ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மகாலட்சுமி, சென்னை.
கேள்வி.
நான் நீண்டநாள் மாலை மலர் வாசகி. நடுத்தர குடும்பத் தலைவி. மூத்த மகளுக்கு சென்ற வருடம் மிகவும் கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தோம். முதல் மூன்று மாதங்கள் அவள் வாழ்க்கை நன்றாகத்தான் இருந்தது. பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டு இன்று வரை ஒரே வீட்டில் அன்னியோன்யம் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும்? இருவரும் ஒன்று சேர்ந்து பேரன் பேத்தியை பார்க்க வேண்டும் என்ற என் ஆசை எப்போது நிறைவேறும்? இங்குள்ள ஜோதிடரிடம் மகள் மற்றும் மருமகன் ஜாதகத்தைக் காட்டி பலன் கேட்டபோது மகளுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும் என்று கூறினார். எனக்கு மிகவும் அச்சமாகவும் குழப்பமாகவும் உள்ளது. ஆண் வாரிசு இல்லாத என் வீட்டில் மருமகனைத்தான் மகனாக நினைக்கிறோம். ஆனால் மருமகன் எங்கள் மீது கோபமாகவும், பாராமுகமாகவும் உள்ளார். மகளுக்கு இந்த வாழ்க்கை நிலைக்குமா?
பதில்.
(கணவர் 12-4-1986 அதிகாலை 12-15 சென்னை, மனைவி 24-7-1996 காலை 11-20 சென்னை)
மகளின் ஜாதகப்படி கன்னி லக்னம், துலாம் ராசியாகி, லக்னத்தில் ராகு அமர்ந்து செவ்வாய், சனி இருவரும் ஒருசேர லக்னத்தை பார்ப்பதால் மகள் கோபக்காரியாகவும், ஈகோ உள்ளவராகவும் இருப்பார். நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையில் மகளின் பங்கு அதிகமாக இருக்கும்.
மருமகன் ஜாதகப்படி அவர் சிறிது விட்டுக் கொடுத்து போகும் குணம் உடையவர்தான். வாழ்க்கை என்றால் என்ன என்பதை மகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள். இரண்டாவது திருமணம் என்ற எண்ணம் கடுகளவு மனதில் தோன்றினாலும் அவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை இதுதான் “இரண்டாவதாக வருபவர் முதலில் இருந்தவரே நல்லவர் என்று ஆக்கிவிட்டால் என்ன செய்வீர்கள்? மூன்றாவதாக இன்னொருவரை தேடிப் போவீர்களா என்பதுதான்.”
நம்முடைய கலாச்சாரத்தில் கணவன்-மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால், அதிக சேதம் ஏற்படுவது பெண்ணின் தரப்பில்தான் என்பதால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்ணே ஒரு படி இறங்கி வந்து வாழ்க்கையை சீராக்கிக் கொள்ள வேண்டும். உரிமை உள்ளவர்களிடம் விட்டுக் கொடுப்பதில் தவறு ஏதுமில்லை. விட்டுக் கொடுப்பதில் உள்ள சுகத்தை உங்கள் பெண்ணிற்கு புரிய வையுங்கள். எல்லாவற்றையும் எல்லோரிடமும் விட்டுக் கொடுத்துவிட வேண்டும் என்பது இல்லை என்றாலும், இறங்கிப் போக வேண்டிய இடத்தில் சற்றுத் தாழ்ந்து போய்த்தான் ஆக வேண்டும்.
கணவன்-மனைவி இருவரின் ஜாதகப்படி இருவருக்குமே இரண்டாவது திருமணம் இல்லை. தற்போது மருமகனுக்கு ராகுதசையில் நீச்ச புதன் புக்தி நடப்பதால் மனைவியால் சந்தோஷம் இல்லாத நிலைமை இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதிக்கு பிறகு நிலைமை மாறும். கவலை வேண்டாம். இருவரும் இணைந்தே இருப்பார்கள். வாழ்த்துக்கள்.
வீ. சுந்தரராஜன், சிவகாசி மேற்கு.
கேள்வி.
மகன் மாலத்தீவில் பணிபுரிகிறார். கடந்த மாதம் இரண்டு ஜாதகம் பொருத்தமாக வந்து உறுதி செய்யும் சமயத்தில் மகனின் விருப்பமின்மையால் தடைப்பட்டு விட்டது. பணியிடத்தில் முக்கிய ப்ராஜெக்டில் பொறுப்பில் உள்ளதாகவும், இன்னும் ஒரு வருடத்திற்கு திருமணம் வேண்டாம் என்றும் சொல்கிறான். இவனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? பெண் தமிழ்க் கலாச்சார அடிப்படையில்தானா அல்லது அவன் விருப்பப்படி யாரேனும் உள்ளனரா? கேட்டரிங் துறையில் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறான். தொழில் ஒத்து வருமா? வருங்காலத்தில் இந்தியாவில் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா அல்லது அயல்நாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆவானா?
பதில்.
(மேஷ லக்னம், மேஷ ராசி, 1ல் சந், குரு, 6ல் கேது, 9ல் செவ், சனி, 10ல் புத, 11ல் சூரி, 12ல் சுக், ராகு 23-2-1988 காலை 10-5 சிவகாசி)
மகனுக்கு 5-க்குடையவர் ஐந்தைப் பார்த்து, 9-க்குடையவர் ஒன்பதைப் பார்த்து, லக்னாதிபதியும் 9-க்குடையவரும் பரிவர்த்தனையான யோகஜாதகம். ஆனால் ஒன்பதாமிடத்தில் செவ்வாய், சனி இணைவது தாமத புத்திர பாக்கியம் மற்றும் திருமண அமைப்பு. சுக்கிரன் உச்சமாக இருந்தாலும் ராகுவுடன் இணைந்திருக்கிறார். இதுபோன்ற ஜாதகங்களுக்கு 33 வயதில் திருமணம் நடக்கும்.
