adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
திடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்..! D-036

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களின் ஜாதக விளக்கத்தில் உங்களுக்கு சில சந்தேகங்கள் இருப்பதை தொலைபேசி அழைப்புகள் மற்றும் பின்னூட்டங்களிலிருந்து அறிகிறேன். குறிப்பாக நான் அடிக்கடி குறிப்பிடும் ராஜயோகம் எதுவும் மன்மோகன் உள்ளிட்ட சில உதாரண ஜாதகங்களில் இல்லையே என்றும் சிலர் கேட்டிருக்கிறீர்கள்.

ஜோதிடம் என்பது பலவிதமான விதிகளை கொண்டது. இங்கே மூலக்கருத்து மட்டுமே நிரந்தரமானது. அதை மட்டும்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேம்போக்காக பார்க்கும்போது சில ஜாதகங்களில் யோகங்கள் இருக்கலாம், அல்லது இல்லாமல் இருக்கலாம். சாதித்துக் காட்டிய உண்மையான ராஜயோக ஜாதகங்களில், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அரச யோக அமைப்புகள் அனைத்தும் நமக்குத் தெரிய வேண்டும் என்கின்ற அவசியமில்லை.


வேதஜோதிடம் முழுமை பெற்று விட்ட ஒன்றல்ல. அது ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து புதிது புதிதாக விதிகளைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு முற்றுப் பெற முடியாத கலை. சாதித்தவர்களின் ஜாதகங்களில் உள்ள அமைப்புகளை கொண்டு நாம் சில விதிகளை உருவாக்கிக் கொள்ள முடியும் அல்லது உணர முடியும்.காலம் காலமாக குழப்பமாக, தெளிவற்ற விதத்தில், தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக சொல்லப்படும் சில விதிகளை சுருக்கமாக்கி, அனைவருக்கும் புரியும்படியாக எளிமையாக தருவதே “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளின் நோக்கம்.

அன்றைய நாளில் தங்களிடையே இருந்து, வாழ்ந்து மறைந்த அரசர்கள் மற்றும் அதிகாரம் கொண்டவர்களின் ஜாதகங்களில் இருந்த ராஜயோகங்களை நுணுக்கமாக கவனித்து ஞானிகளும், அவர்களுக்குப் பின்னர் வந்த ஜோதிடர்களும் சில விதிகளை நமக்கு உருவாக்கித் தந்திருக்கிறார்கள். இந்த விதிகள் தொடர்ந்து சேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஜோதிடமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அன்றைய ஜோதிடர்களுக்கு இல்லாத மிகப்பெரிய தொழில்நுட்ப வசதிகள் இன்று நமக்கு இருக்கிறது. விஞ்ஞானம் மிகப்பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. ஒரு நொடியில் கோடிக்கணக்கான இணைவுகளை பகுத்தறிந்து வித்தியாசப்படுத்தி சொல்லக்கூடிய கம்ப்யூட்டர் என்னும் மகா ராட்சசன் இன்று நம்மிடையே இருக்கிறான். வானியலும் வளர்ந்துள்ள இந்த நாட்களில் ஜோதிடர்கள், தாங்கள் தெளிவாக உணர்ந்த சில காம்பினேஷன்களைக் கொண்டு தாங்களே விதிகளை உருவாக்கி கொள்ள முடியும். அது சரியானதாகவும் இருக்கும்.அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியில் அமரும் ஒரு மனிதனுக்கு எப்படிப்பட்ட யோக அமைப்புகள் இருக்க வேண்டும் என்று நம்முடைய மூல நூல்கள் சொல்லுகின்ற விதிகள் அனைத்தையும் முறைப்படுத்தி, ஒரே குடையின் கீழ் அமைத்தால் அது “சூரியன் மற்றும் சிம்மம் அதிகமான சுபத்துவ, சூட்சும வலுவுடன் இருக்க வேண்டும்” என்று மட்டுமே அமையும்.

கட்டளையிடும் நிலையில் உள்ள அனைத்து மனிதர்களின் ஜாதகங்களை பார்ப்போமேயானால், நான் இப்போது சொல்லுகின்ற இந்த சூரிய விதி நிச்சயமாக பொருந்தியிருக்கும். அந்தவகையில் தற்போது நான் உதாரணமாக காட்டியிருக்கும் முன்னாள் பிரதமர்கள் அனைவரின் ஜாதகங்களிலும் சூரியனும், சிம்மமும் அதிகமான சுபத்துவ, சூட்சுமவலுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

சென்ற வாரம் விளக்கிய மன்மோகன் சிங்கின் ஜாதகத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள், அரசனாகும் அமைப்பு என்று சொன்ன விபரீத ராஜயோகம் இருக்கிறது.ஒரு ஜாதகத்தில் ஆறு, எட்டு, பன்னிரெண்டுக்குடையவர்கள் தங்களுக்குள் சம்பந்தம் பெற்றோ, பரிவர்த்தனையாகவோ, அல்லது வேறுவகையில் தொடர்பு கொண்டோ, இணைந்தோ, 6, 8, 12-ம் இடங்களில் இருப்பது விபரீத ராஜயோகம் என்று சொல்லப்படுகிறது.

இதன் உட்கருத்து என்னவெனில் கெட்ட பாவகங்களின் அதிபதிகள் என்று சொல்லப்படக் கூடிய 6, 8, 12-ம் அதிபதிகள் மேற்கண்டவாறு சம்பந்தப்படும்போது அதில் எவரேனும் ஒருவர் ஆட்சியாவோ, அல்லது ஆட்சிக்கு நிகரான பரிவர்த்தனை அமைப்பிலோ இருந்து, அங்கே மற்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்.

விபரீதம் என்ற வார்த்தையே அதனுடைய உள்ளர்த்தத்தை ஓரளவிற்கு விளங்க வைக்கும். நேரடியாக அல்லாமல், முற்றிலும் எதிர்பார்க்காமல், மிகவும் சுலபமான வழியில் அல்லது குறுக்கு வழியில், ஒருவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைப்பது அல்லது அரசனாகும் அமைப்பு கிடைப்பதே விபரீத ராஜயோகம் என்று சொல்லப்பட்டது. ஒருவர் அரசனாகும் வாய்ப்புக்காக காத்திருக்க, இடையில் புகுந்த இன்னொருவருக்கு யானை மாலை போடுவதை இந்த யோகம் சுட்டிக் காட்டுகிறது.2004- ல் மன்மோகன் சிங் அவர்களுக்கும் இப்படித்தான் நடந்தது. அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மன்மோகன் இல்லை. பிரதமர் பதவி ஏற்கும் முதல்நாள் வரைக்கும் கூட அவர் அந்தப் பதவிக்கான போட்டியிலேயே இல்லை. தான் பிரதமராவோம் என்பதை அவரே கூட நம்பியிருக்க மாட்டார். இதுபோன்ற விபரீதமான ஒரு சூழ்நிலையில் பிரதமர் பதவி அவரைத் தேடிச் சென்றது. இதற்கு அவரது ஜாதகத்தில் உள்ள விபரீத ராஜயோகம் காரணம் என்று சொல்லலாம்.

மன்மோகன் சிங் ஜாதகத்தில் ஆறுக்குடைய சுக்கிரன், எட்டுக்குடைய சந்திரன், பனிரெண்டுக்குடைய செவ்வாய் ஆகிய மூவரும் எட்டாமிடத்தில் ஒன்று கூடி, அங்கே சந்திரன் ஆட்சி பெற்று இந்த யோகத்தினை உருவாக்குகிறார்கள்.

