ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
கோ. காளியப்பன், சென்னை- 51.
கேள்வி:
துலா லக்னத்தில் பிறந்து, அம்சத்தில் மகரத்தில் சுக்கிரன் இருக்க, கோட்சாரத்தில் அந்த இடத்திற்கு சனி வரும்போது மரணம் சம்பவிக்கும் என்று ஒரு ஜோதிடக் குறிப்பில் படித்தேன். தாய்-தகப்பன் இல்லாமல் பெரியப்பா வளர்த்து வரும் என் பேத்திக்கு அது போன்ற அமைப்பு இருக்கிறது. இதைப் படித்ததிலிருந்து மிகவும் கவலையாக இருக்கிறது. அவள் உயிருக்கு கண்டம் எதுவும் ஏற்படுமா?
பதில்:
(துலாம் லக்னம், ரிஷப ராசி, 4ல் சுக், கேது, 5ல் சூரி, புத, 6ல் செவ், 7ல் குரு, சனி, 8ல் சந், 10ல் ராகு, 13-2-2000 இரவு 10-37 திருவண்ணாமலை)
பொதுவான ஜோதிடக் குறிப்புகளை ஒருபோதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இதுபோன்ற ஜோதிடக்குறிப்புகள் எல்லாவற்றுக்கும் பொருந்தவும் செய்யாது. அந்தக் காலத்தில் இருந்த ஜோதிடர்கள் தன் காலத்தில் பார்த்த ஜாதகங்களில் நடந்த நிகழ்வுகளை குறித்து வைத்த குறிப்புகள்தான் இவை. இது எல்லோருக்கும் பொருந்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எந்த ஒரு செயலுக்கும் ஏராளமான விதிகளும், விதிவிலக்குகளும் உள்ள ஜோதிடத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால் மணவாழ்க்கை நன்றாக இருக்காது, பத்தில் சனி இருந்தால் தொழில் அமையாது போன்ற பொதுவான அமைப்புகளை விட்டுவிட்டு, அதன் உள்ளே இருக்கும் நுணுக்கமான அமைப்புகளை கணித்தால் மட்டுமே தனிப்பட்ட ஒரு ஜாதகத்தின் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.
பேத்தியின் ஜாதகப்படி துலாம் லக்னமாகி, லக்னாதிபதி சுக்கிரன் வர்கோத்தமம் மற்றும் திக்பலம் அடைந்து, ராகுவுடன் இணையாமல் கேதுவுடன் இணைந்து வலுப் பெற்றுள்ளது நல்ல யோகம். அதேபோல ஆயுள்காரகன் சனியும் ஸ்தான பலம் இழந்து நீச்சமாகி, திக்பலம் பெற்று குருவுடன் இணைந்திருப்பது தீர்க்காயுள் அமைப்பு. ஒரு ஜாதகத்தில் முக்கியமான இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்று இருந்தாலே அவர் எதையும் நேர்மையான முறையில் அனுபவிக்கப் பிறந்தவர் என்பது உறுதி. பேத்தியின் ஜாதகப்படி அவர் தீர்க்காயுளுடன் நன்றாக இருப்பார். வாழ்த்துக்கள்.
ஒரு வாசகர், சென்னை.
கேள்வி:
கடந்த 25 ஆண்டுகளாக திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று போராடி வருகிறேன். ஆனால் எங்கு சென்றாலும் தோல்விதான் ஏற்படுகிறது. மனைவியின் கழுத்தில் தாலி கூட இல்லாமல் ஏழ்மைச் சூழலில் பிச்சைக்காரர்களை விட மிகவும் கேவலமாக இருக்கிறோம். பணம் இல்லாததால் உறவினர்கள், நண்பர்கள் யாரும் எங்களிடம் பேசுவது கூட கிடையாது. எங்கு சென்றாலும் அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. தற்போது தங்குவதற்கு இடம் இல்லாமல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இரவில் படுத்து வருகிறேன். திரைப்படத்துறையில் இயக்குனராகி பணம் சம்பாதித்து, கேவலமாகவும், ஏளனமாகவும் பேசிய உறவினர், நண்பர் மத்தியில் வாழ்ந்து காட்ட முடியுமா? தாங்களே வந்து எனது திரைப்படத்திற்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து வாழ்க்கையை உயர்த்துவீர்களா?
