ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
டி.ஜானகிராமன், கும்பகோணம்.
கேள்வி:
உங்களது மாலைமலர் கட்டுரைகளையும், யூடியூப் வீடியோக்களை கவனித்துத்தான் எனக்கு ஜோதிட ஆர்வமே வந்தது. லக்னத்தின் அடிப்படையில்தான் குணங்களும் தொழில்களும் அமையும் என்றீர்கள். குருவின் லக்னத்தில் பிறந்த எனக்கு ஏன் குருவின் தொழில் அமையவில்லை? அதேபோல 10-மிடம் தொழில் ஸ்தானம் என்கிறீர்கள். புதனை பத்தாம் அதிபதியாகக் கொண்ட நான் ஒரு சிறிய இடத்தில், ஹோட்டல் சமையலறை அருகில் அதிகமான வெப்பத்தில் ஜெராக்ஸ் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் கடை நடத்தி வருகிறேன். இது சனியின் காரகத்துவம். இது எப்படி சாத்தியமானது என்று ஐயா அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். நடந்து கொண்டிருக்கும் சுக்கிரதசை முன்னேற்றத்தை ஏற்படுத்துமா? சுக்கிரன் சுபத்துவமாக இருக்கிறாரா? இதே தொழில்தான் வாழ்க்கை முழுவதும் இருக்குமா, வேறு தொழில் மாறுமா என்பதை அய்யாஅவர்கள் தெளிவுபடுத்த பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
(தனுசு லக்னம், துலாம் ராசி, 1ல் சுக், 2ல் புத, ராகு, 3ல் சூரி, 5ல் சனி, 8ல் கேது, 11ல் சந்,12ல் செவ், குரு, 18-2- 1971, அதிகாலை 4-10 கும்பகோணம்)
லக்னப்படி தொழில் அமையும் என்று நான் எந்த இடத்திலும் சொன்னதில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையில் ஜெயித்திருக்கும் அனைவரின் ஜாதகங்களிலும், எந்தக் கிரகம் அதிக சுபத்துவமாக இருக்கிறதோ அந்தக் கிரகத்தின் தொழில்தான் உறுதியாக அமைந்திருக்கும் என்றுதான் சொல்லியிருக்கிறேன். என்னுடைய சுபத்துவ, சூட்சும வலுக் கோட்பாட்டின்படி இது நூறு சதவிகிதம் மாறாத ஒன்று. ஜோதிட ஞானம் உங்களுக்கு இருப்பின், இதை எந்த ஒரு யோக ஜாதகத்திலும் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில் வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்ற அமைப்புள்ள ஜாதகங்களில் இது மாறும்.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். யோகங்கள் நம்முடைய வாழ்க்கை நிலையை தீர்மானிக்கவில்லை. ஜாதகம் வலுவாக இருந்தாலும் தசா, புக்தி அமைப்புகளே நமது வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன. தசா, புக்தி சாதகமாக இருக்கும் நிலையில்தான் ஒரு மனிதன் முன்னேற முடியும். அதற்காகத்தான் ஒருவருக்கு அவ யோக தசைகள் வரக்கூடாது என்று எழுதுகிறேன்.
குருவின் லக்னத்தில் பிறந்த உங்களுக்கு குருவின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய், குரு போன்ற தசைகள் நடந்திருந்தால் நீங்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு செல்ல முடியும். அதற்கு மாறாக பிறந்ததிலிருந்து 5 வயது முதல் உங்களுடைய லக்னத்திற்கு வரக்கூடாத சனி, புதன், சுக்கிர தசைகள் முதுமைப் பருவம் வரை உங்களுக்கு நடப்பதால் அனைத்திலும் முன்னேறுவதற்கு தடை இருக்கும். தசா, புக்தி அமைப்புகள் நல்லவிதமாக அமைந்திருக்குமாயின் நீங்கள் இந்நேரம் உங்கள் ஜாதகத்தில் அதிக சுபத்துவமாக உள்ள செவ்வாயின் தொழிலைச் செய்து கொண்டிருப்பீர்கள். அதில் நல்ல லாபமும் வந்து வாழ்க்கையின் மிக உயரத்தில் இருப்பீர்கள்.
அவயோக கிரகங்கள் எனப்படும் ஒரு ஜாதகத்திற்கு நன்மைகளைத் தர இயலாத கிரகங்களின் தசை நடக்கும் போது ஒருவருக்கு சேமித்துவைக்க இயலாத அளவிற்கு அல்லது கடன் வாங்கித்தான் பிழைக்க வேண்டும் என்ற அளவிற்கு சாப்பாட்டிற்கு மட்டும் பணம் வருகின்ற ஒரு தொழில் உண்டாகும்.
ஒரு மனிதன் கஷ்டப்பட்டு கொண்டிருந்தாலும் மூன்று வேளையும் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்? மூன்றுவேளையும் சாப்பிட்டு தன்னுடைய குடும்பத்தையும் சிரமங்களுக்கிடையே நடத்திச் சென்றுதானே ஆகவேண்டும்? அவயோக கிரகங்கள் சாப்பாட்டிற்கு மட்டும் பணம் தந்து உங்களை முன்னேற விடாது. அதாவது உங்களுக்கு சாப்பாட்டிற்கு மட்டும் பணம் வந்து கொண்டிருக்கும்போது ரிஸ்க் எடுக்க மாட்டீர்கள். இருக்கும் நிலையில் இருந்தும் கீழே போய் விடுவோமோ என்ற பயத்திலேயே சாப்பாட்டிற்கு மட்டும் பணம் தரும் அந்தத் தொழிலை நடத்திக் கொண்டிருப்பீர்கள். ஆனால் யோகக் கிரகங்கள் ஒரு நிலையில் உங்களை பிளாட்பாரத்தில் கொண்டு வந்து நிறுத்தி, இதற்கு மேல் கீழே போக என்ன இருக்கிறது என்கின்ற ரிஸ்க்கை எடுக்க வைத்து, உங்களை வாழ்வின் உயரத்திற்கு கொண்டு செல்லும்.
ஜெராக்ஸ் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் சனியின் காரகத்துவம் அல்ல அவை புதனின் காரகத்துவம். லக்னப்படி புதனின் வீடு தொழில் ஸ்தானமாகி, ராசிக்கு பத்தாமிடத்தில் ராகு, கேதுவுடன் புதன் தொடர்பு கொண்டிருப்பதால் உங்களுக்கு ஜெராக்ஸ், ரப்பர் ஸ்டாம்ப் தொழில் அமைந்திருக்கிறது.
தற்போது உங்களுக்கு சுக்கிரதசை ஆரம்பித்திருக்கிறது. தசாநாதன் ராசி, லக்னம் இரண்டின்படியும் கெடுபலன் தருவதாக இருந்தால் அந்த தசை முழுக்க எந்த நன்மைகளும் நடக்காது. லக்னப்படி பாபராகி, ராசிப்படி நன்மைகளை செய்பவராக இருப்பின் அந்த தசையில், ஜாதகருக்கு சாப்பாடு, துணிமணி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறி 40 சதவிகித நன்மைகள் நடக்கும். அதேநேரத்தில் அந்தஸ்து, கௌரவம் உயர்ந்து பணக்காரனாகி சொகுசு வாழ்க்கை கிடைக்காது.
தற்போதய சுக்கிரதசை உங்களுக்கு லக்னப்படி கெடுபலன்களைத் தரக்கூடியது என்றாலும் அவரே ராசிநாதன் என்பதால் உங்களை மிகவும் சிரமப்படுத்த போவதில்லை. அதேநேரத்தில் சுக்கிரன் சொந்த நட்சத்திரத்தில் அதாவது ஆறுக்குடையவனுடைய நட்சத்திரத்தில் இருப்பது தவறு. சுக்கிர தசையின் முதல் 10 வருடங்கள் உங்களுக்கு ஓரளவிற்கு லாபாதிபதி பலன்களைச் செய்வார். 70 வயதிற்கு பிறகு வரும் சூரிய, சந்திர, தசைகள் செவ்வாய் தசைகள்தான் உங்களுக்கு உண்மையான யோக தசைகள். முதுமையில் யோகம் வந்து என்ன பயன்? தொழில் இனிமேல் மாறுவதற்கு வாய்ப்பில்லை. சுக்கிர தசை, சூரிய புக்தி முதல் செய்யும் தொழில் முன்னேற்றமாக இருக்கும். வாழ்த்துக்கள்.
(29.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.