adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
நீச்சம் எனும் பாபத்துவம் – (E-018)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8286 99 8888

பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள தலை சுற்ற வைக்கும் ஏராளமான சூட்சும விஷயங்களில் முக்கியமான ஒன்று, ஒரு கிரகத்தின் நீச்ச நிலை என்பது.  யானைக்கும் அடி சறுக்கும் என்பதைப் போல, அனுபவம் வாய்ந்தவர்களையே தடுமாற வைத்து விடுவது ஒரு கிரகத்தின் நீச்ச நிலையாக இருக்கும்.


வேத ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் மட்டுமே ஸ்தான பலம் என்று சொல்லக்கூடிய, ஒரு கிரகத்தின் உச்சம், நீச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு நிலைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன மேற்கண்ட ஆட்சி, மூலத்திரிகோண நிலைகள் ஒரு கிரகம் சூரியனை சுற்றிவரும் பாதை மற்றும் அவைகளின் ஈர்ப்பு நிலை சம்பந்தப்பட்டவை. உச்சம், நீச்சம் என்பது கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளித் தன்மையோடு தொடர்புடையது.

மேற்கண்ட ஏழு கிரகங்களும் நெருப்பு, கல், மண், வாயு போன்ற பருப்பொருட்களால் ஆன நிலையில் சாயா கிரகங்கள் எனப்படும், வெறும் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களுக்கு இதுபோன்ற பருப்பொருள் இல்லாத காரணத்தால் இவைகளுக்கு ஈர்ப்பு விசை, மற்றும் ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மை கிடையாது. எனவே இவைகளுக்கு ஆட்சி, உச்சம், நீச்சம் கிடையாது.

ஒரு கிரகத்தின் நீச்சம் என்பது அதன் ஸ்தான பலத்தின் கடைசி பலவீன நிலையாக சொல்லப்படுகிறது உண்மையில் நீச்ச நிலை என்பது மறைமுகமாக அதனுடைய பாபத்துவ நிலையைத்தான் குறிக்கிறது. ஜாதகருக்கு வேண்டாத அவ யோகக் கிரகமாக இருந்தாலும் கூட ஒரு கிரகம் நீச்ச நிலையை அடைவது சில நிலைகளில் நன்மையைத் தராது.

ஒன்பது கிரகங்களும் ஒரு மனிதனுக்கு கண்டிப்பாகத் தேவை. உண்மையைச் சொல்லப்போனால் ஆட்சி, உச்ச நிலையை விட ஒன்பது கோள்களும் நட்பு நிலையில் இருக்கும் ஜாதகம் உயர்நிலை ஜாதகமாக கருதப்படும்.

ஒரு கிரகம் நீச்ச நிலையை அடையும் போது அதனுடைய காரகத்துவங்களை இயல்பாகத் தரும்  தகுதியை இழக்கிறது என்றுதான் அர்த்தம். கூடவே அந்த ஜாதகருக்கு அது தர வேண்டிய ஆதிபத்தியங்களையும் அதனால் தர இயலாது.

உதாரணமாக நீங்கள் மேஷ லக்னத்தில் பிறந்து உங்களுக்கு ஆறாம் அதிபதியான புதன் நீச்சம் அடைந்திருக்கும் நிலையில், புதனுக்கு வேறு எவ்வித பாப, சுபத்துவ தொடர்புகளும் இல்லாமல், நீச்ச பங்கமும் அடைந்திராத நிலைகளில், புதனுடைய ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவம் உங்களுக்கு முழுமையாக இருக்காது.  

அதாவது இங்கே புதனின் ஆதிபத்திய வீடுகளான மூன்று, ஆறாமிடங்களின் நல்ல கெட்ட பலன்கள் மற்றும் புதனின் கல்வி, ஞானம், பேச்சு சாதுரியம், எதையும் சட்டென கிரகிக்கும் தன்மை உள்ளிட்ட காரகத்துவங்கள் உங்களுக்கு கிடைக்காது.

