ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
எம். ஜோதிகா, சென்னை- 51.
கேள்வி:
மூன்றாமாண்டு இளம் அறிவியல் உயிரி வேதியியல் படிக்கிறேன். எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்க விரும்புகிறேன். மருத்துவத்தில் முதுநிலைப் படிப்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் நிபுணராக விரும்புகிறேன். எனது பாட்டி பெயரில் மருத்துவமனை கட்டி மக்களுக்கு சேவை புரியவும் ஆசைப்படுகிறேன். இவை நிறைவேறுமா அல்லது எனக்கு தனியார் வேலை, அரசு வேலை கிடைக்குமா? எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(துலாம் லக்னம், ரிஷப ராசி, 4ல் சுக், கேது, 5ல் சூரி, புத, 6ல் செவ், 7ல் குரு, சனி, 8ல் சந், 10ல் ராகு, 13-2-2000 இரவு 10-37 திருவண்ணாமலை)
இளம் வயதில் எல்லோரும் மருத்துவ சேவை செய்யத்தான் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் படித்து முடித்து வெளியே வந்தவுடன் அனைவருமே வணிக நோக்கோடு மாறி விடுகிறீர்கள். ஜோதிடம் உள்ளிட்ட எல்லாத் துறைகளும் வணிக மயமாகி விட்டதைப் போல உயிர் காக்கும் மருத்துவத் துறையும் முற்றிலும் வியாபார நோக்கில் போய் விட்டதுதான் கொடுமை.
ஜோதிடர்களே 1000, 2000 என பீஸ் வாங்கும்போது மருத்துவர்கள் வாங்குவதும் தப்பில்லைதான். வசதி உள்ளவனுக்கே அனைத்தும் கிடைக்கும் என்ற நிலைக்கு உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் அனைவரும் வசதி படைத்தவர்களாக மாறும் போது இது சமப்படுத்தப்படும்.
சென்னையில் சமீபத்தில் புகழோடு மறைந்த ஐந்து ரூபாய் டாக்டர் போன்ற உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்கள் தற்போது மருத்துவத்துறையில் இல்லாமல் போய்க் கொண்டே இருக்கிறார்கள். நீயாவது உண்மையான சேவை செய்கிறாயா என்று பார்க்கலாம்.
லக்னாதிபதியும், ராஜயோகாதிபதியும் திக்பலம் பெற்ற யோக ஜாதகம் உன்னுடையது. மருத்துவத்திற்கு முதன்மை கிரகமான செவ்வாய், குருவுடன் பரிவர்த்தனையாகி, ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் அமர்ந்து, சிம்மத்தை சூரியனும், குருவும் பார்ப்பதால் நீ மருத்துவம் படித்து, அரசு மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வாய். மருத்துவ மேற்படிப்பும் உனக்கு உண்டு. எதிர்காலம் சிறப்பாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
எஸ். சரவணன், திருப்பூர்.
கேள்வி:
சிறிய ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். என்னுடைய மனைவி வேறு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டாள். என்னுடைய மன உளைச்சல் எல்லாம் என் ஏழு வயது பெண் குழந்தையைப் பற்றித்தான். குழந்தையை பார்க்கக் கூட விட மாட்டேன் என்கிறாள். இதுவரை விவாகரத்து கொடுக்கவும் இல்லை. என்னுடைய உரிமையை நீதிமன்றம் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்றால் குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறாள். பயமாக இருக்கிறது. என்னால் குழந்தையைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
கடந்த மாதம் காவல்நிலையம் சென்று குழந்தையைக் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று புகார் தெரிவித்து விட்டேன். குழந்தையின் உயிருக்கு அவர்களே பொறுப்பு என்று காவல் நிலையத்தில் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டார்கள். விவாகரத்திற்காக நீதிமன்றம் செல்லலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு தந்தையாக என்னுடைய குழந்தையை நல்ல பள்ளியில் படிக்க வைத்து அவள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?
பெண் குழந்தையைப் பெற்ற தந்தையின் மன வேதனை யாருக்கு தெரிகிறதோ இல்லையோ தங்களுக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என்று ஒரு கேள்விக்கு பதிலளித்து இருந்தீர்கள். உங்களுக்குத் தெரியும்தானே? இத்தனை நாள் குழந்தையின் உயிரை நினைத்து பயந்து அமைதியாக இருந்தேன். ஆனால் ஒவ்வொரு குழந்தையையும் பார்க்கும் போது என்னுடைய பெண்ணின் ஞாபகம் வந்து விடுகிறது. என்னுடைய குழப்பத்திற்கு ஒரு விடை தாருங்கள். என் குழந்தையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறதா? என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்? என் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்:
(தந்தை 6-1- 1988 அதிகாலை 3- 21 திருப்பூர், மகள் 19-4- 2012 மதியம் 12-21 கோவில்பட்டி)
மகளுக்கு கடக லக்னம், மீன ராசியாகி தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தில், நீசபங்கம் அடையாத புதனும், அமாவாசைக்கு அருகில் இருக்கும் இருள் சந்திரனும் அமர்ந்து, அந்த வீட்டை செவ்வாயும் பார்த்த ஜாதகம். ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு இருக்கிறார். ஒன்பதாம் அதிபதி குருவையும் சனி பார்க்கிறார். இந்த அமைப்புகளால் உங்கள் மகளுக்கு தந்தையாக நீங்கள் எதுவும் செய்ய வாய்ப்பில்லை. அவளது இருபத்தியோரு வயதில் புதன் தசை முடிந்த பிறகே நீங்கள் அவளுக்கு எதுவும் செய்ய முடியும்.
ஆயுள் ஸ்தானாதிபதியும், காரகனுமான சனி உச்சம் பெற்று இருப்பதால் பெண்ணிற்கு ஆயுள் குற்றமில்லை. மனைவியின் தனுசு ராசிக்கு ஜென்மச் சனி நடப்பதாலும், உங்கள் லக்னத்திற்கு இரண்டில் சனி அமர்ந்து, ஏழாம் இடத்தை செவ்வாய் பார்ப்பதாலும் திருமண வாழ்வில் நிம்மதி கிடைக்க வாய்ப்பில்லை. கடந்த வாரம் முதல் சுக்கிரதசை ஆரம்பித்து இருப்பதால் சுக்கிர தசை சுய புத்தியில் இனி உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை நிலைக்கும். மனைவியின் ஜென்மச் சனி முடிந்ததும் உங்கள் வாழ்க்கையில் சில திருப்பங்கள் உண்டு. வாழ்த்துக்கள்.
அ.அன்பரசி, பட்டுக்கோட்டை.
கேள்வி:
கணவர் மற்றும் குழந்தையின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். எனது குடும்பத்தில் அடுத்தடுத்து ஏழரைச்சனி நடக்க இருப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்குமா? முன்னேற்றமான காலம் எப்போது வரும்?
பதில்:
கணவர், மனைவி, குழந்தை என 1, 2 ராசிகள் தள்ளித்தான் பிறந்திருக்கிறீர்கள். ஆகவே அடுத்தடுத்து ஏழரைச்சனி அமைப்பு உங்கள் குடும்பத்தில் வரப் போவதில்லை. அந்தக்கால தம்பதியினர் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்ற நிலையில் எப்போதுமே ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு ஏழரைச்சனி இருந்து கொண்டே இருக்கும். இருந்தும் அவர்கள் உழைத்து வாழ்ந்து, குடும்பம் நடத்தி நன்றாகத்தானே இருந்தார்கள்?
கணவன், மனைவி, குழந்தைகள் ஆகியோர் தொடர் ராசிகளாக இருக்கும்பொழுது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி வருகின்ற நிலையில் குடும்பத்தில் பொருளாதார பின்னடைவு இருப்பது சகஜம்தான். அதற்காக ஏழரைச்சனி நடந்தாலே குடும்பத்தில் கஷ்டம்தான் என்று முடிவு கட்டி விடக்கூடாது. மனதுக்கு அதிபதியான சந்திரனின் மேல் இருள் கிரகமான சனி படரும் காலமே ஏழரைச்சனி என்று சொல்லப்படுகிறது. இதுபோன்ற காலகட்டத்தில், சிந்திக்கத் தெரியும் பருவத்தில் இருக்கும் ஒரு மனிதன் தவறான எண்ணங்களுக்கு ஆட்பட்டு, தவறான முடிவெடுத்து, தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பதே ஏழரைச்சனியின் அனுபவமாக இருக்கும்.
மிகப் பெரும்பாலும் ஒருவருக்கு ஏழரைச்சனி வயதுக்கேற்ற மன அழுத்தங்களை மட்டுமே தரும். குறிப்பாக கணவன்-மனைவி ஒரே ராசியாக இருந்து ஜென்மச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் காலங்களில் ஒரு குடும்பத்தில் நல்ல பலன்கள் நடப்பதில்லை. அதற்காக எப்போது ஏழரை வரும் என்று பயந்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.
எல்லாவற்றிற்கும் மேலாக பரம்பொருள் என்ற ஒன்று இருக்கிறது. நமக்கு என்ன கிடைக்குமோ அது கிடைத்தே தீரும். பரம்பொருள் தருவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே சனியைப் பற்றி பயப்படாமல் எதிர்காலத்தை நன்கு கவனமுடன் திட்டமிட்டுக் கொண்டால் நல்ல வாழ்க்கை அனைவருக்குமே உண்டு. உங்கள் கணவருக்கு மகர ராசி என்பதால் சொந்த ராசிக்கு அதிக கெடுதல்களை சனி தர மாட்டார் எனும் விதியின்படியும், கணவருக்கு சனி நடக்கும் பொழுது உங்களுக்கும் குழந்தைக்கும் ஏழரைச்சனி அமைப்பு இல்லை என்கின்ற அமைப்பின் படியும் உங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது. நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(10.09.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.