ராசி, லக்னம் இரண்டிற்கும் ஏழாமிடத்தை பாபக் கிரகங்கள் பார்க்காமல் குரு பார்ப்பதால் மிக நல்ல வாழ்க்கைத்துணை அமையும். மகனின் மனதில் ஒரு விருப்பம் இருக்கிறது. ஆனால் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். அக்டோபர் மாதம் வரை மகனிடம் திருமணம் பற்றி பேச வேண்டாம். அதன் பிறகு கேளுங்கள். சரியான பதில் சொல்வார். தற்போது 12-ல் உள்ள ராகு தசையும், அதனையடுத்து சர ராசியில் இருக்கும் பனிரெண்டுக்குடைய குரு தசையும் நடக்க இருப்பதால், வெளிநாட்டில் நீண்டகாலம் குடும்பத்துடன் வசிப்பார். ஆனால் நிரந்தரமாக அங்கேயே செட்டில் ஆக மாட்டார். வாழ்வின் இறுதியில் இந்தியாவிற்கு வருவார். சொந்தத் தொழில் செய்யலாம். வாழ்த்துக்கள்.
எஸ். மணியன், காங்கேயநல்லூர்.
கேள்வி.
தங்களது தீவிர ரசிகன் நான். எனது பெரிய மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 6-6-2017 மாலைமலரில் பதில் தந்து இருந்தீர்கள். தாங்கள் கூறியபடியே திருமணம் நடந்தது. தற்போது எனது இளைய மகள் மற்றும் வரனின் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். திருமண பொருத்தம் உள்ளதா, இவர்களுக்கு திருமணம் செய்தால் நன்றாக இருக்குமா என்று தெரிவிக்கவும்.
பதில்.
திருமணப் பொருத்தம் சம்பந்தமான கேள்விகளை தயவுசெய்து எனக்கு அனுப்பாதீர்கள். உங்களுடைய கேள்வி எனது பார்வைக்கு வந்து, நான் மாலைமலரில் அதற்கு பதில் தருவதற்குள் உங்கள் மகளுக்கு திருமணமே முடிந்து விடலாம். ஒரு உயரிய நோக்கத்தில் மாலைமலர் தரும் சேவை பொதுவான ஒன்று என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் இருவரையும் இணைக்கலாமா என்ற பொருத்தம் பார்ப்பதற்கு, பத்துப் பொருத்தம் பார்க்கத் தேவை இல்லை. ஜாதக அனுகூலப் பொருத்தம் பார்க்கத் தெரிந்த ஒரு நல்ல அனுபவமுள்ள ஜோதிடரிடம் அருகிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
பி. உமாதேவி, மலேசியா.
கேள்வி.
குருஜி அவர்களுக்கு வணக்கம். என் கேள்விகளுக்கு 19-12-2017 மாலைமலரில் பதில் கொடுத்திருந்தீர்கள். கணவரின் மது அருந்தும் பழக்கம் மற்றும் வேலை பற்றி கேட்டிருந்தேன். நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. கணவரால் மதுப் பழக்கத்தை முற்றிலும் கைவிட முடியவில்லை. இப்போதும் அவ்வப்போது குடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் முன்பை விட குறைவாகத்தான் இருக்கிறது. ஏதோ பரவாயில்லை என்று சமாதானம் அடைகிறேன். நீங்கள் சொன்னது போல மார்ச் மாதம் என் கணவருக்கு அரபு நாட்டில் இரண்டு இன்டர்வியூக்கள் வந்தன. நன்றாக செய்து செலக்ட் ஆகி விட்டார். ஆனால் விசா இன்னும் கிடைக்கவில்லை. தற்போது மலேசியாவில் இருந்து சொந்த ஊரான கோவைக்கு வந்திருக்கிறோம். அவர் எப்போது வெளிநாடு செல்வார்? வருமானம் குறைவாக இருப்பதால் நிறைய கடன்கள் ஆகிவிட்டது. சொத்துக்களையும் விற்க முடியவில்லை. கடன்கள் எப்போது அடையும்?
பதில்.
(மிதுன லக்னம், கன்னி ராசி, 4ல் சந், குரு, கேது, 5ல் செவ், 8ல் சூரி, புத, 10ல் சுக், சனி, ராகு, 6-2-1969 மாலை 4-31 ஈரோடு)
கணவரின் ஜாதகப்படி ராகுவுடன் 16 டிகிரி விலகி இணைந்திருக்கும் சனியின் தசை அடுத்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பிக்க இருக்கிறது. சனி பாபத்துவம் அடைந்திருந்தாலும் உச்ச சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருக்கிறார். இந்த அமைப்பு கணவரை இஸ்லாமிய நாட்டில், சனி தசையில் பொருள் சம்பாதிக்க வைக்கும் நிலை.
இந்த வருடம் நவம்பர் மாதம் 18ஆம் தேதிக்கு பிறகு கணவரின் ஜாதகப்படி அவர் சனிக்குரிய மேற்குத்திசை நாட்டிற்கு செல்வார். சனி எட்டுக்குடையவன் என்பதால் வெளிநாட்டில் நீண்ட காலம் பணிபுரிவார். கடன்கள் அடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும். 2022 முதல் கடன்கள் இருக்காது. வாழ்த்துக்கள்.