ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
வி. சந்திரமோகன். ஊர் பெயர் வேண்டாம்.
கேள்வி.
வணக்கம் ஐயா. கீழ்க்காணும் குழந்தை நான் பணிபுரியும் மருத்துவமனையில் பிறந்தது. தங்களுடைய சுபத்துவ தத்துவத்தை விளக்க ஒரு எடுத்துக்காட்டாக இந்த குழந்தையின் பிறப்பு இருந்ததால் இதனை அனுப்புகிறேன். நோயாளி எனக்கு தொடர்பு இல்லாதவர். ஆயினும் ஜோதிட விளக்க படிப்பிற்காக இது உபயோகமாகும் என்பதால் இதற்கான பதிலை வேண்டுகிறேன். இந்தக் குழந்தை கடந்த 7ஆம் தேதி மதியம் 12 மணி 7 நிமிடத்திற்கு பிறந்தது. தாய்க்கு கர்ப்பபை ஒட்டி உள்ளதால் அறுவை சிகிச்சை செய்து பிறந்தது. குழந்தை பிறந்தபின் ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் தாயின் கர்ப்பப்பை அகற்றப்பட்டு, ரத்தப்போக்கும் கட்டுப்படுத்தப்பட்டது. அனைத்தும் மருத்துவமனையில் சிறந்த முறையில் செய்யப்பட்டது. ஆனால் மறுநாள் காலை தாயின் இரண்டு கால்களிலும் ரத்த ஓட்டம் தடைபட்டு, இப்போது மோசமான நிலையில் ஐசியூவில் தாய் உள்ளார். குழந்தை நன்றாகவே இருக்கிறது. தங்களது சுபத்துவ தத்துவப்படி இக்குழந்தைக்கு துலாம் லக்னமாகி, மாதா ஸ்தானமான 4-ல் உள்ள சனியை, அமாவாசை சந்திரன் மற்றும் சூரியன் ஏழாம் பார்வையாக பார்க்கிறது. உங்களின் விதிவிலக்காக புதன் இருபத்தி ஒரு டிகிரி இணைவில் சந்திரனுடன் இருப்பதால் தாய் பிழைப்பாரா? ஜோதிடத்தில் தங்களைப் பின்பற்றுவதால் கற்றுக் கொள்வதற்காக இதைக் கேட்கிறேன்.
பதில்.
(துலாம் லக்னம், கடகராசி. 2ல் கேது, 4ல் சனி, 5ல் குரு, 8ல் ராகு, 10ல் சூரி, சந், புத, 11ல் சுக், செவ். 7-8-2021 மதியம் 12.07)
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது மாதாகாரகன் என்று சொல்லப்படும் சந்திரன் பலவீனமான நிலையில் இருக்கக் கூடாது. அது தாய்க்கு நல்லதல்ல. இதுவே ஜோதிடத்தில் பாலாரிஷ்டம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தவிர்க்கவே என்னிடம் சிசேரியனுக்கு தேதி கேட்டு வருபவர்களிடம் மிக கவனமாக அக்குழந்தையின் 20 வயது வரைக்கும் தாய், தகப்பன் நன்றாக இருப்பார்களா என்பதை உறுதி செய்த பிறகே சிசேரியனுக்கான நாள், நேரத்தைக் கணித்துக் கொடுக்கிறேன்.
அன்புள்ள மாணவரே.. நீங்கள் இங்கே புதனைப் பற்றி தவறாக கணக்கிட்டிருக்கிறீர்கள். இருபத்தி ஒன்று டிகிரிக்குள் புதன் சந்திரனுடன் இருக்கிறார் என்பதை சுபத்துவம் என்று தவறாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். சூரியன் மற்றும் அமாவாசை சந்திரனுடன் சேர்ந்த புதன் கடுமையான பாபி என்பதை இங்கே மறந்துவிட்டீர்கள். இங்கே புதன் தனக்கு முற்றிலும் ஆகாத பகைவரான சந்திரனுடன் இணைந்து, சனியின் பார்வையிலும் இருப்பதால் மற்றவர்களை சுபத்துவப்படுத்தும் சுபத்தன்மை சிறிதளவுகூட புதனுக்கு இல்லை. அதைவிட மேலாக புதன் இங்கே முழுமையான பாபராக இருக்கிறார் என்பதுதான் சரி.
