ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
ஆ. தண்டாயுதபாணி, புதுவை.
கேள்வி:
எம்சிஏ முடித்து சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்கிறேன். பெற்றோர் எனது திருமணத்திற்காக ஐந்து வருடமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண் வீட்டாரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆயில்ய நட்சத்திரம் என்பதால் பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள் என்பது மறைமுகமாக தெரியவருகிறது. கார்த்திகை மாதம் பிறந்ததாலும், பிரதோஷ நேரத்தில் பிறந்ததாலும், குருபார்வை இருப்பதாலும் செவ்வாய் தோஷமும் மற்ற தோஷமும் இல்லை என்று ஒரு ஜோதிடர் கூறுகிறார். மற்றவர்கள் செவ்வாய் தோஷம் மட்டும் இருக்கிறது, இன்னும் சிலர் செவ்வாய் தோஷம், நாகதோஷம் இரண்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். திருமணம் தள்ளிப் போவதற்கு இந்த தோஷங்கள்தான் காரணமா? எல்லா கோவில்களுக்கும் சென்று பரிகாரம் செய்து வந்துவிட்டோம். ஆனால் திருமணம் கைகூடவில்லை. தாங்கள்தான் திருமணம் ஏன் தள்ளிப் போகிறது, எப்போது நடக்கும் என்று சொல்ல வேண்டும். கடந்த வருடம் ஜனவரி மாதம் என் தந்தை மரணமடைந்தார். அவருக்கும் ஓரளவு ஜோதிடம் தெரியும். கணவருடைய ஆயுள் பலவீனமாக இருக்கும் நிலையில், மனைவியின் மாங்கல்ய ஸ்தானம் வலுவாக இருந்தால் கணவன் ஆயுள் காப்பாற்றப்படுமா? என் அம்மாவின் ஜாதகத்தில் கணவரை இழக்கும் அமைப்பு, என் தம்பி மற்றும் என்னுடைய ஜாதகத்தில் தந்தையை இழக்கக்கூடிய நிலைமை இருந்ததா? நல்வழி காட்டுங்கள் குருஜி.
பதில்:
(மேஷ லக்கினம், கடக ராசி, 3ல் குரு, 4ல் சந், கேது, 7ல் செவ், 8ல் சூரி, புத, 9ல் சுக், சனி, 10ல் ராகு, 19-11-1989 மாலை 4-35 நிமிடம் புதுவை)
திருமண தோஷம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி பதில் கேட்டிருக்கிறீர்கள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாலைமலரில் இவற்றை எழுதி எழுதி சலித்து விட்டேன். ஆயில்ய நட்சத்திரம் திருமணத்திற்கு ஆகாது, மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு மாமியார், மாமனார் இருக்கக்கூடாது, பூராடம் கழுத்தில் நூலாடாது போன்ற அத்தனை பழமொழிகளும் ஜோதிடக் குப்பைகள். உலகம் உள்ளவரை நிலைத்திருக்க கூடிய இந்த மாபெரும் ஜோதிட சாஸ்திரம், ஒரே ஒரு வரியில் முடிந்து விடாது. நினைக்கவும் கடினமான பலவிதமான காம்பினேஷன் அடங்கியது ஜோதிடம்.
ஒரு ஜாதகம் என்பது பலவிதமான கிரக தொடர்புகளையும், நட்சத்திர, ராசி தொடர்புகளையும், ஆதிபத்திய, காரகத்துவ விஷயங்களையும் உள்ளடக்கியது. இங்கே ஆயில்ய நட்சத்திரக்காரனுக்கு பெண் கொடுக்காதே, மூல நட்சத்திரக்காரன் மாமனார் மாமியாரை சாப்பிட்டு விடுவான், பூராடம் நட்சத்திரக்காரி வந்தவுடன் கணவனைக் கொன்று விடுவாள் என்பது போன்ற பொது பலன்கள் அரைகுறை ஜோதிடர்களால் உருவாக்கப்பட்டவையே தவிர, ஜோதிடத்தை அருளிய மாபெரும் மேதைகள் இவற்றைச் சொல்லவில்லை.
கடந்த சில பத்தாண்டுகளாக தமிழக ஜோதிடர்கள் ஏழில் செவ்வாய் இருந்தால் அதேபோன்ற செவ்வாய், ஏழில் ராகு இருந்தால் அதேபோன்று ராகு, இரண்டில் சனி இருந்தால் அதே போன்ற சனி போன்ற விஷயங்களைச் சொல்லி வருகிறார்கள். ஜோதிடர்கள் அனைவரும் ஒன்று இரண்டு எனக் கூட்டும் கணக்கு வாத்தியார்களாக மாறி வருகிறார்களே தவிர, நுட்பமாக கணிதம் செய்து, ஜாதகத்தில் உள்ள நிறை குறைகளை கணக்கிட்டு, இரு ஜாதகங்களை இணைக்கும் ஜோதிடர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். சென்ற தலைமுறை ஜோதிடர்கள் இதுபோன்ற செவ்வாய் தோஷம் நாகதோஷம் என்றெல்லாம் சொல்லி மக்களை குழப்பவில்லை.
உங்களுடைய ஜாதகத்தின் படி. லக்னத்திற்கு ஏழில் செவ்வாய், ராசிக்கு ஏழில் ராகு என்ற நிலை இருப்பதாலும், புத்திர ஸ்தானாதிபதியான சூரியன் எட்டில் மறைந்து, புத்திரகாரகன் குரு மூன்றில் மறைந்த நிலையில் சனியின் பார்வை பெற்று, ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்து வலிமை இழந்திருப்பதாலும்தான் திருமணம் தள்ளிப் போகிறது. தாம்பத்திய சுகத்தை கொடுக்க கூடிய சுக்கிரன், ராசியில் சனியுடன் இணைந்து, குருவின் பார்வை பெற்று, அம்சத்தில் நீச்சமாகி சனி, ராகுவோடு சேர்ந்து கடுமையான பாபத்துவமாகி இருப்பது குற்றம்.
சுக்கிரன் வலுவிழந்தால் தாமத திருமணம் நடக்கும் என்பது ஒரு நிச்சய விதி. குரு, சுக்கிரன் நேருக்கு நேர் பார்வையும் இருப்பது நல்லதல்ல. உங்களுடைய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நேர் எதிராக 3 டிகிரிக்குள் பார்த்துக் கொள்கிறார்கள். இது தாம்பத்திய சுகத்திற்கும், புத்திர சுகத்திற்கும் தடை தரும் அமைப்பு. இந்த அமைப்பால் உங்களுக்கு திருமணம் இன்னும் தாமதமாகும்.
தற்போது உங்களுக்கு சுக்கிர தசையில், புதன் புக்தி நடந்துகொண்டிருக்கிறது. மேஷ லக்னத்திற்கு புதன் நன்மைகளைத் தர மாட்டார். அதிலும் உங்கள் ஜாதகத்தில் ஆறுக்குடைய புதன் எட்டில் அமர்ந்து கடுமையான நிலையில் இருக்கிறார். அவருக்கு எவ்வித சுபர் சம்பந்தமும் சேர்க்கையும் இல்லை. அம்சத்தில் அவர் உச்சமாகி, நீச்ச சுக்கிரன், சனி, ராகுவுடன் இணைந்திருப்பதும் நல்லதல்ல. இந்த அமைப்பால் வரும் இரண்டு வருடங்களுக்குள் புதன் உங்களுக்கு திருமணத்தை கொடுத்தார் எனில், கடக ராசிக்கு வரும் அஷ்டமச் சனியில் மனைவியை பிரிப்பார்.
அனைத்து நிலைகளிலும் நல்லவைகள் நடந்து திருமணத்தில் மட்டும் தாமதம் ஏற்படும் ஜாதகம் உங்களுடையது. 7-11-ஆம் இடங்கள் சுபத்துவம் அடைந்திருந்தாலும், ஏழாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து, ஏழாம் அதிபதி சனியுடன் சேர்ந்து வலுவிழந்த நிலையில், பதினொன்றாம் அதிபதி சனி, குருவின் பார்வை, சுக்கிரன் சேர்க்கையால் சுபத்துவமாகி, பதினொன்றாம் இடம் அதிக வலுவுடன் இருப்பதால் உங்களுக்கு திருமண குறை இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு திருமணம் நடப்பது நல்லது. புதன் புக்தியில் திருமணம் செய்ய வேண்டாம்.
உங்களுடைய சுக்கிர தசை சனி புக்தியில் தந்தை மரணம் அடைந்திருக்கிறார். ஒன்பதாம் இடத்தில் பாப கிரகமான சனி அமர்ந்து, ஒன்பதாம் அதிபதி ராகுவின் சாரத்தில் உள்ள நிலையில், மாரகாதிபதி சுக்கிரனும் பாதகாதிபதியான சனியும் இணைந்த நிலையில் சனி புக்தியில் தந்தைக்கு மரணம் நடந்ததில் வியப்பில்லை. சனியின் பார்வை பெற்று ராகுவின் சாரத்தில் அமர்ந்துள்ள குருவின் ஒன்பதாமிட பார்வைக்கும் வலுவில்லை.
ஒருவரின் மரணம் என்பது அவரது குடும்பத்தாரின் அத்தனை ஜாதகங்களிலும் துல்லியமாக பதியப்பட்டிருக்கும். கணவனை இழக்கும் அமைப்பு, தந்தையை இழக்கும் அமைப்பு, சகோதரனை இழக்கும் அமைப்பு என்பது குடும்ப உறுப்பினர்களின் ஜாதகங்களில் நிச்சயமாக இருந்தே தீரும்.
கணவனின் ஆயுள் பலவீனமாக இருந்தால், மனைவியின் மாங்கல்ய ஸ்தானம் வலுவாக இருக்கும் நிலையில் அவர் காப்பாற்ற மாட்டாரா என்று கேட்டிருக்கிறீர்கள். இதுபோன்ற நிகழ்வுக்கு வாய்ப்பே இல்லை. இளம் வயதில் விதவையாக வேண்டும் என்கின்ற நிலை ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டுமானால், அவருக்கு அற்பாயுள் கணவர்தான் அமைவார். இதுவே விதி. இதில் மாற்றம் இருக்காது.
உங்கள் திருமண விஷயத்தில் 2023 ல்ஆரம்பிக்கும் சூரிய தசையில் தான் நீங்கள் தந்தையாகும் அமைப்பு இருப்பதால், உங்களுக்கு தாமதமாக திருமணம் நடக்கும். இதைத் தவிர்த்து மற்ற அனைத்து அமைப்புகளும் உங்களுக்கு நன்றாகவே இருப்பதால், எதிர்கால வாழ்க்கை உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
(18.02.2020 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
குருஜி அவர்கள் முகநூல்-யூடியூபில் பதில் தருவதில்லை.அவரது பதில்களுக்கு ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி பதில்கள் "மாலைமலர் நாளிதழ்" சென்னை - 600008 என்ற முகவரிக்கு கடிதம் அனுப்பவும்.