adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பிரதமர் பதவிக்கான ஜோதிட விதிகள்…D-069

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

பிரதமரின் தற்போதைய போட்டியாளரும், எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் திரு.ராகுல்காந்தி மற்றும் அவரது தந்தையான ராஜீவ் காந்தியின் ஜாதகங்களை சென்ற வாரம் பார்த்தோம். அவர்களுக்கு முன் இந்தியாவின் மகாராணியாக இருந்த அன்னை. இந்திராகாந்தி அவர்களின் ஜாதக விளக்கத்தை தற்போது பார்க்கலாம்.

ஜோதிடம் என்பது மிகப்பெரிய, உன்னத சமன்பாடுகளை உள்ளடக்கியது. இங்கே குத்துமதிப்பான அல்லது அருள்வாக்கு சொல்வது போன்ற எவற்றிற்கும் இடமில்லை. விதிகளைப் புரிந்து கொண்டால் இங்கே அனைத்தும் சுலபம்தான். ஜோதிடத்தின் உயர்நிலைப் புரிதல் என்று நான் குறிப்பிடும் சுபத்துவம், மற்றும் சூட்சுமவலுவினை ஒருவர் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் பிரதமர் போன்ற அதி உச்ச பதவிக்கான விதி அமைப்புகளையும் புரிந்து கொள்ள முடியும்.


ஒருவர் அதிகாரம் செலுத்தக்கூடிய அமைச்சர், முதல்வர், பிரதமர் போன்ற உயர் பதவியைப் பெற வேண்டுமாயின், அவரது ஜாதகத்தில் ராஜ ராசியான சிம்மமும், அதன் அதிபதியான சூரியனும் மிக அதிகமான சுபத்துவம் அடைவதோடு, பதவி ஸ்தானம் எனப்படும் பத்தாமிடமும் வலுப்பெற்றிருக்க வேண்டும்.

சென்ற அத்தியாயத்தில் உதாரணமாக காட்டியிருந்த ராஜீவ்காந்தி அவர்களின் ஜாதகத்தில் சிம்மம் மிக அதிகமான சுபத்துவத்தினை அடைந்திருப்பதை கண்டிருக்கலாம். சிம்ம லக்னம், சிம்ம ராசியில் பிறந்திருந்த ராஜீவின் ஜாதகத்தில் லக்னமாகிய சிம்மத்தில், இயற்கைச் சுபர்கள் என்று சொல்லப்படக் கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் ஆகிய நால்வரும் இணைந்து சூரியனையும், சிம்மத்தையும் மிகப்பெரிய சுபத்துவப் படுத்தியிருந்தார்கள். இந்த அமைப்பு ஒன்றினாலேயே அவர் பிரதமர் எனும் நிலைக்கு உயர முடிந்தது.

ஆயினும் அங்கே லக்னத்திற்கும், சுபர்கள் அனைவருக்கும் சனி பார்வை இருந்த காரணத்தினால், ராஜீவால் நீடித்து பிரதமராக பதவி வகிக்க இயலவில்லை. ஆயுள் ஸ்தானமான எட்டாம் பாவகம் வலுவிழந்ததால், ஆயுளும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை.

கீழே மறைந்த முன்னாள் பிரதமர் திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இந்தியா ஒரு சிக்கலான காலகட்டத்தில், வளர்ச்சி அடைய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த நேரத்தில், நீண்டகாலம் பிரதமர் பதவியை வகித்தவர் இவர். இந்தியாவின் இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவர். பிரதமர் பதவியில் இருக்கும்போதே அகால மரணம் அடைந்தவர். இவரது மரணம் இந்திய அரசியலையே வேறுவிதமான நிலையில் திசை திருப்பியது எனலாம்.

1984-ல் இவர் மரணம் அடையாமல், இன்னும் சிலகாலம் உயிரோடு இருந்திருந்தால், இந்திய அரசியலின் போக்கு வேறு மாதிரியாக இருந்திருக்கும். குறிப்பாக அவரையடுத்துப் பிரதமரான சிலர் அந்தப் பதவிக்கு வர முடியாமல் போயிருக்கும்.

திருமதி. இந்திராகாந்தியின் பிறந்தநாள் 19, நவம்பர் 1917. இரவு 11-மணி 11- நிமிடங்களுக்கு, உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரில் பிறந்தவர். அவருக்கு கடக லக்னம், மகர ராசியாகி, லக்னாதிபதி சந்திரன் வளர்பிறையாகி லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்திய ஜாதகம்.

ஜோதிடம் உயர்வாகச் சொல்லும் கிரகங்களின் பரிவர்த்தனை அமைப்பின் நிலைக்கு, உதாரணமாக இவரது ஜாதகம் சொல்லப்படுகிறது. மிக அதிகபட்சமாக ஆறு கிரகங்கள் இவரது ஜாதகத்தில் பரிவர்த்தனை நிலையில் இருக்கின்றன. இது ஒரு வலுவான அமைப்பு.

