ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
அரச ஜாதகத்தின் முதல் யோகமான லக்ன மற்றும் லக்னாதிபதி வலு யோகத்தை சென்ற அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்து விட்ட நிலையில் மீதமுள்ள சிறப்பு யோகங்களைப் பற்றிய விளக்கங்களை இப்போது பார்க்கலாம்.
அடுத்ததாக,
அரச ஜாதகம்
தர்ம கர்மாதிபதி யோகம்
அடிக்கடி நான் வலியுறுத்திச் சொல்லும் தர்ம கர்மாதிபதி யோகம் இந்த அரசனின் ஜாதகத்தில் முதல்தர வலிமை நிலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கே தர்ம கர்மாதிபதிகளான குருவும், செவ்வாயும் வலிமை பெற்ற நிலையில் தங்களது வீடுகளையும் பார்த்து, லக்னத்தையும் பார்ப்பது மிகவும் விசேஷமானது. அதிலும் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் கேந்திர வீட்டிலும், இயற்கைச் சுபரான குரு திரிகோணத்திலும் இருப்பது இன்னும் சிறந்த அமைப்பு.
அதாவது பாக்யாதிபதி குரு தனது ஒன்பதாம் வீட்டிற்கு ஒன்பதாம் இடமான ஐந்தாமிட விருச்சிகத்தில் அமர்ந்து தனது பாக்கிய ஸ்தானத்தையும் லக்னத்தையும் பார்க்கிறார்.
அதேபோல பத்துக்குடைய ஜீவனாதிபதியான செவ்வாய் தன் பத்தாம் வீட்டிற்கு பத்தாம் வீடான ஏழாமிடத்தில் உச்ச பலம் பெற்று தனது ஜீவன ஸ்தானத்தையும், லக்னத்தையும் பார்க்கிறார்.
இப்படி தர்ம கர்மாதிபதிகள் இருவரும் ஒரே நிலையில் தன் வீடுகளையும், லக்னத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பது முதல்தரமான யோக அமைப்பாகும்.
மேலும் இவரது இருபது வயதுகளில் ஆரம்பித்த குரு தசை முதல்தான் இவரது யோகங்கள் செயல்பட ஆரம்பித்தன என்பதும், தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்து, ஒவ்வொரு தெருவெங்கும் ஒலித்த, இப்போதும் ரசிக்கப்படும் இவரது எழுத்து நவீனங்கள் அப்போதுதான் வெளியாகின என்பதும் குறிப்பிடத் தக்கது.
மேலும் எழுத்தின் காரகனான புதன் இங்கே எழுத்து ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு அதிபதியாகி அந்த புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு அமர்ந்திருப்பதும் கவனிக்கத் தக்கது.
அடுத்து...
கிரகங்களின் சஷ்டாஷ்டக யோகம் மற்றும்
நண்பர்களின் பார்வை பலன் யோகம்
மேலே பார்த்த இரண்டு யோகங்களையும் விட ஒரு உன்னதமான அமைப்பாக இந்த ஜாதகத்தில் எந்த ஒரு எதிர்த்தன்மையுடைய பகைக் கிரகமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வலு இழக்கவில்லை. மாறாக நண்பர்கள் மட்டுமே சம சப்தமமாக பார்த்துக் கொள்கிறார்கள்.
அதாவது நட்புக் கிரகங்கள் ஒருவருக்கு ஒருவர் கேந்திர கோணங்களிலும், பகைக் கிரகங்கள் சஷ்டாஷ்டக நிலையிலும் உள்ளன.
இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் நண்பர்களான சுக்கிரன், சனி, புதன் மூவரும் தங்களுக்குள் கேந்திர, திரிகோண அமைப்பிலும் குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் நால்வரும் அதேபோல் தங்களுக்குள் கேந்திர, திரிகோண அமைப்பிலும் உள்ளனர்.
என்னுடைய நீண்டகால அனுபவத்தில் நான் பார்த்த வகையில் இந்த ஒரு ஜாதகத்தில் மட்டுமே அனைத்துக் கிரகங்களும் இந்த அமைப்பில் உள்ளன. இதுவே இந்த ஜாதகத்தை மிகச் சிறந்த ‘அரச ஜாதகம்’ என்று சொல்ல வைக்கிறது.
அதாவது காலச் சக்கர அமைப்பின்படி குருவும், புதனும் நேர் எதிர் வீட்டினை உடையவர்கள். செவ்வாயும், சுக்கிரனும் நேர் எதிர் வீட்டினை உடையவர்கள். சனியும், சூரிய, சந்திரர்களும் நேர் எதிர் வீட்டினை உடைய எதிர்க் கிரகங்கள் ஆவார்கள்.
அதே எதிர் நிலையில் இந்த ஜாதகத்தில் புதனுக்கு எட்டாமிடத்தில் குருவும், சனிக்கு எட்டாமிடத்தில் சூரிய, சந்திரர்களும், சுக்கிரனுக்கு எட்டாமிடத்தில் செவ்வாயும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அமைப்பால் நண்பர்கள் மட்டுமே ஒருவரை ஒருவர் பார்த்து தங்களைப் பலப்படுத்திக் கொள்கிறார்கள். எதிரிகள் மற்றவரைப் பார்த்து பலவீனப்பட்டுக் கொள்ளவில்லை. எனவே எந்த ஒரு கிரகமுமே இந்த ஜாதகத்தில் பார்வைகளால் பலவீனம் அடையவில்லை.
(செவ்வாய் தனது நான்காம் பார்வையால் புதனைப் பார்க்கிறார். செவ்வாயும் புதனும் சமக் கிரகங்கள்தான். மேலும் செவ்வாயின் வீட்டில்தான் புதன் இருக்கிறார் எனும் நிலையில் இது வலுக் குறைவு அல்ல.)
அதே நேரத்தில் புதன், சனி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து வலுவூட்டிக் கொள்கிறார்கள். குரு லக்னாதிபதியான சந்திரனையும், சூரியனையும் பார்த்து வலுப்படுத்துகிறார். பதிலுக்கு சூரிய, சந்திர பார்வைகளால் குரு இன்னும் பொலிவு பெறுகிறார்.
இன்னும் ஒரு சிறப்பாக எதிர்க் கிரகங்களின் சஷ்டாஷ்டக நிலையில் செவ்வாய்க்கு எட்டில் சுக்கிரன் இருந்திருந்தால் செவ்வாயின் எட்டாம் பார்வை சுக்கிரனுக்கு விழுந்து சுக்கிரன் வலிமை இழந்திருக்கக் கூடும்.
ஆனால் இந்த அரச ஜாதகத்தில் செவ்வாய்க்கு ஆறில் சுக்கிரனும், சுக்கிரனுக்கு எட்டில் செவ்வாயும் அமர்ந்து அந்த பலவீனம் கூட இல்லாமல் இந்த அரசனை பரம்பொருள் முழுயோகத்துடன் படைத்த விந்தையை என்னவென்று சொல்வது....?
அடுத்து...
கஜகேசரி யோகம்
பொதுவாக நமது மூலநூல்கள் இந்த யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என்று குறிப்பிடுகின்றன.
எப்பொழுதுமே நமது கிரந்தங்கள் உண்மையை மறைபொருளாகத்தான் குறிப்பிடும் என்பதை அடிக்கடி சொல்லி வருகிறேன். ஏனெனில் சூட்சும விஷயங்களை நாம் புரிந்து கொள்ளும் தகுதி நிலை வரும் போதுதான் சில உண்மைகள் ‘பளிச்’ என்று கண்களைத் திறந்து விட்டது போல புரியும். அதுவரை மேம்போக்காகத்தான் இருப்போம். சூட்சும விஷயங்கள் பிடிபடாது.
அந்த வகையில் கஜகேசரி யோகம் இருப்பவர் எதிரிகளை ஜெயிப்பார் என்றால் அவருக்கு எதிரிகள் இருப்பார்கள் என்பதே அதில் உள்ள சூட்சுமம்.
அதிலும் கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல எனும் போது இவரின் எதிரிகளும் இவருக்குச் சமமாக மிகவும் வலிமை வாய்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று அர்த்தம்.
இன்னொரு வகையில் சொல்லப் போனால் இவரே தன் செயல்களால் எதிரிகளை உருவாக்கிக் கொண்டு பிறகு அவர்களை ஜெயிப்பார் என்று அர்த்தம்.
எனவே இந்த யோகத்தின் வாயிலாக இவருக்கு ஏற்பட்ட எதிரிகளை நான் விவரிக்கத் தேவை இல்லை.
அடுத்ததாக.
பங்கமான சச யோகம்
ஏற்கனவே எந்த ஒரு யோக ஜாதகத்திலும் சச யோக அமைப்பு இருக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். மேலும் சச யோகம் என்பது அதிர்ஷ்டம் தரும் நிலை அல்ல எனவும் சொல்லி இருக்கிறேன்.
அதன்படி இந்த பரிபூரண ராஜயோக ஜாதகத்தில் சனி உச்சம் பெற்ற நிலையில் வக்ரம் அடைந்து முற்றிலும் நீச நிலை பெற்று சச யோக பங்க நிலையைப் பெற்றுள்ளது மிகவும் அற்புதமான அமைப்பு.
சனி உடல் உழைப்பிற்கும், தரித்திரம், கடன், நோய், உடல்ஊனம், அதிர்ஷ்டமின்மை போன்றவற்றிற்கும் காரணமானவர் என்பதால் ஒரு ஜாதகத்தில் சனி நேர்வலிமை இழந்தால்தான் அந்த மனிதர் உடல் உழைப்பின்றி சொகுசு வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும், கடன் தரித்திரம் இல்லாத நிலையையும் அடைய முடியும் என்ற எனது சூட்சும வலு தியரிப்படி இந்த ஜாதகத்தில் சனி முற்றிலும் நேர்வலு இழந்திருப்பது கவனிக்கத்தக்கது.
சனி அஷ்டமாதிபத்தியம் பெற்றதால் சனி தசையின் பிற்பகுதி ஒன்பதரை வருடங்களும் இந்த ஜாதகரால் தொடந்து பத்து வருடங்கள் அரசனாக முடியவில்லை.
மீதியுள்ள யோக விளக்கங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.....
(ஏப் 18-24,2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whats app ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.