adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
மேஷம் , ரிஷபம், கடகத்திற்கு செவ்வாயின் பலன்கள்…!(B-014)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி எண் : 8681 99 8888

ருசக யோகம்

மேஷம்:

மேஷத்திற்கு செவ்வாய் லக்னத்திற்கும் எட்டாமிடத்திற்கும் உரியவராகி ஒன்றில் ஆட்சியும், பத்தாமிடத்தில் உச்சமும் பெற்று இரு நிலைகளில் ருசக யோகம் தருவார். லக்னத்தில் ஆட்சி பெறும் போது நான்கு, ஏழு, மற்றும் எட்டாமிடங்களைத் தன் சிறப்புப் பார்வைகளால் பார்வையிடுவார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பதால் ஜாதகர் முன்கோபம் உள்ளவராக இருப்பார். பாபக் கிரகங்கள் லக்னாதிபதியாக வரும் நிலையில் கண்டிப்பாக நேரிடையாக வலுப் பெறக் கூடாது. சூட்சும வலு தான் பெறவேண்டும். நேரிடையாக வலுப் பெற்றால் ஜாதகர் கொடுமைக்காரராக இருப்பார். சில நிலைகளில் ‘சேடிஸ்ட்’ ஆகவும் இருக்கக் கூடும்.

இங்கிருக்கும் செவ்வாய் சுப கிரகங்களின் சம்பந்தம் பெற்றால் இந்த பலன் மாறி நன்மைகள் நடக்கும். பாபக் கிரகங்களின் தொடர்போ, பார்வையோ ஏற்பட்டால் சொல்லவே வேண்டியதில்லை. ஜாதகர் குரூர புத்திக்காரராகவும், கொடுமைக் காரராகவும் இருப்பார்.

லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலே சுப பலன் என்று சொல்லி விடமுடியாது. லக்ன கிரகத்தின் குணங்கள் என்ன என்பதைப் பார்த்தே அவர் எப்படிப்பட்டவர், என்ன செய்வார் என்பதைக் கணிக்க முடியும்.

லக்னத்தில் சுப வலுவுடன் இருக்கும் செவ்வாய் நல்ல ஆரோக்கியம், கட்டான உடல், உடற்பயிற்சி செய்யும் ஆர்வம், உடலைப் பேணுதல் ஆகியவற்றை ஜாதகருக்குத் தருவார். பொதுவாகவே செவ்வாய் லக்னம் அல்லது லக்னாதிபதியோடு தொடர்பு கொண்டு அவரது தசை நடந்தாலே எல்லோருக்கும் உடலைப் பாதுகாக்கும் ஆர்வம் வரும்.

நான்கு மற்றும் ஏழாமிடங்களை செவ்வாய் பார்க்கும் நிலையில் என்னதான் அவர் லக்னாதிபதி என்றாலும் அஷ்டமாதிபதியும் அவர்தான் என்பதால் முழுக்க சுப பலன் சொல்வதற்கில்லை.

எட்டில் இருக்கும் செவ்வாய் சுபத்துவம் பெறாமலிருந்தால் தனது தசையின் ஒரு பகுதியில் கடன், நோய், விபத்து, அசிங்கம், கேவலம், வெட்டு குத்து, கோர்ட் கேஸ் போன்றவற்றையும் தருவார்.

மேஷத்திற்கு இன்னொரு நிலையாக அவர் பத்தாமிடமான மகரத்தில் உச்சம் பெறுவார். ஒரு ஜோதிட விசித்திரமாக சனியின் வீட்டில் செவ்வாய் உச்சம் பெறும் நிலையில் செவ்வாயின் வீட்டில் சனி நீசம் பெறுவார். லக்ன, அஷ்டமாதிபதியாகி பத்தாமிடத்தில் உச்சமும், திக்பலமுமாக செவ்வாய் இரட்டிப்பு பலம் பெறுவது தசம அங்காரா எனும் நிலையையும் மீறி நிச்சயமாக சரியான நிலையே அல்ல.

