adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
கன்னி, விருச்சிகத்தை உயர்த்தும் யோகம்! B-003

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888

சிம்மம் :

சிம்ம லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் செவ்வாயும், சுக்ரனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்பதால் சில மூல நூல்கள் சிம்ம லக்னத்திற்கு இந்த யோகம் சிறப்பாக செயல்படாது எனக் குறிப்பிடுகின்றன.

பொதுவாகவே, எந்த லக்னமாயினும் சுக்கிரனைச் செவ்வாய் பார்ப்பதோ அல்லது சுக்கிரனும், செவ்வாயும் இணைவதோ நல்லதல்ல. ஏனெனில் சுக்கிரன் ஒரு நல்ல  காரகத்துவங்கள் உள்ள இயற்கைச் சுப கிரகம். அவரை ஒரு பாபர் பார்ப்பதும், அவருடன் இணைவதும் சுக்கிரனின் நல்ல இயல்புகளைக் கெடுக்கும்.


மேலும் சிம்மத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியும், சுக்கிரன் பத்துக்குடைய கேந்திராதிபதியும் ஆவார்கள். அதோடு, சுக்கிர, செவ்வாய் தசைகளும் அடுத்தடுத்து வருவது இல்லை. எனவே தர்ம கர்மாதிபதி யோகம் சிம்மத்திற்கு முழுமையான பலன்களைத் தராது.

இருப்பினும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், சுக்கிரன் தனது கேந்திராதிபத்திய தோஷமுள்ள பத்தாம் வீடான ரிஷபத்திற்கு ஆறில் மறைந்து, துலாத்தில் ஆட்சி பெற்று தசை நடத்துவது, மற்றும் செவ்வாய் தனது திரிகோண வீடான ஒன்பதுக்கு எட்டில் மறைந்து நான்காம் வீடான விருச்சிகத்தில் ஆட்சிபெற்று தசை நடத்துவது ஆகிய இரண்டும் சிறப்பைத் தரும்.

மேற்சொன்ன அமைப்பில் ஒன்பதுக்குடைய செவ்வாய் பத்தாம் வீட்டைப் பார்ப்பார். பத்துக்குடைய சுக்கிரன் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பார். இதுவும் தர்ம கர்மாதிபதி யோகம்தான். இந்த நிலையில் இருவரும் தனித் தனியே தனது ஆட்சி வீடுகளில் இருந்து தாங்கள் பலம் இழக்காமல் அடுத்தவரின் வீடுகளைப் பார்ப்பார்கள்.

மேலும், செவ்வாய் தனது பாதக ஸ்தானமான ஒன்பதாம் வீட்டுக்கு எட்டில் மறைந்து ஆட்சி பெறுவதால், பாதக ஸ்தானம் வலுவிழக்கும். சுக்கிரன் தனது கேந்திராதிபத்திய தோஷமுடைய பத்தாம் வீட்டிற்கு ஆறில் மறைந்து மூன்றில் ஆட்சி பெறுவதால் கேந்திராதிபத்திய தோஷமும் செயல் இழக்கும்.

இந்த லக்னத்தின் மூன்று, நான்காமிடங்களில் இருவரும் பரிவர்த்தனை பெறுவதும் ஒருவகையில் தர்ம கர்மாதிபதி யோகம்தான். இந்த அமைப்பில் இருவருமே அவரவர் வீடுகளைப் பார்ப்பார்கள். ஆனால் இது சிறப்பான அமைப்பு என்று சொல்ல முடியாது.

ஏனெனில் ஒரு சுப கிரகமான சுக்கிரன், நான்காம் வீட்டில் திக்பல அமைப்பு பெற்று தனது கேந்திராதிபத்திய தோஷ அமைப்புள்ள கேந்திர வீட்டைப் பார்ப்பது நல்ல தொழில் அமைப்புக்களையோ, நிரந்தரத் தொழில் அமைப்புகளையோ உருவாக்காது.

ஒரு கேந்திராதிபத்திய தோஷம் பெறும் சுப கிரகம் அந்த தோஷ வீட்டிற்கு ஆறு அல்லது எட்டில் மறைவதே அந்த வீட்டின் நல்ல பலன்களைச் செய்யும். அதன்படி சிம்மத்திற்கு சுக்கிரன் மூன்று அல்லது ஐந்தில் இருப்பதே வலிமை. அதேபோல செவ்வாயும் சிம்மத்தின் பாதகாதிபதி என்பதால் அவரது பாதக வீடான ஒன்பதுக்கு நேரெதிரில் அமர்ந்து பார்ப்பது அவரது தசை புக்திகளில் பாதகத்தைச் செய்யும்.

எந்த ஒரு யோகமும் இதுபோன்ற மறைமுக பங்கங்கள் இல்லாமல் இருந்தால்தான் முழுமையான பலன் தரும். மேம்போக்காகப் பார்க்கும் போது நல்ல யோகமாகத் தெரிந்து இதுபோல வேறுவகைகளில் கிரகங்களின் கைகள் கட்டப்பட்டால் யோக பலன்கள் நடக்காது.

மேலும்  சுக்கிரனும், செவ்வாயும் இணைவது அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது என்பது இருவரின் காரகத்துவங்களில் ஏதேனும் ஒன்று பாதிப்படைவதற்குக் காரணமாக அமையும். அது நல்லதல்ல.

கன்னி :

கன்னி லக்னக்காரர்களுக்கு ஒன்பது, பத்துக்குடையவர்களான சுக்கிரனும், புதனும் நண்பர்கள் என்பதால் முழுமையான தர்ம கர்மாதிபதி யோகம் கிடைக்கும்.

கன்னிக்கு, லக்னாதிபதி புதனே பத்துக்குடையவனாகவும், அவருடைய நண்பர் சுக்கிரனே ஒன்பதுக்குடையவனாகவும் அமைவார்கள். மேலும் சுக்கிரனே கன்னிக்கு தன, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் அதிபதி ஆவார். இவர்கள் இருவரும் சூரியனுடன் சேராமல் ஒன்பதாமிடமான ரிஷபத்தில் இணைந்தோ, அல்லது ரிஷபம் மிதுனத்தில் பரிவர்த்தனை பெற்றோ (சூரியனுடன் சேராமல்) இருப்பது பூரண தர்ம கர்மாதிபதி யோகம்.

பத்தாமிடமான மிதுனம் மற்றும் லக்னத்தில் இருவரும் இணைவது யோகத்தைக் குறைக்கும். ஏனெனில் பத்தாமிடத்தில் புதன் ஆட்சி பெறுவது கேந்திராதிபத்திய தோஷம் ஆகும். அதோடு லக்னத்தில் சுக்கிரன் நீசம் பெறுவார். அதுவும் பலனில்லை. ஏழாமிடமான மீனத்தில் இருவரும் இணைவதும் பலன் தராது. அங்கு சுக்கிரன் உச்சம் பெற்றாலும் புதன் நீசம் பெறுவது யோக பங்கம் தரும்.

எந்த ஒரு யோகமும் சந்தேகத்திற்கு இடமின்றி பூரணத்துவம் பெற்றிருப்பதே முழுமையான நன்மைகளைத் தரும்.

இதைத் தவிர்த்து வானியல் விதிப்படி சுக்கிரனும், புதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது சாத்தியமில்லை. மற்றபடி, இருவரும் துலாம், மகரம், ஆகிய இரண்டு, ஐந்தாமிடங்களில் சூரியனுடன் சேராமல் இவர்கள் மட்டும் இணைந்திருப்பது யோகம் தரும்.

மூன்று, நான்காமிடங்களில் இருவரும் தனித் தனியே இருப்பதும் ஒரு வகையில் யோகம்தான். தங்களது தர்ம, கர்ம வீடுகளை இருவருமே பார்ப்பார்கள் என்பதால் இவர்களது தசையில் யோகம் கிடைக்கும். குறிப்பாக சுக்கிர தசையில் யோக பலன்கள் நன்றாக இருக்கும். நான்காமிடத்தில் இணைவது சுக்கிரனுக்கு வலுக் குறைவு என்பதால் அரைகுறையான பலன்கள் மட்டும்தான்.

ஆறில் இருவருமே நட்புப் பெறுவார்கள். சுக்கிரனுக்கு ஆறாமிடம் மறைவு ஸ்தானம் அல்ல. மேலும் இந்த வீட்டின் அதிபதியான சனி இருவருக்குமே நண்பர் என்பதால் நல்ல பலன்கள் ஓரளவு உண்டு. ஆயினும் லக்னாதிபதி ஆறில் மறைவதால் யோகத்தை அனுபவிக்க இயலாது. அதேபோல எட்டில் இணைந்தாலும் பலன் இல்லை.

பதினொன்றாம் வீடு புதனுக்கு பகை வீடு என்பதாலும், பனிரெண்டாமிடம் சுக்கிரனுக்கு பகை வீடு என்பதாலும் மேற்கண்ட இடங்களில் இணைவதால் முழுமையான  யோக பலன்கள் இருக்காது. அதேபோல லக்னம், இரண்டாம் இடங்களில் பரிவர்த்தனை பெறுவதும் யோகக் குறைவே...! என்னதான் சுக்கிரன் நீச பங்கம் பெற்றாலும், முழுமையான யோகம் கிடைக்காது.

கன்னி லக்னத்தவர்களுக்கு புதன், சுக்கிரனோடு, கேதுவும் நல்ல இடங்களில் சுபத்துவம் பெற்று அமைந்திருந்தால், புதன்தசை 17 வருடம், அதனையடுத்து கேது தசை 7 வருடம், அதன்பின் சுக்கிர தசை 20 வருடம் என 44 வருடங்கள் பிரமாதமான தர்ம கர்மாதிபதி யோகத்தை அனுபவிப்பார்கள்.

துலாம்:

துலாம் லக்னக்காரர்களுக்கு தர்ம கர்மாதிபதிகள் புதனும், சந்திரனும் ஆவார்கள்.
ஒரு ஜோதிட விசித்திரமாக சந்திரனுக்கு புதன் சமம். ஆனால் புதனுக்கு சந்திரன் எதிரி. லக்னாதிபதி சுக்கிரனுக்கும் எதிரி. (ஜோதிடப்படி சந்திரனின் மகன் புதன். மகன் தாயை வெறுத்தாலும் மகன் மீது தாய் அன்பு காட்டுவார் என்பது இதுதான்.)

புதன் தசையும், சந்திர தசையும் அருகருகே வருவதல்ல என்பதாலும், லக்னாதிபதி சுக்கிரனுக்கு சந்திரன் எதிரி என்பதாலும், ஒன்பதுக்கு அதிபதி புதனுக்கு விரயாதிபத்தியமும் உள்ளதாலும், துலாம் லக்னத்திற்கு இது முழுமையான யோகம் அல்ல.
சந்திரன் கடகத்தில் இருந்து மகரத்திலிருக்கும் புதனைப் பார்ப்பது விசேஷம். சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றாலும் அது எட்டாமிடம் என்பதால் பலனில்லை. இருவரும் 9, 10 மிடங்களில் பரிவர்த்தனை ஆவது இருவரின் தசைக்கும் சிறப்பு.

லக்னத்தில் இருவரும் இணைவது, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து ஆகிய இடங்களில் சுபச் சந்திரனாக பாதகாதிபதி சூரியனுடன் கூடாமல் (அதாவது அமாவாசை நாட்களாக இல்லாமல்) புதனுடன் சந்திரன் சேர்வது துலாம் லக்னத்திற்கு நன்மை தரும் அமைப்பு.

மூன்றில் சந்திரன் அமர்ந்து ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதும், நான்கில் புதன் அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதும் யோகத்தை உருவாக்கி இருவரின் தசைகளிலும் சிறப்பான பலன்களைத் தரும். இருவரும் மேற்சொன்ன இடங்களில் தனித்திருப்பதே நல்லது.

ஆறு எட்டில் இணைவது நல்ல பலன்களைத் தராது. பதினொன்றாமிடத்தில் இருவரும் இணைவது யோகம்தான். இங்கே புதன் அதிநட்பும் சந்திரன் நட்பும் பெறுவார் என்பதால் யோகம் பலனளிக்கும். பனிரெண்டாம் வீட்டில் புதன் உச்சம் பெற்றாலும் யோக பலன்கள் இருக்காது.

விருச்சிகம்:

தர்ம கர்மாதிபதி யோகத்தின் பலனை முழுமையாக அனுபவிப்பதில் முதலிடம் வகிப்பவர்கள் விருச்சிக லக்னக்காரர்கள் ஆவார்கள். ஏனெனில் விருச்சிக லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகள் சூரியன், சந்திரன் இருவருமே லக்னாதிபதி செவ்வாய்க்கு அதி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய லக்னங்கள் அனைத்திற்கும் ஒன்பது, பத்துக்குடைய இரண்டு கிரகங்களும், இன்னும்  ஒரு கெட்ட பாவத்திற்கு அதிபதியாகி, இரு ஆதிபத்திய கிரகங்களாய்ச் செயல்பட்டு யோகங்களை மட்டுப் படுத்துவார்கள். விருச்சிகத்திற்கு மட்டுமே சூரியனும் சந்திரனும், ஒன்பது மற்றும் பத்தாமிடங்களுக்கு மட்டுமே உரியவர்களாகி கலப்பின்றி முழுமையான யோகத்தை வழங்குவார்கள்.

விருச்சிக லக்னத்தில் பிறந்து சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனையாவது மிகவும் சிறப்பாகும். மகம் நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்திருந்தால் 25 வயதுகளில் சூரிய தசையும், முப்பதுகளில் சந்திர தசையும் அடுத்தடுத்து ஆரம்பித்து ஜாதகர் முழு யோகசாலியாக விளங்குவார்.

லக்னாதிபதி செவ்வாயும், ராகுவும் நல்ல இடங்களில் சுப பலம் பெற்று அமைந்திருந்தால் யோகம் வாழ்நாள் முழுவதும் நீடித்து பிறவி எடுத்ததன் பெரும் பயனை விருச்சிக லக்னக்காரர்கள் பெறுவார்கள்.

விருச்சிகத்தவர்கள் அமாவாசை, பௌர்ணமியில் பிறப்பதும் மிகவும் நல்லது. அமாவாசையன்று தர்ம கர்மாதிபதிகளான சூரியனும், சந்திரனும் இணைந்திருப்பார்கள். பௌர்ணமி அன்று இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

பொதுவாக, சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கும் போது இருவரில் ஒருவர் ஆட்சி பலமோ, உச்சபலமோ பெற்றிருப்பதுதான் நல்லது. அதுவே யோகத்தின் அடையாளம். 1, 8, 12 மிடங்களைத் தவிர சூரிய, சந்திரர்கள். எந்த இடத்திலும் இணையலாம். ஆறாமிடம் கூட சூரியன் உச்சமாவதாலும், உபசய ஸ்தானங்கள் சூரிய, சந்திரர்களுக்கு வலு என்பதாலும் ஏற்புடையதே.

விருச்சிகத்தவர்களுக்கு லக்னத்தில் சந்திரன் நீசமடைவார். சூரியன் பனிரெண்டாமிடமான துலாத்தில் நீசமடைவார். இந்த இரு நிலைகளைத் தவிர்த்து வேறு எந்த இடங்களிலும் சூரிய, சந்திரர்கள் நேரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து (பௌர்ணமி யோகம்) தசை நடத்தினாலும் பிரமாதமான தர்ம கர்மாதிபதி யோகத்தைச் செய்வார்கள்.

இரண்டு, ஐந்தாமிடங்கள் குருவின் வீடுகள் என்பதால் இவ்விடங்களில் தர்ம கர்மாதிபதிகள் இணையும் போது யோக பலன்கள் கூடுதலாகவே கிடைக்கும். மூன்று, நான்காமிடங்கள் சூரிய, சந்திரர்களுக்கு ஆகாத விரோதியான சனியின் வீடு என்பதால் இருவருமே இந்த இடத்தில் வலுக் குறைவார்கள்.

மகர, கும்பத்தில் இருவருமே தனித் தனியாக அமர்ந்து அவரவர் வீடுகளைப் பார்ப்பது அல்லது ஒருவர் மற்றவரின் வீடுகளைப் பார்ப்பது தர்ம கர்மாதிபதி யோகம்தான். இதுபோன்ற அமைப்புகள் நற்பலனைத் தரும்.

ஏழாமிடத்தில் இணையும்போது சந்திரன் உச்சமடைவார் என்பதால் இங்கே யோகம் நல்லவைகளைத் தரும். அதிலும் இருவரும் இணைந்து லக்னத்தைப் பார்ப்பது ஜாதகருக்கு நல்ல மன உறுதியை கொடுக்கும். ஒன்பது பத்தாமிடங்களில் தனித் தனியே ஆட்சி பெறுவதும் யோக நிலைதான். பதினொன்றில் இணைவதும் யோகத்தைத் தரும்.

விருச்சிகத்திற்கு சூரிய, சந்திரர்கள் வலுப் பெறும் நிலையில் ஜாதகர் அரசு வேலையில் இருப்பவராகவோ அல்லது அரசியலில் உள்ளவராகவோ இருப்பார். யோகம் குறைவு பெற்றால் நேரடியாக அரசலாபம் இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதிகாரம் செய்பவராகவும் அதிகாரி, அல்லது மந்திரிகளுக்கு நெருக்கமானவராக இருந்து அரசில் காரியம் சாதிப்பவராகவும் இருப்பார். சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்தாலும் நான் மேலே சொன்ன அமைப்புகள் உருவாகும்.

செப் 28- அக்- 4, 2011.திரிசக்தி ஜோதிடம் இதழில் வெளிவந்தது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.