தாயைக் குறிக்கும் நான்காம் வீட்டில் சனி அமர்ந்து, சனி தனது ஜென்ம விரோதிகளான சூரிய, சந்திரர்களின் பார்வையையும் பெற்று, தசை நடத்தும் நிலையில், நடக்கும் புக்தியும், அடுத்து வருகின்ற அஷ்டமச்சனி அமைப்பும், இந்தக் குழந்தையின் தாய்க்கு என்ன நேரும் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. சூரிய, சந்திரர்கள் இந்தக் குழந்தை பிறந்தபோது நன்றாக இல்லை. நான்கு, ஒன்பதாம் அதிபதிகளும் நன்றாக இல்லை. முடிவு இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அனைத்தும் பரம்பொருளின் செயல்.
அழகு பிரகாஷ், திருச்சி.
கேள்வி.
பெற்றோரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு எம்.பி.பி.எஸ் முடித்துள்ளேன். ஆனால் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய குறிக்கோள். அதன் மேல்தான் எனக்கு விருப்பமும், காதலும் கூட. நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் வேலைக்கு கட்டாயம் சென்றாக வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது உள்ளது. அதனால் மருத்துவ மேற்படிப்புக்காக நீட் படித்து வருகிறேன். எனக்கு மேற்படிப்பு பாக்கியம் உள்ளதா? மேற்படிப்பை முடித்த பிறகு என்னுடைய கனவான ஐ.ஏ.எஸ் படித்து தேர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளதா என்பதை சொல்லுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பதில்.
(மீன லக்னம், தனுசு ராசி. 1ல் சனி, 6ல் ராகு, 7ல் சூரி, புத, 9ல் சுக், செவ், 10ல் சந், 11ல் குரு, 12ல் கேது. 8-10-1997 மாலை 6.05 திருச்சி)
என்னுடைய சுபத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் செவ்வாய் ஆட்சி எனும் ஸ்தான பலத்துடன், சுக்கிரனுடன் 6 டிகிரிக்குள் இணைந்து, திக்பலத்திற்கு அருகில் இருப்பதால் உங்களுக்கு மருத்துவ படிப்பு ஏற்பட்டது. இளம்வயதில் வருகின்ற அவயோக தசைகள் நம்முடைய விருப்பத்திற்கு மாறான ஒன்றை செய்ய வைக்கும் என்பதுதான் உண்மை. அதனால்தான் உங்களுக்கு இருபத்தி இரண்டு வயது வரை நடந்த சுக்கிர தசையில் ஐஏஎஸ் போன்ற படிப்பிற்கு ஆர்வம் இருந்தாலும், நீங்கள் பெற்றோர்களால் மருத்துவப் படிப்பு படிக்க வைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
லக்னாதிபதி குரு நீச்சம் பெற்றாலும், பரிவர்த்தனை அடைந்திருப்பது ஒரு வகையில் பலமான நிலை. ஆனால் இது இளம் வயது எண்ணங்கள் நிறைவேறுவதற்கான அமைப்பை தராது. ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து குருவின் பார்வையில் சுபத்துவமாக இருப்பதால், உங்களுக்கு அரசுப் பணி நிச்சயம் உண்டு.
அதேநேரத்தில் சூரியனையும், சந்திரனையும் ஒருசேர சனி பார்ப்பதும், சிம்மத்தில் ராகு அமர்ந்து சிம்மம் பலவீனமாக இருப்பதும் ஐஏஎஸ் போன்ற உயர் பதவிகளை அடைய தடை செய்யும் அமைப்பு தற்போது ஆறுக்குடைய சூரியதசை நடைபெறுவதும் உங்களுடைய எண்ணத்திற்கு தடையாக இருக்கும். பொதுவாகவே மீன லக்ன காரர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்திற்கு ஆறு, எட்டாம் அதிபதிகளான சுக்கிர, சூரியனின் தசைகள் முடிய வேண்டும்.
