adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஆயுளைப் பற்றிய சூட்சுமங்கள்..! D-044

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

எந்த லக்னமாக இருந்தாலும் இரண்டு, ஏழு, மற்றும் அஷ்டமாதிபதி எனும் எட்டுக்குடையவனும் மரணத்தைத் தரும் கிரகமாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறார்கள்.

இந்த மூன்று கிரகங்களும் மாரக, பாதகாதிபதியுடன் பாபத்துவ அமைப்பில் இணையும்போது ஒருவருக்கு மரணத்தையோ அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தையோ தருவார்கள்.

கீழே மாரகாதிபதியுடன் சம்பந்தம் பெற்ற இரண்டு, ஏழுக்குடையவரின் தசையில், பாதகாதிபதியின் புக்தியில் கணவரை இழந்த ஒரு பெண்மணியின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். 

இந்தப் பெண் 6-12-1973 மாலை 4.20 க்கு சென்னையில் பிறந்திருக்கிறார். இவரது ஜாதகப்படி ரிஷப லக்னம், மேஷ ராசியாகி, கணவரைக் குறிக்கும் களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய், தன் ஏழாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து, லக்னத்திற்கும் மறைவு ஸ்தானமான பனிரெண்டில் அமர்ந்திருக்கிறார். 

  சந்,
செவ்

ல  
சனி,
கேது
 
பெண்-
16-12-1973 
காலை 4-20
சென்னை
  
சுக்,
குரு
 

ராகு  
சூரி,புத  

அவருடன் ரிஷபத்தின் அதிபதியான சுக்கிரனுக்குப் பகைவரும், இந்த லக்னத்தின் மாரகாதிபதியுமான சந்திரன் ஏறத்தாழ ஒரே டிகிரியில் இணைந்திருக்கிறார். அதாவது ஏழுக்குடையவரான செவ்வாய், மாரகாதிபதி சந்திரனுடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கிறார். 

ரிஷபத்திற்கு சந்திரன் எந்த ஒரு நிலையிலும் நல்ல பலன்களைத் தருவதில்லை. இந்த லக்னத்தின் அதிபதி சுக்கிரனுக்கு சூரியனும், சந்திரனும் கடுமையான பகைவர்கள் என்பதால், சுக்கிரனின் லக்னங்களான, ரிஷப, துலாத்திற்கு சூரியனும் சந்திரனும் ஒருவிதமான சூட்சும நிலையில் இருந்தாலொழிய நற்பலன்களைத் தருவதில்லை. 

ரிஷபத்திற்கு சந்திரன் மூன்றுக்குடையவராக வருவதால், பாபத்துவ நிலையில் இருந்தால் கடுமையான கெடுபலன்களைத் தருவார். அதேநேரம் சூரியன் இந்த லக்னத்திற்கு நான்காம் வீட்டிற்கு அதிபதியாக வருவார். ஒரு பாபர் கேந்திரத்திற்கு அதிபதியானால் நன்மைகளைச் செய்யும் எனும் விதிப்படி சுபத்துவ, சூட்சும வலு நிலையில் சூரியன் அமரும்போது நன்மைகளைச் செய்வார்.

சுக்கிரனின் இன்னொரு லக்னமான துலாமிற்கு இந்த நிலை தலைகீழாக மாறும். துலாம் சர ராசி என்பதால் சூரியன் பதினொன்றாம் அதிபதியாக அமைந்து பாதகாதிபதியாக வருவார். சந்திரன் பத்திற்குடைய தொழில் ஸ்தானாதிபதியாக அமைந்து அவரது வளர்பிறை, தேய்பிறை நிலைகளை ஒட்டி சுபத்துவ, சூட்சும வலு நிலையில் அமரும்போது நன்மைகளைச் செய்வார்.      

இந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தசை, சனி புக்தி நடக்கும் போது கணவர் மரணம் அடைந்தார். இது மாரகாதிபதியுடன் சம்பந்தப்பட்ட, ஏழுக்குடையவன் தசையில் பாதகாதிபதி புக்தியாகும். 

