adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 243 (02.07.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

ரமா, மன்னார்குடி.

கேள்வி.

திருமணமான 40 நாட்களுக்குள் வரதட்சணை பிரச்சனை ஏற்பட்டு காவல்துறை மூலம் சேர்த்து வைக்கப்பட்டேன். வாழ்க்கை தொடங்கியது முதல் எப்போது பார்த்தாலும் கேவலமான வார்த்தை, அடி, உதைதான். பிரச்னையோடு தாய்வீடு வந்து தங்கி முதல் குழந்தை பிறந்தது. என் தாய் உறவினர், நண்பர்களிடம் பிச்சை எடுத்து கடன் வாங்கி இரண்டு லட்சம் கணவரிடம் கொடுத்து என்னை குழந்தையோடு அனுப்பி வைத்தார்கள். ஆனால் கணவரின் வீடு, பணம் பணம் என பிரச்சனை மேல் பிரச்சனை செய்து என்னுடைய தாலிச்செயின், தோடு, மோதிரம் என அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு, மூன்று மாதமே வாழ்ந்த நிலையில், மீண்டும் இரண்டாவது கர்ப்பமாகி தாய் வீட்டில் அடைக்கலமானேன்.

இரண்டாவது மகன் பிறந்து 5 மாதத்திற்கு மேலாகியும் இன்னும் எனது கணவரோ அவரது குடும்பத்தாரோ வந்து பார்க்கவில்லை. என்னுடைய மகன்கள் அப்பாவுடன் சேர்ந்து வாழ வழி இருக்கிறதா? கெட்ட வார்த்தை பேசுவது, அடிப்பது, குடிப்பழக்கத்தை எப்போது அவர் விடுவார்? என் மகன்கள் நல்ல முறையில் கல்வி பயில பொருளாதார வசதி என்னிடம் இல்லை. இதற்காகவாவது என் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து என் மகன்களை நன்றாக படிக்க வைக்க முடியுமா? என் மகன்களை என் கணவர் காப்பாற்றுவாரா அல்லது எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா? அதன் மூலம் என் மகன்களை படிக்க வைக்க முடியுமா? நல்ல பதில் தந்து மகன்களின் படிப்புக்கு ஒரு வழி காட்டுங்கள் அய்யா... வாழ்நாள் முழுவதும் ரமா கார்த்தி என்பது நிலையானதா?

பதில்.

(கணவன் 5-7-1981, மாலை 5-30 மாயவரம், மனைவி 27-1-1989 அதிகாலை 4-35 மாயவரம், பெரியமகன் 28-8-2016 மதியம் 12-15 மன்னார்குடி, இளைய மகன் 13-11-2018 காலை 11-38 மன்னார்குடி)

கடிதம் முழுவதும் உன்னுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேள்வி கேட்காமல் என் மகன்களை நன்றாகப் படிக்க வைக்க முடியுமா? என் மகன்கள் தகப்பன் ஆதரவில் இருப்பார்களா? என் மகன்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமா என்று திரும்பத் திரும்ப நீ கேட்டிருப்பதிலிருந்தே, ஒரு இந்தியப் பெண்ணின் மகத்தான தாயுள்ளம் எத்தகையது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே உனது கோணத்தில் இல்லாமல் உன் மகன்களுக்கு தந்தையின் ஆதரவு உண்டா என்ற கோணத்தில் இருந்தே பதில் தருகிறேன்.

பெண்ணின் மகத்தான தாயுள்ளம் எத்தகையது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. ஆகவே உனது கோணத்தில் இல்லாமல் உன் மகன்களுக்கு தந்தையின் ஆதரவு உண்டா என்ற கோணத்தில் இருந்தே பதில் தருகிறேன்.

மூத்தவனுக்கு விருச்சிக லக்னமாகி தந்தையைக் குறிக்கும் 9-க்குடைய சந்திரன் எட்டில் மறைந்து, ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகு கேதுக்கள் தொடர்புகொண்டு, தந்தைக் காரகன் சூரியன் ராகுவுடன் மிக நெருக்கமாகி அமர்ந்திருப்பது தந்தையின் பாசம் கிடைக்காத நிலை. அதேபோல இளையவனுக்கு ராசிக்கும் லக்னத்திற்கும் ஒன்பதாமிடத்தை, செவ்வாய், சனி இருவரும் ஒரு சேர பார்த்து, பிதுர்க்காரகன் சூரியன் நீச நிலையில் இருப்பதும் தந்தையின் பாசம் கிடைக்காத ஒரு அமைப்பு.

மூத்தவனின் மிதுனராசிக்கு அடுத்து அஷ்டமச்சனி ஆரம்பிக்க இருப்பதாலும், இளையவனுக்கு நீச அஷ்டமாதிபதி சூரியனின் தசை 4 வயது வரை நடக்க இருப்பதாலும் அவர்கள் இருவரும் தகப்பனின் ஆதரவில் இருக்க வாய்ப்பில்லை. உனக்கு நல்ல பதில் தருவதற்கு வாய்ப்பு இல்லையே என்ற மன வருத்தத்தோடுதான் இந்த பதிலை எழுதுகிறேன். ஆனாலும் உண்மை என்ற ஒன்று இருக்கிறது அல்லவா?

உன்னுடைய ஜாதகப்படி தற்போது சனியின் வீட்டில், சனி பார்வையில் அமர்ந்த ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இது இன்னும் சில வருடங்களுக்கு உனக்கு நல்ல பலன்களைத் தராது. உன்னுடைய லக்னாதிபதி குரு ஆறாமிடத்தில் அமர்ந்திருந்தாலும் லக்னத்தில் உள்ள சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார். எனவே வாழ்க்கையின் ஆரம்பத்தில் நீ தடுமாறினாலும் பிறகு சுதாரித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துவாய். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டால் நல்ல கணவன் அமைவது கடினம். உன்னுடைய ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்ந்திருப்பது நல்ல கணவனைக் குறிக்கும் அமைப்பு அல்ல. கணவர் திருந்துவார் என்று எதிர்பார்க்க வேண்டாம். ரமா கார்த்தி என்பது நிலையானது அல்ல.

கே. பிச்சைப்பிள்ளை, திருப்பூர்.

கேள்வி.

உள்ளதை உள்ளபடியே சொல்லும் குருஜி ஐயா அவர்களுக்கு... கடந்த நான்கு வருடங்களாக செத்து விடலாமா என்று நினைக்கும் அளவிற்கு கடன் பிரச்சினையும், உடல்நிலையும் படாதபாடு படுத்துகிறது. வேலையும் சரிவர இல்லை. குடும்பத்தை வழி நடத்த வருமானமில்லை. குடியிருந்த பூர்வீக வீட்டை அடமானம் வைத்து விட்டேன். வரும் ஜூலைமாதம் கடனின் காலக்கெடு முடிகிறது. இன்றுவரை வீட்டை மீட்க முடியவில்லை. வட்டி ஏறிக்கொண்டே இருக்கிறது, வாழ்வின் விளிம்பில் இருக்கிறேன்.

இந்தக் கடிதத்தை கண்ணீருடன் நள்ளிரவு எழுதுகிறேன். கவலைகளும், கஷ்டங்களும் தீர திருவண்ணாமலை, பழனி மலை எனப் பல மலைகளுக்கு கடவுளை வேண்டி மலையேறி வந்து விட்டேன். எந்த ஒரு மாற்றமும் இல்லை. உற்றார் உறவினர் மத்தியில் மதிப்பும், மரியாதையும் இல்லை. என்னை மட்டும் ஏனோ கடவுள் போட்டு வாட்டுகிறார். கடவுளின் கண்களுக்கு என்னைத் தெரியவில்லையா? நீங்கள் எனக்குச் சொல்லும் பதிலைப் பொறுத்துத்தான் என் வாழ்க்கையே இருக்கிறது. கடன் பிரச்சினை முழுவதுமாக எப்போது தீரும்? உடல்நிலை முன்புபோல் சரியாகுமா? அடமானம் வைத்த வீட்டை மீட்க முடியுமா? பூர்வீகம் நிலைக்குமா? நிரந்தர வேலை அல்லது தொழில் எப்போது? ஒரு நிமிடமாவது மற்றவர்கள் என்னை பார்த்து பாராட்டும்படி செல்வம், ஆரோக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்?

பதில்.

(தனுசு லக்னம், தனுசு ராசி, 1ல் சந், 4ல் கேது, 7ல் செவ், குரு, 8ல் சுக், சனி, 9ல் சூரி, புத, 10ல் ராகு, 25-8-1977 மதியம் 2-30 திருப்பூர்)

நாற்பது வயதுகளில் இருக்கும் எல்லா தனுசு ராசிக்காரர்களும் ஏதாவது ஒரு வகையில் அவரவருடைய பிறந்த ஜாதகத்திற்கு ஏற்றபடி ஏதாவது ஒருவகையில் மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள். ஜென்மச் சனி உங்களைப் போட்டு வாட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சனி தற்போது பூராடம் நட்சத்திரத்தில் வக்கிர நிலையில் சென்று கொண்டிருப்பதால் பூராடத்தினர் அதிகமான அவஸ்தையில் இருக்கிறீர்கள்.

உங்களுடைய ஜாதகப்படி தனுசு லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் சுக்கிர புக்தி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பிறந்த ஜாதகத்தில் ஆறு எட்டுக் குடையவர்களின் தசா, புக்தி நடக்கும் போது, கோட்சாரத்தில் ஜென்மச் சனி, அஷ்டமச் சனி இருந்தால் சமாளிக்க முடியாத அளவிற்கு பிரச்சினைகள் இருக்கும். 2020 அக்டோபர் வரை இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு உங்களின் சுக்கிர புக்தி நீடிக்கும் என்பதால் உங்களின் பிரச்சினைகள் தீர்வதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். அதுவரை கடனை அடைக்க முடியாது.

அதே நேரத்தில் லக்னாதிபதி குரு, லக்னத்தைப் பார்த்து ஒன்பதாமிடத்தில் தர்ம, கர்மாதிபதி யோகம் அமைந்திருப்பதால், எந்தப் பிரச்சினையையும் உங்களால் சமாளிக்க முடியும். எதுவும் எல்லை மீறிப் போய் விடாது. கடன் தொல்லையால் முழுகிப் போய் விட மாட்டீர்கள். கவலைப்பட வேண்டாம். கடவுள் அருள் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கிறது. உங்களால் எதையும் சமாளிக்க முடியும். மனதை தளர விடாதீர்கள்.

2021 ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு கடனற்ற வாழ்க்கை இருக்கும். ஒன்பதாமிடம் சிம்மமாகி, அங்கே சூரியன் வலுத்து, சனி, செவ்வாய் பார்வை இல்லாமல் இருப்பதால் உங்களுக்கு பூர்வீகம் நிலைக்கும். அடமான வீட்டை திரும்ப மீட்க முடியும். 2021 ஆம் ஆண்டு முதல் சுக்கிர புக்தி முடிந்தவுடன் உடல்நிலையும் சீராகும். ஆறுக்குடைய சுக்கிரன் எட்டில் மறைந்து, பகைவீட்டில் சனியுடன் இருப்பதால் கடுமையான கெடுபலன்களைச் செய்வார். அது இப்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்து வர இருக்கும் குருவின் தசை, குரு-மங்கள யோகத்தோடும், வளர்பிறைச் சந்திரனின் பார்வையிலும் இருப்பதால் மிகப் பெரிய உயரத்திற்கு உங்களைக் கொண்டு செல்லும். வாழ்க்கையின் பிற்பகுதியில் சகல வசதிகளுடன் புகழ், கீர்த்தியுடன் செல்வாக்காக வாழும் ஜாதகம் உங்களுடையது. குருதசை வரும் வரை காத்திருங்கள். கடவுள் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். 2021 ஆம் ஆண்டு முதல் பரம்பொருளின் பார்வை உங்கள் மேல் விழும்.வாழ்த்துக்கள்.