லக்ன, ஏழாமதிபதிகளான சனியும், சந்திரனும் இங்கே பரிவர்த்தனை நிலையில் இருக்கிறார்கள். அடுத்து 6, 11-க்குடைய குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார்கள். அடுத்து இந்த ஜாதகத்தில் 2, 5-க்குடைய சூரியனும், செவ்வாயும் பரிவர்த்தனை நிலையில் இருக்கிறார்கள்.  

    குரு    கேது   
  இந்திரா காந்தி  19-11-191711-11-இரவு  அலகாபாத்ல/சனி  
சந் செவ்
சுக்,ராகு     சூரி,புத    

நான் அடிக்கடி வலியுறுத்திச் சொல்லும், ஒருவரை அரசனாக்கும் உயர்நிலை ராஜ யோகமான சிவராஜ யோகம் இந்திராவின் ஜாதகத்தில் பூரணமாக அமைந்திருக்கிறது. நாட்டின் மிக உயர்பதவியான பிரதமர் பதவிக்கு திருமதி. காந்தியை உயர்த்தியது இந்த ஒரு அமைப்புத்தான்.

சூரியனும், குருவும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வது சிவராஜ யோகம் என்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் இருப்பவர், யோகத்தின் தன்மைக்கேற்ப மற்ற கிரகங்களும் சரியாக இருக்கும் நிலையில், தலைமைப் பதவியை அடைவார் என்பது விதி.

சூரியன் அதிக சுபத்துவத்தை அடைகிறார் என்பதே இந்த யோகத்தின் மறைமுகமான உள்ளர்த்தம். இந்த யோகம் திருமதி. காந்தியின் ஜாதகத்தில் மிக அதிகமான உயர் நிலையில் இருப்பதைக் காணமுடியும்.

இரு ஆதிபத்தியமுள்ள கிரகங்கள் எந்த வீட்டோடு அதிகம் தொடர்பு கொள்கிறதோ அந்த வீட்டுப் பலனை 80 சதவீதமும், இன்னொரு வீட்டுப் பலனை 20 சதவீதமும் செய்யும் என்பதும் ஜோதிடத்தின் இன்னொரு விதி. இந்திரா பிறந்த கடக லக்னத்தின் அஷ்டமாதிபதியான சனி அவரது ஜாதகத்தில் ஒன்று, ஏழாமிடங்களோடு பரிவர்த்தனையாக இருப்பதால், எட்டாமிடத்தின் அசுப பலன்களை குறைத்துக்கொண்டு, ஏழாமிடத்தின் சுபபலன்களையே அதிகம் தந்தார்.

ஆயினும் அவரது அஷ்டமாதிபத்திய பலனாக, அதே சனி தசையில் சில ஆண்டுகாலம் இந்திரா பிரதமர் பதவியில் இல்லாமல் இருந்தார். குறிப்பாக அஷ்டமாதிபதி தசையில், பாதகாதிபதி புக்தியான சனி தசை, சுக்கிர புக்தி முழுவதும் ஏறத்தாழ இரண்டரை ஆண்டு காலம் அவர் பதவியில் இல்லை.

இதில் சனியும், சுக்கிரனும் சஷ்டாஷ்டக நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தசாநாதனும், புக்திநாதனும் சஷ்டாஷ்டக அமைப்பில் இருக்கும் போது அந்த புக்தி நல்ல பலன்களைச் செய்யாது என்பதும் ஜோதிடத்தின் முக்கியமான ஒரு விதிதான்.

தசாநாதனும், புக்திநாதனும் ஆறுக்கு, எட்டாக இருக்கும் நிலையில் புக்திநாதன் நன்மைகளைச் செய்ய வேண்டுமெனில் புக்திநாதன் ஆட்சி, உச்சமாகவோ, அதிக சுபத்துவ சூட்சும வலுவுடனோ, அல்லது லக்ன, ராசியின்  கேந்திர, கோணங்களிலோ இருக்க வேண்டுமென்பது சஷ்டாஷ்டகத்திற்கு விதிவிலக்கு.

அதேபோல ராகு, தன்னுடன் இணைபவரின் பலன்களை எடுத்துச் செய்வார் என்ற விதிப்படி அதே சனி தசையின், இன்னொரு சஷ்டாஷ்டக அமைப்பான ராகு புக்தியில் திருமதி இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். சஷ்டாஷ்டகத்திற்கு நல்ல உதாரணமாக மேற்கண்ட அமைப்பினை குறிப்பிடலாம். (தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இதேபோன்ற பாதகாதிபதி, அஷ்டமாதிபதியின் சஷ்டாஷ்டக தசா, புக்தியில்தான் மரணமடைந்தார்.)

அடுத்து பிரதமர் மோடி அவர்களுக்கு முன்பாக சுமார் பத்தாண்டு காலம் பிரதமராக இருந்த திரு. மன்மோகன்சிங் அவர்களின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.

மன்மோகன்சிங் 26, செப்டம்பர் 1932, மதியம் 2 மணிக்கு தற்போதய பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். இவரது ஜாதகப்படி தனுசுலக்னம், கடக ராசியாகி லக்னாதிபதி குரு ஒன்பதில் அமர்ந்து லக்னத்தைப் பார்த்து வலுப்படுத்துகிறார். ராஜயோகங்களுக்கு துணை நிற்கும் உன்னத யோகமான தர்மகர்மாதிபதி யோகம் அவரது ஜாதகத்தில் இருக்கிறது.

மன்மோகன் சிங் இயல்பான அரசியல்வாதி அல்ல. அவர் எந்த ஒரு நிலையிலும் அரசியல்வாதியாக இருந்ததும் இல்லை, இருக்க முனைந்ததும் இல்லை. குழப்பமான ஒரு அரசியல் சூழ்நிலையில், எதிர்பாராத விதமாக பிரதமர் பதவி அவரைத் தேடி சென்றது. 10 ஆண்டுகளுக்கு அது நீடித்தும் இருந்தது.

          
  ராகு  மன்மோகன்சிங்  26-9-193202-00-பகல் பஞ்சாப் (பாக்.)சந்,செவ்,சுக்  
சனி குரு,கேது
ல/      சூரி,புத 

இதுபோன்ற திடீர் அதிர்ஷ்டங்களுக்கு ராகுவே காரணம் என்பதை எனது  “ஜோதிடம் எனும் தேவரகசியம்” நூலில் ராஜயோகம் தரும் ராகுதசை என்ற தலைப்பில் எம்ஜிஆர் அவர்களின் ஜாதகத்தில் குறிப்பிட்டு எழுதி இருக்கிறேன். அதேபோன்று ராகுதசையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு உயரத்தை அடைந்த ஜாதகம் மன்மோகனுடையது.

ஜோதிட விதிகளின்படி அவரது ஜாதகத்தில், ராஜ ராசியான சிம்மத்தில், குரு அமர்ந்து சிம்மத்தை சுபத்துவப்படுத்துகிறார். சிம்மாதிபதி சூரியன், பத்தாமிடத்தில் திக்பல நிலையை அடைந்து, தர்மகர்மாதிபதி யோக அமைப்போடு, இருக்கிறார். சூரியனுக்கு வீடு கொடுத்த புதனும் இங்கே உச்ச நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவரின் திடீர் உயர்நிலைக்கு ராகுவே காரணம் என்பதால், இங்கே மூன்றாமிட கும்ப ராகு, சிம்மத்தில் அமர்ந்த குருவின் பார்வையை பெற்று சுபத்துவம் அடைந்ததால், ராகு தசையில் இவரால் பிரதமர் பதவியை அடைய முடிந்தது. ராகுவிற்கு வீடு கொடுத்த சனி ஆட்சி நிலையில் இருப்பதும், ராகுவே மூன்றாமிடத்தில் அமர்ந்திருப்பதும், எல்லாவற்றையும்விட மேலாக சிம்ம குருவின் பார்வையை ராகு பெற்றிருப்பதும் சிறப்பான அம்சங்கள்.

இந்திரா காந்தி அவர்களின் ஜாதகத்தை குறிப்பிடும்போது தசா,புக்தி நாதர்கள் சஷ்டாஷ்டக நிலையில் இருந்தால் ஏற்படும் கஷ்டங்களைக் குறிப்பிட்டிருந்தேன். இங்கே மன்மோகன்சிங் அவர்களும், ராகுவிற்கு எட்டில் அமர்ந்த புதனின் புக்தியில்தான் பிரதமர் பதவியை அடைந்திருக்கிறார்.

என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆய்வில் சஷ்டாஷ்டக நிலைக்கு விதிவிலக்காக சம்பந்தப்பட்ட கிரகங்கள் ஆட்சி, உச்சமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். அதன்படி இங்கே மன்மோகன் ஜாதகத்தில் பத்தாம் அதிபதியான புதன், பாக்கியாதிபதியான சூரியனுடன் இணைந்து, லக்னத்திற்கு கேந்திரத்தில், பத்ரயோக அமைப்பிலும், பூரண தர்ம, கர்மாதிபதி  யோக நிலையிலும் இருப்பதால், ராகுவிற்கு சஷ்டாஷ்டக நிலையில் இருந்தும் பிரதமர் பதவியை தந்தது.

தன்னைப் பார்த்த, இணைந்த கிரகங்களின் பலனை ராகுவே எடுத்துச் செய்வார் என்பதன்படி, லக்னாதிபதியான குருவின் தசை ஆரம்பித்தும், குருவின் பலனை ராகுவே செய்து விட்டதால் அடுத்து மன்மோகனால் பிரதமராக முடியவில்லை.  

அடுத்த அத்தியாயத்தில் தொடருவோம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.