என். கதிர்வேல், கோயம்புத்தூர் - 27.
சனி | |||
ரா | ராசி | சந் | |
கே ல | |||
சுக் | சூ,பு குரு | செவ் |
கேள்வி :
மாலைமலரில் தங்களது கேள்வி-பதில் படிக்க ஆரம்பித்து உங்களின் ஆறுதலான, தெளிவான, நம்பிக்கையான, தெய்வவாக்கு போன்ற வார்த்தைகளால் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டவன் நான். சிறுவயதிலேயே சினிமாத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டு திரைப்படத் தலைப்புகளை கற்பனை மூலம் கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். நான் கண்டு பிடித்த தலைப்புகள் பின்னாட்களில் திரைப்படங்களாகவும் வெளி வந்திருக்கின்றன. என் வாழ்க்கையில் எதுவுமே முழுமையாக இல்லை. காலையில் மகிழ்ச்சி என்றால் மாலையில் துயரம் என நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். அடமானத்திற்கு வைத்த வீட்டை 18 வருடமாகியும் திருப்ப முடியவில்லை. திருப்ப முடியுமா? அல்லது வேறு ஒருவருக்கு கைமாற்றி வைக்க வேண்டுமா? 26 வருடங்களாக பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா? சொந்தத் தொழில் செய்யலாமா? சினிமா ஆசை அதிகமாக உள்ளது. சினிமாவில் பணி புரிய ஜாதக அமைப்பு உள்ளதா? முயற்சி செய்தால் கிடைக்குமா? கடன் தொல்லை எப்போது தீரும்?
பதில்:
(சிம்மலக்னம், கடகராசி. 1-ல் கேது. 2-ல் செவ். 3-ல் சூரி, புதன், குரு. 4-ல் சுக். 9-ல் சனி. 23.10.1970, அதிகாலை 2.35, கோவை)
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரும் ரஜினிகாந்த் ஆகி விட முடியாது என்று ஏற்கனவே பதில் கொடுத்து இருக்கிறேன். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவருக்குமே சுக்கிரன் தொழில் ஸ்தானாதிபதி ஆவதால் சினிமாத்துறை மீது ஈடுபாடும், கவர்ச்சியும் இருக்கும்.
எந்த ஒரு ஜாதகத்திலும் லக்னாதிபதி வலுவாக இருந்தால் மட்டுமே லட்சியங்களும், நினைக்கும் எண்ணங்களும் அதிர்ஷ்டத்தின் துணையோடு நிறைவேறும். அப்படி இல்லாத ஜாதகர் வெறும் ஆசையை மட்டும் வைத்துக் கொண்டு முயற்சியும் தன்னம்பிக்கையும் இன்றி இருப்பார்.
உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி நீசம் பெற்றதால் ராசிப்படிதான் அனைத்து பலன்களும் நடக்கும். அதன்படி கடகத்தின் அவயோக சினிமாத்துறை உங்களை கனவு மட்டுமே காண வைக்கும். நீசமான லக்னாதிபதி சூரியனை நீச சனி பார்ப்பதால் சூரியனுக்கு வலு உண்டாகி தற்போது ஓரளவிற்கு நிரந்தரமான அதிகம் சம்பளம் வராத பணியில் இருப்பீர்கள். அந்த வேலையும் இரும்பு அல்லது நீர் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
கடந்த 20 வருடங்களாக சுக்கிரதசை நடந்து வருவதால் சினிமாவை பற்றிய எண்ணங்கள் உங்களுக்கு இருக்கின்றன. சினிமா உங்களுக்கு ஒரு போதும் பலன் தராது. கனவில் மட்டுமே உங்களை வாழ வைக்கும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க முயற்சி செய்ய வேண்டாம்.
அடுத்த வருடம் ஆகஸ்ட் முதல் லக்னாதிபதி சூரியதசை ஆரம்பிக்க உள்ளதால் இனிமேல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பிறந்ததில் இருந்தே நடக்கும் அவயோக தசைகள் முடிந்து ராசிப்படியும், லக்னப்படியும் யோக தசைகள் அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளதால் பிற்பகுதி வாழ்க்கை உங்களுக்கு யோகமாகவும், நிம்மதியாகவும் இருக்கும்.
