கொடுமைப் படுத்துபவரையும் பொறுத்து மன்னித்து அரவணைத்து அன்பு காட்டும் குணம் பெண்ணிற்கு இருப்பதால்தான்.
“மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்ற நம் மகாகவி நீ கேட்கும் இந்தக் கேள்வியைப் படித்தால் மாபாதகம் செய்திருக்க வேண்டும் என்று மாற்றிப் பாடியிருப்பான். இருபத்தியிரண்டு வயதேயான நீ பக்கத்து வீட்டு மாணவருடன் “பேசிக்” கொண்டிருக்கிறேன் என்று தலைப்புக்குறி போட்டு எனக்கு விளக்கி அவரும் என் இனத்துக்காரர்தான் என்று நியாயப்படுத்துகிறாய். இருபத்தியிரண்டு வயதில் நீ அன்புக்காக ஏங்குவதால் உன் தெருவில் இருக்கும் அத்தனை ஆண்களும் உனக்கு அன்பு காட்டத் தயாராக இருப்பார்கள். அறுபத்தியிரண்டு வயதில் ஏங்கிப் பார். நாலுகால் பிராணி கூட உன்னைச் சீந்தாது.
நடப்பவைகளை நீயாகச் செய்யவில்லை. செவ்வாய் பார்வையைப் பெற்ற நீசச்சுக்கிர தசையும் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுபுக்தியும் உன் கேட்டை நட்சத்திரத்திற்கு நடக்கும் ஜென்மச்சனியும் உன்னைச் செய்ய வைக்கின்றன.
உன் கணவனுக்கு நீ உண்மையாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும். நான்காமிடத்தைச் செவ்வாய் பார்த்து, நான்கிற்குடையவனை ஆறு பனிரெண்டிற்குடையவர்கள் பார்த்து, ராசிக்கு நான்கில் வக்ரச்சனி அமர்ந்து, மாதாகாரகன் சந்திரனும் நீசமானதால் பிறக்கும்போதே தாயை இழந்த நீ உன் மகளுக்கு ஒரு உண்மையான உதாரணத்தாயாக இருக்க வேண்டாமா?
உன் கேட்டை நட்சத்திரத்திலேயே தற்போது சனி சென்று கொண்டிருப்பதால் வரும் ஜனவரிமாதம் ஆரம்பிக்க இருக்கும் சனிபார்வை பெற்ற கேதுவின் அந்தரத்தில் மிகப்பெரிய தலைகுனிவையும் கேவலத்தையும் சந்திப்பாய். நீசம் பெற்ற லக்னாதிபதி தசையில் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாதே. உடனடியாக அனைத்தையும் நேராக்கிக் கொள். ஐந்தில் சனி அமர்ந்து ராசிக்கு ஐந்துக்குடையவன் விரயம் புகுந்து குருபகவான் பகைபெற்று ராகுவுடன் இணைந்ததால் ஜாதகப்படி உனக்கு ஆண்குழந்தை இல்லை.
அம்மா இல்லாத நீ மரு”மகளா”ய்ப் போனவீட்டில் மாமியாரை உன் அம்மாவாக்கியிருக்க வேண்டாமா? இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. எத்தனை பெரிய கொடுமைக்காரியாக இருந்தாலும் மாமியாரும் ஒரு பெண்தான். ஒரு பெண்ணின் பிரச்னைகளை இன்னொரு பெண்தான் தெளிவாகப் புரிந்து கொள்வாள்.
உன்னைத் தொடாத உன் கணவனைப் பற்றி உன் மாமியாரிடம் மென்மையாகச் சொல். இல்லறம் முடித்துத்தான் துறவறம் போகச் சொல்லி நமது மேலான மதம் எடுத்துச் சொல்வதை உன் கணவனுக்குப் புரிய வை. உன்னைப் புறக்கணித்து அந்த அம்பாளை உபாசிப்பதை அந்த அன்னையே ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதை “நச்” சென்று விளக்கு.
வைராக்கியமுள்ள ஒரு பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். உனது ஆக்கசக்தியை நல்லவைகளுக்கு மட்டுமே பயன்படுத்து. ஜாதகப்படி ஆண்குழந்தை இல்லையென்று நான் சொன்னாலும் அந்த அம்பாள் நினைத்தால் ஒன்றுக்கு இரண்டாக உன் கணவன் மூலமாக ஆண் மக்களை அருள்வாள். அவளை நினை. அவளைத் துதி. அவளிடம் வேண்டு. அனைத்தும் கிடைக்கும்.
Dear Guru Ji
As Usual your answers are great.