பாபக் கிரகங்கள் லக்னாதிபதியே ஆனாலும் மறைவிடங்களைத் தவிர்த்து கேந்திர, திரிகோணங்களில் உச்சம் பெற்று வலிமை அடைவது சரியல்ல.

இங்கிருந்து தனது நான்காம் பார்வையால் செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகரிடம் மென்மையான, அதே நேரத்தில் மேன்மையான குணங்களும் இருக்காது. ஜாதகர் கடினமான மனப்போக்குடன் முன்கோபக்காரராகவும் இருப்பார்.

லக்னாதிபதி உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பது என்பது இரு கிரகங்களால்தான் முடியும். ஒன்று குரு மீனத்திற்கு ஐந்தான கடகத்தில் உச்சம் பெற்று லக்னத்தைப் பார்ப்பார். அவர் இயற்கைச் சுபர் என்பதால் அவரது பார்வையால் எல்லா நன்மைகளும் ஜாதகருக்கு உண்டு. இன்னொருவர் செவ்வாய். இவர் இயற்கைப் பாபி என்பதால் செவ்வாயின் லக்ன பார்வைக்கு குண விசேஷம் இருக்காது.

அதேநேரத்தில் இங்கிருந்து நான்கு, ஐந்தாமிடங்களையும் பார்வையிடுவார் என்பதால் ஒருபுறம் லக்னாதிபதியின் பார்வை என்றாலும் அவர் அஷ்டமாதிபதியும் ஆவார் என்பதால் மற்ற சுபக் கிரகங்களின் சம்பந்தமும் பார்வையும் இல்லாவிட்டால் அந்த இடங்களும் நற்பலன் அளிக்காது.

பத்தாமிடத்தில் சூட்சும வலுப் பெறாமல் பாபர்களுடன் இணையும் செவ்வாய் அரிவாளைக் காட்டி வழிப்பறி செய்யும் கொள்ளைக்காரர்களை உருவாக்குவார். சிறிது சுபத்துவம் பெற்றால் நாகரிகமாக மிரட்டி லஞ்சம் பெறும் துறைகளில் ஜாதகரை இருக்க வைத்தும், கட்டைப் பஞ்சாயத்து செய்வது போன்ற சட்டத்திற்கு புறம்பான வழிகளிலும் பொருள் தேட வைப்பார். ரியல் எஸ்டேட், கட்டிடம் கட்டுதல், மருத்துவம், விளையாட்டு, இன்ஜினியரிங், நெருப்பு போன்ற துறைகளில் ஜாதகரின் வருமானம் இருக்கும்.

ரிஷபம்:

ரிஷப லக்னத்திற்கு செவ்வாய் ஏழாமிடத்திற்கு அதிபதியாகி விருச்சிகத்தில் ஆட்சி பெற்று செவ்வாய் தோஷம் எனப் பெயர் பெறுவார். இங்கு ஆட்சி பெறும் செவ்வாய் ஜீவன ஸ்தானமான பத்தாமிடம், லக்னம், மற்றும் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு அந்த இடங்களை பலவீனமாக்குவார்.

தனது மூலத் திரிகோண வீட்டில் ஆட்சி பெற்று தனது இன்னொரு வீட்டைப் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டும்தான் என்பதைப் போல, தனது விருச்சிக வீட்டில் அமர்ந்து தன் சிறப்புப் பார்வைகளால் தன் மூன்று எதிரிகளின் வீட்டையும் ஒரே நேரத்தில் பார்த்துக் கெடுக்கும் (சனியின் கும்பம், சுக்கிரனின் ரிஷபம், புதனின் மிதுனம்) ஒரே கிரகமும் செவ்வாய்தான் .

செவ்வாய் சூட்சும வலுப் பெறாத நிலையில் அவரது தசை நடக்குமானால் மேற் சொன்ன மூன்று பாவங்களையும் அவரது தசையில் நிச்சயம் கெடுப்பார்.

லக்னத்தை செவ்வாய் வலுப் பெற்றுப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கோபக்காரராகவும், செலவாளியாகவும் இருப்பார். செவ்வாயின் தசை நடக்கும் போது முரட்டுத்தனமான சுபாவங்களும், அசட்டுத் துணிச்சலும், முன்கோபமும் இருக்கும். மற்ற கிரகங்களோடு செவ்வாய் சேர்ந்திருந்தால் அந்தக் கிரகங்களின் சுப, பாபத்துவங்களுக்கு ஏற்ப குணநலன்கள் இருக்கும்.

கடகம்:

கடகத்தின் பூரண ராஜ யோகாதிபதியான செவ்வாய் இந்த லக்னத்திற்கு பத்தாமிடமான மேஷத்தில் மூலத் திரிகோணம் மற்றும் திக்பலம் பெற்றும், ஏழாமிடத்தில் உச்சம் பெற்றும் இரண்டு இடங்களில் வலுப் பெற்று ருசக யோகம் அளிப்பார்.

இயற்கைப் பாபரான செவ்வாய் திரிகோணங்களுக்கு அதிபதியாக வரக் கூடாது என்ற எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலு தியரி” ப்படி அவர் திரிகோணாதிபத்தியம் பெறும் ஐந்தாமிடமான விருச்சிகத்திற்கு ஆறில் மறைந்து பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவது சிறப்பான நிலை. மேலும் இது தசம அங்காரா எனும் தொழிலுக்கு மேன்மை தரும் அமைப்பாகும்.

இங்கிருக்கும் செவ்வாய் லக்னம், நான்கு ஐந்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஆகவே இந்த இடங்கள் வலுப்பெறும். செவ்வாய் ஏன் தனது ஐந்தாமிடத்திற்கு ஆறில் மறைந்து பத்தாமிடத்தில் அமருவது நல்ல நிலை என்பதைப் பற்றி “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன்.

தான் திரிகோணாதிபத்தியம் பெற்ற தோஷம் நீங்க, தனது திரிகோண வீட்டிற்கு ஆறில் மறைந்து, பத்தில் ஆட்சி பெற்று அங்கிருந்து தனது ஐந்தாம் வீட்டையும் செவ்வாய் பார்ப்பது சிறப்பான நிலை.

தன் வீட்டில் ஆட்சி பெற்ற நிலையில், தனது இன்னொரு வீட்டையும் பார்க்கும் ஒரே கிரகம் செவ்வாய் மட்டுமே. மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது வீட்டைப் பார்க்கும் கிரகம் அந்த பாவத்தை வலுப்படுத்தும் என்பதால் செவ்வாயின் இரண்டு வீடுகளும் இதனால் பலம் பெறும்.

இங்கிருக்கும் செவ்வாய் லக்ன சுபர்களான சூரிய, சந்திர, குருவுடன் தொடர்போ, இணைவோ பெறும் நிலையில் தனித்திருப்பதை விட நல்ல பலன்கள் இடைக்கும். இந்த அமைப்பால் செவ்வாய் தசையின் ஏழு வருடங்களும் தனது காரகத்துவங்களில் தொழிலில் நல்லவைகளை செவ்வாய் தருவார். ருசக யோகத்தின் ஆரம்பத்தில் சொன்ன இனங்களின் வழியாக ஜாதகருக்கு வருமானம் வரும்.

பத்தில் எதிர்த் தன்மையுடைய கிரகங்களுடனோ ராகு, கேதுக்களுடனோ தொடர்பு கொண்டிருந்தால் நேர்மையற்ற வழிகளில் ஜாதகருக்குப் பணம் வரும். தனித்திருந்து செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் முன் கோபக்காரராக, அசட்டுத் துணிச்சல்காரராக இருந்து, முன் யோசனையின்றி ஏதேனும் காரியம் செய்து அதனால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார்.

இங்கே அசுவினி, பரணி நட்சத்திரங்களில் இருப்பதை விட கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் செவ்வாய் இருப்பது சிறப்பானது.

கடகத்திற்கு இன்னொரு நிலையாக ஏழாமிடத்தில் உச்சம் பெறும் செவ்வாயினால் குடும்ப விஷயத்தில் நன்மைகள் இருக்காது. முதலில் ஏழாமிடத்தில் உச்ச பலம் பெறும் செவ்வாய் என்னதான் லக்ன யோகராக இருந்தாலும் களத்திர பாவத்தைக் கெடுப்பார். ஒரு இயற்கைப் பாப கிரகமான செவ்வாய் நம் வாழ்விற்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான வாழ்க்கைத் துணையைப் பற்றிய பாவத்தில் அதி பலம் பெறுவது நல்ல நிலையே அல்ல.

இங்கிருக்கும் செவ்வாய் இரு தார நிலையை ஏற்படுத்துவார். ஜாதகர் ஏக பத்தினி விரதனாக இருக்க முடியாது. ஏகப்பட்ட பத்தினிகளின் தலைவனாக இருக்க முடியும்.

செவ்வாய் சூட்சும வலு அல்லது சுபத்துவம் பெற்றாலொழிய ஏழாமிடம் கெடுவதைத் தவிர்க்க முடியாது. இங்கிருந்து தன் பார்வைகளால் தனது பத்தாம் வீடான மேஷத்தையும், தனது நண்பர்களின் வீடுகளான சந்திரனின் லக்னத்தையும், சூரியனின் தன ஸ்தானத்தையும் பார்வையிடுவார்.

ஒரு பாபக் கிரகம் கேந்திரத்திற்கு அதிபதியாகி, மறு கேந்திரத்தில் உச்சம் பெற்று, தன் கேந்திர வீட்டைப் பார்ப்பது பலமான நிலைதான் என்றாலும், ஜீவன ஸ்தானத்தை அவர் பார்வையிடுவதன் மூலம் அடிதடி, கட்டைப் பஞ்சாயத்து, வில்லங்கமான துறைகள், நேர்மையற்ற வழிகள் அல்லது காவல்துறை, சீருடைப்பணி, நெருப்பு. மருத்துவம், விளையாட்டு, சிகப்பு நிறம் போன்ற இனங்களில் ஈடுபடுத்தி ஜாதகரை பொருள் தேட வைப்பார்.

சூரியனும் பலம் பெற்று பத்தாமிடத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகர் உயர் அதிகாரி ஆகலாம். வேறு கிரகங்கள் செவ்வாயோடு சம்பந்தப்பட்டால் மட்டுமே இந்த நிலை மாறும்.

நான் ஏன் பாபக் கிரகங்கள் தருவது ஒரு அமைப்புத்தான் அதிர்ஷ்டங்கள் அல்ல என்று அடிக்கடி எழுதுகிறேன் என்றால், என்னதான் நீங்கள் செவ்வாயின் தயவினால் காவல்துறையில் உயர் அதிகாரியாகவோ, ராணுவத் தளபதியாகவோ ஆனாலும், குரு, சுக்கிர, புதன் போன்ற இயற்கைச் சுபர்களின் தயவினால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகும் ஒரு தலைமைச் செயலருக்கோ, உள்துறைச் செயலருக்கோ, மந்திரிக்கோ, முதல்வருக்கோ, பிரதமருக்கோ சல்யூட் அடித்துத்தான் ஆக வேண்டும்.

செவ்வாய் என்பவர் ஒரு மாளிகையை காவல் காக்கும் காவலாளியைத்தான் உருவாக்குவாரே தவிர மாளிகைக்குச் சொந்தக்காரனை அல்ல. மற்ற சுப கிரகங்களின் தயவு இருந்தால்தான் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க முடியும்.

இங்கிருந்து அதிபலம் பெறும் செவ்வாய் லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் கடுமையான முன்கோபக்காரராகவும், முரட்டு சுபாவம் உடையவராகவும் இருப்பார். யோசிக்காமல் தான் எடுக்கும் முடிவுகளால் சிக்கல்களில் மாட்டிக் கொள்வார். அசட்டுத்துணிச்சல் இருக்கும்.

வாக்கு ஸ்தானத்தையும் செவ்வாய் பார்க்கும் நிலையில் கடுமையான பேச்சுக்களும் இருக்கும். குத்தலாகவும் பேசுவார். கேலியும் கிண்டலும் கூடவே பிறந்திருக்கும். கடின மனம் ஜாதகரின் சிறப்பு.

(டிச 28- ஜன 2, 2012 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537