adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 218 (18.12.18)
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888

ரெ. பொன்னுசாமி, திருச்சி.

கேள்வி.

ஆட்டோ ஓட்டி வருகிறேன். மாலைமலர் கேள்வி-பதில் பகுதி மற்றும் தொடர் கட்டுரைகளைப் படித்து, தங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. எண்ணம் ஈடேறுமா?

பதில்.

(சிம்ம லக்னம், கன்னி ராசி. 2ல் சந், 5ல் குரு, 6-ல் ராகு, 8ல் சூரி, புத, 10ல் சுக், செவ், சனி. 12ல் கேது, 29-3-1972 மாலை 4-20 திருச்சி)

சிம்ம லக்னமாகி, வலுப்பெற்ற குரு சிம்மத்தை பார்ப்பதாலும், பௌர்ணமி யோகத்தில் பிறந்திருப்பதாலும், உங்களால் அரசியலில் ஜெயிக்க முடியும். பௌர்ணமிச் சந்திரனின் பார்வையைப் பெற்ற சூரியன் என்றாலும் அவர் எட்டில் மறைந்திருப்பதும், சனியின் நட்சத்திரத்தில் இருப்பதும் ஒரு குறை.

அடுத்து நடைபெற இருக்கும் சனி தசையில், சனி பத்தாமிடத்தில் சுபத்துவமாகி வலுவுடன் இருப்பதாலும், சூரியனின் நட்சத்திரத்தில் இருப்பதாலும், சனி தசையில் உள்ளாட்சி அமைப்புகளில் நீங்கள் பதவி வகிக்க முடியும். முயற்சியுங்கள். வெற்றி கிடைக்கும். வாழ்த்துக்கள்.

லட்சுமி, கோவை-1.

கேள்வி.

கணவருக்கு சிறுநீரகத்தில் ஒரு பிரச்சனை. மருத்துவம் பார்த்து வருகிறேன். எப்போது சரியாகும்? அவரின் ஆயுள் ஸ்தானம் எப்படி உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பதில்.

(விருச்சிக லக்னம், மிதுன ராசி. 1ல் சூரி, சனி. 4ல் குரு, செவ், 5ல் ராகு, 8ல் சந், 11ல் கேது, 12ல் புத, சுக், 19-11-1986, காலை 7-20 திண்டுக்கல்)

கணவரின் ஜாதகப்படி தற்போது ஆறாம் அதிபதியுடன் இணைந்து, ராகுவின் சாரத்தில் இருக்கும் குருவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. இயற்கைச் சுபரான குரு ஆறாம் அதிபதியுடன் இருக்கும் நிலையில், ஆறாமிடத்தை மற்ற சுபர்களான புதன், சுக்கிரன் இருவரும் வலுப்பெற்றுப் பார்க்கிறார்கள். லக்னத்தில் சூரியனும் சனியும் அமர்ந்து லக்னம் பலவீனமான நிலையில், லக்னத்தை விட ஆறாம் பாவகம் வலுத்திருக்கிறது.

ஆயுள்காரகன் சனியும், ஆயுள் ஸ்தானாதிபதி புதனும் அஸ்தங்கம் அடைந்தாலும், ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தற்போது ஆயுள் குற்றமில்லை. அடுத்து நடக்க இருக்கும் சனி தசையில் தீவிர மருத்துவ கண்காணிப்பு தேவைப்படும். செவ்வாயை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளவும். ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி சென்று வரவும்.

எஸ். கே. சிவசங்கர், தூத்துக்குடி.

கேள்வி.

கலைவாணியின் பூரண அருள் பெற்ற மேதைக்கு வணக்கம். மின்சாரத் துறையில் 30 வருடங்களாக வேலை செய்து வருகிறேன். என்னைப்போல என் பேரன் பெரிய அரசாங்க இன்ஜினியராக வருவானா? பேரனின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் ஒருவர், பெரிய கனவு ஒன்றும் காண வேண்டாம், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும், உங்கள் பேரனின் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்று சொன்னார். என் பேரனின் எதிர்காலம் பற்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பதில்

(தனுசு லக்னம், மீன ராசி, 4ல் சந், கேது. 8ல் சுக், செவ், 9ல் சூரி, குரு. 10ல் புத, ராகு. 12ல் சனி, 31-8-2015. மதியம் 1-35 நாகர்கோவில்)

ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் சுபத்துவ, சூட்சும வலுக்களை கணிப்பதில்தான் ஒரு ஜோதிடரின் மேதமை அடங்கியிருக்கிறது. எல்லா ஜோதிடர்களுக்கும் இது கை வந்து விடாது. நீண்ட அனுபவமும், பரம்பொருள் தனித்துத் தந்த ஞானமும் இருப்பவருக்கு மட்டுமே இது கை கூடும்.