வீட்டை தற்போது வேறு ஒருவருக்கு மாற்றி விடவும். சூரியதசை பிற்பகுதியில் அடமானத்தில் இருந்து வீட்டை மீட்க முடியும். பார்க்கும் வேலையை எந்தக் காரணத்தை கொண்டும் விடக்கூடாது. அடுத்த வருட பிற்பகுதியில் துணைத் தொழிலாக மனை விற்கும் தொழிலை செய்யலாம். கடன் தொல்லை இன்னும் 3 வருடத்தில் தீரும்.
பி. சுகுணாபாலு, பழைய வண்ணாரப்பேட்டை.
கேள்வி :
மகனுக்கு நிறைய வரன் பார்த்தும், ஒரு கோவில் விடாமல் பரிகாரம், பூஜை செய்தும் திருமணம் நடக்காமல் மிகுந்த மனவேதனையில் உள்ளோம். அருள் கூர்ந்து எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆராய்ந்து சொல்லும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
சந் சூ,பு | செவ் | சுக் ரா,ல | |
ராசி | |||
கே | குரு | சனி |
பதில்:
தகப்பனுக்கும், மகனுக்கும் மேஷ ராசியாகி அஷ்டமச் சனியும், தாய்க்கு விருச்சிக ராசியாகி ஏழரைச் சனியும் நடந்து கொண்டிருக்கும் போது குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை.
மகன் ஜாதகத்தில் ராசிக்கு ஏழில் சனியும், ராசிக்கு இரண்டில் செவ்வாயும் அமர்ந்து லக்னத்திற்கு ஏழாமிடத்தை செவ்வாய், சனி பார்த்து, ஏழுக்குடையவன் ஆறில் மறைவது தாரதோஷம். அதைவிட மேலாக தாம்பத்திய சுகத்தை கொடுக்கும் களத்திர காரகன் சுக்கிரன் ஐந்து டிகிரிக்குள் ராகுவுடன் இணைந்து கிரகணமானது தாமத திருமண அமைப்பு.
ராசிக்கு ஐந்தை செவ்வாய் பார்த்து, லக்னத்திற்கு ஐந்தில் உச்ச வக்கிர சனி அமர்ந்து, புத்திர பாவத்திற்கு சுப சம்பந்தம் கிடைக்காமல் காரகனும், ஸ்தானாதிபதியுமான குரு, சுக்கிரர்கள் கெட்டதால் ஏற்பட்ட புத்திரதோஷமும் தாமத திருமணத்திற்கு காரணம்.
இதுவரை கோவில் கோவிலாக சென்றிருந்தாலும் ஜாதகத்தின்படி முறையான பரிகாரங்களை நீங்கள் செய்திருக்க வாய்ப்பு இல்லை. வழிபாடு வேறு, பரிகாரம் வேறு. மகனுக்கு தற்போது குடும்பாதிபதி சந்திரதசை நடப்பதால் முறையான பரிகாரங்களுக்கு பின் இந்த வருடக் கடைசியில் இருந்து அடுத்த வருட ஏப்ரலுக்கு திருமணம் நடக்கும். ராகுவிற்குரிய பிரீத்திகளை ஶ்ரீகாளகஸ்தியிலும், புதனுக்குரிய முறையான பரிகாரங்களையும் செய்யவும்.
கே. சுப்பிரமணியன், புதுக்குப்பம்.
கேள்வி:
எனது ம(று)ருமகன் பல லட்சம் முதலீட்டில் கூட்டாக லாபமுடன் நடத்திய தொழிலில் (CENTARLIZED AC) நஷ்டம் ஏற்பட்டு தற்போது கம்பனியில் இருந்து விலகி சம்பந்தமில்லாத வேறு துறையில் புதிதாகச் சேர்ந்து, பயிற்சி பெற்று பெங்களூரில் பணி செய்து வருகிறார். அவர் தற்போது செய்துவரும் தொழிலை (SOFTWARE) சில ஆண்டு காலம் தொடரலாமா? அல்லது முன்பு செய்த தொழிலை தான் மட்டும் தொடங்கி நடத்தலாமா? ஜாதகரீதியாக இரு தொழில்களில் எது நன்மையைத் தரும்? அல்லது வேறு புதிய பணியைச் செய்யும் நிலை ஏற்படுமா?
பதில்:
சுருக்கவே முடியாத நறுக்குத் தெறித்தார் போன்ற கேள்வியோடு மறு மகன் என்ற சொல்லாடலும் உங்களை ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. உங்களிடம் படித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என்னதான் ஜோதிடன் ஒரு சுமைதாங்கியாய் இருந்தாலும் பக்கம் பக்கமாக எழுதப்படும் சிலரின் கடிதங்களைப் படிப்பதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.
மறு மகனுக்கு கன்னி லக்னம் மீன ராசியாகி உச்ச சுக்கிரன் லக்னத்தைப் பார்த்த யோக ஜாதகம். (18-5-1974 மதியம் 2-20 கடலூர்). லக்னாதிபதிக்கு வீடு கொடுத்தவன் உச்சம் பெற்றது வெகு சிறப்பு. கடந்த காலங்களில் மீனராசிக்கு அஷ்டமச் சனி நடந்தபோது இளைஞர்களுக்கு கடுமையான குழப்படிகள் இருந்தன. அப்போது உங்கள் மறு மகனுக்கும் நஷ்டங்கள் இருந்திருக்கும்.
இப்போது உங்கள் பெயரனின் மேஷராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருப்பதால் சொந்தத் தொழிலில் காலூன்ற முடியாமல் வெளியூர் சென்று வேலை செய்கிறார். ஜாதகப்படி இப்போது சுயச் சாரத்தில் இருக்கும் விரயாதிபதி சூரியனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இது மறு மகனுக்கு பெரிய நன்மைகளைச் செய்யாது.
ஜாதகப்படி புதன் சம்பந்தப்பட்ட மென்பொருள் துறையில் அவருக்கு ஆதாயம் அதிகம் இருக்கும். சூரியதசை முடியும் வரை சொந்தத் தொழில் செய்யக் கூடாது. விரையங்கள் மட்டுமே இருக்கும். 2020 வரை வேலை மட்டுமே செய்ய வேண்டும். அதன்பிறகு சந்திர தசை நன்மைகளைத் தரும். சந்திரன் புதனின் சாரத்தில் அமர்ந்து உச்ச சுக்கிரனோடு இணைந்து தர்மகர்மாதிபதிகளின் தொடர்பைப் பெற்றுள்ளதால் சந்திர தசையில் அவர் தொட்டது துலங்கும். அப்போது தொழில் செய்யலாம். கூட்டு வேண்டாம்.
பே. சுந்தரமூர்த்தி, மணப்பாறை.
கேள்வி:
இந்த இரண்டு ஜாதகங்களை இணைக்கலாம் என்று ஜோதிடர் அடித்துச் சொல்கிறார். ஆனாலும் ஓரளவு ஜோதிட ஞானம் உள்ள என் சிற்றறிவிற்கு இது தவறாகப் படுகிறது. ஏற்கனவே இந்த ஜோதிடர் இணைத்து வைத்த எங்கள் குடும்பத் திருமணம் பிரச்னையில் இருக்கிறது. மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறோம். எனது மானசீக குருநாதரின் திருப்பாதங்களில் இதன் முடிவைச் சமர்ப்பிக்கிறேன். உங்கள் வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை என்பது தாங்கள் அறிந்ததுதானே....
பதில்:
லக்னத்திற்கு இரண்டில் ஆட்சி பெற்ற சனி, ஏழில் செவ்வாய், கேது அமர்ந்து, ராசிக்கு இரண்டில் செவ்வாய், எட்டில் ராகு என்ற அமைப்புள்ள இந்தப் பெண்ணிற்கு இருபத்தியொரு வயதில் திருமணம் செய்து வைக்கக் கூடாது. அதுவும் ரிஷபராசிக்கு இந்த வருடம் அஷ்டமச் சனி ஆரம்பிக்க உள்ள நிலையில் திருமணம் செய்து வைப்பதை விட பெண்ணை கிணற்றில் தள்ளி விட்டு விடலாம்.
ஏழுக்குடையவன் வலுவிழந்து பதினொன்றுக்குடையவன் வலுப்பெறுவது இரண்டு திருமண அமைப்பு. அந்த அமைப்பும் இந்தப் பெண்ணிற்கு இருக்கிறது. திருமணம் செய்து வைக்கலாமா என்று பொருத்தம் பார்ப்பதை விட திருமணம் இப்போது நடக்குமா என்பதை கணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
இந்தப் பெண்ணிற்கு இன்னும் நான்கு வருடம் கழித்து 2021ல் தான் திருமணம் நடக்கும். சுக்கிரன் வலுவிழந்து இருப்பதாலும், அடுத்து அஷ்டமச் சனியோடு லாபாதிபதியின் புக்தி நடக்க இருப்பதாலும், லக்னாதிபதி ஓரளவு வலுவாக இருப்பதாலும், தாம்பத்திய சுகம் கிடைக்கும் அமைப்பு இப்போது இல்லையென்பதாலும் இப்போது திருமணம் நடக்காது.
பிரபல கிரிக்கெட் வீரர் ஆகமுடியுமா?
ச.ச.கோபிநாத், கோடம்பாக்கம்.
கேள்வி :
12- ம் வகுப்பு படிக்கிறேன். கிரிக்கெட் விளையாட்டு வீரராக ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். காலமும், அதிர்ஷ்டமும் இதுவரை ஒத்துழைக்கவில்லை. தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் என்னால் உலக அளவில் சாதிக்க இயலுமா? பிரபலமாகும் யோகம் எனக்கு இருக்கிறதா? இல்லை என்றால் இப்பொழுதே மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவேன். நான் நன்றாக படிக்கும் மாணவன்தான். கல்வியிலாவது சாதிக்க இயலுமா? விளையாட்டு அல்லது கல்வி எதைத் தேர்ந்தெடுப்பது? பிரபலம் ஆகும் யோகம் இல்லை என்றால் ஏதேனும் பூஜை செய்தால் பலன் தருமா? பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கிய நிலையில் தங்களது அறிவுரைகளை இயன்றளவு விரைவாய் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.
குரு சனி | |||
ராசி | சந்,ரா சுக் | ||
கே | சூ பு | ||
செவ் | ல |
பதில்:
(துலாம் லக்னம். கடக ராசி. 2-ல் செவ். 7-ல் குரு, சனி. 10-ல் சுக், ராகு. 11-ல் சூரி, புத. 7.9.1999, காலை 10.43, சத்தியமங்கலம்)
ஒருவர் பிரபலமான விளையாட்டு வீரராக வேண்டுமென்றால் சுப வலுப்பெற்ற செவ்வாய் ராசிக்கோ, லக்னத்திற்கோ பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ராசிப்படி 10-ம் வீடு செவ்வாயின் வீடு என்பதால் உனக்கு விளையாட்டில் ஆர்வம் இருக்கிறது. இந்த வயதில் எல்லோருக்கும் இருக்கும் சராசரி ஆர்வம் மட்டும்தான் இது.
ஒரு துறையில் சாதிக்க அதில் ஆசை மட்டும் போதாது. வெறித்தனமான ஈடுபாடு வேண்டும். பிரபல எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் அவர்கள் “ செய்ய ஆசைப்படுவது வேறு... செய்துதான் ஆகவேண்டும் என்பது வேறு. செய்ய ஆசைப்படுவதை செய்துதான் ஆகவேண்டும் என்று மாற்றிக் கொள்பவன் வெற்றி அடைகிறான்.” என்று எழுதியிருக்கிறார்.
எப்போது என்னிடம் விளையாட்டு, கல்வி இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற தடுமாற்றக் கேள்வி கேட்டாயோ அப்போதே உனக்கு கிரிக்கெட்டில் இருப்பது வெறும் ஆர்வமும் ஆசையும் மட்டும்தான். வெறி இல்லை என்பதை நிரூபித்து விட்டாய். சாதனையாளர்கள் யாரிடமும் கேள்வி கேட்டதில்லை.
உலக அளவில் கிரிக்கெட்டில் சாதிக்கும் அமைப்பு உன் ஜாதகப்படி இல்லை. பூஜை மட்டும் செய்தால் பிரபலமாகிவிடலாம் என்றால் இங்கே எல்லோரும் பூசாரியாக இருப்பார்கள். அல்லது எல்லோரும் பிரபலமாக இருப்பார்கள்.
ஜாதகப்படி அவயோக கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், குரு வலுத்திருப்பதால் கடுமையான குழப்பத்தில் இருப்பாய். புதன் அம்சத்தில் உச்சம் பெற்றுள்ளதால் உனக்கு படிப்பு நன்கு வரும். படிப்பில் நீ சாதிக்க முடியும். நன்றாகப் படி. எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும்.
Iya na thirupur. Na kanni lagnan 1suriyan 2budhan+sukran 4chandran+kathu 9guru+sani 10rahu 12 sevai iya yen kanavu cricket playar aakanum aasai niravaruma?