adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பெண் சுகம் எப்போது கிடைக்காது.?-D-055

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற வாரம் திருமண பாக்கியமும், பெண் சுகமும் கிடைக்காத ஒரு ஜாதகத்தின் ஜோதிட விளக்கங்களை பார்த்த நிலையில், தற்போது அதேபோன்ற நிலை கொண்ட ஒரு ஜாதக விளக்கத்தினை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம்.

கீழே  ஐம்பத்தியொரு வயதாகும் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். இவர் 16-4-1968 காலை 10-30 மணிக்கு கோவையில் பிறந்திருக்கிறார். இந்த ஜாதகரும் இதுவரை பெண் சுகம் என்றால் என்னவென்றே தெரியாதவர்தான்.

இவருக்கு மிதுன லக்னம், விருச்சிக ராசியாகி, லக்னாதிபதி புதன் நீசம் எனப்படும் ஒளி இழந்த நிலையில், முக்கிய பாபக் கிரகங்களான சனி மற்றும் ராகுவுடன் இணைந்து பத்தாமிடத்தில் இருக்கிறார்.

புத, சுக்,சனி, ராகு,  சூரி, செவ்    ல/
    16-4-1968   காலை 10-30 கோவை      
   குரு
    சந்   கே,

மீனத்தில் புதன் 23 டிகிரியில் இருக்க, இருள் கிரகமான சனி கிட்டத்தட்ட அதே பாகை மற்றும் கலையில் மிக நெருக்கமாக புதனுடன் இணைந்து அவரை பாபத்துவப்படுத்தியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவெனில், இந்த இணைவு சுப கிரகமான குருவின் வீட்டில் நடந்தாலும், சனியும், ராகுவுடன் ஏறத்தாழ ஒரேடிகிரியில் இணைந்துள்ளதால் சனியே கூடுதலான பாபத்துவமுடன்தான் இருக்கிறார்.

இரண்டு மாபெரும் இருள் கிரகங்களான சனியும், ராகுவும் ஏற்கனவே நீசமாகி ஒளி இழந்த நிலையில் இருக்கும் லக்னாதிபதி புதனை முழுக்க முழுக்க கிரகணம் செய்திருக்கிறார்கள். மேம்போக்காகப் பார்க்கும் பொழுது இங்கே லக்னாதிபதி புதன், உச்ச சுக்கிரனின் இணைவால் நீசபங்கம் அடைந்துள்ளதாக தோன்றுகிறது.

ஒரு ஒளி இழந்த கிரகம் இன்னொரு சுப ஒளி மிகுந்த கிரகத்திடம் ஒளியைக் கடன் வாங்குவதே நீசபங்க தத்துவம் என்பதையும், ஒளி தரும் கிரகம் அதிகபட்ச ஒளி நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இங்கே புதனை நீசபங்கப் படுத்த வேண்டிய சுக்கிரன், தானே தனது சுப ஒளியினை இருள் கிரகங்களான சனி, ராகுவுடன் இணைந்து இழந்திருப்பதால் புதனுக்கு நீசபங்கம் தரும் அளவிற்கு சுக்கிரனுக்கு ஒளி இல்லை.

ஆயினும் சுக்கிரன் உச்சமாக இருப்பதால் இது ஓரளவிற்கான நீசபங்கம்தான். இதுவே சுக்கிரன் உச்சமின்றி வேறொரு பாவகத்தில் இந்த இணைவு நடந்திருப்பின் சுக்கிரனுக்கு முழு ஒளித்திறனும் இல்லாது போயிருக்கும்.

புதனின் இந்த ஓரளவு நீசபங்க அமைப்பின் மூலம் ஜாதகர் பிறக்கும் போதே ஒரு சொத்துள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பிறந்ததில் இருந்து இதுவரை அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்கு ஜாதகருக்கு பஞ்சமில்லை. இன்னும் திருமணம் ஆகவில்லையே தவிர, நிரந்தரமான நல்ல வருமானத்தைக் கொண்ட ஒரு கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் ஜாதகர் இருக்கிறார்.