அதே நேரத்தில் மிக முக்கிய அமைப்பாக இந்த நீச்ச நிலையில் சனி, செவ்வாய், ராகு ஆகிய பாபர்கள், புதனுடன் இணைந்து, புத்திக் காரகனாகிய புதன் முழுமையான பாபத்துவத்தை அடையும் போது மட்டுமே முழுமையான கல்வித்தடை, அறிவு மற்றும் ஞானமற்ற நிலைமை, மிக முக்கியமாக கணிதத்திறமை இல்லாத நிலை போன்றவை இருக்கும்.

புதன் தனித்து நீச்சத்தை மட்டும் அடைந்து வேறு சுப, பாப அமைப்புகள் இல்லாத நிலையில் ஜாதகர் புதனின் காரகத்துவ அமைப்புகளின் கடைசி நிலையில் “ஏதோ ஒரு அளவிற்கு இருக்கிறது” என்ற அமைப்பில் இருப்பார். அதாவது ஒரு கிரகம் நீச்சம் அடைந்த நிலையில் தன்னுடைய காரகத்துவத்தை 10 சதவிகிதமாவது செய்யும் நிலையில் இருக்கும். அந்த பத்து சதவிகிதமே ஒரு தனி மனிதனுக்கு ஓரளவு போதும்.

அதைப்போலவே மேஷத்திற்கு அவர் தரும் ஆதிபத்தியங்கள் எனும் நிலையை எடுத்துக் கொண்டால், அவரது 3 மற்றும் 6-ம் இடங்களின் நல்ல, கெட்ட தன்மைகளின் இயல்பான நிலையை தர முடியாத வகையில் இருப்பார். இதனோடு நீங்கள் மற்ற பிற விதிகளையும் பொருத்திப் பார்த்துக்கொள்ள வேண்டும்.  

அதாவது பாபத் பாவக விதிகளின்படி, இந்த புதன் தன்னுடைய மூன்றாம் வீட்டிற்கும், ஆறாம் வீட்டிற்கும் கேந்திரத்தில் இருக்கிறார். அவர் இங்கே தன்னுடைய வீடுகளுக்கு 6, 8, 12 போன்ற இடங்களில் மறைந்தால் மட்டுமே முழுமையாக நூறு சதவிகிதம் எதையும் தர இயலாது என்ற நிலையையும் அடைவார் என்ற கருத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.  

ஜோதிடத்தில் அனைத்து விதிகளையும், விதி விலக்குகளையும் ஓரிடத்தில் பொருத்திப் பார்த்து விட்டு, இறுதி நிலையாக சுபத்துவ, பாபத்துவ சூட்சும வலு அமைப்பிற்கு வந்துவிட வேண்டும். அந்த நிலையில் துல்லிய பலன் நமக்கு கிடைக்கும்.

நீச்சம் என்கின்ற ஸ்தான பலத்தின் கடைசி பலவீன நிலையை புதன் இங்கே  அடைந்திருப்பதால், இந்த இடத்தில் அவரால் ஆறாமிடத்தில் தன்மைகளை அதாவது கடன், நோய், எதிர்ப்பு என்கின்ற தன்மைகளை கொடுக்க இயலாது. அதே நேரத்தில் ஒரு மனிதன் பிழைப்பதற்கு அவசியமான நல்ல வேலையையும் அவரால் தர முடியாது.  இன்னொரு பாவகமான மூன்றாமிடத்தின் தைரியம், வீரியம், இசை, எழுத்து போன்றவைகளும் ஜாதகருக்கு கை வராது.  

இங்கே நான் சொல்வது ஒரு கிரகத்தில் நீச்ச நிலையில் மிக முக்கியமான ஒரு அமைப்பாகும். அதே நேரத்தில் புதன் இவ்வாறு மிகவும் பலவீனமாக கடை நிலையில் இருப்பது என்பது லட்சத்தில் அல்லது கோடியில் ஒருவருக்கு மட்டுமே அமையக் கூடியது. ஏதேனும் ஒரு வகையில் புதனுடன் சுபர், பாபர்கள் கலக்கும் பொழுது, இணையும் சதவிகித அடிப்படையில் இந்த பலன்கள் கூடுதல் குறைவாக இருக்கும்.  