இருபத்தி எட்டு வயதிற்கு பிறகு வருகின்ற சந்திர தசையில் அரசுப்பணி ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஆயினும் உயர் பதவிக்கு தடை இருக்கிறது. மருத்துவத் துறையில் உயர் நிலைக்கு செல்லக்கூடிய நல்ல ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள். நன்றாக இருப்பீர்கள்.
கதிரவன், பரமக்குடி.
கேள்வி.
எனது வாழ்க்கையில் சில கேள்விகளுக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும் போது தங்களின் சுபத்துவ சூட்சுமவலு கோட்பாடு என்னை ஈர்த்தது. நிச்சயமாக இக்கோட்பாடு ஜோதிடத்தை அடுத்த ஒரு பரிமாணத்துக்கு எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. என்னுடைய கேள்வி என்னவென்றால் வாழ்க்கையில் சில மறைபொருள் பற்றியும், சித்தர்களின் தொடர்பு, பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறிய முயற்சிக்கிறேன். அதற்கான பிராப்தத்தைப் பெறுவேனா என்பதை தங்களது சுபத்துவக் கோட்பாடுகளின் மூலம் என்னுடைய ஜாதகத்தில் அறிய இயலுமா?
பதில்,.
(விருச்சிக லக்னம் கடக ராசி. 3ல் கேது, 4ல் புத, 5ல் சூரி, குரு, 6ல் சுக், சனி, 9ல் சந், ராகு, 12ல் செவ். 26-3-1999 இரவு 9.54 பரமக்குடி)
லக்னம், ராசி, லகினாதிபதி போன்றவைகளை சுபத்துவ குரு, சனி, கேது போன்றவைகள் ஒருசேர தொடர்பு கொண்டால், ஆன்மிக எண்ணங்கள் வரும் என்பதற்கு உங்களுடைய ஜாதகமும் எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதனால்தான் 22 வயதில் ஆன்மீகக் கேள்வி கேட்டிருக்கிறீர்கள்.
என்னுடைய சுபத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் லக்னத்தையும், ராசியையும், வலுப் பெற்ற குரு பார்த்து, சனி சுபத்துவமாகி பரிவர்த்தனை பெற்ற லக்னாதிபதியைப் பார்க்கிறார். சனியின் பார்வையைப் பெற்ற கேது ராசியோடு தொடர்பு கொண்டிருக்கிறார். தற்போது ஆன்மீக வீடான கும்பத்தில் அமர்ந்த புதன் தசையில் உங்களுக்கு வானவியல், பிரபஞ்சம், ஆன்மீகம் பற்றிய ஆர்வங்கள் வந்திருக்கிறது.
அடுத்து உங்களுடைய இருபத்தி ஆறு வயதில் நடக்க இருக்கும் கேதுதசை இந்த உணர்வுகளின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும். உங்களுடைய ஆன்மிக எண்ணங்கள் ஓரளவு நிறைவேறவே செய்யும். எனினும் சித்து நிலை போன்ற ஆன்மீக உச்ச நிலைக்குச் செல்ல குரு, சனி தசைகள் சரியான பருவத்தில் வர வேண்டியது மிகவும் அவசியம். உங்களுக்கு அந்த அமைப்பு இல்லை.
பரிவர்த்தனை பெற்ற சுக்கிரனுடைய தசை 30 வயதிற்கு பிறகு வருவதால், நீங்கள் இல்லறம் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். ஆயினும் ஆன்மிக எண்ணங்களும், தேடலும் ஓயாது. ஐம்பது வயதிற்கு பிறகு வருகின்ற சூரிய, சந்திர தசைகளில் உங்களுடைய ஆன்மீக உயர் நிலையையும், பிரபஞ்ச ரகசியத்தையும் ஓரளவு அறிய முயற்சிக்கும் எண்ணங்களையும் நிறைவேற்றும். வாழ்த்துக்கள். நன்றாக இருப்பீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
மாலை மலர் நாளிதழில் குருஜி அவர்களின் பதில்களை பெற கேள்வியை அனுப்ப வேண்டிய தபால் முகவரி ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008
இமெயிலில் கேள்விகளை அனுப்ப :-EMAIL ID : gurujianswers@gmail.com