ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஒரு வாசகர், திருச்சி.
கேள்வி:
ஜோதிடராக இருக்கிறேன். வயது 44. இதுவரை திருமணம் ஆகவில்லை. ஜாதகப்படி லக்ன சந்தி ஏற்பட்டாலும், நான் துலாம் லக்னமா அல்லது விருச்சிக லக்னமா என்பதை பல்வேறு ஜோதிட ஜாம்பவான்களிடம் ஆராய்ச்சி செய்ததில், என் வாழ்க்கை அனுபவப்படி விருச்சிக லக்கினம் என்றுதான் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் என் ஜாதக பலனை விருச்சிக லக்னப்படி சொல்லவும்.
கடந்த காலங்களில் 8-க்குடைய புதன் தசை, ஆறில் அமர்ந்த கேது தசை என்பதால் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஜோதிடராக இருப்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இன்று கோவில் குருக்கள், ஜோதிடர்கள், சினிமா, விவசாயம், சொந்தத் தொழில், மார்க்கெட்டிங் வேலை என்றால் யாரும் பெண் கொடுப்பதில்லை. பெண்ணைப் பெற்றவர்கள் சாப்ட்வேர், அரசுவேலை, டாக்டர், போன்றவர்களுக்குத்தான் பெண் கொடுக்க விரும்புகிறார்கள். பெண்ணிற்கு 40 வயது ஆனாலும் சாப்ட்வேர் மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள்.
திருமண வயதுள்ள பெண்களும் வயது வித்தியாசம் இரண்டு முதல் ஐந்து வருடத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கடும் நிபந்தனைகளை விதிக்கிறார்கள். எனக்கு சொந்த வீடு, சொத்து இருந்தும் யாரும் பெண் தரவில்லை. ஜாதகப்படி எனக்கு திருமண வாழ்க்கை உண்டா? இல்லை என்றால் சன்னியாசியாக விரும்புகிறேன். காஞ்சி மகாபெரியவர் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்க்கை பெற்றது போல என் ஜாதகத்திலும் சுக்கிரன்-ராகு இணைவு உள்ளதால் எனக்கு திருமண வாழ்க்கை அமையுமா? என் சுய இனத்தில்தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். இல்லையென்றால் கடைசிவரை பிரம்மச்சாரியாகவே இருப்பேன்.
எனக்கு சினிமா, ஜோதிடம், அரசியல், சொந்தத் தொழில் எது சிறந்தது? ஆரம்பித்திருக்கும் சுக்கிர தசையில் எதைச் செய்யலாம்? சுக்கிரன் ராகு சேர்ந்து மூன்று டிகிரிக்குள் உள்ளதால் சுக்கிர தசை யோகம் அளிக்குமா? நடிகை தமன்னா, உலக அழகி ஐஸ்வர்யாராய், பானுமதி, நடிகர் பிரபு, மர்லின் மன்றோ, கரிஷ்மா கபூர் ஜாதகத்தில் சுக்கிரன், ராகு சேர்ந்து திரைத்துறையில் சாதித்து வருகிறார்கள். அதைப்போல எனக்கு கலைத்துறை சாத்தியமாகுமா? எதிர்காலத்தில் மக்களுக்கு நன்மை செய்ய காஞ்சி மகாபெரியவரின் ஒரு பிடி அரிசித் திட்டம் அல்லது வள்ளலாரின் அன்னதானம் போன்ற டிரஸ்ட் அமைக்க விரும்புகிறேன். இது ஒத்து வருமா? முடியுமா?
பதில்:
(துலாம் லக்னம், கடக ராசி, 1ல் சுக், ராகு, 3ல் சூரி, புத, 6ல் குரு, 7ல் கேது, 8ல் செவ், 10ல் சந், சனி, 21-12-1975 அதிகாலை 3-55 க்கு முன், திருச்சி)
ஜோதிடராகிய நீங்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இங்கே எத்தனை வருடம் ஜோதிடராக இருக்கிறோம், யார் ஜோதிட ஜாம்பவான் என்பதைவிட ஒருவர் ஜோதிடத்தை எவ்வாறு சரியாக புரிந்துகொள்ளும் ஞானத்துடன் இருக்கிறோம் என்பதே முக்கியம். வயதும் அனுபவமும் இரண்டாம் பட்சம்தான். ஒரு சிறுவனுக்கு இருக்கும் கணித ஞானம், எண்பது வயது கிழவருக்கு இருக்க வேண்டும் எனும் அவசியம் இல்லை. ஜோதிடம் என்பதும் ஒருவகையான ஞானக் கணிதம்தான்.
உண்மையைச் சொல்லப்போனால் கடந்த எட்டு ஆண்டு காலமாகத்தான் நான் தொழில் முறை ஜோதிடராக இருக்கிறேன். அதற்குமுன் மிகப்பெரிய ஜோதிட ஜாம்பவான்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த பலருக்கு ஜோதிட ஞானம் குறைவு என்பது நான் இதை தொழிலாகச் செய்ய ஆரம்பித்த பிறகு என்னிடம் வரும் வாடிக்கையாளரின் மூலம் உணர முடிந்தது.
அனுபவமும், ஞானமும் உள்ள ஒரு ஜோதிடரிடம் எனக்கு விருச்சிக லக்னமா, அல்லது துலாம் லக்னமா என்றுதான் நீங்கள் கேட்க வேண்டுமே தவிர, எனக்கு விருச்சிக லக்னப்படி பலன் சொல் என்று கட்டளையிட கூடாது. இதுவே ஜோதிடத்தில் உங்களுக்கும் உங்களை விருச்சிக லக்னம் என்று சொன்னவர்களுக்கும் உள்ள ஞானக்குறைவைக் காட்டுகிறது.
அதிகாலை 4 மணி சுமாருக்கு நீங்கள் பிறந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். நாற்பது வருடங்களுக்கு முன், அதிகாலையில் கிராமங்களில் பிறக்கும் ஒருவருக்கு பிறந்த நேரம் துல்லியமாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. 3-55 க்கு முன்பே நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள்.
லக்னாதிபதி பாதிக்கப்பட்டலே வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை சுகங்கள், பாக்கியங்கள் கிடைக்காது என்பதை அடிக்கடி எழுதுகிறேன். அதன்படி உங்களின் லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்திலேயே அமர்ந்தாலும், ராகுவுடன் மிக நெருங்கி இணைந்து லக்னமும், ராசியும் பாதிக்கப்பட்டு, லக்னத்தின் ஜென்ம விரோதியான 6-க்குடைய குரு வலுத்த அவயோக ஜாதகம் உங்களுடையது.
என்னுடைய சுபத்துவ, சூட்சுமவலு கோட்பாட்டின்படி “ஒரு ஜாதகத்தில் அதிக சுபத்துவம் அடைந்த கிரகத்தின் தொழில் அமையும்” என்ற விதிப்படி உங்கள் ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், புதன் மட்டுமே மிகப்பெரும் சுபரான ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் அமர்ந்து, ஒன்பதாம் இடமான தன் வீட்டைப் பார்ப்பதால் ஜோதிடத் தொழில் செய்கிறீர்கள்.
நீங்களே சொல்லிக் கொள்வதன்படி நீங்கள் விருச்சிக லக்னத்தில் பிறந்திருந்தால் லக்னாதிபதி செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து சுபத்துவமாகி, லக்னத்தைப் பார்த்து, ஆட்சி பெற்ற குருவும், லக்னம்- ராசி இரண்டையும் பார்த்த நிலையில் உங்களுக்கு முறையான பருவத்தில் திருமணமாகி இந்நேரம் உங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்திருக்குமே அய்யா? பத்திற்கு உடைய சூரியன் ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் இரண்டில் அமர நிலையான தொழிலும் இருந்திருக்கும்.
லக்னாதிபதி வலுவிழந்தால் மட்டுமே ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வித சுகங்களும் கிடைக்காது. லக்னாதிபதியைத் தவிர்த்து மற்ற கிரகங்கள் அனைத்தும் லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும் துணை செய்யும் கிரகங்கள் மட்டும்தான். மற்ற கிரகங்கள் தனித்து இயங்க முடியாதவை. எட்டு கிரகங்களும், பதினோரு பாவகங்களும் தனித்தனி கயிறுகளாக இருந்தாலும், ஒருநிலையில் ஒன்றாக இணைந்து, லக்னம் என்ற முனையில்தான் சேரும்.
ஜோதிடர்கள் என்றால் பெண் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றெல்லாம் எழுதி இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால், பிச்சை எடுத்து பிழைப்பவருக்குக் கூட முறையான வழியில் திருமணம் நடந்து, அவரும் பிளாட்பாரமாக இருந்தாலும் நான்கு சாக்குகளை மறைவாக தொங்கவிட்டுக் கொண்டு, தாம்பத்தியம் நடத்தி குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளத்தான் செய்கிறார்.
பணக்காரனோ, ஏழையோ அவனுக்கு கிடைக்கவேண்டிய சுகங்களுக்கான கிரகங்கள் நன்றாக இருக்கும் நிலையில், ஏதோ ஒரு நிலையில் ஒருவனுக்கு அந்த சுகம் கிடைத்தே தீரும். கோடிகளைக் கொட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, பெண்கள் அருகில் வந்தாலே கை கால் நடுக்கம் ஏற்படுகின்ற ஜாதகத்தையும் நான் பார்த்திருக்கிறேன். 50 வயதாகியும் பெண் என்றால் என்னவென்றே தெரியாத, பணத்தையும், அதிகாரத்தையும் குவித்து வைத்திருப்பவரும் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்தான்.
பெண்ணைப் பெற்றவன், தன் பெண்ணை இவன் நல்லபடியாக வைத்து காப்பாற்றுவானா என்பதைத்தான் பாப்ப்பானே தவிர, அவன் ஜோதிடனா, சினிமாக்காரனா, கோவில் குருக்களா என்று பார்க்க மாட்டான். அப்படியென்றால் கோவில் குருக்கள் எல்லாம் பிரம்மச்சாரிகளாகத்தான் இருக்க வேண்டும்.
பெண்கள் கடும் நிபந்தனை விதிக்கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். உண்மையைச் சொல்லப்போனால் பெண்கள் இப்போது விதிக்கும் நிபந்தனைகளை ஆண்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்னும் 30 ஆண்டுகளில் திருமணம் என்ற பந்தமே இல்லாமல் இருக்கப் போகிறது. அதை நோக்கித்தான் சமூகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளில் பெண்கள் படிக்க ஆரம்பித்து தங்களுடைய சொந்தக் காலில் நிற்பதால் வரும் விளைவு இது. பெண்ணை ஆண் அடிமை கொண்ட காலம் போய் ஆணைப் பெண் அடிமை கொள்ளும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இணையத்தின் தயவால் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு என்னுடைய இந்த எழுத்தை படிக்கும் யாரோ ஒருவர் இதை நன்கு உணர முடியும்.
ஆணை விட பெண் அதிகம் புத்திசாலியாகவும், அதிகம் சம்பாதிப்பவளாகவும், எதையும் சமாளிக்கத் தெரிந்தவளாகவும் இருக்கும் நிலையில், அவள் விதிக்கும் நிபந்தனைக்கு ஆண் சமூகம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
இது இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. இதுபோன்ற அழுகுரல்கள் இப்போதே கேட்க ஆரம்பித்து விட்டது. இன்னும் 10, 20 ஆண்டுகளில் பெண்கள் விதிக்கப் போகும் நிபந்தனைகளை ஆண்கள் கனவிலும் நினைக்க முடியாது.
லக்னாதிபதி முழுக்க பலவீனமான ஒருவன் நிலையில்லா குணம் மற்றும் அலைபாயும் தன்மையோடு இருப்பான் என்பது ஜோதிட விதி. அதன்படி உங்களின் லக்னாதிபதி சுக்கிரன் ராகுவுடன் மிக நெருங்கி பலவீனமானதாலும், ராசியில் சனி இருப்பதாலும் திருமண வாழ்க்கை அமையாவிட்டால் கடைசிவரை பிரம்மச்சாரியாக இருக்க விரும்புகிறேன் என்று எழுதி இருக்கிறீர்கள்.
திருமண வாழ்க்கை அமையாவிட்டால் நீங்கள் பிரம்மச்சாரிதானே அய்யா? கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? யாரும் பெண் கொடுக்காவிட்டால் நான் கடைசிவரை கல்யாணம் ஆகாமலே இருந்து விடுவேன் என்றல்லவா பேசுகிறீர்கள். அதுதானே உண்மை. சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்பது போல் அல்லவா இந்த வார்த்தை இருக்கிறது.
சினிமா நடிக, நடிகைகள் அனைவரின் ஜாதகத்திலும் சுக்கிரன் இராகு சேர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். உண்மைதான். நான் கூட இதைப் பற்றி அதிகமாக எழுதி இருக்கிறேன். சுக்கிரன் ராகு தொடர்பு ஏற்பட்டால்தான் ஒருவர் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்க முடியும் என்பது விதி. ஆனால் எல்லாவற்றிற்கும் மிக முக்கியமாக லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னாதிபதி வலுத்தவனே பிரபலமாகி அனைத்தையும் பெற்று வாழத் தகுதி படைத்தவன். மற்றவர்கள் அனைவரும் அவன் பின்னால் செல்லப் படைக்கப்பட்டவர்கள்தான்.
ஜோதிடத்தின் மூலவன் சூரியன் என்றால், ஜாதகத்தின் மூலவன் அந்த லக்னத்தின் அதிபதி. இதைக்கூட சரியாகப் புரிந்து கொள்ளாமல், நான் பல்வேறு ஜோதிட ஜாம்பவான்களிடம் ஆராய்ச்சி செய்ததில், எனக்கு விருச்சிக லக்னம்தான் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி எனக்குப் பலன் சொல்லுங்கள் என்று எனக்கு கடிதம் எழுதுகிறீர்கள்.
நடப்பு சுக்கிர தசையும், ஆறுக்குடைய குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்து, ராகுவுடன் மிக நெருங்கி, சாரம் கொடுத்தவனும் தசாநாதனும் சஷ்டாஷ்டகமாக உள்ள நிலையில், லக்னத்தில் ராகு-கேதுக்கள் சுபத்துவமாகி, ராசியில் சனி அமர்ந்து, குருவின் பார்வையில் இருக்கிறார்கள். இதன்மூலம் லக்னம், ராசிக்கு குரு, சனி, கேது தொடர்பு ஏற்படுவதால் உங்களுக்கு இனிமேல் ஆன்மீகத் தொடர்புகள் அதிகம் ஏற்படும்.
மனதை இயக்குவது கிரகங்களே என்பதன் அடிப்படையில், திருமணம் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்பது உங்களுடைய ஆழ்மன ஆசை என்றால், கை நொண்டியோ, கால் நொண்டியோ ஏதோ ஒரு பெண் எனக்கு தாம்பத்திய சுகத்துக்காகவும், வாரிசைக் கொடுப்பதற்காகவும் போதும் என்ற மனநிலை உங்களுக்கு இருந்திருக்கும். திருமணமும் ஆக வேண்டும், அவள் எனது சுய இனப் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்று மணல் கயிறு எஸ்வி. சேகர் போல் நீங்கள் நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே போக மாட்டீர்கள். சுக்கிர தசையில் உங்களுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்காது.
கடைசி வரியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. போகப்போக உணர்ந்து கொள்வீர்கள். வாழ்த்துக்கள்.
(20.08.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.