இது போன்ற நிலைகளில் புதன் எத்தகைய ஆதிபத்திய மற்றும் காரக நன்மை தீமைகளை செய்வார் என்பதற்கு நீங்கள் சுபத்துவ, பாபத்துவ சூட்சுமவலு தத்துவத்தை கணித மற்றும் கிரகங்களின் ஒளி ரீதியாக முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.  

ஒரு மனிதனின் உயிரும், உடலும் ஒன்பது கிரகங்களால் ஆனது. இந்த உயிரையும் உடலையும் இணைத்து அவனை இயக்கும் மனம் என்பதும் நவ கிரகங்களின் ஆளுமைக்கு உட்பட்டது. ஒன்பது கிரகங்களும் ஒரு மனிதன் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அமையும் கோள்களின் நிலையைச் சொல்லும் ஜாதகத்தின் லக்னம், ராசி, ஆதிபத்திய, காரகத்துவங்கள், தசா புக்திகளின் அடிப்படையில் அந்த மனிதனின் மனதை ஆக்கிரமித்து, இயக்கி அவனது வாழ்க்கையை நடத்தி வைக்கின்றன.

ஒரு ஜாதகத்தில் உள்ள ஒன்பது கிரகங்களில், நன்மை தரக்கூடிய நான்கு கிரகங்களின் சுபத்துவம் கூடுதலாகவும், தீமை செய்ய கூடிய எதிரணியைச் சேர்ந்த நான்கு கிரகங்களின் சுபத்துவம் சற்று மிதமானதாகவும் இருந்து, இரண்டு நிலைகளுக்கும் பாலமாக செயல்படும் நடுவரான மீதியுள்ள கிரகமும் ஓரளவிற்கு சுபத்துவமாக இருக்கும் பொழுது அந்த ஜாதகன் மிகுந்த யோகசாலியாகிறான்.  

அதே நேரத்தில் அவனுடைய ஜாதகத்தில் எந்த பாவகம் அல்லது கிரகம் கூடுதல் பாபத்துவத்தை அடைகிறதோ அந்த கிரக அல்லது ஆதிபத்திய தன்மைகள் அவனுக்கு கிடைக்காமல் போகிறது. அல்லது அதன் வழிகளில் அவன் வேதனையை அனுபவிக்கிறான். இப்படிப்பட்ட சூழலில் கோள்களின் சுபத்துவ, பாபத்துவத் தன்மைகள் எங்கு, எந்த அளவிற்கு தேவை என்பதுதான் கவனத்துடன் கணிக்கப்பட கூடிய ஒன்றாக இருக்கும்.  

ஒரு மனிதனுக்கு முழுமையாக தவறானவைகளைத் தரும் சனியும், முக்கால் பங்கு கெடுதலைத் தரும் செவ்வாயும் நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை அடைவதை விட நீச்சம் அடைவது நல்லவைகளைச் செய்யும் என்று நான் சொல்லி வருகிறேன்.  அதே நேரத்தில் அவர்கள் நேர் வலு இழந்தால் கண்டிப்பாக சுபத்துவம் மற்றும் சூட்சும வலுவை அடையவேண்டும். அப்போதுதான் அங்கே நன்மைகள் இருக்கும்.

பலருக்கு உச்சம், நீச்சம் என்பதில் தவறான புரிதல்கள் இருக்கின்றன. ஒரு கிரகம் பரம உச்ச பாகை எனப்படும் மிக முக்கிய புள்ளியில் உள்ள போது முழுத்திறனுடன் இருக்கிறது. அதாவது அது தன்னுடைய காரக, ஆதிபத்திய தன்மைகளை அந்த மனிதனுக்கு முழுமையாக, அவனது தேவையை விட மிக அதிகமாகத் தரும் நிலையில் இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக இன்னொரு முக்கிய எதிர்முனைப் புள்ளியான பரம நீச்ச பாகையை அடையும் போது மட்டுமே அது முழுமையான வலிமையை இழக்கிறது. அப்போது அதனால் அந்த மனிதனுக்கு தன் காரக, ஆதிபத்தியத்தை தர இயலாது. பரம நீச்ச பாகைக்கு ஒரு டிகிரி முன்பு அந்தக் கோள் இருந்தால்கூட தன்னிடம் இருக்கும் குறைவான நிலையை அந்த ஜாதகருக்கு தரும் அமைப்பில் இருக்கும்.  

மேலே புதனின் நீச்ச நிலையை பார்த்து விட்டதால் இந்த அமைப்பிற்கு சுக்கிரனைப்  பொருத்திப் பார்ப்போமேயானல், சுக்கிரன் கன்னியில் நீச்சம் அடைந்தால் ஒருவருக்கு பெண் சுகம் கிடைக்கவே கிடைக்காது என்று சிலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள்.

நீச்சம் என்பது பாபத்துவத்தின் ஆரம்ப நிலை மட்டும்தான். உண்மையான ஞானத்தின்படி சுக்கிரன் மீனத்தில் உச்சமாக இருக்கும் ஒருவருக்கு தேவையை விட  மிக அதிகமாக அனைத்து நிலைகளிலும் பெண்களின் சம்பந்தமும், பெண் சுகமும் கிடைக்கிறது. பெண்களால் அவருக்கு அனைத்து நிலைகளிலும் ஆதாயம் இருக்கிறது.  அதைப் போலவே சுக்கிரன் தரும் சுகபோகங்களும், மிக அதிகமாக செலவு செய்யும் அளவிற்கு தாராளமான பணவரவும், சொகுசு வாழ்க்கையும் அவருக்கு அமைகிறது.

யதார்த்த நிலையில் ஒரு மனிதனுக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே போதும். கன்னியில் தனித்து எந்தவகையிலும் நீச்ச பங்கம் அடையாத சுக்கிரனால் கூட, அவர் பரம நீச்ச பாகையின் மையப்புள்ளியில் இல்லாதவரை, ஒரே ஒரு பெண்ணிடம் மட்டுமே கிடைக்கக்கூடிய சுகத்தை நிச்சயமாகத் தரமுடியும்.  

ஆனால் அதே சுக்கிரன் அங்கே செவ்வாய், சனி, ராகு போன்ற பாபர்களின் தொடர்பைப் பெற்று விடுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சுக்கிரன் தரும் எந்த சுகமும் கிடைக்காது அல்லது தலைகீழாக மாறுபாடான கோணத்தில் சுக்கிரனின் காரகத்துவங்கள் கிடைக்கும். இதுவே சுக்கிரனின் முழுமையான பாபத்துவமாக இருக்கும்.  

இங்கே மாறுபாடான கோணம் என்பது சுக்கிரனின் எதிர் நிலை காரகத்துவங்களைக் குறிக்கிறது. அதாவது சுக்கிரனின் மிக முக்கிய நேர்நிலை காரகத்துவம் கன்னித்தன்மை உள்ள மிக இளம் வயதுப் பெண்கள் மூலமான காமத்தை அனுபவித்தல். எதிர்நிலை காரகத்துவம் என்பது கன்னித் தன்மையற்ற வயதான பெண்கள் மூலமாக காமம் கிடைத்தல்.

சுக்கிரன் கூடுதலான பாபத்துவ நிலையில் இருக்கும் பொழுது அந்த மனிதருக்கு அவரது லக்ன மற்றும் லக்னாதிபதியின் தன்மைகளைப் பொருத்து, இளம் வயது பெண்களை விட வயதான பெண்களின் மேல் ஆர்வம் இருக்கலாம் அல்லது அவருக்கு இதுபோன்ற பெண் துணை மட்டுமே கிடைக்கலாம். மேலும் சுக்கிரனின் மிக அதிக சொகுசு வாழ்க்கை கிடைக்காமல், பொருளாதார ரீதியில் அவர் மிகவும் கஷ்டங்களை அடையலாம்.  

இங்கே ஆதிபத்திய ரீதியிலும் லக்னத்திற்கு ஏற்றபடி சுக்கிரனின் நிலை அமையும்.  சுக்கிரன் அந்த ஜாதகத்தில் எந்த பாவகங்களுக்கு அதிபதியோ அந்த வீடுகளின் தன்மைகள் ஜாதகருக்கு முழுமையாக கிடைக்காது அல்லது எதிர்மாறான அமைப்பில் இருக்கும்.

மேலே நான் சொல்லுகின்ற இந்த நிலைகளை மாற்றுவது சுபத்துவம் மற்றும் முறையான நீச்ச பங்கம் மட்டுமே.  எத்தகைய ஒரு பாபத்துவ அமைப்பையும்  ஒரு ஒளி பொருந்திய சந்திரனின் பார்வையோ மற்றும் குருவின் பார்வையையோ தொடர்போ மாற்றவல்லது.

உண்மையான புரிதல் என்னவெனில், தனித்து எவ்வித கிரகங்களின் சம்பந்தமும் இல்லாத நிலையில் நீச்சமாக இருக்கும் ஒரு கிரகத்தால், அந்த மனிதனுக்கு தேவைப்படுகின்ற தனது இயல்பை தருகின்ற தகுதி இருக்கும்.  

அதே நீச்ச கிரகம் சந்திரனின் ஒளி பிரதிபலிப்பு மையங்களான கேந்திரங்கள் என்று சொல்லப்படும் நிலவுக்கு நான்கு, பத்தாம் இடங்களிலோ, சந்திரனின் நேர் எதிர் பார்வையைப் பெறக்கூடிய சந்திரனுக்கு ஏழாம் இடத்திலோ, சந்திரனோடு இணைந்து அதனுடைய ஒளியை வாங்கக்கூடிய ஒன்றாம் இடத்திலோ இருக்கும்பொழுது முறையான நீச்சபங்கத்தை அடைந்து, அந்த மனிதனுக்கு கூடுதலாக தன்னுடைய இயல்பை தரும் நிலையை அடைகிறது. இங்கே நீச்சம் என்பது செயலிழந்து போகும்.  

நீச்ச கிரகம் சந்திரனின் ஒளி பொருந்திய தன்மையை பொருத்து தன்னுடைய வலிமையைப் திரும்பப் பெறும். பவுர்ணமியை நெருங்கும் அல்லது ஒளி உச்ச நிலையில் இருக்கும் சந்திரனால் ஒரு நீச்ச கிரகத்தை முழுமையாக மற்ற முடியும். அமாவாசை சந்திரனால் நீச்ச பங்கத்தை தர இயலாது. அதே அமாவாசை சந்திரன் குருவின் தொடர்பால் தனது ஒளியை திரும்பப் பெற்றால் நீச்சனை வலிமை அடையச் செய்ய முடியும்.

சந்திரனால் ஏற்படும் நீச்சபங்கத்தை அடையாமல் நான் சொல்லுகின்ற சுபத்துவம் எனப்படும் குரு, சுக்கிர தொடர்புகளை மட்டும் ஒரு கிரகம் பெறும் பொழுதும் அதன் நீச்ச நிலை விலகி அதனுடைய காரகத்துவங்களை, அந்த மனிதனுக்கு நன்மையான விதத்தில் அளிக்கும் தன்மையைப் பெறுகிறது.  செவ்வாய், சனி ஆகிய பாப கிரகங்கள் முழுமையான நீச்சத்தை அடைந்து வக்ரம் பெறாமல் இருக்கும் நிலையில், குரு, சுக்கிர தொடர்புகளைப் பெறும்பொழுது அவர்களின் மிக உயர் நல்ல பலன்களைத் தருவது இது போன்ற நிலைகளில்தான்.

அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

மாலைமலரில் 05.02.2021 அன்று வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.