பதில்:
(கன்னி லக்னம், கன்னி ராசி, 1ல் சந், 2ல் குரு, 4ல் சூரி, சுக், 5ல் புத, 6ல் செவ், ராகு, 8ல் சனி, 12ல் கேது, 31-12-1969 இரவு 11-15 நாகை)
ஒருவர் சினிமாவில் பெயரும், புகழும் பெற வேண்டுமெனில் ராகு சுபத்துவமாக அந்த ஜாதகத்தில் தர்மகர்மாதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். இரண்டாவதாக சுக்கிரன், அந்த ராகுவோடு தொடர்பு கொண்டு வலிமையாக இருக்க வேண்டும். இதுபோன்ற ஜாதக அமைப்புகள் இருந்து, நல்ல தசா-புக்திகளும் நடப்பவர்களே சினிமாத் துறையில் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள் சினிமா என்னும் அந்தக் கனவுத் துறையை நம்பி வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள்.
உங்களுடைய ஜாதகப்படி ஒருவரை திடீர்ப்புகழ் பெற வைக்கும் கிரகமான ராகு, ஆறாமிடத்தில் செவ்வாயுடன் இணைந்து, நீச்ச சனியின் வீட்டில் இருக்கிறார். சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். இவர்கள் மூவரையும் குரு பார்க்கிறார். சனி செவ்வாய் தொடர்பில் இருந்தாலே ராகு நல்லவைகளை தரமாட்டார். ராகு என்பவர் சுலபமாக சம்பாதிக்க வைக்கும் கிரகம். அவர் சுபரோடு மட்டும்தான் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அமைப்பு உங்களுக்கு இல்லை.
கலையைக் குறிக்கும் முதன்மைக் கிரகமான சுக்கிரன், உங்கள் ஜாதகப்படி சூரியனுடன் இணைந்து, நான்காம் வீட்டில் திக்பலம் பெற்று குருவுடன் பரிவர்த்தனை அமைப்பில் இருக்கிறார். நான்கு கிரகங்கள் பரிவர்த்தனை பெற்ற யோக ஜாதகம் இது. ஆயினும் வாழ்வின் முக்கிய பருவத்தில் 14 வயதிலிருந்து ஏறத்தாழ 34 வருடங்கள் அவயோக தசைகள்தான் நடந்திருக்கின்றன.
கடந்து போன 25 வருடங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான வருடங்கள். அவைகள் திரும்ப வராது. தற்போது சனிதசை சுயபுக்தி நடந்து கொண்டிருக்கிறது. சனி எட்டில் இருந்து, ஆறாமிடத்தோடு பரிவர்த்தனையாகி, குருவின் பார்வையில் நீச்சமாக இருக்கிறார். வரும் 2021 ஆரம்பத்தில் உங்களுக்கு சுய புக்தி முடிந்து, புதன் புக்தி ஆரம்பிக்கிறது. இந்த புதன் புக்தியில் இருந்து சில நல்லவைகள் உங்கள் வயதிற்கேற்ற வகையில் நடக்கும். இதுவரை வராத வெற்றி வரும். தடைகள் நீங்கும். ஆனால் அதற்காக நாளைக்கே ரஜினியையோ, அஜித்-விஜயையோ வைத்து பூஜை போட்டுவிட முடியாது. இனிமேல் உங்கள் முயற்சிகள் ஓரளவிற்கு பலித்து நன்றாக இருப்பீர்கள். வரும் டிசம்பர் 27ஆம் தேதிக்கு பிறகு நல்ல காலம் பிறக்கிறது. 2021 ஆம் ஆண்டு முதல் சம்பாத்தியம் வரும் அளவிற்கு நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
சிவக்குமார் பெருமாள், நாமக்கல்.
கேள்வி:
மாலைமலரில் வரும் ஒவ்வொரு கேள்விக்கும் உமது பதில் ஓரிரு பாவகத்தோடு மட்டும் இருக்க, இங்கே தரப்பட்ட ஜாதகத்திற்கு ஒவ்வொரு பாவகத்தின் தன்மை அதாவது நான், குடும்பம், சகோதரி, குழந்தைகள், வேலை, களத்திரம், ஆயுள், தொழில், லாபம், விரையம் போன்றவற்றை சுபத்துவ, சூட்சுமவலுவுடன் விளக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதனூடே சந்திராதி யோகம், தர்மகர்மாதிபதி யோகம், பரிவர்த்தனை யோகம், மகா தனயோக அமைப்பு மற்றும் ஒவ்வொரு கிரகத்தின் பார்வை அமைப்பும், சனி செவ்வாய் ஆறாம் இடத்தை பார்ப்பது எத்தகையது, பத்தாம் இடத்தை இருவரும் பார்ப்பது எத்தகையது, லக்னத்தை சனி, சூரியன், புதன் மூவரும் இணைந்து பார்ப்பது எப்படிப்பட்டது என்பதைப் பற்றியும் விளக்கவும். ராசியும், லக்னமும் ஆறாம் அதிபதி செவ்வாயின் சாரம், லக்னத்திற்கு சனியின் 10ம் பார்வை எத்தகைய மன நிலையை கொடுக்கும்? நடப்பு சனிதசை அஷ்டமாதிபதியாக எவ்வளவு காலம் தொடரும்? அம்சத்தில் சனி கும்ப வீட்டில் இருப்பது பாபத்துவமா? வரப் போகின்ற அஷ்டமச்சனி எவ்வாறு நடத்தும்? பதிலுக்காக உமது பக்தன் காத்திருக்கிறேன்.
பதில்:
மாலைமலர் தரும் ஜோதிட பகுதி ஒரு பொதுவான சேவை. கூடுமானவரை அனைவருக்கும் சமமாக வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் இப் பகுதியில் மாலைமலர் செயல்படுகிறது. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என்றால் இன்று இந்தப் பகுதியில் உங்கள் கேள்வி மட்டுமே இடம்பெறும். அது இயலாத ஒன்று.
இந்தக் கேள்விகளை அப்படியே எடுத்துக்கொண்டு, உங்கள் பகுதியில் இருக்கும் நல்ல அனுபவமும், ஞானமும் உள்ள ஒரு ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் அல்லது ஏற்கனவே மாலைமலரில் நான் எழுதிய “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அவற்றில் உங்கள் கேள்விகளுக்கான பதில் இருக்கிறது. அதை வாங்கிப் படிக்கலாம். வாழ்த்துக்கள்.
எம். மதுரம், கல்கத்தா.
கேள்வி:
மகனுக்கு 2014ல் திருமணம் நடந்து இருவரும் வாழவில்லை. மருமகளும் அவளுடைய அம்மா, அக்கா அனைவரும் மகனிடம் சண்டை போட்டு பிரச்னையாகி கோர்ட்டு, கேஸ் என்று நடக்கிறது. மகனின் குடும்ப வாழ்க்கை இப்படி இருக்கிறதே என்ற மன வருத்தத்தில் இருந்த எனக்கு இன்னும் ஒரு அடியாக மலேசியாவில் வேலை பார்த்த மகனின் வேலை போய்விட்டது. வேலை போனதற்கு என்ன காரணம்? இனிமேல் அவன் மலேசியா செல்ல மாட்டானா? அவனுக்கு இந்தியாவில் நல்ல வேலை கிடைக்குமா? விவாகரத்து கேஸ் எப்போது முடியும்?
பதில்:
(கன்னி லக்னம், ,துலாம் ராசி, 1ல் சனி, 2ல் சந், செவ், குரு, 4ல் கேது, 10ல் சுக், ராகு, 11ல் சூரி, புத, 27-7-1982 காலை 10-10 கல்கத்தா)
மகனுக்கு ராசிக்கு ஏழை செவ்வாயும், லக்னத்திற்கு ஏழை சனியும் பார்த்து, லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய், ராசிக்கு இரண்டாமிடத்திற்கு சனி பார்வை என்று தார தோஷ அமைப்புள்ள ஜாதகம். அதைவிட முக்கியமாக சுக்கிரனும், ராகுவும் மிக நெருங்கி இருக்கிறார்கள். இதுபோன்ற ஜாதகங்களுக்கு நீடித்த தாம்பத்திய சுகம் கிடைப்பது கடினம். அதனால்தான் திருமணமாகியும் மகன் பிரம்மச்சாரியாக இருக்கிறார்.
மிக முக்கியமாக கணவன்-மனைவி கருத்துவேறுபாடு பற்றிய கேள்விகளுக்கு மனைவியின் ஜாதகத்தையும் இணைத்து வைத்துத்தான் பலன் சொல்ல வேண்டும். அப்போதுதான் சரியாக இருக்கும். மகன் ஜாதகப்படி சுக்கிரனும் ராகுவும், ராகுவின் நட்சத்திரத்தில் இருப்பதால் முதல் திருமணம் நிலைக்க வாய்ப்பில்லை.
தற்போதைய தசாநாதன் சனி, இரண்டாவது மனைவியை குறிக்கும் பதினொன்றாம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் இருப்பதால், 2021 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கிடைக்கும். 40 வயதில் இரண்டாவது திருமணம் உண்டு. எட்டாமிடமும், எட்டாமதிபதியும் சுபத்துவமாக இருப்பதால், இன்னும் சில வருடங்கள் மகன் மலேசியாவில் வேலை செய்வார். ஆனால் நிரந்தரமாக அங்கே இருக்க முடியாது. இந்தியாவில்தான் செட்டில் ஆவார். சுய புக்தி நடப்பதால் 2020ஆம் ஆண்டு முடியும்வரை நல்லவேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. கிடைக்கும் வேலையை ஏற்றுக் கொள்ளச் சொல்லுங்கள். 2021ம் ஆண்டு முதல் நிம்மதி கிடைக்கும்.வாழ்த்துக்கள்.
(01.10.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.