adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கலைஞர் எனும் மகா புருஷன் D-019 kalainar ennum maha purusan

பலவிதமான யோகங்களின் ஒட்டுமொத்தக் குவியலான ஒரு ஜாதகத்தை கொண்டிருந்த கலைஞர் அவர்கள் அமரத்துவம் பெற்று விட்டார்கள்.

கலைஞர் நல்லவிதமாக இயங்கிக் கொண்டிருந்த போதே அவருடைய ஜாதகத்தை இரண்டுமுறை விவரித்து எழுதி இருந்தேன்.வேதஜோதிடம் உணரப்பட்ட சுமார் 2000 வருட காலத்திற்கு முன், நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒரு பேரரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லிய அனைத்து விதிகளையும் நம் காலத்தில் முழுமையாகக் கொண்டிருந்த பூரண “மகாராஜ யோக” ஜாதகம் கலைஞருடையது.


ஜோதிடத்தை மறுப்பவர்களுக்கும், இதனை ஒரு மூடநம்பிக்கை என்று சொல்பவர்களுக்கும் கலைஞரின் ஜாதகமே ஒரு தெளிவான பதிலாக அமையும்.

ஒருவகையில் இது ஒரு கடுமையான முரண்பாடுதான். ஜோதிடத்தை தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நம்பாத ஒரு மாபெரும் பகுத்தறிவாளரின் ஜாதகத்தையே, அந்தக் கலையை மெய்ப்பிப்பதற்கு சொல்வதைப் போன்ற நகைப்பிற்கு உட்பட்ட முரண், வேறு எதுவும் இல்லை. ஆனால் உலகின் அனைத்துமே முரண்களின் மேல்தானே அமர்ந்திருக்கிறது..!இந்தியாவிலும், உலக அளவிலும் வேறு எவருமே இல்லாத வகையில் மிக நீண்ட காலம் அதிகாரத்திலும், ஆளுமைத் திறனோடும் இருந்து, குறிப்பாக, தன்னுடைய இறுதிக்காலம் வரை அரசியலில் ஓய்வு பெறாமல், தான் பங்கெடுத்த எந்தத் தேர்தலிலும் தோல்வியும் பெறாமல், மறையும் நாள் வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து, பதவியில் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் முதல்வராகவே இருந்தவர் கலைஞர்.

அவரது ஜாதகத்தை பல்வேறு ஜோதிடர்கள் பல நிலைகளில் ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். நானும் சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய பாணியில், இதுவரை யாரும் சொல்லாத விதத்தில் கலைஞரின் யோக அமைப்புகளை விளக்கி எழுதி இருந்தேன். அது அவரது பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அவரது உயர்வுக்கு காரணமான யோக அமைப்புகளை பலர் பல்வேறு விதமாக சொல்லி இருந்தாலும், ஜோதிடத்தில் எதையும் ஆழமாக உள்ளே சென்று விளக்கும் நான், கலைஞரை ஒரு மகா தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியது அவருடைய ஜாதகத்தில் இருந்த “சிவராஜ யோகம்” என்கின்ற அமைப்பு மட்டுமே என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.

சிவராஜ யோகம் என்பது சூரியனை, குரு நேருக்கு நேர் நின்று வலிமையுடன் பார்ப்பதால் அமையும் யோகம் என்று வேத ஜோதிடம் குறிப்பிடுகிறது.

நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நூற்றுக்கணக்கான அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்புகளை குறிப்பிட்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டும்தான் மிகவும் அரிதாக “ராஜயோகம்” என்கின்ற அடைமொழியில் சொல்கிறார்கள். அதிலும் மிகவும் தனிப்பட்டு சொல்லத்தக்கது இந்த சிவராஜ யோகமாகும். இது ஒருவரை உயர்நிலை தலைவனாக்கும் சிறந்த அமைப்பாகும். இந்த யோகம் கலைஞருக்கு பூரணமாக அமைந்திருந்தது.

ஜோதிடத்தில் சூரியன் தலைமைக் கிரகமாக குறிப்பிடப்படுகிறார். வலுப் பெற்ற சூரியனைக் கொண்ட அமைப்பில் பிறந்தவர்கள், ஜாதகத்தின் மற்ற நிலைகளுக்கு ஏற்றபடி பத்துப் பேருக்கு தலைவனாகவோ, பத்தாயிரம் அல்லது பல கோடி நபர்களுக்கு தலைவராகவோ இருப்பார்கள் என்பது ஜோதிட விதி.ஜோதிடத்தில் குரு கிரகம் மிகச் சிறந்த நன்மைகளையும், அதிர்ஷ்டங்களையும் தரக்கூடிய கோளாக குறிப்பிடப்படுகிறது. இயற்கையிலேயே நற்பலன்களைத் தரக்கூடிய குரு, தலைமை தாங்க வைக்கும் முதல்நிலை கிரகமான சூரியனை, தனது மேம்பட்ட சுப பார்வையால் நேருக்கு நேர் பார்க்கும் நிலை அமையும் போது ஒருவருக்கு பிறவியிலேயே அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பு வந்து விடுகிறது. இதனையே ஜோதிட ஞானிகள் ராஜயோகம் என்று சொன்னார்கள்.

விஞ்ஞான ரீதியில் இதைப் பார்த்தாலும் சூரியன் இல்லாமல் நாம் இல்லை. அனைத்திற்கும் மூல முதல்வன் சூரியன்தான். நம்முடைய சூரிய மண்டலத்தின் நாயகனும் அவன்தான். அவனைச் சுற்றியே அனைத்தும் இயங்குகின்றன. உயிர் வாழ்கின்றன.

ஜோதிடத்திலும் சூரியன் வலுப்பெற்று பிறப்பவர்களைச் சுற்றியே அனைத்தும் இயங்கும். அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேல் இந்திய அரசியல் கலைஞரைச் சுற்றியே இயங்கியதற்கு அவருடைய ஜாதகத்தில் சூரியன் இருந்த நிலையே காரணம்.

உலகின் மேலான இந்து மதம் சூரியனைத்தான், சிவன் என்ற பெயரில் அனைத்திற்கும் மூலவனாக வணங்குகிறது. கதிரவன் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கும் நிலையில், அந்த ஜாதகரே ஆதவனைப் போன்று ஜொலிப்பார் என்பதைத்தான் வேதஜோதிடம், சூரியன் சுபத்துவமாகி இந்த யோகம் உள்ளவன் சிவனைப் போன்று முதல்வனாக இருப்பான் என்ற அர்த்தத்தில் “சிவ” ராஜயோகம் என்று சொன்னது.

கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் இணைந்து, உச்சம் பெற்ற நண்பன் செவ்வாயின் வீட்டில் வலுப் பெற்று அமர்ந்த குருவின் நேர் பார்வையைப் பெறுகிறார்கள். இதில் இன்னொரு ராஜ கிரகமான அவரது லக்னாதிபதி சந்திரன் உச்சத்தினை அடுத்த மூலத்திரிகோண வலுவில், வளர்பிறை நிலையில் இருப்பது வெகு சிறப்பான அமைப்பாகும்.

நான் அடிக்கடி சொல்லியுள்ளபடி, தலைமை தாங்க வைக்கும் சூரியன், திக்பலம் எனப்படும் பத்தாமிடத்திற்கு அருகில் இருக்கப் பிறந்தவர்கள், அரசுப் பணியிலும், அரசியலிலும் சாதிக்கும் நிலையை அடைவார்கள்.கலைஞரின் ஜாதகத்தில் சூரியன் பதினொன்றாமிடத்தில், சந்திரனோடு இணைந்து குருவின் பார்வையைப் பெற்றிருப்பார். இதில் சந்திரன், அவருக்கு அனைத்து மேன்மைகளையும் அளிக்கும் லக்னாதிபதியாகி உச்சத்திற்கு அருகிலிருந்த ஒரே அமைப்புத்தான், அவரை உலகம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் தலைவராக நிலை நிறுத்தியது. அரசியலில் கடைசிவரை தோல்வி அடையாமல், தன்னுடைய அந்திம நாள் வரை சட்டமன்ற உறுப்பினராக அவரை இருக்க வைத்ததும் இந்த அமைப்புத்தான்.

கலைஞர் அவர்களின் ஜாதகத்தை விளக்கும்போது ஒருமுறை, நட்பு கிரகங்கள், தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருக்கின்ற அமைப்பில் நான் பார்த்த ஒரே ஜாதகம் இதுதான் என்று குறிப்பிட்டிருந்தேன்

ஒரு வெற்றிகரமான ஜோதிடனாக, ஆயிரக்கணக்கான ஜாதகங்களை பார்க்கும் நிலையில் இருக்கும் நான், இப்போது குறிப்பிடும் இந்த மேலான அமைப்பினை கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். இது ஒன்றே அவர் கோடிக்கணக்கான மக்களின் மகத்தான தலைவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஜோதிட அமைப்பாகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் ஒத்த கருத்துள்ள நண்பர்களாகவும், சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் இவர்களுக்கு எதிர்த்தரப்பில் உள்ள ஒற்றுமையான நண்பர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கு ஒருவர், எதிர் நிலையில் உள்ளவர்களோடு இணைவதும், பார்த்துக் கொள்வதும் இருவரையுமே பலவீனமாக்கும் என்பது விதி.

வானில் எப்போதாவது மிக அரிதாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அனைத்து கிரகங்களும், நண்பர்களோடு நண்பர்கள் சேர்ந்த, பார்க்கும் நிலையில் அமையும். அதுபோன்ற ஒரு உன்னத நொடியில் பிறந்தவர் கலைஞர்.

அவரது ஜாதகத்தில் மேலே சொன்ன அமைப்பான குரு, செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகியோர் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் இதே போன்று தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் அமர்ந்திருப்பார்கள்.இதன் மூலம் எந்த ஒரு கிரகமும் பலவீனம் அடையாமல், ஒன்பது கிரகங்களும் சுயத் தன்மையோடு அமைந்த நொடியில் பிறந்து, மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஒரு பேரரசன் கலைஞர் அவர்கள்.

அவரைப் போன்ற அபூர்வமான ஜாதகத்தைக் கொண்ட இன்னொரு மகா தலைமையாளன் பிறப்பதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை கலைஞர் ஒருவரே இதுபோன்ற மகத்தான யோகங்களைக் கொண்ட ஜாதகராக இருப்பார்.வாழ்க நீ எம்மான்....!

கலைஞரின் மரணத்தின்போது கோள்களின் நிலை என்ன..?

ஜோதிடப்படி ஒருவரின் மரணத்தை தெளிவாக அறிவதற்கு அவரது துல்லியமான பிறந்தநேரம் தேவை. நேரம் சரியாக இருந்தால்தான் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்களை அந்தரம் எனப்படும் குறுகிய நாட்கணக்கில் உணர முடியும். கலைஞரின் துல்லியமான பிறந்த நேரம் எவருக்கும் தெரியாது. ஒரு அரைமணி நேர இடைவெளியில் தோராயமாகத்தான் அவரது பிறந்த நேரம் கணிக்கப்படுகிறது.ஜாதகப்படி பிறந்த நேரம் துல்லியமாக இல்லாத நிலையில் கோட்சாரம் எனப்படும் அன்றைய வான் கோள் நிலைகளை வைத்துத்தான் ஓரளவு மரண காலத்தை சொல்ல முடியும். கோட்சார நிலைப்படி. கலைஞரின் லக்னாதிபதியான சந்திரன், வலுவிழக்கும் நாளில் கலைஞரின் மறைவு இருக்கும் என்பதே பெரும்பான்மையான ஒரு ஜோதிடக் கணிப்பாக இருந்தது. நானும் முகநூல் எனப்படும் பேஸ்புக்கில் இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் சந்திர கிரகணத்தன்று “தமிழ்நாட்டை இருள் சூழும்” என்று பதிவிட்டிருந்தேன்.

கலைஞர் ஒரு மகா புருஷன் என்ற நிலையில் அவரது மரணமும் ஒருவித உன்னத அமைப்பாகவே இருக்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கு சந்திரன் மாதம் ஒருமுறை மறையும் அமாவாசை அன்றோ அல்லது அதற்கு முன் நாட்களிலோ முடிவு ஏற்படும். ஆனால் கலைஞர் அவர்கள் பவுர்ணமி அன்று நிகழ்ந்த ஒரு அமாவாசையின் போது அதாவது இந்த நூற்றாண்டின் சிறப்பு சந்திர கிரகணத்தன்று செயல் இழந்தார்.

கடந்த ஜூலை மாதம் 28ம் நாள் அதிகாலை சந்திர கிரகணம் நடந்து கொண்டிருந்த போது, கிரகணத்தின் உச்சக் கட்டமாக சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டிருந்த அமாவாசை போன்ற வேளையில்தான் கலைஞர் அவர்கள் செயல் இழந்தார்கள்.கிரகணம் உச்சத்தில் இருக்கும் போதுதான் தனது உயிர்ச் செயல்பாடுகள் முடங்கிய நிலையில் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டு நள்ளிரவில் கலைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கலைஞர் கண் விழிக்கவே இல்லை. சுய நினைவிலும் இல்லை. ஜோதிடப்படி அவரது மரணம் கடந்த சந்திர கிரகணத்தன்றே நிகழ்ந்து விட்டது.

(09.08.2018 மாலை மலரில் வெளிவந்தது)தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.