ஜோதிடத்தின் உள்ளே ஆழமாகச் சென்று எதையும் மிக நுணுக்கமாக விளக்கும் இயல்புடைய நான் “ஓரளவு நீசபங்கம்” மற்றும் “முழுமையான நீசபங்கம்” என்று பிரித்து சொல்வதன் அர்த்தத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

லக்னமும், லக்னாதிபதியும் முழுமையாக ஒளியிழந்த நிலையில் இருக்கும் ஒருவர் வாழத் தகுதியற்றவராகிறார். லக்னாதிபதிக்கு ஓரளவு ஒளியமைப்பு இருக்கும் நிலையில் ஜாதகருக்கு உயிர் வாழ்வதற்கான அத்தியாவசிய அமைப்புகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அதேநேரத்தில் ஒரு மனிதனின் பிறவி நோக்கமான வம்சவிருத்தி, அதற்காக கிடைக்க இருக்கும் தாம்பத்திய சுகம், தாம்பத்திய சுகத்திற்காக ஏற்படுத்தப்படும் குடும்ப அமைப்பு போன்றவைகள் ஜாதகருக்கு கிடைப்பதில்லை.

காலம்காலமாக வேதஜோதிடம் பொதுப்படையாக சொல்லி வந்த சில விஷயங்களை எனது “சுபத்துவம் மற்றும் சூட்சும வலுக் கோட்பாட்டின்” மூலம் நான் மிக நுணுக்கமாக சொல்ல முனைந்து வருகிறேன். இதை இப்போது நான் ஆரம்பித்து வைத்திருக்கிறேன் என்றும் சொல்லலாம்.

“ஓரளவு நீசபங்கம்” “முழுமையான நீசபங்கம்” என்பதனை கூடுதல் குறைவு ஒளி அளவு கணக்கீடுகளாக இப்போது நான் சொல்கிறேன். இதற்கான ஏராளமான உதாரண ஜாதகங்கள் என் வசம் உள்ளன. ஆய்வும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஆராய்ச்சியினை எனது வாழ்நாளில் முழுமையாக முடிக்க இயலாமல் போய், இந்த  ஒளிஅளவு கூடுதல் குறைவு நிலைகளை முழுமையாக பாமரனுக்கும் புரியும் வண்ணம் என்னால் விளக்க இயலாது போகலாம்.

ஆயினும் இன்று நான் இதை ஆரம்பித்து வைத்திருக்கிறேன். எனக்குப் பின்னர் வரும் ஜோதிட சந்ததியினர், நான் துவங்கியிருக்கும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டே போய், என்றேனும் ஒரு நாள், ஒரு கிரகத்தின் துல்லிய ஒளி அமைப்பு படிநிலைகளை விளக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அப்போது சிருஷ்டியின் ரகசியம் எனப்படும் ஒரு மனிதனின் வாழ்வுநிலை ஏற்றத் தாழ்வுகளை  விஞ்ஞான ரீதியில் விளக்க முடியும். இதற்கு நான் ஒரு ஆரம்பம், அவ்வளவுதான்.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் நீசமாகி, சனி மற்றும் ராகுவுடனும் இணைந்து பெரும் பாபத்துவத்தை அடைந்திருக்கிறார். அதேநேரத்தில் இங்கே ராகுவிற்கு பதில் கேது இவர்களுடன் இணைந்திருந்தால் மூன்று கிரகங்களுமே வலிமை இழந்திருக்க மாட்டார்கள். மாறாக சனி சூட்சும வலுவும், சுபத்துவமும் அடைந்து லக்னாதிபதியை தூக்கி நிறுத்தி இருப்பார்.

ராகு என்பவர் ஒரு தியேட்டருக்குள் நாம் நுழையும் போது, நம் கையே நமக்குத் தெரியாத அளவிற்கு இருக்கும் ஒரு ஆழமான இருட்டு என்பதையும், கேது என்பது இருளும், ஒளியும் சங்கமிக்கும் நிலையில் தோன்றும் வைகறைப் பொழுது போன்ற ஆழமற்ற இருட்டு என்பதையும் “ஜோதிடம் எனும் தேவ ரகசியம்” கட்டுரைகளில்  விளக்கி இருக்கிறேன்.

இதனை நீங்கள் வேறுவகையில் கூட உணரலாம். சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மரணம் அடைந்த சில நாட்களுக்கு முன்பு கேதுவால் நடந்த முழு சந்திர கிரகணத்தன்று, நிலவு முழுமையாக மறைக்கப்படாமல் சிகப்பு நிறமாக காட்சியளித்தது. சந்திரன் முழுமையாக மறைக்கப்படவில்லை. நம் கண்களுக்கு நிலவு தெரிந்தது. அது சிகப்பு நிறமாகவும் காட்சியளித்தது.

