ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
எஸ். யோகேஷ்ராஜ், சென்னை.
கேள்வி.
வழக்கறிஞருக்கு படித்து வருகிறேன். ஜெராக்ஸ் கடை மற்றும் பத்திரம், தட்டெழுத்து அலுவலகம் சேர்த்து தொழில் வைக்கலாம் என்று நினைக்கிறேன். என் பெயரிலேயே வைக்கலாமா? எதிர்காலத்தில் என் தந்தையை நல்லபடியாக பார்த்துக் கொள்வேனா?
பதில்.
(தனுசு லக்னம், தனுசு ராசி, 1ல் சந், கேது, 6ல் குரு, சனி, 7ல் ராகு, 8ல் சூரி, புத, செவ், 9ல் சுக், 11-8-2000 மாலை 4-15 சென்னை)
பொய் சொல்ல வைக்கும் கிரகமான சனி சுபத்துவ, சூட்சும வலுப்பெற்று ராசி லக்னத்திற்கு இரண்டு, பத்தாமிடங்களோடு சனி, குரு தொடர்பு கொண்டால் வழக்கறிஞர் தொழில் அமையும் என்பதன்படி, உங்களுக்கு தனுசு லக்னமாகி, லக்னம், ராசி இரண்டின் இரண்டாம் வீடு சனியின் வீடாகி, வர்க்கோத்தமம் அடைந்த குருவோடு சனி இணைந்து சுபத்துவம் பெற்று, குரு 2, 10-ஆம் இடங்களைப் பார்ப்பதால் வழக்கறிஞராக படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அடுத்தடுத்து யோக தசைகள் வருவதால் எதிர்காலத்தில் நல்ல வழக்கறிஞராக தொழில் செய்ய முடியும். பத்தாம் அதிபதி புதன் என்பதால் ஜெராக்ஸ், தட்டெழுத்து கை கொடுக்கும். பெயரில் ஒன்றுமில்லை. யார் பெயரில் வைத்தாலும் நேரம் நன்றாக இருந்தால் எதுவும் நன்றாகும். தந்தையை கடைசிவரை காப்பாற்றுவீர்கள். வாழ்த்துக்கள்.
ராஜேந்திரன், நெல்லை.
கேள்வி.
ஜோதிடசாஸ்திரம் எனக்கு வருமா? இரண்டில் குரு உள்ளதால் வாக்கு பலிதம் உண்டா? குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் அருள் எனக்கு இருக்கிறதா? ஆயுள் காலம் எவ்வளவு? வறுமை, நோய் போன்றவை ஒழிந்து எப்போது மனதாலும் உடலாலும் நன்றாக இருப்பேன்?
பதில்.
(கடக லக்னம், மீன ராசி, 2ல் குரு, 3-ல் கேது, 9ல் சந், சனி, ராகு, 10ல் சுக், 11-ல் சூரி, செவ், 12ல் புத, 22-5-1968 காலை 10-30 அம்பை)
சந்திரனுக்கு கேந்திரத்தில் புதன் பங்கமின்றி ஆட்சி பெற்று அமர்ந்து, அம்சத்தில் சுபத்துவ நிலையில் இருப்பதால் உங்களுக்கு ஜோதிடம் வரும். அதேநேரத்தில் லக்னாதிபதி சந்திரன், சனி-ராகுவுடன் இணைந்து தேய்பிறையாகி வலுவிழந்து இருப்பதால், முழுமையான ஜோதிட ஞானம் கிடைக்காது. வாக்கு ஸ்தானத்தில் குரு இருப்பதால் நல்ல வாக்கு சொல்வீர்கள் என்பதோடு அது பலிக்கவும் செய்யும்.
ஜோதிட ஞானம் அதிகரிக்க அன்னை சவுடாம்பிகையை வழிபடவும். ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தீர்க்காயுள் இருப்பீர்கள். தெய்வ அருள் உண்டு. பிறந்தது முதல் இதுவரை அவயோக தசைகள் நடந்ததால் எந்தவித முன்னேற்றமும் இன்றி கஷ்டத்தில்தான் இருப்பீர்கள். இந்த வருடம் முதல் சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் நடக்க இருப்பதால், 51 வயதிற்குப் பிறகு இனிமேல் நன்றாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. வாழ்த்துக்கள்.
வி. நடராஜன், புலிவலம்.
கேள்வி.
