adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – (31.1.17)

எஸ். பிச்சன், முக்கூடல்.

கேள்வி :
சனி பு சூ சுக் செவ்
 குரு ராசி
 சந்
நான் ஓய்வு பெற்ற அரசு ஊழியன். மனைவியும், மூத்த மகனும் இறந்துவிட்டார்கள். இறந்து போன மூத்த மகனுடைய மனைவியின் பராமரிப்பில்      இருக்கிறேன். எல்லோருக்கும் தனித்தனியே வீடு கட்டி கொடுத்திருக்கிறேன்மூத்தவனின் குழந்தைகளுக்கு திருமணமும் செய்து வைத்திருக்கிறேன். இவ்வளவு செய்தும் யாருக்கும் என் மீது பாசமோ, பரிவோ கிடையாது. எனவே இறைவன் திருவடியில் நல்லமுறையில் போய்ச் சேர விரும்புகிறேன். அதுவரையில் நிம்மதியாக இருக்கக் கூடிய வகை அறிவுரையை வழங்கும்படி பணிவுடன் வேண்டுகிறேன்.
பதில்:
(கன்னி லக்னம் துலாம் ராசி. 6-ல் குரு. 7-ல் சனி, புத. 8-ல் சூரி, சுக். 9-ல் செவ், கேது.)
பிறப்பும், இறப்பும் பரம்பொருளின் பரிபூரண ஆளுகைக்கு உட்பட்டது. இதில் நம்முடைய பங்கு துளியும் இல்லை. நீண்ட ஆயுள் இருப்பதும் ஒருவகையில் மனிதனுக்கு சாபமாகத்தான் இருக்கிறது. எண்பது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் அறிவுரையாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆலோசனையாக வேண்டுமானால் சிலவற்றைச் சொல்லுகிறேன்.
“கடமையைச் செய். பலனை எதிர்பார்க்காதே” என்றுதான் கீதையில் பகவான் சொல்கிறார். மகனுக்கும், பேரன், பேத்திகளுக்கும் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்திருக்கிறீர்கள். பிறகு ஏன் அவர்கள் என்மீது பாசமோ, பரிவோ காட்டவில்லை என்று அதற்கான பலனை எதிர்பார்க்கிறீர்கள்? நான் சகல ஆசாபாசங்களும் உள்ள சாதாரண மனிதன், ஞானியல்ல என்றால் உடன் இருப்பவர்களுடன் ஒத்துப் போங்கள் என்பதுதான் என்னுடைய பதிலாக இருக்கும்.
மனம் வயதாகாதவனுக்கு என்றும் மகிழ்வுக்குப் பஞ்சமில்லை. உடலுக்கு வயதானால் கவலையும் இல்லை. பேரன், பேத்திகளிடம் எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் இருந்தது தெரியுமா? என்று ஆரம்பிக்காதீர்கள். எல்லாக் காலத்திலும் எல்லாமும் இருந்துதான் இருக்கின்றன. மிகவும் முக்கியமாக இளையவர்களை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
ஒருவரைப் பிடித்துப் போனால் அவர் செய்கின்ற எந்தத் தவறும் பெரிதாகத் தெரியாது. அவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் சிறிய தவறு கூட பெரிதாகத் தெரியும். இந்த வயதில் பேரன், பேத்திகளை உளமார நேசித்தீர்களேயானால் அவர்கள் செய்வதெல்லாம் நமக்கு கண்ணன் விளையாட்டுக்களாகவே தெரியும். அவர்களை உற்சாகப்படுத்த முடியும். அப்போது அவர்கள் உங்களிடம் நெருங்கி வருவார்கள். தங்கள் மனதை உங்களிடம் பகிர்ந்து கொள்வார்கள். உங்களைத் தன் நண்பனாக ஏற்றுக் கொள்வார்கள்.