ராகுவால் ஏற்படும் கிரகணத்தை கவனித்தீர்களேயானால், நிலவு முழுமையாக மறைக்கப்பட்டு, பௌர்ணமி அன்று சில நிமிடங்களுக்காவது அமாவாசை இருள் தோன்றியிருக்கும். ராகுவால் ஏற்படும் கிரகணத்தில் நிலவு பூரணமாக மறைக்கப்படும். நிலவின் ஒளி கிஞ்சிற்றும் வெளியே தெரியாது. இந்த அமைப்பினையே நாம் சுபத்துவ, சூட்சும வலு கோட்பாட்டிலும் புரிந்து கொள்ள வேண்டும்

இந்த ஜாதகத்தில் காமத்திற்கு காரகனான சுக்கிரன் பாபத்துவம் அடைந்ததால் ஜாதகருக்கு இதுவரை பெண் சுகம் கிடைக்கவில்லை. இதே சுக்கிரன் ஐந்தாமிடமான புத்திர ஸ்தானத்திற்கும் அதிபதியாகி, பாபத்துவம் பெற்ற புதன், சனி, ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் நெருக்கமாக இணைந்ததாலும், ராசிக்கு ஐந்தாமிடத்தில் இந்த இணைவு நடந்து அதன் அதிபதி குரு, அந்த வீட்டிற்கு ஆறில் மறைந்திருப்பதாலும் இவருக்கு புத்திர பாக்கியத்தை தரக்கூடிய திருமண அமைப்பும் இதுவரை ஏற்படவில்லை. திருமணம் நடந்தால் ஏற்படக்கூடிய குடும்பத்திற்கு அதிபதியான சந்திரனும் இங்கே நீசமடைந்து சுபத்துவமே இல்லாமல் இருக்கிறார்.

லக்னாதிபதி மற்றும் லக்னத்திற்கு கிடைக்கும் சுப ஒளி அமைப்புகளின் அளவைப் பொறுத்துத்தான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் உயிர் வாழவும், அதனையடுத்த குடும்பம் போன்ற அமைப்புகளும், சொகுசு வாழ்க்கையும் அனுமதிக்கப்படுகின்றன.

சுப ஒளி நிலைகளின் மற்றொரு உதாரணமாக, பிறந்தது முதல் மூளை வளர்ச்சியின்றி, தான் எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதே தெரியாத நிலையில் இருக்கும் ஒரு 22 வயது இளைஞரின் ஜாதகத்தை கீழே கொடுத்திருக்கிறேன்.

சனி கேது        
சூரி புத, சுக்  2-3-1997 அதிகாலை 3-37 மதுரை  
குரு    
  ல   சந்   செவ், ராகு

இவர் 2-3-1997 அதிகாலை 3 மணி 37 நிமிடத்திற்கு மதுரையில் பிறந்திருக்கிறார். இவருக்கு தனுசு லக்னம், விருச்சிக ராசியாகி, லக்னாதிபதி குரு நேரடியாக நீசமடைந்து,  பரிவர்த்தனை நிலையில் இருக்கிறார். லக்ன நாயகன் வலுவிழந்த நிலையில், லக்னத்தை ராகு-கேதுக்களுடன் மிக நெருக்கமாக இணைந்து பாபத்துவமாகி, ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்துக் கொண்டிருக்கும், சனி பத்தாம் பார்வையாகவும், செவ்வாய் நான்காம் பார்வையாகவும் பார்க்கிறார்கள்.

குறிப்பிடத்தக்க ஒரு நிலையாக இங்கே செவ்வாய் ராகுவுடன் இரண்டு டிகிரிக்குள்ளும், சனி கேதுவுடன் ஆறு டிகிரிக்குள்ளும் இணைந்திருக்கிறார்கள். செவ்வாயின் பாபத்துவ பார்வையின் முன்பு இங்கே சனியின் சூட்சும வலு எடுபடாது.  

ஒரு பாவகத்தோடு சனி, செவ்வாய், ராகு மூவரும் ஒட்டுமொத்த தாக்குதல் நடத்தினால் அந்த பாவகம் முழுமையாக வலுவிழக்கும் என்பதை சென்ற கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். அதன்படி சுபத்துவமே அடையாத முழுமையான பாபத்துவம் பெற்ற சனி, செவ்வாய் இருவரும் லக்னத்தை ஒருசேரப் பார்த்து லக்னம் வலுவிழந்த நிலையில், லக்னாதிபதி குருவும் நீசமடைந்திருப்பதால் லக்னமும், லக்னாதிபதியும் ஒளியிழந்த நிலையில் ஜாதகர் பிறந்தது முதல் மூளை வளர்ச்சியில்லாத நிலையில் இருக்கிறார்.

அதேநேரத்தில் திக்பலத்திற்கு அருகில் பரிவர்த்தனையான லக்னாதிபதியாலும், அவர் ஆயுள் பாவமான எட்டாமிடத்தைப் பார்ப்பதாலும் ஜாதகர் உயிரோடு இருக்கிறார். இங்கே லக்னாதிபதிக்கு ஓரளவு இருக்கும் திக்பலம், பரிவர்த்தனை மற்றும் எட்டாமிடத்திற்கான சுபர் பார்வை ஜாதகரை உயிர் வாழ மட்டும் அனுமதிக்கிறது. உயிரோடு இருப்பதைத் தவிர வேறு எவ்வித கல்வி, வேலை, திருமணம், குடும்பம் போன்ற எவைகளும் இவருக்கு இருப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.

லக்னம் வலுவிழந்தால் ராசி செயல்படும் என்றாலும், இங்கே ராசி விருச்சிகமாகி, ராசிநாதன் செவ்வாயும், ராகுவுடன் இணைந்து சனி பார்வையில் இருப்பதால் ராசியும் இங்கே செயலிழந்து விட்டது.

இது போன்ற எடுத்துக்காட்டுகளின் மூலமாக, சுபத்துவ, சூட்சும வலுக் கோட்பாட்டின்படி நான் சொல்லும் ஒளி அளவுகளின் படிநிலைகளை நீங்கள் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

லக்னாதிபதி மற்றும் லக்னத்தின் சுபத்துவ ஒளி நிலைகளுக்கு ஏற்பவே ஒரு மனிதனின் வாழ்வு அமைகிறது. இதையே வேறு விதமாகச் சொல்லப் போனால் பனிரெண்டு தனித்தனி பாவகங்கள் மற்றும் பாவகாதிபதிகளின் ஒளிநிலை அளவுகளுக்கு ஏற்பவே, அந்தந்த பாவகங்கள் மூலமான நன்மைகள் ஒரு மனிதனுக்கு கிடைக்கின்றன.

எதையும் ஏற்றுச் செயல்படுத்தும் லக்னம் மற்றும் லக்கினாதிபதி வலுவாக இருக்கும் நிலையில், ஒருவருக்கு கூடுதலாக இரண்டாம் பாவகம் மற்றும் அதன் அதிபதி அதிகமான சுபத்துவ அமைப்புகளில் இருக்கும்போது, ஒருவர் தனஸ்தானம் வலுப்பெற்றவராகி பணக்காரராக இருக்கிறார். இரண்டாம் வீட்டிற்குத் துணைபுரியும் ஒன்பது, பதினொன்றாம் பாவகங்களும் கூடுதல் ஒளித்திறனோடு இருக்கும் நிலையில், ஒருவர் அந்தப் பணக்காரர்களிலும் மெகா கோடீஸ்வரராக இருக்கிறார்.

இதே சுபத்துவ விதியினை ஐந்தாம் பாவகத்திற்குப் பொருத்திப் பார்த்தோமேயானால், ஒருவருக்கு புத்திர ஸ்தானாதிபதியும், ஐந்தாம் பாவகமும் ஒளிபொருந்திய நல்ல அமைப்பில் இருக்கும்போது, நல்ல குழந்தைகள் பிறந்து, ஆண் வாரிசும் கிடைத்து, அவரது குழந்தைகள் மேன்மையான நிலையில் இருக்கின்றன. குழந்தைகளின் மூலமான நல்ல பலன்களை அவர் அனுபவிக்கிறார்.

ஏழாம் பாவகமும், அதன் அதிபதியும் நல்ல ஒளித்திறனுடன் இருக்கும் ஒருவருக்கு அழகான, வசதியுள்ள, எதிலும் அனுசரித்துச் செல்லும், சந்தோஷம் மட்டுமே தரும் வாழ்க்கைத்துணை அமைகிறது

இப்படி தனித்தனியாக 12 பாவகங்களின் ஒளிநிலைகளையும், சுபத்துவ, சூட்சும வலு எனப்படும் அதன் அதிபதிகளின் சுப ஒளித்திறனையும் புரிந்து கொள்ளும்போது, பலன் சொல்வதில் இன்னும் சில நுணுக்கமான விஷயங்களை வேத ஜோதிடம் உங்களுக்குச் சொல்லித் தரும்.

அடுத்த வெள்ளி சந்திப்போம்.

(19.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *