adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 240 (11.06.19)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

எம். பூங்குழலி, மணப்பாக்கம்.

கேள்வி.

குருஜி அவர்களுக்கு வணக்கம். கடந்த 3 ஆண்டுகளாக என் மகனுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்ற கவலை என்னை அதிகமாக வாட்டுகிறது. மகனுக்கு எப்போது திருமணம் நடக்கும்? அவரது எதிர்காலம் எப்படி? வேலை அமைப்புகள் எதிர்காலத்தில் நன்றாக இருக்குமா என்பதனைக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்.

(விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, 1ல் சந், சனி, 5ல் ராகு, 6ல் குரு, 10ல் சூரி, புத, சுக், செவ், 11ல் கேது, 1- 9- 1987 காலை 11- 40 சென்னை)

மகனுக்கு லக்னாதிபதியும், ஜீவனாதிபதியும் திக்பலமாகி, குருவின் பார்வையில் மிகுந்த சுபமாக அமர்ந்த யோக ஜாதகம். லக்னத்தில் சனி இருந்தாலும், அவர் வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்திருப்பது சிறப்பு. ஏழாம் அதிபதி அஸ்தமனம் பெற்று, அம்சத்தில் ராகுவின் சேர்க்கை பெற்று, ராசியிலும் சூரியன் செவ்வாயுடன் இணைந்து சனி பார்வையில் இருப்பதால் 33 வயதுவரை திருமணம் தாமதமாகும். அடுத்த வருட ஆரம்பத்தில் சுக்கிர தசை, ராகு புத்தியில் மகனுக்கு திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் உண்டு.

பத்தாமிடத்தில் இருக்கும் நான்கு கிரகங்களை வலுப்பெற்ற குரு பார்ப்பதாலும், சரியான பருவத்தில் தங்களுக்குள் கேந்திரங்களிலும், லக்ன கேந்திரங்களிலும் இருக்கும் தர்ம, கர்மாதிபதிகளான சூரிய, சந்திர தசைகள் வர இருப்பதாலும், மகனின் எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். கவலை வேண்டாம். வாழ்த்துக்கள்.

மேரி, சிறுமுகை.

கேள்வி.

நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விதவைப் பெண். மகனுக்கு 33 வயது ஆகியும் திருமணம் நடக்கவில்லை. எட்டு வருடங்களாக இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும் என்று நினைக்கும்போது ஏதாவது ஒரு காரணத்தால் நின்று விடுகிறது. மகன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். தொழிலும் சரியாக அமையவில்லை. மகனின் ஜாதகத்தை பார்த்து திருமணம், தொழில் எப்போது சரியாக அமையும் என்று சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்.

அனைத்து விவரங்களையும் எழுதிய நீங்கள், பிறந்த நேரத்தை குறிப்பிடாமல் விட்டிருக்கிறீர்கள். பிறந்த நேரத்தை உறுதி செய்து கொள்ளாமல் உங்களுடைய மனத் திருப்திக்காக நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. நேரத்தைக் குறிப்பிட்டு இன்னொரு கடிதம் அனுப்புங்கள். பதில் தருகிறேன்.

எஸ். பார்த்தசாரதி. சென்னை.

கேள்வி.

தங்களை மாலைமலர் மூலம் தொடர்ந்து வருகிறேன். 53 வயதாகியும் வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தொழில் அனைத்தும் நஷ்டம்தான். இதுவரை சரியான வருமானமில்லை. இதுநாள் வரை பட்ட கஷ்டம் தொடருமா? இனிமேலாவது முன்னேற்றம் உண்டா? பல இன்னல்களுக்கு நடுவில் என்ன செய்யப்போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ள எனக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்குமா? ஜோதிடத்தில் ஆர்வம் உள்ளது. அதை தொழிலாகக் கொள்ள முடியுமா? தங்கள் பதில் மூலம் என் வாழ்க்கையில் திருப்புமுனை உண்டா என்பதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

பதில்.

(ரிஷப லக்னம், கன்னி ராசி, 1ல் சூரி, புத, செவ், ராகு, 2-ல் குரு, 5ல் சந், 7ல் கேது, 11ல் சனி, 12ல் சுக், 29-5-1966, காலை 6-25, சென்னை)

வாழ்க்கையில் ஒரு மனிதன் யோகமாக வாழ்வதும், தரித்திரனாக இருப்பதும் தசா,புக்தி அமைப்பின் அடிப்படையில் நிகழ்கிறது. உங்களுக்கு ரிஷப லக்னமாகி, பிறந்தது முதல் சுக்கிரனின் எதிரிகளான சூரிய, சந்திர, செவ்வாய் தசைகள் நடந்து, அதனையடுத்து செவ்வாயுடன் இணைந்து, சனியின் பார்வையைப் பெற்ற பாபத்துவ ராகு தசையும் நீடித்து, மிக முக்கிய கால கட்டத்தில் கடந்த பதினாறு வருடங்களாக, ரிஷப லக்னத்திற்கு வரக்கூடாது என்று நான் சொல்லும் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்திய குருவின் தசையும் நடந்ததால், இதுவரையில் உங்களுடைய முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. நீங்களும் வாழ்க்கையில் சோபிக்கவில்லை.

அதேநேரத்தில் கடந்த மார்ச்மாதம் முதல் உங்களுக்கு ரிஷப லக்னத்தின் ராஜ யோகாதிபதியான சனியின் தசை ஆரம்பித்து இருக்கிறது. முறையான நேரத்தில்தான் சரியான ஜோதிடரை அணுகுவீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வதன்படி, சனிதசை ஆரம்பித்த ஒரு மாதத்தில், 30 நாட்களுக்குள், ஏப்ரல் மாதத்தில் எனக்கு நீங்கள் கடிதம் எழுதி இருக்கிறீர்கள். இதோ இப்போது உங்களுக்கு பதிலும் கிடைத்து விட்டது.

எத்தகைய ஒரு சூழலிலும் ரிஷப லக்னத்திற்கு சனி கெடுபலன்களைத் தராமல், ஜாதகரை  வாழ்வின் உயரத்திற்கு கொண்டு செல்லவே முயற்சிப்பார். தற்போது உங்களுக்கு சனி தசையும், அடுத்து லக்னத்தில் திக்பலமும், வர்கோத்தமமும் பெற்ற புதன் தசையும், இன்னும் 35 ஆண்டுகளுக்கு நடைபெற இருப்பதால், உங்களுடைய பின் வாழ்க்கை அந்திம காலம் வரை மிகவும் சிறப்பாக இருக்கும். எதற்கும் மனம் கலங்காதீர்கள். இனி நீங்கள் செய்யப்போகும் முயற்சிகள் அத்தனையும் வெற்றியில் மட்டுமே முடியும். உங்கள் வாழ்வில் தோல்வி என்பது இனிமேல் இருக்கவே இருக்காது.

சனி தசை, சுயபுத்தி முழுவதும் சில அடிப்படை அறிமுகங்கள், அஸ்திவாரங்கள் உங்களுக்கு தொழில் அமைப்புகளில் ஏற்படும். புதன் புக்தியிலிருந்து நிரந்தரமான, நீடித்த தொழில் அமைந்து நல்ல வருமானத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள். ஜோதிடத்தையும் தொழிலாகக் கொள்ள முடியும். லக்னாதிபதி 12 ஆம் வீட்டில் அமர்ந்து, தனது ஆறாம் வீட்டையே பார்த்து  பலப்படுத்தினாலும், அவர் லக்னத்தில் இருக்கும் செவ்வாயோடு பரிவர்த்தனையாகி இருப்பதால் ஐம்பது வயதிற்கு பிறகு நன்றாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது.

தற்போதய தசா நாதன் சனி, குருவின் வீட்டில், வளர்பிறை சந்திரனின் பார்வையில் இருப்பதால் மிகுந்த யோகத்தை உங்களுக்கு செய்வார். அதிலும் சனி 9, 10-க்குடையவராகி தனது சொந்த நட்சத்திரத்திலேயே அமர்ந்திருப்பதால், தொழில் மூலமான பெரிய லாபங்களை இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து தருவார். மனதை தளர விடாதீர்கள். முயற்சி செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு முன்னேற்றம் உண்டு. வாழ்த்துக்கள்.

(11.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.