adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
புதன் தரும் பத்ர யோகம்.! (B-011)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

புதன்……….

அறிவுக்கு அரசன்……!

வித்தைகளின் தலைவன்……!!

எழுத்தை ஆளுபவன்………!!!

பஞ்ச மகா புருஷ யோகங்களைத் தரும் கிரகங்களில் சுக்கிரன் மட்டுமே அனைத்து லக்னங்களுக்கும் யோகம் தருவார் என்பதையும், அது ஏன் என்பதையும் சென்ற வாரங்களில் பார்த்தோம். அதே போல குரு, செவ்வாய், சனி, ஆகியோரும் சரம், ஸ்திரம் ஆகிய எட்டு லக்னங்களுக்கு மட்டுமே யோகம் தருவார்கள்.

ஆனால் புதன் மட்டும் அரிதிலும் அரிதாக வெறும் நான்கு லக்னங்களுக்கு மட்டுமே, அதாவது உபய லக்னங்களுக்கு மட்டுமே பத்ர யோகத்தை அளிப்பார். இது ஒன்றே நவ கிரகங்களில் இவரது பெருமையையும் மனித வாழ்வில் அறிவின் அத்தியாவசியத்தையும் காட்டும்.

படைப்புக் கடமைக்காக அனைவருக்கும் காமம் தரப்படுகின்ற நிலையில் அறிவு மட்டும் பூர்வ ஜென்ம கர்ம வினையைப் பொருத்து சிலருக்கு மட்டுமே தரப்படுகிறது. நம்மில் சிலர் மட்டுமே அறிவாளிகளாக இருப்பதன் காரணம் இதுவே.

அறிவு ஓங்கி நிற்கும் நிலையில் அங்கே அற்ப சுகங்களுக்கு இடமில்லை என்பதைக் காட்டவே அறிவுக்குக் காரகனான புதன் உச்சம் பெறும் கன்னி ராசியில் சிற்றின்ப காரகன் சுக்கிரன் நீசமாகி வலு இழக்கிறார்.

புத்தி மழுங்கடிக்கப்பட்டு சிற்றின்ப சுகம் ஓங்கி நிற்கும் நிலையில் அறிவுக்கு அங்கே இடமில்லை… அங்கே அறிவு வேலை செய்யாது என்பதைக் குறிக்கவே கால புருஷனின் படுக்கையறை எனப்படும் அயன, சயன, போக ஸ்தானமான மீனத்தில் போகக் காரகன் சுக்கிரன் உச்சமாகும் நிலையில் புத்திக் காரகன் புதன் நீசமடைகிறார்.

இதுவே புதனின் உச்ச நீசத் தத்துவம்….!

நவ கிரகங்களில் தன் சொந்த வீட்டில் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் என்ற மூன்று நிலைகளை ஒருசேரப் பெறுவதும், நீசமடையும் பொழுதும் தன் சுய நட்சத்திரத்தில் வலுப் பெறுவதும் புதன் ஒருவர் மட்டுமே.

மற்ற இரு ஆதிபத்தியக் கிரகங்கள் அனைவரும் இரண்டு இடங்களில் ஆட்சி, ஒரு இடத்தில் உச்சம் என மூன்று இடங்களில் பலம் பெறும் நிலையில் இரண்டு இடங்களில் மட்டுமே புதன் வலுப் பெறுவதால்தான் அவர் உபய லக்னங்களுக்கு மட்டும் பத்ர யோகம் அளிக்கும் நிலைக்கு உள்ளாகிறார்.

(மேலைநாட்டு ஜோதிடம் புதன் கும்பத்தில் உச்சம் என கூறுகிறது. ஆனால் அது சரியாக வரவில்லை. நம் இந்திய நிராயன முறையே சரியானது ஆகும்.)

புதன் ஒருவர் மட்டும் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் போதும். ஜாதகர் எந்த ஒரு சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் தன் சொந்த அறிவால் தன் வாழ்க்கையை நன்கு அமைத்துக் கொண்டு முன்னேறுவார்.

புகழ் பெற்ற ஜோதிடர்கள் அனைவரும் புதனின் அருளைப் பெற்றவர்களே. புதன் கன்னியிலோ, மிதுனத்திலோ, மீனத்தில் நீச பங்கம் பெற்றோ பலமாக அமைந்த பலர் புகழ் பெற்ற ஜோதிடர்களாக இருக்கின்றனர். பெரிய வியாபாரிகள், மேடைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நடுவர்கள், நகைச்சுவை நடிகர்கள், அறிவுப் பூர்வமான விவாதம் செய்பவர்கள், கணக்குத் துறையினர் உள்ளிட்ட பலர் புதனால் உருவாக்கப் பட்டவர்கள்தான்.

சந்திர கேந்திரத்தில் நிற்கும் புதனுக்கு அதிக வலிமை உண்டு. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனும் வலுப் பெற்று அவருக்கு கேந்திரத்தில் புதனும் வலுப் பெற்றால் அவருக்கு ஜோதிடத்தில் ஆர்வம் வரும். அவர் ஜோதிடத் துறையில் இருக்க முடியும்.

சூரியனை விட்டு விலகி புதனால் அதிக தூரம் செல்ல முடியாது என்பதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் கூறுகிறார். புதன் அஸ்தங்கம் அடையும் நிலையிலும் அவரது காரகத்துவங்கள் பெரும்பாலும் பாதிப்பதில்லை. ஆயினும் ராகுவுடன் அவர் மிகவும் அருகில் நெருங்கும் சமயத்தில் அவர் வலிமை இழக்கிறார். கேந்திராதிபத்திய தோஷத்தில் இவர் குருவுக்கு அடுத்த நிலையில் தோஷத்தை ஏற்படுத்துவார்.

புதன் பத்ர யோகத்தைத் தரும் நிலையில் இருக்கும் போது செவ்வாய், சனி ஆகியோருடன் இணைவதும் அவர்களின் பார்வையைப் பெறுவதும் யோகத்தைப் பங்கப்படுத்தும். அதேபோல என்னதான் “குரு பார்க்க கோடி நன்மை” என்றாலும் சில நிலைகளில் குரு புதனைப் பார்ப்பது புதனின் தனித்துவத்தை பலவீனப்படுத்தும்.

சூரியன் உள்ளிட்ட யாருடனும் சேராத தனித்த புதன் ஒருவர் ஜாதகத்தில் வலுப் பெறும் நிலையில் அவர் குருவுக்கு நிகரான சுபர் என்று நான் சொல்லுவேன். அந் நிலையில் மிகப் பெரிய யோகங்களை அவர் செய்வார். ஆனால் கேந்திராதிபத்திய தோஷம் பெறும் நிலையில் தனித்திருந்தால் ஜாதகரை பெரும் துன்பங்களுக்கு ஆளாக்குவார்.

மேலும் கன்னி ராசியில் அவர் வக்ர நிலை அடையாமல் இருப்பதும் மிகவும் முக்கியம். உச்சத்தில் வக்ரம் பெறுவது நீச நிலை என்பதால் கன்னியில் வக்ரம் பெறும் புதனால் முழுமையான யோகத்தைத் தர இயலாது.

வலுப் பெற்ற புதன் தனது தசையில் கணிதம், திறமையான பேச்சு, வியாபாரம், உண்மை, மிகப்பெரிய புத்திசாலித்தனம், ஆராய்ச்சி, தாய்மாமன், ஜோதிடம், கல்வி, நேர்மையான தரகு, கவிதை, எழுத்து, புத்தகம், ஸ்டேஷனரி அயிட்டங்கள், பிரிண்டிங் பிரஸ், நல்ல ஆலோசனைகளைச் சொல்லுதல், உள்அலங்காரம், மற்றும்

தகவல் தொழில் நுட்பத் துறை, அஞ்சல், கணிப்பொறி, வானவியல், எந்தத் துறையிலும் நிபுணத்துவம், ஆடிட்டர், நகைச்சுவை நடிப்பு, விஞ்ஞானம், தர்க்க வாதம், நம்பிக்கையான உதவியாளர், தலைமைப் பதவி, சாதுர்யம், சூழ்நிலைக்கேற்ப மாறிக் கொள்ளுதல், பச்சைநிறப் பொருட்கள், சிற்பம் ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகள் ஆகியவற்றின் மூலம் நன்மைகளைச் செய்வார்.

இனி உபய லக்னங்களுக்கு புதன் தரும் பத்ர யோகப் பலன்களைப் பார்ப்போம்.

பத்ர யோகம்

மிதுனம்:

மிதுன லக்னத்திற்கு புதன் லக்னாதிபதியும் நாலுக்குடைய சுகாதிபதியும் ஆகும் நிலையில், லக்னத்தில் இருந்தால் பத்ர யோகம் முழுமையாகக் கிடைக்கும். லக்னத்தில் புதன் திக்பலமும் பெறுவார் என்பதால் இங்கிருக்கும் புதனால் ஜாதகர் நல்ல உடலமைப்பு, கிரகிக்கும் திறன் நல்ல பேச்சு ஆரோக்கியம், நேர்மையான குணங்கள், பிறவியிலேயே ஜீனியஸ்தனம், நீண்ட ஆயுள், கணிதத் திறன் நல்ல கல்வி, ஜோதிட ஆர்வம் ஆகியவற்றைப் பெற்றிருப்பார்.

இங்கிருந்து ஏழாமிடத்தைப் பார்ப்பார் என்பதால் மாமன் வழிமுறையில் வாழ்க்கைத் துணை அமையும் வாய்ப்பு இருக்கிறது. நல்ல நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் ஆகியோரும் புதனால் கிடைப்பார்கள்.

நான்காமிடமான கன்னியில் உச்சம் பெற்று தனித்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தை வலுவாகச் செய்வார். பலன்கள் தலைகீழாக இருக்கும். உபய லக்னத்தவர்களுக்கு புதன் தனித்து கன்னியில் இருப்பது நன்மைகளைத் தராது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் வேறு பாபக் கிரகங்கள் ஏதேனும் அவரைப் பார்வையிட்டால் அவரது தோஷம் குறையும்.

சுக்கிரனுடன் இங்கு புதன் இணைவதும் நல்லதல்ல. ஒரு நீசனுடன் இணையும் உச்ச கிரகம் நீசனை புனிதப்படுத்தி தனது வலுவைக் குறைத்துக் கொள்ளும். கேந்திராதிபத்திய தோஷம் இல்லாத புதன் இங்கிருந்து பத்தாமிடமான மீனத்தைப் பார்ப்பார் என்பதால் தனது தசையில் தன் காரகத்துவங்கள் ஏதேனும் ஒன்றில் ஜாதகரை வழிநடத்தி வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்.

கன்னிப் புதன் ஜாதகர் இருக்கும் துறையில் அவரை மிகப்பெரும் புத்திசாலியாக்கி நிபுணத்துவம் பெற வைப்பார். இந்த லக்னத்தின் ஜீவனாதிபதி குரு, புதனை விட வலிமை குறைந்து இருந்தால் கணிதம், நிர்வாகம், வியாபாரம் ஆகிய துறைகளில் ஜாதகர் இருப்பார்.

என்னுடைய அனுபவத்தில் புதன் வலுப்பெற்ற மிதுன லக்னக்காரர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு அதிபுத்திசாலிகள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். புதனின் தசை நடைபெறும் பொழுது இவர்கள் பிரபலமாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கன்னி:

கன்னி லக்னத்திற்கு புதன் லக்னாதிபதி மற்றும் ஜீவனாதிபதி ஆவார். லக்னத்தில் இவர் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் மற்றும் திக்பலம் ஆகிய நான்கு பெரும்பலங்களை அடைவார். இந்த நால்வகை பெரும் பலங்களை பெறும் ஒரே இடத்தில் பெறும் கிரகம் புதன்தான்.

லக்னத்திலிருக்கும் புதன் நல்ல மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள், சொகுசு வாழ்க்கை, அறிவால் பிழைக்கும் தன்மை, நீடித்த ஆயுள், ஆரோக்கியம் ஆகியவற்றைத் தருவார். கணிதம் மற்றும் புள்ளி விவரத் துறை ஜாதகருக்கு கை கொடுக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, ஒழுக்கம், எதையும் சமாளிக்கும் திறமை, வாழ்க்கையில் வெற்றி, பெற்றோருக்கு நற்பெயர் ஆகியவற்றை லக்ன புதன் தருவார்.

பத்தாமிடமான மிதுனத்தில் ஆட்சி பெற்று தனித்து இருக்கும் நிலையில் கேந்திராதிபத்திய தோஷத்தை செய்வார். அவரால் கிடைக்கப் பெறும் நன்மைகள் குறையும். பாபர்கள் பார்வை தொடர்பு ஆகியவை இருப்பின் தோஷம் இருக்காது.

இங்கிருக்கும் புதனால் ஜாதகர் சிறந்த வியாபாரியாக இருக்க முடியும். கோடிக்கணக்கில் பணம் புரளும் வியாபாரத்தை ஜாதகர் மிக எளிதாகச் செய்வார். சுலபமாக பணம் சம்பாதிப்பார். பிறருக்கு ஆலோசனை சொல்லி பணம் திரட்டும் நிறுவனங்களையும் மிதுன புதனால் நடத்த முடியும். புதனின் காரகத்துவங்களின் வழியாக பெரும் பொருள் சம்பாதிக்க முடியும். கணக்கு மற்றும் கணினித் துறையில் சாதிப்பார்.

ஜாதகருக்கு சிறந்த நிர்வாக ஆற்றல் இருக்கும். அவரின் சொல்லுக்கு மற்றவர்கள் “மகுடிக்கு கட்டுண்ட நாகம் போல்” கட்டுப்படுவார்கள். இங்கிருக்கும் புதனால் நல்ல வீடு, உயர்தர வாகனம், அளவற்ற தாய்வழி நன்மை. உயர்கல்வி ஆகியவையும் கிடைக்கும். சுக்கிரனுடன் புதன் இணைந்திருந்தால் பத்ர யோகம் இன்னும் வலுவாகும். தர்ம கர்மாதிபதி யோகமும் பத்ர யோகமும் இணைந்து செயல்படும்.

தனுசு:

தனுசு லக்னத்திற்கு புதன் ஏழு, பத்துக்குடையவர் ஆவார். இதில் ஏழாமிடம் இந்த லக்னத்திற்கு பாதக ஸ்தானமுமாவதால் அவர் இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியும் ஆவார்.

ஏழாமிடமான மிதுனத்தில் புதன் எவர் தொடர்பும் இன்றி தனித்திருந்தால் பத்ர யோகமும் தந்து தனது தசையில் மண வாழ்வில் பாதகத்தையும் செய்வார். எனவே இங்கு புதன் தனித்திருப்பது சரியான நிலை அல்ல. மற்ற கிரகங்களுடன் சேர்ந்திருப்பதோ, லக்ன சுபர்களின் பார்வையில் இருப்பதோ நல்லது.

புதன் ஜீவனாதிபதியாகி, தனது பத்தாமிடத்திற்கு பத்தாமிடமான ஏழாம் கேந்திர மிதுனத்தில் இருக்கும் நிலையில் தொழில் வகையில் நிறைவைத் தந்து நல்ல லாபங்களையும் சொகுசு வாழ்க்கையையும் அளித்து தனது தசையில் மண வாழ்க்கையைக் கெடுப்பார்.

பத்தாமிடமான கன்னியில் அவர் தனித்திருப்பது கேந்திராதிபத்ய தோஷத்தை தரும். ஆனால் புதன் இங்கு சூரியனுடன் இணைந்திருந்தால் தர்ம கர்மாதிபதி யோகத்துடன் பத்ர யோகத்தையும் செய்வார்.

இங்கிருக்கும் புதன் ஜாதகரை ஸ்டேஷனரி, கணக்கு, அச்சுத் தொழில், எழுத்து, வியாபாரம், பத்திரிகை, கணினி போன்ற துறைகளில் வழி நடத்தி தனது தசையில் பணக்காரர் ஆக்குவார். என்னதான் யோகம் செய்தாலும் லக்னாதிபதி குருவுக்கு புதன் பகை எனும் நிலையில் யோகத்தில் சில நெருடல்கள் இருக்கவே செய்யும்.

மீனம்:

மீனத்திற்கு புதன் நான்கு ஏழுக்குடைய சுக, களத்திர ஸ்தானாதிபதி ஆவார். அவர் நான்காமிடமான மிதுனத்தில் ஆட்சி பெறும் நிலையில் நல்ல கல்வி, தாயார் வழி நன்மை, வீடு வாகனம், நிர்வாகப் பதவி, அறிவால் பிழைக்கும் தன்மை, புத்திசாலியாக போற்றப்படுதல் போன்ற தன் காரகத்துவங்கள் ஏதேனும் ஒன்றில் ஜாதகரை வழி நடத்தி செல்வம் தருவார். ஆயினும் இங்கு அவர் தனித்து இருப்பது கேந்திராதிபத்ய தோஷத்தைத் தரும். லக்ன சுபர்கள் தொடர்பு பெறுவது நல்லது.

நான்காமிடத்திலிருந்து புதன் பத்தாமிடத்தை பார்க்கும் நிலையில் ஜீவன ஸ்தானம் குருவின் வீடு என்பதால் சொல்லிக் கொடுக்கும் துறைகளிலும், கல்வி, ஞான அமைப்பு போன்ற குரு மற்றும் புதனின் காரகத்துவங்களில் ஜாதகரின் ஜீவனம் அமையும்.

ஏழாமிடமான கன்னி பாதக ஸ்தானம் என்பதால் இந்த லக்னத்திற்கு புதன் பாதகாதிபதியும் ஆவார். இந்த இடத்தில் புதன் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் என அதி வலுப் பெறும் நிலையில் பாதகாதிபதி வலுப் பெற்று தசை நடத்துவது பத்ர யோகம் தந்தாலும் கூடவே பாதகத்தையும் தரும். எனவே இங்கு புதன் தனித்து இருப்பது நல்லது அல்ல.

அனைத்து நன்மைகளையும் செய்யும் புதன் கூடவே பாதகத்தையும் செய்வார். புதன் தசை புக்திகளில் மண வாழ்வில் நெருடல்களும் இழப்பும் இருக்கும்.. அறிவுக் கிரகம் வலுப்பெற்று லக்னத்தைப் பார்க்கும் நிலையில் ஜாதகர் புத்திசாலியாக, எதையும் சுலபமாக கிரகித்துக் கொள்பவராக, நல்ல கல்வியறிவு கொண்டவராக இருப்பார்.

( நவ 23-29, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளி வந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்…

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537