ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி எண் : 8681 99 8888
புதனின் இன்னொரு லக்னமான கன்னிக்கு சனி ஐந்தாமிடம் எனப்படும் நன்மைகளைத் தரும் திரிகோண ஸ்தானத்திற்கும் கடன், நோய், எதிரிகளைக் குறிக்கும் ஆறாமிடம் எனப்படும் ருண, ரோக, சத்துரு ஸ்தானத்திற்கும் அதிபதியாவார்.
இந்த இரண்டு வீடுகளில் ஆறாமிடமான கடன், நோய், எதிரி ஸ்தானமே அவரது மூலத் திரிகோண வீடாவதால் தனது தசையின் முற்பகுதியில் ஆறாம் வீட்டுப் பலனையே பெரும்பாலும் செய்வார்.
சனி கன்னி லக்னத்திற்கு நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் ஆறாம் வீட்டோடு பார்வை, இருப்பு, பரிவர்த்தனை போன்ற எவ்வித சம்பந்தமும் இன்றி பூரணமாக ஐந்தாம் வீட்டோடு மட்டுமே தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
இதுபோன்று ஐந்தாம் வீட்டோடு மட்டும் சம்பந்தப்படும் நிலையில் சனிக்கு கூடுதலாக சுபக்கிரகத் தொடர்போ சூட்சுமவலுவோ கிடைக்கும்போது பெரிய நன்மைகளை கன்னிக்குச் செய்வார்.
அதாவது ஆறாம் வீட்டிற்கு பனிரெண்டில் மறைந்து, ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், குருவின் பார்வை அல்லது சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் இவர்களோடு இணைந்தோ அல்லது வேறு ஏதேனும் வகையில் தொடர்பு கொண்டோ இருக்கும்போது, சனியால் கன்னிக்கு நன்மைகள் இருக்கும்.
இன்னும் ஒரு சூட்சுமமாக ஐந்தாம் வீட்டில் ஆட்சி பெறும் சனி, அந்த வீட்டில் அடங்கியுள்ள சூரிய, சந்திர, செவ்வாயின் நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களின் சாரத்தில்தான் அமர்ந்திருக்க முடியும்.
மேற்கண்ட இவர்கள் மூவருமே சனிக்கு எதிர்த் தன்மைகளைக் கொண்டவர்கள் என்பதோடு, சூரியனும், செவ்வாயும் கன்னி லக்னத்திற்கு எட்டு, பனிரெண்டிற்கு உடைய பாவிகள் என்பதும், சந்திரனையும் லக்னாதிபதி புதன் தன்னுடைய கடும் எதிரியாகக் கருதுபவர் என்பதனாலும், சனி ஐந்தில் ஆட்சியாக இருந்தாலும் முழுமையான நற்பலன் அரிதுதான்.
பாபக் கிரகங்கள் ஐந்து, ஒன்பதுக்குடைய திரிகோணாதிபத்தியம் அடைந்தாலும் சுப கிரகங்களைப் போல அபாரமான நன்மைகளைச் செய்ய இயலாது என்பது இதுபோன்ற சார அமைப்புகளாலும் தெளிவாகும்.
இதைப் போலவே மிதுன லக்னத்திற்கு சனி ஒன்பதாமிடத்திற்கு அதிபதியாகும் அமைப்பில் கூட அஷ்டமாதிபதியான செவ்வாயின் சாரத்திலும் அடுத்து ராகுவின் சாரத்திலும், மிதுனத்தின் பாதகாதிபதியான குருவின் சாரத்திலும்தான் இருப்பார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அடுத்து கன்னிக்கு அவர் இரண்டாமிடத்தில் உச்சம் பெறுவது சுபத்துவம் பெற்றிருந்தால் ஒழிய நன்மைகளைத் தராது. இந்த இடத்தில் அவர் தனித்து உச்சமடையும் நிலையில் ஆறாமிடத்தோன் தன ஸ்தானத்தில் வலிமை பெற்றிருக்கிறார் எனும் நிலையை அடைந்து தனது தசையில் பொருளாதாரக் குறைகளைச் செய்வார்.
அதேநேரத்தில் சனி இங்கே லக்னாதிபதி புதன் அல்லது சுக்கிரனுடன் இணைந்தோ குருவின் பார்வை பெற்றோ இருப்பாராயின் தன் தசையில் நல்ல பலன்களைத் தருவார்.
ஆயினும் ஒரு இயற்கைப் பாபி தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வலிமை அடைகிறார் என்பதால் தாமத திருமணத்தையும், திருப்தியற்ற குடும்ப வாழ்க்கையையும் ஜாதகருக்குத் தருவார்.
அவரது நட்பு வீடுகளான லக்னம், ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் சனி லக்னத்திலும், பத்தாமிடத்திலும் சூட்சும வலுப் பெற்று அமர்வது நல்ல பலன்களைத் தரும். பொதுவாக மிதுனமும், கன்னியும் சனிக்கு மிகவும் விருப்பமான இடங்கள் என்பதால் லக்னத்தில் அமரும்போது ஜாதகரை பிடிவாதக்காரராக்கி, சில நிலைகளில் முறையற்ற திருமணத்தைத் தந்து தன் தசையில் யோகத்தையும் செய்வார்.
