adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பனிரெண்டு வயது காதல் நிலைக்குமா?

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

கே. தினேஷ் குமார், தேனி.

கேள்வி:

நான் ஒரு பெண்ணை சிறுவயதிலிருந்தே காதலித்து வந்தேன். 2011ல் அவள் என்னிடம் காதலைச் சொன்னாள். குடும்பச் சூழ்நிலை மற்றும் படிப்பு காரணமாக நாங்கள் சரியாக பேசிக்கொண்டது இல்லை. ஆனால் இருவரும் காதலித்து வந்தோம். நவம்பர் 2017க்குப் பிறகு கொஞ்சம் பேச ஆரம்பித்தோம். ஆனால் நான்கு மாதங்களில் 2018 மார்ச் அவளது வீட்டில் எங்கள் காதல் விஷயம் தெரிந்து அவளை எமோஷனல் பிளாக்மெயில் செய்து வைத்துள்ளனர். என்ன ஆனாலும் என்னை விட்டுப் போகமாட்டேன் என்று சொன்னவள் இப்போது என்னை மறந்துவிடு என்று சொல்லி விட்டாள். இதனால் நான் தவறான குடிப்பழக்கம் மற்றும் தற்கொலை முயற்சிக்கு ஆளாகி எனது வீட்டாரால் தடுத்து நிறுத்தப்பட்டேன். பலமுறை அவளைப் பார்க்கச் சென்றும் அவள் என்னிடம் பேசவில்லை. நானும் இனி என்னால் அவள் கஷ்டப்பட வேண்டாம் என்று மனமுடைந்து அவளுக்காக காத்திருக்கிறேன். எங்கள் வீட்டில் என் காதலுக்கு சம்மதம். ஆனால் அவர்கள் உதவத் தயாராக இல்லை. எங்கள் காதல் வெற்றியடைந்து எங்களுக்கு திருமணம் நடக்குமா? இருவர் ஜாதகத்திலும் இரண்டு தார யோகம் உள்ளது என்று ஜோதிடர் சொல்கிறார். எனது திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? ஐந்தில் புதன் வலுவாக இருந்தும் எனக்கு படிப்பு வரவில்லை. பத்தாவது முடித்து டிப்ளமோ சிவில் படித்திருக்கிறேன். ஆனால் அரியர் இருக்கிறது. இன்னும் முடிக்கவில்லை. எனது ஜாதகம் யோக ஜாதகமா அல்லது அவயோக ஜாதகமா?

பதில்:

(ஆண் 9-9-1995 இரவு 11-10 பெரியகுளம், பெண் 28-7-1999 காலை 8-55 திண்டுக்கல்)

ஏதுமறியாத 12 வயதில் ஒரு பெண் உன்னிடம் வந்து காதலைச் சொல்லி இருக்கிறாள் என்று எழுதி இருக்கிறாய். காட்சி ஊடகங்களால் பழுதுபட்டுக் கிடக்கும் இன்றைய சமுதாயத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. சினிமா மோகத்தில் தமிழகம் ஆட்பட்டுக் கிடந்த போது கூட இத்தனை சமூகச் சீரழிவுகள் இருந்ததில்லை. ஆனால் இன்றைக்கு தொலைக்காட்சி மோகம் சமூகத்தை ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்து விட்ட நிலையில் சில விஷயங்களை காதுகொடுத்து கேட்கவோ, கண்கொண்டு பார்க்கவோ, படிக்கவோ முடியவில்லை.

தினேஷ்குமார்.... 24 வயதில் உனக்கு முதலில் தேவையானது கல்வி. அதை நீ சரியாக முடித்தால்தான் உன்னுடைய எதிர்காலம் சரியாக இருக்கும். உன்னுடைய காதல் பிரச்சனையை பக்கம் பக்கமாக எழுதி இருக்கும் நீ, தற்போதய உன் மிக முக்கியத் தேவையான, இன்னும் முழுமையாக முடிக்காமல் அரியர்ஸ்  வைத்துள்ள உன்னுடைய கல்வியைப் பற்றி கடைசி இரண்டே இரண்டு வரிகளில் போனால் போகட்டும் என்று எழுதியிருக்கிறாய். இதிலிருந்தே உன்னுடைய மனம் தற்போது எதில் அதிக நாட்டத்தில் இருக்கிறது என்று ஜோதிடம் தேவையின்றியே அறிந்துகொள்ள முடிகிறது.

காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல. ஒரு முழுமையான மனிதனுக்கு எதுவும் சரியாக அந்தந்த பருவத்தில் நடக்க வேண்டும். இப்போதைய உன்னுடைய பருவத்தில் உனது கல்விதான் உனக்கு முழுமையாக இருக்க வேண்டுமே தவிர காதல் அல்ல. அந்தப் பெண்ணை எமோஷனல் பிளாக்மெயில் செய்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லும் நீ, இன்றைக்கு பெண் வீட்டார் உன்னைக் கூப்பிட்டு பெண்ணைக் கல்யாணம் செய்து தரும் தகுதியில் இருக்கிறாயா என்பதை யோசித்துப் பார்த்திருந்தால் என்னிடம் நீ இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டாய்.

லக்னாதிபதி சுக்கிரன் 4ல் திக்பலம் பெற்றாலும் சூரியனுடன் இணைந்து ஆறு டிகிரிக்குள் அஸ்தமனமாகி, சுபத்துவமற்ற சனி சுக்கிரனைப் பார்த்த ஜாதகம் உன்னுடையது. பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனின் அதியோகநிலை சுக்கிரன் மற்றும் புதனுக்கு இருப்பது மட்டுமே உன்னுடைய ஜாதகத்தில் யோக அமைப்பு. நீ குறிப்பிட்ட 2017ல் சனிதசை, குருபுக்தியில் உனக்கு தேவையற்ற சில விஷயங்கள் நடந்தன. உன் காதலும் அதில் சேர்ந்ததுதான். ரிஷப லக்னத்திற்கு குரு தரும் எதுவும் நிலைக்காது. இனி அந்தப்பெண் உன் வாழ்க்கையில் இல்லை. ஆனால் நீ இன்னும் ஒரு வருட காலத்திற்கு அந்த பெண்ணை மறக்க இயலவில்லை என்று ஊர் சுற்றிக் கொண்டிருப்பாய்.

2021 ம் வருடம் ஆரம்பித்ததும் புதன்தசை, கேது புக்தியில் உன்னுடைய வாழ்க்கையில் மாற்றம் வந்து அதன்பிறகு கல்வியில் கவனம் செலுத்தி முன்னேறுவாய். இப்போது என் வார்த்தை உனக்கு கசக்கத்தான் செய்யும். பத்து வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் என்னுடைய பதிலை நினைத்து இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறோமே என்று வெட்கப்படுவாய். உன்னுடைய ஜாதகம் யோக ஜாதகம்தான். வாழ்த்துக்கள்.

(12.11.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.