ரிஷபத்தின் பாதகாதிபதியான ஒன்பதுக்குடைய சனி, இங்கே சுபத்துவமற்ற நிலையில் சூட்சும வலு மட்டும் பெற்று, தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இரண்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எந்த லக்னமாக இருந்தாலும் கடுமையான பாபரான சனி, குருபார்வையோ, மற்ற சுப அமைப்போ இல்லாத நிலையில் ஒருபோதும் இரண்டாம் வீட்டில் அமரக் கூடாது. 

சனி, இங்கே கேதுவுடன் சூட்சும வலுப்பெற்று இருந்தாலும், நீச்ச குருவின்  எட்டாம் வீட்டில் அமர்ந்து, சனியின் பார்வையைப் பெற்ற ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார். அதேபோல மாரகாதிபதி சந்திரனும், செவ்வாயுடன் இணைந்து பாபத்துவம் அடைந்திருக்கிறார். இரண்டில் சனியுடன் இணைந்து பாபத்துவம் பெற்ற கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரனும், செவ்வாயும் மிக நெருக்கமாக அமர்ந்து இருக்கிறார்கள். 

இந்தப் பெண்ணிற்கு செவ்வாய் தசை, சனி புக்தி, கேது அந்தரம் நடந்து கொண்டிருந்த போது இந்தப் பெண்ணின் கணவர் திடீரென மரணம் அடைந்தார்.

கணவரின் மரணம் எனும் இந்த பாதக நிலையில், இரண்டு, ஏழு, எட்டு, மூன்று ஆகிய நான்கு பாவகங்களும் ஒருங்கே தொடர்பு கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தசாநாதனான ஏழுக்குடையவனோடு, மாரகாதிபதியான மூன்றுக்குடையவன் இணைந்து, புக்தி நாதனான பாதகாதிபதி சனியோடு, எட்டுக்குடையவன் தொடர்பு கொண்டு இந்த பாதகம் நிகழ்ந்தது. 

எட்டுக்குடைய குரு எப்படி இங்கே தொடர்பு கொள்கிறார் என்ற குழப்பம் சிலருக்கு வரலாம். வலிமையிழந்த ஒருவரின் வீட்டில் அமரும் ராகு-கேதுக்கள்தான் வீட்டின் அதிபதியின் சுப-பாப பலனை எடுத்துச் செய்வார்கள். ராகு-கேதுக்கள், தான் இருக்கும் அதிபதியைப் போலவே செயல்படுவார்கள் என்பதால் இங்கே ராகுவை எட்டுக்குடைய குருவாகவே கருத வேண்டும்.

பாதகத்தை நடத்திய தசா, புக்தி அந்தர நாதர்கள் மூவரும் இங்கே பாபத்துவ அமைப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தசாநாதன் இரண்டில் இருக்கும் கேதுவின் அஸ்வினி நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும் நிலையில், புக்தி நாதன் சனி  எட்டில் அமர்ந்த ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார். 

ராகு-கேதுக்கள் அமர்ந்த பாவகமும் குடும்பத்தைக் கெடுக்கக்கூடிய இரண்டு எட்டாம் பாவகமாக இருக்கிறது. இதுபோன்ற அமைப்பில் மாரகாதிபதி சம்பந்தம் பெற்ற பாதகாதிபதியின் புக்தியில், கணவர் மரணம் என்ற மிகப் பெரிய பாதகம் நடந்ததில் வியப்பில்லை.

கீழே இன்னொரு பெண்ணின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இவர் 26-10-1987 பகல் 3,30 மணிக்கு சென்னையில் பிறந்திருக்கிறார். 32 வயதில் இறந்த அற்பாயுள் ஜாதகம் இவருடையது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே பாதகாதிபதி தசை, அஷ்டமாதிபதி புக்தியில் இவரது மரணம் நிகழ்ந்திருக்கிறது. 

இவரது ஜாதகப்படி இவருக்கு கும்ப லக்னம், விருச்சிக ராசியாகி, எட்டாமிடத்தோடு லக்ன பாபியும், இயற்கைப் பாபியுமான செவ்வாயும், ராகு- கேதுக்களும், சம்பந்தம் பெற்று ஆயுளைக் குறைக்கிறார்கள். 

ஒரு பாவகத்தோடு பாபியரான சனி, செவ்வாய், ராகு-கேதுக்கள் நால்வரும் ஒட்டுமொத்தமாக தாக்குதல் நடத்துவார்களேயானால், அந்த பாவகம் முழுக்க செயலிழக்கும் என்பதை என்னுடைய சுபத்துவ பாபத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் தெளிவாகச் சொல்லி விடலாம்.. இதுபோன்ற ஒரு நிலையில் அந்த பாவகம் குறிக்கும் காரகனும் வலுவிழந்தால், அந்த பாவக பலன் ஜாதகருக்கு கிடைப்பது முழுவதுமாகத் தடுக்கப்படும்.,

உதாரணமாக ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் சனி, ராகு இணைந்து, பதினொன்றில் செவ்வாய், கேது அமர்ந்து, செவ்வாய் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் நிலையில் இங்கே ஐந்து எனும் புத்திர பாவகத்தோடு, அனைத்து பாபக் கிரகங்களும் தொடர்பு கொள்கின்றன. இது போன்ற நிலையில் ஐந்தாம் பாவகம் தரும் குழந்தைக்குக் காரகனான குருவும் நீச்சனாகி அல்லது வேறுவகையில் வலுவிழந்து இருந்தால், அந்த ஜாதகருக்கு குழந்தை இருக்காது.

ராகு, குரு   

ல 

பெண்-2
26-10-1987
பகல் 3.30 சென்னை  
 
  
  சந்,
சனி  
சூரி,புத,
சுக்  
செவ்,
கேது

இந்த விதியினை நீங்கள் ஒவ்வொரு பாவகத்திற்கும் பொருத்திப் பார்க்க முடியும். இதுபோன்ற ஒருநிலை லக்னத்திற்கு ஏற்பட்டு, லக்னம் வேறுவகையில் சுபத்துவம் பெறாமல், லக்னாதிபதியும் வலுவிழந்து இருந்தால், அந்த ஜாதகர் செயல்பட முடியாத ஒரு நிலையில் இருப்பார். 

தொடர்பு கொள்ளும் கிரகங்களின் பாப, சுபத்துவ அளவினுக்கேற்ப ஜாதகர் குணம் கெட்டவராகவோ, நோயாளியாகவோ, மனநலம் இல்லாதவராகவோ, பிறக்கும்போதே மனவளர்ச்சி குன்றியவராகவோ இருப்பார்.  

இரண்டாம் பாவகம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த நபர் பணம் சம்பாதிக்க முடியாதவராகவோ அல்லது பேச்சுத் திறமை அற்றவராகவோ, ஊமை, திக்குவாய், மற்றும் பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாதவராகவோ இருப்பார். அல்லது குடும்பம் அமையாது.

இப்போது நான் சொல்லும் “ஒரு பாவகம் முழுக்க, முழுக்க பாபக் கிரக ஆக்கிரமிப்பால் பாபத்துவம் பெற்று வலுவிழந்தால் அதன் பலனைத் தராது” எனும் விதி, அங்கே ஓரளவு சுபத்துவ அமைப்பு இருக்கும்போது மாறுபடும். அதாவது சனி, செவ்வாய், ராகு-கேது போன்றோரின் தாக்குதலுக்கிடையே அங்கே குரு, சுக்கிர, தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் போன்றோரின் தொடர்பும் இருக்கும்போது அந்த பாவகம் ஓரளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும். 

ஒரு பாவகத்தின் வலிமையை அளக்கும் அளவுகோல் இதுதான். 

மேலே நான் சொன்ன எடுத்துக்காட்டின்படி புத்திர ஸ்தானமான ஐந்தை ஒட்டுமொத்த பாபக்கிரகங்களும் ஆக்கிரமித்த நிலையில் அங்கே குரு, சுக்கிரன் போன்றவர்களினால், ஓரளவு சுபத்துவம் இருக்குமாயின் ஜாதகருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை இருக்கும். அல்லது தத்து எடுத்துக் கொண்டு இன்னொருவரின் குழந்தை மூலம் அம்மா, அப்பா என்று அழைக்கப்படுவார்கள்.  

ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடத்தில் பாபர்கள் சம்பந்தப்படுவது ஆயுள் விஷயத்தில் நன்மைகளைத் தராது. 

“ஒரு காரகன் அதே காரக வீட்டில் இருந்தால் காரகம் கெடும்” எனப்படும் “காரஹோ பாவ நாஸ்தி” விதிக்கு எட்டில் சனி இருப்பது மட்டும் விதிவிலக்கு என்பதால், சனி எட்டாமிடத்தில் எவ்வித நிலையில் இருந்தாலும் கூடுதல் ஆயுளைத் தருவார். ஆனால் அவர் எட்டைப் பார்க்கக் கூடாது. 

ஒட்டுமொத்த பாபர்கள் எட்டில் இருந்து, லக்னமும் வலுவிழந்த நிலையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷ நிலை ஏற்பட்டு பாலவப் பருவம் என்று சொல்லப்படும் பனிரெண்டு வயதிற்குள் அந்தக் குழந்தை இறந்து விடும். சுபத்துவம் கூடக் கூட ஆயுள் கூடும். 

லக்னமோ, எட்டாமிடமோ பாபத்துவமே இன்றி முழுக்க சுபத்துவமாக இருக்கும் நிலையில் ஒருவர் தொண்ணூறு வயது தாண்டி தீர்க்காயுள் எனப்படும் நிறை வாழ்வு வாழ்வார். பாபத்துவம் அதிகரிக்கும் நிலையில் ஒருவர் குறைவான ஆயுள் உடையவராகவும், எட்டாமிடம் மற்றும் லக்னத்தின் சுபத்துவம் அதிகரிக்க, அதிகரிக்க ஒருவரின் ஆயுட்காலம் கூடுதலாகி, அவரின் மத்திம ஆயுள் மற்றும் தீர்க்காயுள் தீர்மானிக்கப்படும்.

பாரம்பரிய ஜோதிடத்தின் ஏராளமான விதிகளையும், விதிவிலக்குகளையும் நான் சொல்லும் சுபத்துவ, சூட்சும வலு விதி எனும் ஒரே குடைக்குள் அடக்க முடியும். 

ஒரே விஷயத்திற்கு காலம்காலமாக பலப்பல ஜோதிடர்களால், குழப்பும் விதத்தில் சொல்லப்பட்ட பல விதிகளை எனது சுபத்துவ மற்றும் சூட்சும வலு எனும் ஒரே விதிக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதுவே எனது “பாபக்கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாட்டின்” சிறப்பு.

காட்டப்பட்டுள்ள இரண்டாவது பெண்மணியின் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் செவ்வாய், ராகு-கேதுக்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். லக்னத்திற்கோ, ராசிக்கோ எவ்விதமான சுபத்துவ அமைப்புகளும், தொடர்புகளும் இன்றி எட்டாமிடத்தை ராகுவால் பங்கப்பட்ட குரு பார்க்கிறார்.

எட்டாமிடத்தைப் பார்க்கும் குரு பார்வையின் வலிமையைப் பொருத்து ஆயுளின் தன்மை இருக்கும். இங்கே குரு ஆட்சி நிலையில் இருந்தாலும், ராசியின் கடைசி டிகிரியில் இருக்கிறார். ஆகவே குருவின் பார்வைக்கு வலிமையே இல்லை. ஆயினும் குரு பார்க்கிறார். 

ஓரளவே வலிமையுள்ள குரு பார்வையாலும், லக்னத்திற்கு சுபத்துவம் இல்லையெனிலும் லக்னாதிபதியின் கேந்திர நிலை, வளர்பிறைச் சந்திரனின் இணைவாலும் இந்தப் பெண்ணிற்கு முப்பது வயது வரை அற்பாயுள் அமைப்பு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. 

ஆரோக்கியமாக இருந்த இந்தப் பெண்மணி கடந்த 23-11-2018 அதிகாலை 4.52 மணிக்கு நுரையீரல் பாதிப்பு நோயால் தனது முப்பத்தியொரு வயதில் திடீரென உயிரிழந்தார். மரணத்தின்போது இவருக்கு பாதகாதிபதி சுக்கிரனின் தசையில், அஷ்டமாதிபதி புதனின் புக்தி நடந்து கொண்டிருந்தது.

இன்னும் சில விளக்கங்களையும், தொண்ணூறு வயது தாண்டி தீர்க்காயுளாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஜாதக அமைப்புகளையும் அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *