adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஒருவர் மருத்துவராவதற்கு என்ன கிரக நிலைகள் இருக்க வேண்டும்? D-018 Oruvar Maruththuvaravadharku Yenna Kiraha Niligal Irukka Vendum?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

ஜோதிடத்தில் ஒருவரின் வேலை மற்றும் தொழிலைக் குறிக்கும் ஸ்தானங்களாக இரண்டு, ஆறு, பத்தாம் வீடுகள் குறிப்பிடப்படுகின்றன. 

ஆறாம் வீடு, ஒருவர் எத்தகைய வேலையைச் செய்வார் என்பதையும். பத்தாம் வீடு ஒருவர் என்ன தொழிலைச் செய்வார் என்பதையும் குறிப்பிடுகிறது. தன பாவகம் எனும்  இரண்டாம் வீடு இவை இரண்டின் மூலமாக ஒருவர் சேர்த்து வைக்கும் செல்வ நிலையைக்  காட்டுகிறது. 

இளமைக்காலம் தொட்டே ஜோதிட ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் நான், எனது ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, எளிமையான விதிகளாகச் சொல்லி வருகிறேன் என்பது என்னைப் படிப்பவர்களுக்கும் எனது மாணவர்களுக்கும் தெரியும். 


புரிந்து கொண்டால் ஜோதிடம் மகா எளிமையானது. 

உதாரணத்திற்கு வெளிநாட்டுப் பயணம், மற்றும் வெளிநாட்டிலேயே வாழக்கூடிய அமைப்பைக் குறிப்பதற்கு இங்கே ஏராளமான விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் எட்டு, பன்னிரெண்டாம் வீடுகள் சுபத்துவமாகி, அதன் அதிபதிகளும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு, எட்டாம் அதிபதி தசையோ, பனிரெண்டாம் அதிபதி தசையோ, சர ராசிகளில் இருக்கும் கிரகங்களின் தசையோ அடுத்தடுத்து வருமாயின் அல்லது ராகு, கேதுக்களின் தசை நடக்குமாயின் ஒருவர் நிரந்தரமாக வெளிநாட்டில் இருப்பார் என்ற என்னுடைய எட்டு, பனிரெண்டு சுபத்துவ விதியில் அவை அத்தனையையும் அடக்கி விடலாம். 

தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் எந்த ஒரு விதியையும் நான் சொல்வதில்லை. அதேபோல நீண்ட ஆய்வுகளுக்குப் பிறகு நான் தெளிவடைந்து சொல்லும் விதிகள், எந்த ஒரு ஜாதகத்திலும் நிச்சயம் பொருந்தி வரும். உதாரணமாக மேலே நான் சொன்ன விதியினை வெளிநாட்டில் வசிக்கும் எந்த ஜாதகத்தோடு நீங்கள் பொருத்திப் பார்த்தாலும் அது நிச்சயமாக சரியாக இருக்கும். 

ஜோதிடமே ஒரு யூகசாஸ்திரம் எனப்பட்டாலும், இந்த விதி இதற்கு ஒத்து வரலாம், அந்த விதி அதற்குப் பொருந்தலாம் என்பது போன்ற தோராயமான வாசகங்களை நான் ஒருபோதும் எழுதுவதில்லை. முழுக்க ஆய்வு செய்து, அனைத்தும் பொருந்தி வந்த பிறகே அதனை விதியாகச் சொல்கிறேன். 

மூலத்தில் உள்ள பத்தாம் அதிபதி, ஆட்சி மற்றும் உச்சம் அடைந்தால் ஒருவருக்கு  நிரந்தரமான வேலை, தொழில் அமையும் என்ற விதி தோராயமானது. இது அனைத்து ஜாதகங்களிலும் பொருந்தாது. பத்தாம் வீட்டோன் ஆட்சி, உச்சமாக இருக்கும் அனைவருமே நிரந்தரமான வேலை, தொழில்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். 

ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து அமைப்புகளுக்குள்ளும் நுணுக்கமாக உள்ளே சென்று கணிக்க முயற்சித்தால்தான் உண்மையான, நிறைவான, அனைவருக்கும் பொருந்தும்படியான விதிகளை அமைக்க முடியும். அதற்குச் சான்றாக முதலில் மருத்துவத் துறையில் ஒருவர் இருப்பதற்கான முழுமையான விதிகளை இப்போது பார்க்கலாம்.

உண்மையில் மருத்துவத்தின் மூல, முதன்மைக் கிரகம் செவ்வாய். சிலர் இங்கே மருத்துவத்தின் முதல் கிரகம் சூரியன், குரு என்பது போன்ற தவறான எண்ணம் கொண்டிருக்கிறார்கள். அதேபோல கேதுவும் மருத்துவ கிரகம், கேது பத்தில் இருந்தால் மருத்துவர் என்பது போன்ற தவறான கருத்துக்களும் இங்கே உள்ளன. உண்மையில் ராகுகேதுக்கள் பருப்பொருள் அற்றவை என்பதால் என்னுடைய சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டில் ராகுகேதுக்களுக்கு இடமில்லை. அதாவது ராகு,கேதுக்கள் ஒருபோதும் தனியாக ஒன்றைத் தீர்மானிக்க முடியாது. 

மருத்துவ முதல் கிரகமான செவ்வாய், அடுத்த நிலைக் கிரகங்களான குரு, சூரியன் ஆகியோர் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருந்தால் அவர்  மருத்துவர் ஆவார் என்பது ஜோதிட மூல விதி. ஆயினும் இந்த விதிகளுக்குள் இருக்கும் சூட்சும நிலைகளைக் கணித்து ஒருவரின் மருத்துவ பணியை எப்படி உறுதி செய்வது என்பதை தற்போது பார்க்கலாம். 

ஒரு பாப கிரகம் ஆட்சி, உச்சம் அடைந்தால் மட்டுமே நன்மைகளைச் செய்து விடாது. பாப கிரகம் நேர் வலுப்பெற்றிருந்தால் அதனுடைய பாப காரகத்துவத்தை மட்டுமே செய்யும். சனி, செவ்வாய் போன்ற பாபிகள் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை அடையாமல் எனது கோட்பாட்டின்படி சூட்சுமவலு அடைந்திருக்கும் நிலையில் நல்ல பலன்களைச் செய்வார்கள். 

மருத்துவத்திற்கு அதிபதியான செவ்வாய், பத்தாமிடத்தில் ஆட்சி மற்றும் உச்சம் அடைந்தால் மட்டுமே ஒருவரை மருத்துவராக்கி  விட மாட்டார். சொல்லப் போனால் பத்தில் செவ்வாய் ஆட்சி மற்றும் உச்சம் அடையும் நிலையில் திக்பலமும் பெறுவார். 

ஒரு பாப கிரகம் அனைத்துவிதமான நேர் வலுவையும் அடைந்து வலுப் பெறுவது அதனுடைய கொடூரமான காரகத்துவத்தை மட்டுமே செய்ய வைக்குமே தவிர மனிதனுக்கு தேவையான நல்ல விஷயங்களை அந்த கிரகம் தராது. இது சனி, செவ்வாய் இரண்டிற்குமே பொருந்தும் 

எந்த ஒரு நிலையிலும் பாபர்கள் சுபத்துவம் மற்றும் சூட்சும வலுவை கண்டிப்பாக அடைய வேண்டும். சுப கிரகங்களுக்கு சூட்சும வலு என்னும் அமைப்பு இல்லை என்பதால், சுபர்கள் பாபத்துவம் அடையாமல் முழுக்க சுபத்துவம் அடைவது அந்த மனிதனுக்கு நன்மை தரும். 

ராசி மற்றும் லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு செவ்வாய் சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெற்றிருக்கும் நிலையில், ஒருவரை அவரது காரகத்துவங்களான மருத்துவம், அதிகாரம், விளையாட்டு, பூமி, கட்டிடம், நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபடுத்துவார். இதில் மருத்துவத்தின் இரண்டாம் நிலைக் கிரகமான குருவும் நல்ல நிலையில் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளும் அமைப்பில் ஒருவர் மருத்துவராக முடியும். 

எந்த ஒரு செயலுக்கும் குறைந்தபட்சம் மூன்று கிரகங்களின் தொடர்பு இருக்கும் என்பதன்படி, மருத்துவத்தை தரும் மூன்றாவது கிரகமான சூரியனும் பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ளும் போது ஒருவர் மருத்துவத்துறையில்தான்  இருப்பார் என்பதை உறுதியாக சொல்லி விடலாம். 

மருத்துவத் துறை என்பதும் ஏராளமான பணிகளை கொண்டது. இதிலேயே டாக்டர், நர்ஸ், கம்பவுண்டர், மருந்து விற்பவர் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவத்திலும் பல் டாக்டர், கண் டாக்டர், பிசியோதெரபிஸ்ட் போன்ற பிரிவுகள் இருக்கின்றன. 

குழப்பத்திலும் குழப்பமாக மருத்துவம் என்ற ஒற்றைச் சொல்தான் ஜோதிடத்தில் உண்டு. பல மருத்துவ முறைகளை பிரித்துச் சொல்லும் விதிகள் இதுவரை இல்லை. நடைமுறை வாழ்க்கையில் ஆங்கில மருத்துவமே கௌரவமாக சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு மேம்பட்ட நிலையில் இருக்கிறது. மருத்துவர் என்றாலே நாம் எம்பிபிஎஸ் டாக்டர் என்றுதான் நினைத்துக் கொள்கிறோம். 

ஆனால் இதனை அடுத்த நிலையில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், அக்குபஞ்சர் போன்ற பிரிவுகளும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஜோதிடம் மருத்துவர் என்ற ஒரு வார்த்தைக்குள் அடக்கி விடுகிறது ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் ஒரே ஒரு மருத்துவ முறைதான் இருந்ததனால் வந்த விளைவு இது. 

இத்தனை மருத்துவ முறைகளிலும் ஜாதகப்படி ஒருவர் எம்பிபிஎஸ் டாக்டர் ஆவாரா அல்லது சித்த மருத்துவர், அக்குபஞ்சர் டாக்டர் ஆவாரா என்பது, செவ்வாயின் சுப, சூட்சும வலுவை பொருத்தது. 

செவ்வாய் ஒருவருக்கு அதிகபட்ச சுப, சூட்சும நிலைகளில் அமர்ந்து ராசி, லக்னத்திற்கு பத்தாம் இடத்திற்கு அருகில், அது 9 11-ஆம் பாவகங்களாக கூட இருந்து அங்கே செவ்வாய் வலுவாக இருக்கும் நிலையில், ஒருவர் நிச்சயமாக அலோபதி மருத்துவர் எனப்படும் எம்பிபிஎஸ் டாக்டர் ஆவார். 

செவ்வாயின் வலு குறைந்து கொண்டே வரும் நிலையில் ஒருவர் மாற்றுமுறை மருத்துவராகவோ, அல்லது ஆங்கில முறையிலேயே பல்டாக்டர், பிசியோதெரபிஸ்ட் போன்றவராகவோ இருப்பார். இரண்டாம் நிலை மருத்துவ கிரகமான குருவின் வலுவினை வைத்து ஒருவர் ஆங்கில மருத்துவரா அல்லது சித்த மருத்துவரா  என்பதையும் கணிக்க முடியும். 

குரு அதிகமான சுப நிலையில் இருக்கும்போது செவ்வாயின் சுப, சூட்சும வலுக்கள் குறைந்திருந்தால் ஆங்கில மருத்துவத்திற்கு அடுத்த நிலை அமையும். இதைப் போலவே அனைத்து விதிகளையும் பொருத்திப் பார்க்க வேண்டும். 

மருத்துவரிலும் ஏராளமான வித்தியாசங்கள் இருக்கின்றன. ஒருவர் குழந்தை மருத்துவராக இருக்கிறார், இன்னொருவர் பொது மருத்துவராக இருக்கிறார். நரம்புகளுக்கு ஒருவர், இருதயத்திற்கு ஒருவர், கண், காது, மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளுக்கு தனி மருத்துவர் என இன்றைய மருத்துவத்தில் ஏராளமான பிரிவுகள் இருக்கின்றன.

இதில் அறுவை சிகிச்சை செய்ய வைக்கும் மருத்துவராக ஒருவரை சூரியன் இருக்க வைப்பார். பத்தாம் பாவகத்தில் வலுப்பெற்ற சூரியன், செவ்வாய் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவர் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கும் மகப்பேறு மருத்துவராக அல்லது பைபாஸ் சர்ஜரி எனப்படும் இதயநோய் ஆபரேஷன்  செய்யும் மருத்துவராக இருப்பார்.

கீழே இரண்டு மருத்துவ ஜாதகங்களை கொடுத்திருக்கிறேன். இவர்கள் இருவரும் அண்ணன், தங்கை என்பதனாலேயே இவற்றை தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ தொழில் அமைப்புகள் ஜாதகத்தில் மாறாது என்பதைக் குறிக்கவே இரட்டை ஜாதகங்களுக்கு விளக்கம் தரப் போகிறேன். 

இவர்கள் இருவரும் ஆங்கில மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாவது ஜாதகத்தில் கன்னி லக்னமாகி, பத்தாம் இடத்தில் மருத்துவ கிரகமான செவ்வாய் திக்பலம் பெற்று இருக்கிறார். இங்கே செவ்வாய் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை அடையவில்லை. பாபர்களுக்கு மட்டுமேயான உன்னத நிலையான திக்பலத்தை அடைந்திருக்கிறார். இன்னொரு நல்ல அமைப்பாக வர்கோத்தமமும் அடைந்திருக்கிறார்.

நண்பரான சந்திரனின் பார்வை இங்கே செவ்வாய்க்கு இருக்கிறது. இதன் மூலம் செவ்வாய் சுபத்துவம் அடைகிறார். சந்திரனுடன் இணைவதும் அவரது பார்வையைப் பெறுவதும் மட்டுமே, செவ்வாய்க்கு முதன்மை சுபத்துவத்தை தரும். சந்திரன் இந்த ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்தாலும், பாதி அளவிற்கு ஒளி பொருந்திய அமைப்பில்தான் இருக்கிறார். இன்னும் அமாவாசை நிலையை சந்திரன் நெருங்கவில்லை. 

லக்னத்திற்கு பத்தில் இருக்கும் செவ்வாய் தனது நான்காம் பார்வையால், ராசிக்கு 10-ஆம் இடத்தைப் பார்க்கிறார். லக்னம், ராசி இரண்டின் தொழில் ஸ்தானங்களும் சுபத்துவ, திக்பல, வர்கோத்தமம் அடைந்த செவ்வாயின் தொடர்பை பெறுகின்றன.

அடுத்து ராசிக்கு 10-ஆம் வீட்டில் குரு அமர்ந்திருக்கிறார். அவர் அங்கே ராசிக்கு பத்தாம் அதிபதியான புதனுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். மருத்துவத்தின் முதன்மை விதியான செவ்வாய் ராசி, அல்லது லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இங்கே பூரணமாக அமைந்திருக்கிறது. அடுத்து சுக்கிரனால் சுபத்துவம் பெற்ற சூரியனும், லக்னத்திற்கு ஏழில் அமர்ந்து ராசிக்கு பத்தாமிடத்தைப் பார்க்கிறார். 

பார்த்தவுடனேயே இவர் மருத்துவராக வருவார் என்று துல்லியமாக சொல்லி விடக்கூடிய ஜாதகம் இது. சுபத்துவ, சூட்சுமவலு விதிகள் அனைத்துமே பொருந்தும் நிலையில் இவர் ஆங்கில மருத்துவம் படிக்கிறார்.

சூரி,புத
சுக்
 
கேது

செவ்

சனி


  13-4-1993மாலை 5.30 நெல்லை
 
  

சந்

ராகு
 
குரு
 சுக்,
கேது
ல,சூரி, புத 
சந்
சனி
  22-5-1995
 காலை 5.40
நெல்லை
 
 
செவ்
 
குரு

ராகு
 

மீதி விளக்கங்களை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

(3.08.2018 இன்று மாலைமலரில் வெளிவந்தது.)அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.