என்னுடைய அவசரத்தாலும், பிறருடைய கருத்துக்களுக்கு முக்கியம் தராமலும் நான் தொடங்கிய சில தொழில்களால் இன்று நான் பெரும் கடனாளியாக இருக்கிறேன். வட்டிக்கு வாங்கி வட்டி கொடுத்து நாணயத்தைக் காப்பாற்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறேன். ஆனால் முடியவில்லை. உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கைவிட்டு விட்டனர். புலி வாலைப் பிடித்த கதையாக ஒரு தொழிலை நடத்தி வருகிறேன். தற்கொலை ஒன்றைத் தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு வந்த நிலையில், கடந்த ஜூன் 25 மாலைமலரில் சென்னையைச் சேர்ந்த என் போன்ற பிரச்சனை கொண்ட ஒருவருக்கு ஆலோசனை சொல்லி இருந்தீர்கள். அதைப் படித்து மனதை மாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் பணக்காரனாக இருக்க வேண்டாம். கடனை அடைத்துவிட்டு நாணயமாக வாழ விரும்புகிறேன். தலைநிமிர்ந்து நடந்த ஊரில் தலைகுனிந்து நடக்கிறேன். இந்த நிலை மாறுமா? எனக்கு இனி வாழ்வா சாவா?
பதில்.
(கன்னி லக்னம், மிதுன ராசி, 1ல் குரு, 4ல் கேது, 5ல் செவ், 6ல் சூரி, புத, 7ல் சுக், 10ல் சனி, சந், ராகு, 22-2-1945 இரவு 8-30 கண்டி)
லக்னாதிபதி புதன் ஆறாமிடத்தில் அமர்ந்து, பத்தில் உள்ள சனியோடு பரிவர்த்தனையாகி, லக்னத்தை உச்ச சுக்கிரன் பார்த்து, சுபர் லக்னத்தில் அமர்ந்த யோக ஜாதகம் உங்களுடையது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறாம் இடத்தில் அமர்ந்த லக்னாதிபதி புதனின் சாரம் வாங்கிய சுக்கிரனின் தசை நடந்து கொண்டிருக்கிறது. சுக்கிர தசை ஆரம்பித்ததிலிருந்தே நீங்கள் கடன் தொல்லைகளில் மாட்டிக் கொண்டிருப்பீர்கள்.
கன்னி லக்னக்காரர்களுக்கு சுக்கிர தசையில், புதன் புக்தி அல்லது புதன் தசையில், சுக்கிர புக்தி வரும் பொழுது அப்போதிருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் நல்லபடியாக தீர வேண்டும் என்பது விதி. புதனும், சுக்கிரனும் ஜாதகத்தில் மோசமான அமைப்பில் இருந்தாலும் கன்னி லக்னக்காரரை கை தூக்கி விடவே முயற்சி செய்வார்கள். இவர்கள் கன்னிக்கு தர்மகர்மாதிபதிகள் என்பதால் தர்மகர்மாதிபதிகள் இருவரும் சம்பந்தப்பட்ட தசாபுக்தி வரும்போது ஒருவருக்கு நிம்மதி கிடைக்க வேண்டும் என்பதன்படி ஒரு மாதத்திற்கு முன்பு ஆரம்பித்த புதன் புக்தி முதல் இன்னும் இரண்டரை வருடங்களில் கடன் தொல்லைகள் உங்களுக்கு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். மனதை தளர விட வேண்டாம்.
அதே நேரத்தில் உங்களுக்கு அடுத்த வருடம் முதல் அஷ்டமச்சனி ஆரம்பிக்க உள்ளது. எனவே 2022 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கடனை முழுமையாக அடைத்து நிம்மதியாக இருக்க முடியும். ஒருமுறை ஜென்ம நட்சத்திரமன்று நவகிரக புதன் ஸ்தலமான திருவெண்காடு சென்று வாருங்கள். ஒரு புதன் கிழமை அன்று மதுரை அன்னை மீனாட்சி திருக்கோவிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். நல்லவைகள் நடக்கும். வாழ்த்துக்கள்.
பி. எஸ். ரவி, கோயம்புத்தூர்.
கேள்வி.
எனக்கு கடக ராசி. முப்பது வருடத்திற்கு ஒருமுறை சனி பகவான் ஆறாமிடத்தில் இருப்பது ரொம்ப விசேஷம் எனவும் இதனால் கடகத்தினருக்கு நல்ல எதிர்காலமும், சொந்த வீடும் அமையும் என்று சனிப்பெயர்ச்சி பலன்களில் சொல்லி இருந்தீர்கள். ஆனால் இதுவரை எனக்கு எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை. முப்பது வருடங்களாக டெய்லர் கடை நடத்தி வருகிறேன். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறேன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வியாபாரம் முடியும் நேரத்தில் தடங்கல் வந்து விடுகிறது. தையல் தொழிலில் எனக்கென்று வாடிக்கையாளர் இருப்பதால் சமாளித்து வருகிறேன். வாழ்வில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வீடு, கடை இரண்டும் வாடகைதான், கடன் சுமையும் இருக்கிறது. சனி ஆறில் இருக்கும் மீதி மாதங்களிலாவது எனக்கு சொந்த வீடு அமையுமா? கடன் தீருமா என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பதில்.
(கடக லக்னம், கடக ராசி, 1ல் சந், ராகு, 2ல் சூரி, 3ல் புத, சுக், 7ல் சனி, கேது, 8ல் குரு, 12-ல் செவ், 29-8-1962 அதிகாலை 4-15 மூணாறு)
பத்திரிக்கைகளில் வரும் சனிப்பெயர்ச்சி குரு, ராகு-கேதுப் பெயர்ச்சி போன்ற பலன்கள் பொதுவானவைதான் என்பதை அந்த பெயர்ச்சி பலன்களிலேயே ஜோதிடர்கள் குறிப்பிடுவது வழக்கம். இந்த பலன்கள் ஓரளவிற்கு ஒத்து வருமே தவிர முழுமையாக பொருந்தி வருவது கிடையாது. இதனையும் தாண்டி ஒருவர் தனக்கு என்ன நடக்கும் என்பதை துல்லியமாகத் தெரிந்து கொள்வதற்கு, பிறந்த ஜாதகத்தின் அமைப்பின்படி என்ன கிரக நிலைகள் உள்ளன, எத்தகைய தசா புக்தி அமைப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை வைத்து மட்டுமே ஒருவர் தனக்கான பலனை தெரிந்து கொள்ள முடியும்.
கடக ராசிக்காரர்களுக்கு தற்போது சனி 6-ல் இருப்பதால் ஓரளவிற்கு சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை நிலை சென்று கொண்டிருக்குமே தவிர, கடக ராசிக்காரர்கள் அனைவரும் 6ல் இருக்கும் சனியால் குபேர வாழ்க்கையை அடைவார்கள் என்றால் அது பொருத்தமற்றது. அதேநேரத்தில் கடத்தினர் தற்போது அளவு கடந்த சிரமங்களையும் அனுபவிக்கவில்லை என்பதும் உண்மை.
உங்கள் ஜாதகப்படி ஜீவனாதிபதி செவ்வாய், குருவின் பார்வையில் சுபத்துவமாக இருப்பதால் கையில் ஆயுதம் பிடிக்கும் டெய்லர் தொழில் செய்து கொண்டிருக்கிறீர்கள். கடந்த ஐந்தாண்டு காலமாக உங்களுக்கு சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து, சனியின் பார்வையும் பெற்று, லக்னத்தில் லக்னாதிபதியோடு இணைந்த ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. லக்னாதிபதி அமாவாசைக்கு அருகில் இருள் நிறைந்த சந்திரனாக இருக்கிறார். இந்த அமைப்பின்படி கடந்த ஐந்து ஆண்டு காலமாக சோதனைகள் உங்களுக்கு அதிகம் இருந்திருக்கும்.
தற்போது ராகு தசையில், சனி புக்தி ஆரம்பித்திருப்பதால் தொழில் நன்றாக இல்லாத நிலை இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்கு நீடிக்கும். அதுவரை நீங்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும். ராகு தசை புதன் புக்தியிலிருந்து இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொழிலில் நல்ல திருப்பங்கள் உண்டு. பொறுமையாக இருங்கள். கடைசிவரை தையல் தொழிலில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
எஸ். கிருபாகரன், மாயவரம்.
கேள்வி:
கடந்த சில வருடங்களாக மிகவும் கஷ்டப்படுகிறேன். சொந்தமாக கடை நடத்தி வருகிறேன். வியாபாரம் மிகவும் நலிவடைந்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முன்னேற்றமே இல்லை. கடன்சுமை அதிகமாகி கொண்டே போகிறது. வாங்கிய கடனை அடைக்கவும் முடியவில்லை. வியாபாரமும் விருத்தி இல்லை. தொடர்ந்து இந்த தொழிலை நடத்தலாமா? அல்லது வேலைக்கு போகலாமா? என்று எனக்கு நல்லதொரு முன்னேற்றப் பாதையைக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதில்:
தேதியைக் குறிப்பிட்ட நீங்கள் பிறந்த நேரம் அனுப்பாததால் உங்களுடைய கேள்விக்கு என்னால் துல்லியமான பதில் தர முடியவில்லை. நீங்கள் விருச்சிக ராசியில் பிறந்திருப்பதால் 40 வயதிற்குட்பட்ட எந்த ஒரு விருச்சிக ராசிக்காரரும் அவருடைய வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்றார் போல நன்றாக இல்லை என்று நான் அடிக்கடி எழுதி வருவதைபோல 2012-ம் ஆண்டு முதல் நீங்களும் நன்றாக இல்லை.
2019-ம் ஆண்டு முதல் விருச்சிகத்தினர் அனைவருக்குமே விடிவு காலம் பிறந்திருக்கிறது. இந்த வருடத்தில் இருந்து நிச்சயமாக படிப்படியாக முன்னேற்றம் இருக்கும். தொழிலைக் கைவிட வேண்டாம். ஊக்கத்துடன், அக்கறையுடன் கடையைக் கவனியுங்கள். இந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து கடனை அடைக்கும் அளவிற்கு உங்களின் பொருளாதாரம் உயரும். 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கடன் தொல்லை இன்றி நிம்மதியாக இருப்பீர்கள்.