ஆனால் பெரும்பாலான வயதானவர்கள் என்ன செய்கிறோம்? சிறியவர்கள் மீது ஆளுமை செலுத்தவே விரும்புகிறோம். அவர்களைக் கட்டுப்படுத்தி வெறுப்புக்குள்ளாகி நாம் தனிமைப்படுகிறோம். இந்தக் கிழம் எப்போது போய்த் தொலையும் என்று அவர்கள் உள்ளூர நினைக்கும்படி ஆகிவிடுகிறது நம்முடைய செயல்கள்.
உண்மையில் சிறியவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு வயதானவனின் ஆழ்மனதில் இவன் வயதில் இது எனக்குக் கிடைக்கவில்லை, ஆனால் இவன் மட்டும் எப்படி இதை அனுபவிக்கலாம் என்ற ஒரு பொறாமை உணர்ச்சியே தன்னையறியாமல் ஒளிந்து கிடக்கிறது. ஏற்றுக் கொள்ள கசப்பாக இருந்தாலும் இதுவே உண்மை.
வயதான காலத்தில் ஒரு ஆணுக்கு கிடைக்கும் மிகப்பெரிய தண்டனை மனைவி அவனுக்கு முன்னால் போய் விடுவதுதான். அனைத்தையும் பகிர்ந்து கொண்டவளின் அருமை அப்போதுதான் தெரிகிறது. கொண்ட மனையில் கொண்டவள் இல்லாதவன் எதுவும் இல்லாதவனுக்குச் சமம்தான்.
அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் இந்த உலகில் யாரையும் உங்களுக்குக்காக எதிர்பார்க்காமல் உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை ஈடுபாட்டுடன் செய்யுங்கள். மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளப் பழகுங்கள். பிடிக்காத ஒன்றையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக எதையும் குறை சொல்லாதீர்கள்.
பெரும்பாலான வயதானவர்களுக்கு வருகின்ற தகவல் தொடர்பு இடைவெளி எனப்படும் சிறியவருக்கும், பெரியவருக்கும் நடக்கின்ற ஈகோ பிரச்சினை உங்களுக்கும் வந்திருக்கிறது என்பது தெரிகிறது. லக்னத்தை சனி பார்ப்பதால் மற்றவர்கள்தான் உங்களுக்கு ஒத்து வரவேண்டும் என்று நினைப்பீர்கள். ஒரு மாறுதலுக்காக நீங்கள் அடுத்தவர்களுடன் இணக்கமாக போவது நல்லது.
சாவித்திரிபட், சென்னை - 21.
கேள்வி :
கணவர் 2010- ல் இறந்து விட்டார். இரண்டாவது மகளுக்கு 19 ஆகஸ்ட் 2013-ல் திருமணம் நடந்தது. அவர்கள் வரதட்சணை கேட்கவில்லை. நாங்களும் தருவதாக சொல்லவில்லை. ஜாதக பொருத்தம் உள்ளது பையன் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். மகளின் உயரத்திற்கு சரியாக இருக்கிறான். அவளைவிட அதிகம் சம்பாதிக்கிறான் என்று திருமணம் செய்தோம். நான்கு மாதத்தில் ஏதேதோ சொல்லி அவளை அனுப்பிவிட்டார்கள். கணவரின் தாயார் அவரது சித்தியோ என்ற சந்தேகமும் இருக்கிறது. என் மகள் கணவரை மிகவும் மதிக்கிறாள். நியாயமான, நேர்மையான, சத்தியமான கடவுள் பக்தியுள்ள பெண். தனக்கு நேர்ந்த கொடுமையை நினைத்து மிகவும் வருந்துகிறாள். எத்தனை முயற்சி எடுத்தும் பயனில்லை. அவள் கணவருடன் சேர்ந்து வாழ்வாளா என்பதையும் சேர்ந்து வாழ, குழந்தை பிறக்க என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறவும்.
 பதில்:
சந் குரு
ராசி  சனி
 சுக்,ரா செவ் சூ பு
சந்,குரு செவ்
ராசி
 ல.சனி சுக்
சூ,பு ரா
 
            (கணவன்: மிதுன லக்னம், மீனராசி. 2-ல் சனி. 4-ல் சூரி, புத. 5-ல் சுக், செவ், ராகு. 12-ல் குரு. 7.10.76, அதிகாலை 12.30 மணி, உடுப்பி. மனைவி: சிம்ம லக்னம், மிதுனராசி. 1-ல் சுக், சனி. 2-ல் சூரி, புத, ராகு. 11-ல் செவ், குரு. 6.10.77, அதிகாலை 4.10 மணி, கள்ளக்குறிச்சி)
திருமணப் பொருத்தம் பார்ப்பது எவ்வாளவு முக்கியமோ அது போலவே இருவரை இணைக்கின்ற திருமண நாளும் அவர்கள் இருவருக்கும் நல்ல நாளாக இருக்க வேண்டும் குறிப்பாக வாழ்க்கையில் இணைகின்ற இருவருக்கு திருமண நாள் சந்திராஷ்டம நாளாக இருக்க கூடாது.
ஆனால், இங்கே திருமண நாளை குறித்துத் தர ஜோதிடரிடம் செல்லும் போது கல்யாணத்திற்கு ஒரு முகூர்த்தநாள் குறித்துக் கொடுங்கள் என்றுதான் கேட்கிறீர்களே தவிர, மணப்பெண், மணமகன் இருவரின் ஜாதகத்தையோ குறைந்தபட்சம் ராசி, நட்சத்திரத்தையோ ஜோதிடரிடம் கொடுத்து இவர்கள் இருவருக்குமான நல்ல முகூர்த்த நாளை குறித்து கொடுங்கள் என்று எத்தனை பேர் கேட்கிறீர்கள்?
35 வயதிற்கு மேல் மட்டுமே தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் பிறந்த உங்கள் பெண்ணிற்கு அவளது சந்திராஷ்டம நாள் அன்று திருமணம் நடந்திருக்கிறது. முகூர்த்த நேரம் காலை 11.58 மணி என்று நிமிடக்கணக்கில் துல்லியமாக முகூர்த்தம் குறித்து வாங்கத் தெரிந்த உங்களுக்கு அன்று மணப்பெண்ணிற்கு சந்திராஷ்டம நாள் என்று தெரியாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.
ஜாதகப்படி இருவரின் தசாபுக்தி அமைப்புகளும் சரிவரவில்லை. இந்த வருட இறுதி வரை கிரக அமைப்புகளும் சரியாக இல்லை. இருவருக்கும் புத்திர தோஷ அமைப்புகளும் உள்ளன. உங்கள் மருமகன் ஜாதகத்தில் ராசி லக்னத்தின் நான்காம் அதிபதி உச்ச வலுப்பெற்று உள்ளதால் அவர் அம்மாவின் பேச்சை அதிகம் கேட்பவராக, தாய்க்கு கட்டுப்பட்டவராக இருப்பார்.
ஜாதகத்தில் உங்கள் மகளுக்கு பெண்ணால் துன்பப்படும் அமைப்பும் உள்ளது. அவளுடைய இந்த நிலைமைக்கு மாமியார் அல்லது நாத்தனார் செயல்கள் காரணமாக இருக்கும். பெண்ணின் ஜாதகப்படி சூரியன் வலுக்குறைவாக இருப்பதாலும், லக்னத்தில் சனி அமர்ந்திருப்பதாலும் சூரியனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யுங்கள். அதனை விட மேலாக இன்னொரு நல்ல நாளாக தேர்ந்தெடுத்து இருவருக்கும் மறு திருமணம் செய்ய முடியுமா என்பதை பாருங்கள்.
எஸ். பிரியா சங்கர், நெல்லை.
கேள்வி:
செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இரண்டு வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு என் கணவர் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். அவர் வெற்றி பெறுவாரா? அவரால் இதைச் சாதிக்க முடியுமா?
பதில்:
உங்கள் கணவர் 2019 ம் ஆண்டு பிற்பகுதியில் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிவார். உங்கள் ஜாதகப்படி நீங்களும் அப்போது அவருடன் அங்கே இணைந்திருப்பீர்கள்.
இரா. முத்துராமலிங்கம் கமுதி.
கேள்வி:
இளைய மகனுக்கு முன்கூட்டியே திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் உருவானதில் இருந்தே மூத்தவனுக்கும் எங்களுக்கும் பிரச்னையாகி குடும்பத்தில் வெட்டு. குத்து என்றாகி அனைவரும் கோர்ட், கேஸ் என்று அலைந்து கொண்டிருக்கிறோம். எப்போது நிலைமை சரியாகும்? எங்கள் மூத்தமகன் மறுபடியும் எங்களுடன் சேருவானா?
பதில்:
கீழே சொல்லப்பட்டுள்ள பதில் உங்களுக்கும் பொருந்தும். கணவன், மனைவி இருவருக்குமே விருச்சிக ராசியானதால் 2012 ம் ஆண்டிலிருந்து உங்கள் வீட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விட்டன. அடுத்தவருடம் நிலைமை சரியாகும். மூத்தமகன் மீண்டும் குடும்பத்தில் இணைவார்.
விருச்சிக ராசிக்கு வேதனைகள் எப்போது விலகும்?
எஸ். நந்தினி, சென்னை – 82.
கேள்வி :
எங்கள் குடும்பத்தில் 2 அண்ணன்கள், நான் ஒரு தங்கை. மூவருக்குமே பணப்பிரச்சினையின் காரணமாக இன்னும் திருமணம் ஆகவில்லை. எங்களுக்கு திருமணம் கைகூடுமா? எப்போது? என்பதை தங்களின்அருள் நிறைந்த வாக்கால் சொல்லியருளும்படி பாதங்களை தொட்டு வேண்டிக் கொள்கிறேன்.
பதில்:
அம்மா... உனக்கு கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியாகி இப்போது ஜன்மச் சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு வீட்டில் யாரேனும் ஒருவருக்கு விருச்சிக ராசியாக இருந்தாலும் அங்கே மனஅழுத்தம் தரக்கூடிய செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
பிரிவு, நெருங்கிய உறவினர் மரணம், வழக்கு, தரித்திரம், வேலை தொழிலில் பிரச்னை, சொந்தவாழ்வில் தோல்வி, குடும்பக்குழப்பம், பணக்கஷ்டம், அவமானம். போன்றவைகளை விருச்சிக ராசி சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் உன்னுடைய தாய், தந்தை யாருக்காவது மேஷராசியாகி அஷ்டமச்சனியும் நடந்து கொண்டிருக்கலாம். ஒரு வீட்டில் இரண்டு சனி இருந்தால் கஷ்டங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கின்றன. இதுபோன்ற அமைப்புகள் பணக் கஷ்டத்தைக் கொடுத்து அந்தக் குடும்பத்தில் சுபகாரியம் நடப்பதைத் தடுக்கும்.
இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இருந்து உனது கேட்டை நட்சத்திரத்திற்கு ஜென்மச்சனி விலகி இனி உனக்கு நல்லது நடக்க இருக்கிறது. விலகும்போது சனி கெடுதல்கள் எதுவும் செய்ய மாட்டார் என்பதன்படி வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து உன் குடும்பத்தில் படிப்படியாக நல்லவை நடக்க ஆரம்பிக்கும்.

எனவே இந்த வருடத்தில் இருந்து விருச்சிகத்திற்கு கெடுதல்கள் நடக்காது. வரும் தீபாவளி முதல் உன் குடும்பம் முழுமையும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வகையில் சுப விஷயங்கள் நடக்கத் துவங்கும். 2018 ம் வருடம் நாம்தான் கஷ்டப்பட்டோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு சந்தோஷமாக இருப்பாய். கவலைப்படாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Aditya guruji Dismiss