மேம்போக்காக பார்க்கும்போது பேரனின் ஜாதகத்தில் கிரகங்கள் எட்டில் மறைந்து, வலுவிழந்து இருப்பது போல தோன்றினாலும் இது யோக ஜாதகம்தான். லக்னாதிபதி குருவை ஒன்பதுக்குடைய அரசு உத்தியோகத்தை தரும் கிரகமான சூரியன் அஸ்தங்கம் செய்து, சுபத்துவமாக சிம்மத்தில் வலுவாக அமர்ந்திருக்கிறார். அஸ்தமன குரு அம்சத்தில் உச்சமாக இருப்பது அஸ்தமனத்திற்கு விதிவிலக்கு.

லக்னம், லக்னாதிபதியால் பார்க்கப்படுகிறது. 9, 10-க்குடையவர்கள் ஆட்சி, உச்சம் பெற்று தர்மகர்மாதிபதி யோகத்துடன் இருக்கிறார்கள். ஒரே டிகிரியில் புதன் ராகுவுடன் நெருங்கி இணைந்திருந்தாலும், பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் திக்பலம் பெற்ற சந்திரனால் பார்க்கப்படுகிறார். ஐந்திற்குடைய செவ்வாய் எட்டில் மறைந்து, நீசமாக இருப்பதாக தெரிந்தாலும், அம்சத்தில் உச்சமாகி, சுக்கிரனுடன் சேர்ந்து சுபத்துவமாகி இருக்கிறார்.

சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் கிரகங்கள் ஆறு, எட்டில் மறைந்து பலவீனமாக இருந்தாலும் நல்ல பலனையே தரும். மேம்போக்காக பார்க்கும் போது பலவீனமான ஜாதகமாக தெரிந்தாலும், பேரனின் ஜாதகம் நல்ல யோக ஜாதகம், 1, 5, 9, 10- க்குடையவர்கள் வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் அரசு இன்ஜினியராக வருவார். வாழ்த்துக்கள்.

எஸ். உமாசங்கர், சிவகாசி.

கேள்வி.

குருஜி அய்யாவிற்கு வணக்கம். இது என் அண்ணனின் ஜாதகம். இவர் இரட்டையரில் இரண்டாவதாக பிறந்தவர். முதலாமவருக்கு மே 2013-ல் திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தினசரி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வேலை செய்து அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இரண்டாமவரோ எந்த ஒரு வேலையும், வருமானமும் இன்றி, இதுவரை திருமணமும் ஆகாமல், அரசு ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி வருகிறார். இதுவரை ஜெயிக்க முடியவில்லை. இவருக்கு அரசு வேலை உண்டா இல்லையா என்பதை உறுதிபடக் கூற வேண்டுகிறேன். எப்பொழுதும் போட்டித் தேர்வுக்குப் படிக்கிறேன் என்று கையில் புத்தகத்துடன் அலைகிறார். வருமானம் ஈட்டும் முயற்சியில் எந்த முனைப்பும் இல்லை. வீட்டில் எப்பொழுதும் குழப்பநிலை நிலவுகிறது. இவருக்கு திருமணம் எப்போது நடக்கும்? 40 வயதுவரை வாழ்க்கை சோதனையாகவே முடிந்துள்ளது. இனி வரக்கூடிய பிற்பகுதியிலாவது  தனக்கென்று வருமானம் ஈட்டி, குடும்பம் உருவாகி, சுயமரியாதையோடு வாழ்க்கையை வாழ்வாரா அல்லது இறுதி வரை வாழ்க்கை அர்த்தமற்றதாகவே முடிந்து விடுமா? இவரது எதிர்காலம் பற்றி குருஜி அவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

பதில்

(மிதுன லக்னம், விருச்சிக ராசி. 2ல் குரு, 3ல் சனி, ராகு. 6-ல் சந், 9ல் கேது, 11ல் சூரி, புத, சுக், செவ், 14-5-1979 காலை 10-10 சிவகாசி)

கேட்டை நட்சத்திரக்காரர்கள் அனைவரும் வயது தகுதி இருப்பிடத்திற்கேற்ற வகையில் நன்றாக இல்லை, வாழ்க்கையில் இன்னும் செட்டில் ஆகவில்லை என்பதைத்தான் ஒவ்வொரு வாரமும் எழுதி வருகிறேன். இவருக்கு ஆறு நிமிடங்கள் முன்னால் பிறந்த அண்ணன் கூட நன்றாக இருக்கிறார் என்று நீங்கள் எழுதவில்லையே. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது என்றுதானே எழுதியிருக்கிறீர்கள்.

இரண்டாவது அண்ணனின் ஜாதகப்படி கடுமையான ஏழரைச்சனி நடந்து வருவதாலும், சிம்மத்தில் சனி, ராகு இருப்பதாலும் அரசு வேலை தாமதமாகி வருகிறது. சொல்லிக் கொடுக்கும் துறைக்கு காரணமான குரு வாக்குஸ்தானத்தில் உச்சமாகி, தன்னுடைய பத்தாம் வீட்டைப் பார்ப்பதாலும், சூரியன் உச்சமாக இருப்பதாலும், வரும் 2020ஆம் ஆண்டு சந்திர தசை, குரு புக்தியில் அண்ணனுக்கு அரசு வேலை கிடைக்கும். நடந்து கொண்டிருக்கும் ராகுபுக்தி அனைத்தையும் தடை செய்யும். இன்னும் ஒரு வருடம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அண்ணனைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. சுயமரியாதையோடு வாழ்வார்.

எஸ். சையது உமர் முக்தார், மதுரை- 16.

கேள்வி.

ஹோட்டலில் கூலி வேலை செய்து மனைவி, மக்களுடன் ஏழ்மையிலும், வறுமையிலும் வாழ்ந்து கொண்டு வருகிறேன். இனியாவது என் வாழ்வில் வசந்தம் உண்டா? சிறு தொழில் அல்லது வியாபாரம் செய்து பிழைக்க வழி உண்டா? நடக்கும் குருதசை யோகம் தருமா? தாய். தந்தையரை மரியாதையோடு காப்பாற்ற பொருளாதாரம் ஒத்துழைக்குமா? என்ன தொழில் அல்லது வியாபாரம் செய்யலாம்? முன்னேற்றம் காண துடிக்கிறேன். தங்களின் பதிலையும் அதே துடிப்போடு எதிர்பார்க்கிறேன்.

பதில்

(தனுசு லக்னம், மகர ராசி. 2ல் சந், 4ல் ராகு, 5ல் குரு, 8ல் சூரி, புத, சுக், செவ், 10ல் கேது, 12ல் சனி, 9-8-1987 பகல் 3-30 மதுரை)

தனுசு லக்னமாகி லக்னாதிபதி குரு லக்னத்தை பார்த்த யோகஜாதகம். பௌர்ணமி யோகத்திலும் பிறந்திருக்கிறீர்கள். மேலோட்டமாகப் பார்த்தால் முக்கியமான 4 கிரகங்கள் எட்டில் மறைந்து இருப்பதைப் போல தோன்றினாலும் அவர்கள் பௌர்ணமி சந்திரனின் பார்வையில் இருப்பது மிக விசேஷம். செவ்வாய் சுக்கிரனுடன் இணைந்து பௌர்ணமி சந்திரனின் பார்வையில் சுபத்துவமாகி இருப்பதால் செவ்வாயின் காரகத்துவமான நெருப்புத் துறையான ஹோட்டலில் வேலை செய்கிறீர்கள். செவ்வாய் நீசமாக இல்லாமல் இருந்திருந்தால் மருத்துவர் அல்லது இன்ஜினியராக இருந்திருப்பீர்கள்.

முதலில் சிறிய அளவில் டீக்கடை அல்லது ஹோட்டல் வைக்க முயற்சி செய்யுங்கள். வீட்டில் யாருக்காவது ரிஷபராசி அல்லது மிதுனராசியாக இருந்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்கு சொந்தத் தொழில் செய்ய வேண்டாம். இல்லாத பட்சத்தில் ஏழரைச்சனி நடப்பதால், சிறிய அளவில் தொழில் வைக்க முயற்சி செய்யுங்கள். ஜீவனாதிபதி புதன்புக்தி நடப்பதால் உங்களால் நல்லபடியாக தொழில் செய்ய முடியும். லக்னாதிபதி ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். குருதசை உங்களுக்கு யோகத்தை தரும்.

One thought on “Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள்- 218 (18.12.18)

  1. உங்க கட்டுரைபடித்துபயம்தெளிந்தவர்களில்நானும்ஒருவன்.வளர்க உங்கள் தொண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *