adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 250 (20.08.19)

கே.ஜெயராமன், திருச்சி-2.

கேள்வி:

என் வயது 79. மாதம் ரூ.14000 ஓய்வூதியம் வாங்குகிறேன். இதில் குழந்தைகளுக்கான புத்தகத்தை 100 பிரதி தயாரித்து இலவசமாக வினியோகிக்கிறேன். இதையே விற்பனைக்கு தயாரித்து மனைவியின் பெயரில் வெளியிடலாமா? மனைவியின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். பத்திரிகைத் தொழில் மூலம் மனைவி பயனடைய முடியுமா? உங்கள் பதிலைப் பார்த்த பிறகுதான் தீவிரமாக இறங்குவேன்.


பதில்:

மனைவியின் ஜாதகப்படி தனுசு லக்னமாகி, பத்திரிக்கைக்கு காரக கிரகமான புதன், ஏழாமிடத்தில் குருவின் பார்வையில் ஆட்சியாக இருப்பதால், மனைவிக்கு பத்திரிகை தொழில் ஏற்றதுதான். இருப்பினும் அவரது மிதுன ராசிக்கு வரும் ஜனவரி மாதம் அஷ்டமச் சனி ஆரம்பிக்க இருக்கிறது. அஷ்டமச் சனி காலங்களில் புதிய தொழில் துவங்கவோ, இருக்கும் தொழிலை விரிவுபடுத்தவோ கூடாது. 

அது சரிவராது. ஏற்கனவே இருக்கின்ற வேலை, தொழில் கூட அஷ்டமச் சனி காலங்களில் சிரமங்களுக்கு உள்ளாகும். எனவே சிறிதோ, பெரிதோ இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீங்கள் தொழில் முயற்சிகளில் இறங்குவது நல்லதல்ல. வாழ்த்துக்கள்.

எஸ். சுப்பிரமணியன், மன்னார்குடி.

கேள்வி:

84 வயதாகும் எனக்கு பிறந்ததிலிருந்தே போராட்டமான வாழ்க்கைதான். எட்டு வயதிலேயே தகப்பனார் இறந்து, நானும் என் தாயும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதுவரை எந்த தொழிலும் நிரந்தரமாக அமையவில்லை. 33 வயதிற்கு மேல் திருமணமாகி மூன்று பெண்களுக்குப் பிறகு ஒரு பையன். எல்லோரும் சொந்த வீட்டில் நன்றாக இருக்க நானும் எனது மனைவியும் மட்டும் தனியாக வாடகை வீட்டில் இருக்கிறோம். பிறந்தது முதல் இன்றுவரை சொந்த மனை இல்லை. கடைசி காலத்திலாவது அந்த யோகம் உண்டா? எனது ஆயுள்பலம் எப்படி?

பதில்:

(மேஷ லக்னம், கடக ராசி, 4ல் சந், கேது, 6ல் செவ், 8ல் குரு, 10ல் ராகு, 11ல் புத, சனி, 12ல் சூரி, சுக், 16-3-1935 காலை 8 மணி, மன்னார்குடி)

வாழ்க்கையின் முற்பகுதிவரை அவயோக தசைகளான புதன், சுக்கிரன் என நடந்ததால் மிக முக்கியமான காலகட்டத்தில் செட்டிலாக முடியாமல் போன ஜாதகம். 9-க்குடையவர் எட்டில் மறைந்து, சூரியன் 12ல் மறைந்து, செவ்வாய் பார்வை பெற்றதால் சிறு வயதிலேயே தந்தை மரணம். ராசிக்கு ஏழில் ராகு, எட்டில் சனி 33 வயதில் திருமணம்.

நான்காம் வீட்டோன் ராகு-கேதுக்களுடன் இணைந்த நிலையில், சொந்த வீட்டிற்கு காரகனான, சுக்கிரன் உச்ச வர்க்கோத்தமம் அடைந்ததால் உங்களுக்கு சொந்த வீடு பாக்கியம் இல்லை. சுப கிரகங்கள் உச்ச வர்கோத்தமம் பெறுவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு எனும் அடிப்படையில் எதிர்மறை பலன்களைத் தரும்.

எட்டாம் வீடு குருவின் இருப்பால் சுபத்துவம் அடைந்து, தனித்த புதனுடன் ஆயுள்காரகன் சனி இணைந்து, லக்னாதிபதியை  சுக்கிரன் பார்த்து, ராசியைக் குரு பார்ப்பதால் உங்களுக்கு நீண்ட ஆயுள் அமைப்பு உண்டு. 2022ல் ஆரம்பிக்க இருக்கும் குரு தசை, சனி புக்தியில் உங்களுக்கு நல் முடிவு இருக்கும். வாழ்த்துக்கள்.