பத்தாமிடத்தில் அவர் சுபத்துவம் பெறும் நிலையில் தனது காரகத்துவங்களின் மூலம் ஜாதகருக்கு நன்மையான பலன்களைச் செய்வார். ஒன்பதாமிடத்தில் சனி இருப்பது கன்னி லக்னத்திற்கு நல்ல நிலை அல்ல. தனித்து சுபர் பார்வையின்றி இங்கிருக்கும் சனியால் ஒருவர் தந்தையின் ஆதரவையும், பூர்வீக வழியினையும், முக்கியமான சில பாக்கியங்களையும் அனுபவிக்க இயலாது போகும்.
கன்னிக்கு மூன்று, ஆறு, எட்டு, பனிரெண்டாமிடங்களில் அவர் மறைவதும் நன்மைகளைச் செய்யாது. மூன்றாமிடத்தில் பகை பெற்று அமரும் நிலையில் ஒன்பதாமிடத்தைப் பார்ப்பார் என்பதால் ஜாதகரின் பாக்கியங்களைக் கெடுத்து நற்பெயரையும் இழக்கச் செய்வார்.
ஆறாமிடத்தில் வலுப்பெறும் நிலையில் தனது தசையில் ஜாதகரை நோயாளியாகவோ, கடன்காரனாகவோ மாற்றுவார். சில நிலைகளில் கால்களில் ஊனம் ஏற்படும். எட்டில் நீசமாகி வலுவிழப்பது ஒரு வகையில் நோயற்ற, கடனற்ற அமைப்புத்தான் என்றாலும் தனது பார்வைகளால் தொழில், குடும்பம், புத்திரம் ஆகிய மூன்று ஸ்தானங்களையும் பார்த்து கெடுப்பார் என்பதால் எந்த ஒரு லக்னத்திற்குமே சனி எட்டில் இருப்பது நல்ல நிலை அல்ல.
மேலும் நீசம் பெற்றிருக்கும் சனி வக்ரமடைந்தால் உச்ச பலனை அடைவார் என்பதால் இங்கிருக்கும் சனி சுபத்துவமின்றி வலுவடையும் நிலையில், கடுமையான பலன்களை தனது தசையில் நான் மேலே சொன்ன மூன்று பாவங்களின் வழியாகச் செய்வார்.
பனிரெண்டாமிடத்தில் பகை பெற்று அமரும் நிலையில் எட்டாமிடத்திற்கு நான் சொன்ன பலனைப் போலவே தனது மூன்றாம் பார்வையால் தனஸ்தானம் எனப்படும் இரண்டாம் வீட்டையும், ஏழாம் பார்வையால் தனது ஆறாம் வீட்டைத் தானே பார்த்து வலுப்படுத்தியும், தனது பத்தாம் பார்வையால் பாக்கிய ஸ்தானத்தையும் பார்த்து வலுவிழக்கவும் செய்வார். பனிரெண்டில் இருக்கும் சனியின் தசை, புக்திகளில் வம்பு, வழக்கு உண்டு.
சனி பனிரெண்டாம் வீட்டில் சுபத்துவமின்றி இருக்கும் நிலையில் ஜாதகர் பொய் சொல்பவராக இருப்பார். சுபத்துவத்தோடு சூட்சும வலுவும் அடைந்திருக்கும் நிலையில் பொய் சொல்லும் தொழிலில் அதாவது வக்கீல், மற்றும் சாதுர்யமாக பொய் சொல்லி ஒரு பொருளை விற்கும் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் மேன்மை உண்டு.
ஒரு கொலையையோ, கொள்ளையையோ செய்தவரை அவர் குற்றவாளி என்று தெரிந்தும் தன் தொழில் கடமைக்காக பொய் சொல்லி நிரபராதி என்று வாதாடி விடுதலை வாங்கித் தரும் வழக்கறிஞர்களை சனிதான் உருவாக்குகிறார்.
பிரபலமான, வாக்குச் சாதுர்யமுள்ள வழக்கறிஞர்களின் ஜாதகங்களில் பெரும்பாலும் சனி ராசிக்கோ, லக்னத்திற்கோ பனிரெண்டாமிடத்தில் அமர்ந்து வாக்கு ஸ்தானத்தை பார்த்தோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டோ இருப்பார்.
அடுத்து நான்கு, ஏழு, பதினொன்றாம் இடங்களில் கன்னி லக்னத்திற்கு அவர் சுபத்துவமாக இருப்பது ஓரளவு நல்ல பலன்களைத் தரும். ஒரு பாபக் கிரகம் கேந்திரங்களில் இருப்பது வலுவான நிலை என்பதாலும், கன்னி லக்னத்திற்கு ஏழாமிடத்தில் ஸ்தான பலமின்றி சனி திக்பலத்தை மட்டும் அடைவார் என்பதாலும், பதினொன்றாமிடத்தில் இருக்கும் கிரகங்கள் கெடுதல்களைச் செய்யாது என்பதாலும் இவை மூன்றும் சனிக்கு நல்ல நிலைகளே.
சனி எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்?
கடந்த சில வாரங்களாக இயற்கைப் பாபரான சனியின் சுயத் தன்மையைப் பற்றி நான் எழுதி வரும் நிலையில் சனியிடமிருந்து மனிதனுக்குத் தேவையானவை எதுவுமே இல்லையா? ஒரு மனிதன் உயிர் வாழ மிகவும் அவசியமான ஆயுளுக்கு அவர்தானே காரணம்? ஆயுளைத் தருபவர் அவர்தானே என்ற கேள்வி எழுந்திருப்பதை வரும் தொலைபேசி அழைப்புக்கள் வாயிலாக அறிகிறேன்.
மனிதனுக்குத் தேவையான எந்த ஒரு செயலுமே பரம்பொருளால் சனிக்கு ஒதுக்கப்படவில்லை என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் நான், ஆயுள் எனும் அமைப்பு எப்படி, எதனால் சனியிடம் உள்ளது என்ற சூட்சுமத்தையும் சில வருடங்களுக்கு முன் விரிவாக எழுதியிருந்தேன்.
பாலஜோதிடம் வாசகர்களுக்காக மீண்டும் அதை இங்கே விளக்குகிறேன்......
பொதுவாக நமது புனித நூல்கள் அனைத்துமே இனிமேல் பிறவாமை வேண்டும். பரம்பொருளின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்து அதனுடன் இணைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.
சித்தர்களும், ஞானிகளும் தங்களுக்கு எப்போது ‘முக்தி’ கிடைக்கும் என்றே ஏங்குகிறார்கள். (அதாவது தாங்கள் விரைவில் இந்த பூமியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே முற்றும் துறந்தவர்களின் நோக்கம்.)
உண்மையான புரிதல் என்னவெனில், மனித வாழ்வே ஒரு சுமை என்பதுதான். மனிதனின் இறப்பிற்குப் பிறகு “ஏதோ ஒரு நல்லது” இருக்கிறது என்பதையே நமது ரிஷிகளும், சித்தர்களும் உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள்.
விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்திற்காகவே, நாம் எங்கிருந்தோ இந்தப் பூமியின் பக்கம் தற்போது வந்திருக்கிறோம். இங்கே செய்யும் தவறுகளால் இங்கிருந்து விடுபட முடியாமல் மீண்டும், மீண்டும் இங்கேயே பிறக்கிறோம். இது ஒரு வழிப்போக்குப் பயணம் அவ்வளவே.
நாம் கிளம்பிய நல்ல இடத்திற்கு திரும்பிச் செல்லத் தடையாக, நம்மை இங்கேயே இருக்க வைக்கும் நமது ‘ஆயுள்’ என்பது, பலரும் நினைப்பதைப் போல ஒரு சுப காரகத்துவம் கொண்ட நல்ல நிலை அல்ல என்பதே உண்மை. அதனால்தான் அதுவும் மனிதனுக்கு வேண்டாத காரகத்துவங்களைக் கொண்ட சனியிடம் சேர்ந்தது.
சனி தரும் இன்னொரு கொடிய பலனான ஆயுள்... நம்மை பரம்பொருளிடம் சேரும் ஒரு நல்ல நிலையை, இனிமையான அனுபவத்தை இன்னும் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு கெட்ட நிலைதான்.
ஜோதிடத்தில் எதுவுமே வெளிப்படையாக புரியும்படி ஞானிகளால் சொல்லப் படுவதில்லை. சொல்லப்படவும் மாட்டாது. சொன்னாலும் அநேகருக்கு அது புரியாது.
ஆகவே புரியும் தகுதி நிலையை...
அதாவது பள்ளிகளில் முதலில் எல்.கே.ஜி அடுத்து ஒன்று முதல் பனிரெண்டு வகுப்புக்கள் பிறகு கல்லூரி, எம்.ஏ. போன்ற முதுநிலைப் படிப்புக்கள் போன்ற நிலையை படிப்படியாக எட்டும்வரை சில நுணுக்கமான விஷயங்கள் நமக்கு புரியவே புரியாது. ஜோதிடமும் அது போலத்தான்.
அதுவே இந்த மகா கலையின் மகத்துவம்.
இனிப் பிறக்காமல் பரம்பொருளுடன் இணையவேண்டும் என்பதே உலகின் அனைத்து மதப் புனித நூல்களும் வலியுறுத்தும் உண்மை என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டோமேயானால் சனி தரும் ஆயுள் எதற்காக என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
( நவ 19 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
Fantastic Explanation thank you Guruji
MAHA GURUJI AVARKALUKKU VANAKKAM. NAN KANNI LAKNAM KANNI RASI 6 VATHU IDATHIL SANI,SUKRAN, PUTHAN.SANI IRUPPATHU POSA NATHSATHRAM.PLEASE FIND MY JATHAGAM.
sani thasai eppadi irukkum.
Sir..is great gift for us
Sir
Highly appreciable. You have given in a neet and understandable manner. Tks and namaskarams.
7/4/2016 என் மகன் பிறந்த நாள் லக்கனம் லக்னதிபதி ஏது வலு sir time 5.55am