adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பாபத்துவம் தரும் ராகு – (E-005)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8428 99 8888

சுபத்துவ நிலை அமைப்பில் ராகு-கேதுக்களுக்கு இடமில்லை என சென்ற வார அத்தியாயத்தை முடித்திருந்தேன். 

உண்மையில் இருள் கிரகங்களான ராகு-கேதுக்கள் மற்ற கிரகங்களோடு இணையும் நிலையில் தங்களுடைய இருள்தன்மையை அவைகளுக்கு தந்து பாபத்துவம் என்னும் கெடுபலன் தரும் அமைப்பை சம்பந்தப்பட்ட கிரகங்கள் பெற வைக்கின்றன.

எந்த ஒரு நிலையிலும் ஒரு கிரகத்தின் ஒளியை குறைக்க அல்லது மறைக்கச் செய்வன இந்த ராகு-கேதுக்கள்.  


ராகு-கேது இருவரின் உண்மைத்தன்மையை ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” மற்றும் “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.

சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும் இவை இரண்டுமே இருள் தன்மையை கொண்டவைகளாக இருப்பினும், ராகு என்பது கடும் ஆழமான ஒரு இருட்டு, அதாவது ஒரு இருளின் மையப்புள்ளி ராகுவாகவும், இருளும், ஒளியும் கலக்கும் இருளின் கடைசி விளிம்புநிலை கேதுவாகவும் இருக்கும். ஏற்கனவே இவைகளைப்பற்றி விரிவாக சொல்லி விட்டபடியால் இங்கே மீண்டும் அவைகளை விளக்க தேவையில்லை.  

சுருக்கமாகச் சொல்லப்போனால் கும்மிருட்டு என்று சொல்லப்படக்கூடிய, நம்முடைய கைகளே நமக்குத் தெரியாத, ஆழமான இருள் நிலை ராகுவாக அமைகிறது. இருளும் ஒளியும் கலக்கும் கடைநிலை பகுதி கேதுவாகிறது. இதனை விளக்கவே ராகு-கேதுக்கள் இருவரிலும் உள்ள முரண்பட்ட நிலையாக ராகுவை கரும்பாம்பு என்றும் கேதுவை செம்பாம்பு எனவும் நம்முடைய ஜோதிட மூலநூல்கள் தனித்தனியே அடையாளம் காட்டி விளக்கிச் சொல்லின.  

உண்மையில் கரும்பாம்பு எனப்படும் ராகுவுடன் மிக ஆழமான நிலையில் அதாவது ராகுவிற்கு நெருக்கமாக ஒரு குறிப்பிட்ட டிகிரியில் அமிழ்ந்து போகும் எந்த கிரகத்தின் ஒளியும் வெளியே வர இயலாது. சூரியன் உள்பட யாராக இருந்தாலும் இதே நிலைதான். அதேநேரத்தில் கேதுவால் முழுமையாக ஒரு ஒளியை மறைக்க இயலாது.  கேதுவிடம் மாட்டிக் கொள்ளும் ஒளி தப்பிப் பிழைக்கும் முயற்சியில், தன்னை ஓரளவு வெளிப்படுத்திக் கொள்ளும் நிலையிலேயே இருக்கும்.

ராகுவுடன் இணையும் கிரகம் இணையும் தூரத்தைப் பொருத்து முழுக்க முழுக்க கிரகணம் அடைகிறது.  அதேநேரத்தில் கேதுவால் கிரகணம் ஏற்படும் பொழுது, முழு மறைப்பு ஏற்படுவதில்லை. கிரகணத்தின் போது அந்த கிரகத்தின் ஒளி அளவு நிலைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அங்கு கலப்பு பலன்கள் மட்டுமே ஏற்படுகின்றன. உண்மையில் கேதுவால் முழுமையான கிரகணத்தை ஏற்படுத்த முடியாது.

ராகுவால் ஏற்படும் கிரகணம் ராகு பிரஸ்த கிரகணம் என்றும் கேதுவால் ஏற்படும் கிரகணம் கேது பிரஸ்த கிரகணம் என்றும் ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. வானில் கிரகணம் நடக்கும் பொழுது மேற்கண்ட இந்த நிலையை நம்மால் உணர முடியும்.  

பவுர்ணமி அன்று ராகுவால் சந்திரன் கிரகணம் அடையும்போது சில நிமிடங்களுக்கு அமாவாசை போன்று முழுக்க இருள் தன்மை படர்ந்திருக்கும். ராகுவால் ஏற்படும் சூரிய கிரகணமும் அப்படித்தான். இது போன்ற நிலையில் பகலிலேயே சில நிமிடங்கள் இரவை நம்மால் உணர முடியும்.  இது ராகு சூரிய, சந்திரர்களை மறைக்கும் போது ஏற்படுவது.  

ஆனால் கேதுவால் கிரகணம் ஏற்படும்போது சந்திரன் முழுமையாக மறைக்கப்படாமல் ஓரளவு ஒளி வெளியே தெரியும் நிலையில் சிகப்பு நிறத்தில் இருப்பார். கேதுவால் எந்த நிலையிலும் ஒளிக் கிரகங்களை முழுக்க இருளாக்க முடியாது.

ஆனால் தலையைச் சுற்ற வைக்கும் விதமாக கிரகங்களின் வலிமையைக் கணக்கிடும் பொழுது நம்முடைய மூல நூல்கள் ராகுவை விட கேதுவிற்கே முக்கியத்துவம் கொடுத்து முதலிடத்தை அளிக்கின்றன.  

அதாவது கிரகங்களின் வலிமை வரிசை என்று வரும்பொழுது நம்முடைய மூல ஒளிக் கிரகங்களான சூரிய, சந்திரர்களை விட அவைகளை மறைக்கும் ராகு-கேதுவிற்கு முதலிடம் கொடுத்து கிரக வரிசை முதலில் கேது, பின்னர் ராகு அடுத்து சூரியன், சந்திரன் என நவ கிரகங்கள் பின்னால் வர ராகு-கேதுக்களின் ஒளி மறைப்புத் தன்மையே முதன்மையானது என்று நமக்கு உணர்த்தப்படுகிறது. அதாவது இங்கே நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நமக்கு பாபத்துவத்தின்  முக்கியத்துவத்தை போதிக்கிறார்கள்.

ஒரு நிலையில் சிந்திக்க போனால் ஒளி மறைப்புத் தன்மையில் ராகுவை விட கேதுவை முன்னிறுத்துவது ஏதேனும் ஒரு கணிப்பு அல்லது கருத்து பிழையாக கூட இருக்கலாம் என்றே தோன்றுகிறது. நானும் பல வகையில் இந்த கிரக வரிசையில் கேதுவிற்கு ஏன் முதலிடம் என்பதை ஆய்வு நோக்கில் சிந்தித்துப் பார்த்தும் இதுபற்றிய நுணுக்கம் பிடிபடவில்லை. இந்த வரிசை ஏதோ ஒன்றை நமக்குச் சொல்கிறது. நம்முடைய சிற்றறிவிற்கு தெரியாத வகையில் இதில் ஏதேனும் மறைந்திருக்கலாம்.  

சுபத்துவத்தின் நேர் எதிர் நிலையான பாபத்துவத்தின் முதல்நிலை கதாநாயகனாக நான் அமாவாசை சந்திரனை குறிப்பிடுகிறேன். ஆயினும் சில நிலைகளில் மிகக்கடுமையான பாபத்துவ கெடுபலன்களை துளியும் சுப ஒளி கிடைக்கப் பெறாத ராகுவே தருகிறார்.

என்னுடைய சுபத்துவ-பாபத்துவ-சூட்சுமவலு கோட்பாட்டின் அடிப்படையில் பாபத்துவ கிரகங்களின் வரிசை கீழ்க்கண்டவாறு அமையும்.  

முதலில் அமாவாசை சந்திரன், பின்னர் முழுப் பாபரான சனி, அடுத்து முக்கால் பாபரான செவ்வாய், அதனையடுத்து அரைப்பாபரான சூரியன், அடுத்து தேய்பிறைச் சந்திரனின் ஒளி அளவுகளைப் பொருத்து சந்திரன் , அடுத்து பாபர்களுடன் இணைந்த புதன், இறுதியாகவே ராகு-கேதுக்கள்.  

இந்த வரிசையை ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறேன் என்றால் ராகு-கேதுக்கள் இருக்கும் இடத்தைப் பொருத்தும், பார்க்கும், இணையும் கிரகங்களை பொருத்தும் பலன் தருவன என்பதால் இந்த சாயா கிரகங்களின் சுபத்துவ-பாபத்துவ நிலையை ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்றார் போலத்தான் கணிக்க முடியும் பொதுவான விதிகளுக்குள் இந்த இரண்டு கிரகங்களும் அடங்காது.

பூமிக்கு மிகவும் தேவைப்படும் ஒளியை மிக அருகிலிருந்து கொடுக்கும் பௌர்ணமி சந்திரன் சுபத்துவ அமைப்பில் முதல் நிலையை பெறுவதை போலவே, ஒளியை முற்றிலும் தர இயலாத அமாவாசை சந்திரன் பாபத்துவ அமைப்பில் முதலிடத்தை பெறுவார்.  

உயிர்களுக்கு தேவையற்ற ஒளியை தரக்கூடிய சனி நம்முடைய மூல நூல்களில் முழுமையான பாபக் கிரகமாக சொல்லப்பட்டிருந்தாலும், சற்று ஆழமாக சிந்திக்கும் போது அதாவது சூட்சும வலு எனும் நிலைக்கு கணிப்புகளை துல்லியமாக்க முனையும் பொழுது சனியை விட, நமக்கு மிக அருகில் உள்ள ஒளியை முற்றிலும் இழந்திருக்கும் அமாவாசை சந்திரனே மிகப் பெரிய கெடுதல்களை தருகிறார்.  

அதே நேரத்தில் பார்வை அமைப்புகளில் சனியைப் போல சந்திரன் கெடுபலனைத் தரக்கூடியவர் அல்ல. சனியின் பார்வை எங்கும் எதிலும் சர்வ நாசம் செய்யும். சந்திர பார்வை இதுபோன்று கொடூரமானது அல்ல. அளவில் மிகப்பெரிய குருவிற்கு அடுத்த பெரிய கிரகமான சனி வெகுதூரத்திலிருந்து சூரியன் தரும் ஒளியை மனிதனுக்கு தேவையற்ற கருநீல நிறத்தில் பிரதிபலிக்கிறது.

சனியின் மிகப் பெரிய உருவத்தையும், இருக்கும் தூரத்தையும் பொருத்து அதன் இரண்டு சிறப்பு பார்வைகளையும் சேர்த்து மூன்று பார்வைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மூன்றுமே சனி இயல்பான நிலையில் இருக்கும்போதோ அல்லது கடும் பாபத்துவ நிலையில் இருக்கும் பொழுதோ கடுமையான கெடுபலன்களைச் செய்யும் என்று நமக்குச் சொல்லப்பட்டு இருக்கிறது.

ஆனால் அமாவாசை சந்திரனுக்கு இத்தகைய சர்வநாச பார்வை அமைப்பு இல்லை. நிலவு இருக்கும் தூரமும் அளவும் சிறியதாக இருப்பதால் பார்வையால் ஒரு மனிதனுக்கு கெடுபலன் செய்ய முடியாத நிலை நிலவுக்கு உண்டாகி, இருக்கும் இடத்தை மட்டும் கெடுக்கும் நிலை சந்திரனுக்கு அமைகிறது. அதாவது கடுமையான இருள் அமைப்பைக் கொண்ட அமாவாசை சந்திரன் ஒரு ஜாதகத்தில் இருக்கும் இடத்தைக் கெடுப்பார்.

சந்திரனின் பார்வை கொடுக்குமே தவிர கெடுக்காது என்பதற்கு சந்திர அதியோகமே ஒரு முக்கிய சாட்சியாக விளங்குகிறது.

மனிதனுக்கு கிடைக்கும் யோகங்களில் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டுள்ள சந்திர அதியோகம் சந்திரனின் பார்வையால் உண்டாகும் ஒன்று.  

நிலவுக்கு நேர் எதிரே ஆறு, ஏழு, எட்டாம் இடங்களில் இருக்கும் கிரகங்களை அவர் சுபத்துவப்படுத்துவார் என்பது சந்திரன் நமக்கு அருகில் இருப்பதால்தான். இதன் உண்மையான அர்த்தம் முழு ஒளித்திறனுடன் பௌர்ணமி நிலையில் சந்திரன் இருக்கும் பொழுது தனக்கு நேர் எதிரே இருக்கும் ஏழாம் இடத்தையும் தாண்டி முன்பின் ஆறு, எட்டாமிடங்களைப் பார்ப்பார் என்பதுதான்.  

இதனை பௌர்ணமிக்கு அருகில் வரும்போது மட்டும் அவரது ஒளி  அளவுகளைப் பொருத்து சந்திரனுக்கும்  மூன்று பார்வைகள் இருக்கின்றன என்றே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  அதேநேரத்தில் குரு, சனி, செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு இருக்கின்ற மூன்று பார்வைகளைப் போல இதனை நாம் நிலையாக எடுத்துக்கொள்ளக் கூடாது.  

ஏனென்றால் மற்ற மூன்று கிரகங்களும் நிலையான ஒரு அமைப்பில், சரியான தூரத்தில், சரியான அளவில் சூரியனை சுற்றி வருகின்றன. அவைகள் பூமியை கடக்கும் நிலையும் என்றென்றும் மாறாதது.

ஆனால் சந்திரனின் நிலை அப்படி அல்ல. நிலவு மாதமொருமுறை வளர்ந்து தேய்கிறது. அதனால்தான் அதனுடைய பௌர்ணமி நிலையை பொருத்து சந்திர அதி யோகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒளி அளவினை ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஏற்றவாறு மிக நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சில நிலைகளை நிரந்தர விதிகளாக சொல்லாமல் விட்டிருக்கிறார்கள் ஜோதிடத்தை நமக்கு அருளியவர்கள். இதில் சில விஷயங்கள் அவரவரின் ஞானத்திற்கு ஏற்ப ஒதுக்கப்பட்டவை. சுபத்துவ-சூட்சும வலு கோட்பாடும் அப்படித்தான். புரியவரும் போதே தெளிவு வரும்.

அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

மாலைமலரில் 18.09.2020 இன்று வெளிவந்தது .

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.