இதில் மிக முக்கியமாக ஒரு யோகம் என்பது சம்பந்தப்பட்ட தசா,புக்திகளில் மட்டுமே பலன் தரும் என்பதும் உறுதியான ஒன்று. ஆனால் மேற்கண்ட மூவரின் தசைகளிலும் மன்மோகன் பிரதமராகவில்லை. பன்னிரெண்டாம் அதிபதி செவ்வாயின் தசை முடிந்த பிறகுதான் அவர் பிரதமராகி இருக்கிறார்.ஆகவே இந்த விபரீத ராஜயோகத்தை பற்றி நாம் இன்னும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. பிரதமர் பதவிக்கு மன்மோகன் வந்து சேர்வதற்கான காலச்சூழ்நிலைகளையும், அறிமுகங்களையும், சந்திர, செவ்வாய் தசைகள் அவருக்கு கொடுத்திருக்கலாம் என்று மட்டுமே அனுமானிக்கலாம்.

எப்படி இருந்தாலும் ஞானிகள் சொல்லும் ஒரு ராஜயோகம் மன்மோகன்சிங் ஜாதகத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில் நான் முன்பே சொன்னது போல ராஜயோகம் இருக்கிறதோ இல்லையோ, ஆளுகின்ற, அதிகாரமிக்க அத்தனை அரசியலாளர்களின் ஜாதகங்கள் அனைத்திலும் நான் இப்போது சொல்கின்ற சூரியன் மற்றும் சிம்மத்தின் சுபத்துவ, சூட்சும வலுக்கள் நூறு சதவீதம் நிச்சயமாக இருக்கும் என்பது உறுதி.

எனவே அரச யோகங்களைப் பற்றிய விதிகளைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் அனைவருக்கும் பொருந்தி வருகின்ற பொதுவான விதிகளை உருவாக்க முயற்சிப்பது சாலச் சிறப்பு.கீழே மன்மோகனுக்கு முன் பிரதமராக இருந்த திரு நரசிம்மராவ் மற்றும் திரு வாஜ்பாய் ஆகிய இருவரின் ஜாதகங்களையும் கொடுத்திருக்கிறேன்.

அடுத்து சிம்மாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் பாபக்கிரகங்களுக்கு மட்டுமே உரித்தான திக்பலத்தை அடைந்திருக்கிறார். லக்னத்திற்கு பத்தில் அமர்ந்திருக்கும் சூரியன் ராசிக்கு பத்தாமிடத்தைப் பார்க்கிறார். நான் அடிக்கடி குறிப்பிடுவதைப் போல சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாகவும் லக்ன கேந்திரத்திலும் இருக்கிறார்கள். லக்னத்திற்கு பத்தாம் அதிபதி வர்க்கோத்தமமாக இருக்க, ராசிக்கு 10-மிடம் அதன் அதிபதியால் பார்க்கப்படுகிறது.இதில் நரசிம்மராவிற்கு கன்னி லக்னம், மீனராசியாகி, லக்னாதிபதி புதன் வர்கோத்தமமும், ஆட்சியும் பெற்ற நிலையில் பத்தாமிடத்தில் மிக வலுவாக இருக்கிறார். சிம்மத்தை சுபத்துவம் அடையச் செய்யும் விதமாக இயற்கைச் சுபரான குரு சிம்மத்தில் இருக்கிறார். அவருடன் பாபியான சனி இருப்பது சிம்ம வலுவைக் குறைக்கும் ஒரு நிலைதான் என்றாலும், குரு, சனி இருவரும் இரண்டு டிகிரிக்குள் இணைந்து சனி அதிக சுபத்துவம் அடைந்திருப்பதால் சிம்ம வலு சமன் செய்யப்படுகிறது.

சூரியனும், செவ்வாயும் உயர் திக்பல நிலையில் இருக்க, குரு திக்பலத்திற்கு அருகில் இருக்கும் நிலையில், இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் திக்பல நிலையில் இருக்கின்றனநரசிம்மராவ் தம் வாழ்நாள் முழுவதும் உயர் பதவிகளில் இருந்தவர். மிக இளம் வயதிலேயே ஆந்திர அமைச்சராக இருந்த அவர், தம் வாழ்நாளின் இறுதி வரை மத்திய அமைச்சராகவும், இறுதிக் காலத்தில் பிரதமராகவும் இருந்தார். வேதஜோதிடம் சுட்டிக்காட்டும் சிம்மம், சூரியன் ஆகியோரின் சுபத்துவ, சூட்சும வலு நிலைகள் நரசிம்மராவ் ஜாதகத்தில் பூரணமாக அமைந்திருப்பதை காணலாம்.

அடுத்து நரசிம்மராவைப் போல தொடர்ச்சியாக அதிகாரப் பதவியை அனுபவிக்காமல், ஒரு துறவியைப் போன்று பற்றற்ற நிலையில் மிகவும் எளிமையாக இருந்து, திருமணமாகாமல், வாழ்நாளின் இறுதிப்பகுதியில் உயர் பதவியை அடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் ஜாதகத்தையும் கொடுத்திருக்கிறேன்.

வாஜ்பாய் தொடர்ந்து அதிகாரப் பதவிகளை அனுபவித்தவர் அல்ல. அவர் அதிகமாக கட்சிப் பதவிகளை மட்டுமே கொண்டவராக இருந்தார். வாழ்வின் இறுதிக் காலத்தில் மட்டுமே அவரால் பிரதமராக முடிந்தது.வாஜ்பாயின் ஜாதகப்படி அவருக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி என லக்னம், ராசி இரண்டும் ஒன்றாகி, சிம்மாதிபதி சூரியன், இரண்டில் மூலத் திரிகோண வலுவுடன் பலம் பெற்று அமர்ந்த குருவுடன், இரண்டு டிகிரிக்குள் இணைந்து, குருவை அஸ்தமனமாக்கி, தான் சுபவலுவாகி மிகுந்த பலத்துடன் இருக்கிறார். சிம்மத்திற்கும் குருபார்வை இருக்கிறது. சிம்மமும், சூரியனும் வலுப்பெற்ற குருவினால் அதிகமான சுபத்துவம் அடைந்ததால் வாஜ்பாய் வாழ்வின் இறுதிக் காலத்தில் பிரதமர் பதவியை அடைய முடிந்தது.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் வேதஜோதிடம் சொல்லும் முழுமையான அரச விதிகள் நரசிம்மராவிற்கு சரியாகப் பொருந்தி வருகின்றன. வாஜ்பாய்க்கு முழுமையாக பொருந்தவில்லை. இவர்கள் இருவர் வாழ்வின் வித்தியாச நிலைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால் ஜோதிட விதிகளையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். 

நரசிம்மராவ் மிக இளம் வயதிலிருந்தே ஆந்திர அமைச்சர், முதல்வர். மத்திய மந்திரி, பிறகு பிரதமர் என வாழ்வின் பெரும் பகுதியை அதிகார நிலையிலேயே கழித்தவர். இது குறுநில மன்னன், அரசன், பேரரசன் என்ற நிலைக்கு ஒப்பானது. அதனால்தான் வேத ஜோதிடம் சொல்லும் சூரிய திக்பலம், கேந்திரம், பத்தாமிட வலு, ஆகியவை ராவிற்கு பூரணமாக பொருந்தி வருகின்றன.

ஆனால் வாஜ்பாயின் வாழ்வு நிலை அப்படி அமையவில்லை. அவர் கிட்டத்தட்ட ஒரு துறவியைப் போல அதிகார ஆசையின்றி வாழ்ந்தவர். வாஜ்பாய் படிப்படியாக அதிகார உயர்நிலைக்கு வந்தவர் அல்ல. எனவே அவரது ஜாதகத்தில் பத்தாமிட உயர் அமைப்புகள் முழுமையாக இல்லை.வேதஜோதிடம் சொல்லும் முழு விதிகளையும் ஒருவரின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும்போது மட்டுமே, ஜோதிடம் என்பது உண்மையிலேயே ஒரு மகா அற்புதம்தான் என்பதை உணர முடியும்.
அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்...