adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ராஜ அதிகாரம் தரும் பவுர்ணமி நிலை..!-D-037-குருஜியின் விளக்கம்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
 
கைப்பேசி: 8681 99 8888

கடந்த வாரங்களில் பதவிக்காலத்தை முழுக்க முடித்த, ஐந்தாண்டு காலத்திற்கு மேல் பிரதமர் பதவியை வகித்தவர்களின் ஜாதக அமைப்புகளைப் பார்த்தோம். தற்போது சில மாதங்கள் மட்டுமே பிரதமர் பதவியில் இருந்த இருவரின் ஜாதக நுணுக்கங்களைப் பார்க்கலாம்.

சிம்மமும், சூரியனும் வலுவாக இருப்பது மட்டுமே மிகப்பெரிய பதவியை வகிப்பதற்கான முதன்மை ஜோதிட விதி என்பதை கடந்த வாரங்களில் விளக்கியிருந்தேன். இதுவரை நாம் பார்த்த முன்னாள் பிரதமர்கள் அனைவரின் ஜாதகங்களிலும் இந்த விதி முழுமையாக பொருந்தி வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

கீழே முன்னாள் பிரதமர் திரு. சந்திரசேகரின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். சந்திரசேகர் அவர்கள் ராஜீவ் காந்தியின் மரணத்தின் போது பிரதமர் பதவியை வகித்தவர். சில மாதங்கள் மட்டுமே இவர் பதவியில் இருந்தார். வாஜ்பாயைப் போலவே இவரும் நீண்டகாலம் தொடர்ந்து அதிகாரப் பதவி வகித்தவர் அல்ல.

சந்திரசேகர் 17-4-1927-ம் ஆண்டு காலை 6-50 மணிக்கு பாலியா மாவட்டத்தில் பிறந்தவர். இவருக்கு மேஷ லக்னம், துலாம் ராசியாகி பூரணமான சித்ரா பவுர்ணமி தினத்தன்று பிறந்திருக்கிறார்.

இதுவரை நாம் பார்த்த பிரதமர்களின் ஜாதகங்களில், மூல ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாக இருப்பது அல்லது சூரியன் மிக வலுவாக இருப்பது போன்றவைகளைக் கவனித்திருக்கலாம். அதைப்போலவே சந்திரசேகர் ஜாதகத்திலும் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் எதிரெதிரே நின்று தங்களை வலிமைப்படுத்திக் கொள்ளும் பௌர்ணமி நிலை அமைப்பு இருக்கிறது.

கிரகங்கள் அனைத்தும் ஒளித்தன்மையுடன் வலுவாக இருக்கின்ற துல்லிய நேரத்தில் பிறப்பவன் வாழ்வில் ஒளிமயமாக இருக்கிறான். எல்லாக் கிரகங்களும் தனித்தன்மையுடன் அமர்ந்து, பாபத்துவம் அடையாமலும், அடைந்திருப்பின் சுபர்களின் சேர்க்கை அல்லது பார்வையால் சுபத்துவம் பெற்றிருக்கும் நிலையிலும் உள்ள ஒரு ஜாதகம் உயர்நிலை அடைகிறது.

ஜோதிடத்தை ஊன்றிக் கவனிப்பவர்கள் பௌர்ணமி நிலையில் அல்லது வளர்பிறைச் சந்திரனைக் கொண்டு பிறந்தவர்கள், ஜாதகத்தில் பிற கிரகங்களின் வலுவிற்கேற்ப மற்றவர்களை விட ஒருவிதமான உயர்நிலையில் இருப்பதை கவனித்திருக்கலாம்.

ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகள் வருகின்றன. பௌர்ணமி தினத்தன்று மட்டுமே ஒளிக் கிரகங்களான சூரியன், சந்திரன் இரண்டும் வலுவாக இருக்கின்றன. சூரியன் பகலிலும், சந்திரன் இரவிலும் திறனுடன் இருக்கும் நாள் பௌர்ணமி மட்டுமே. இந்த 12 பௌர்ணமி தினங்களையும் ஒளி அமைப்பில் வரிசைப்படுத்தினால், முதலாவதாக திருக்கார்த்திகை பவுர்ணமியும், இரண்டாவதாக சித்ரா பௌர்ணமியும், மூன்றாவதாக ஆடிமாதம் திருவோணத்தில் நிகழ்வதும், நான்காவதாக ஆவணி மாதம், அவிட்டத்தில் வருகின்ற பௌர்ணமியும் அமையும்.

பௌர்ணமி அமைப்பு சந்திரனை முன்னிறுத்தி சொல்லப்படுவதால், சந்திரன் உச்சமாகும் கார்த்திகை பௌர்ணமி முதலாவதாகவும், சூரியன் உச்சமாகும் சித்திரை பௌர்ணமி இரண்டாவதாகவும், சந்திரன் ஆட்சி பெறும் ஆடிப் பௌர்ணமி மூன்றாவதாகவும், சூரியன் ஆட்சி பெறும் ஆவணிப் பௌர்ணமி நான்காவதாகவும் சொல்லப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் இரவில் சந்திரன் மிக அதிகப் பொலிவுடன், ஒளித்தன்மையுடன் இருப்பதைக் காணலாம்.

சந்திரசேகர் அவர்களும் இதுபோன்ற ஒரு சித்ரா பௌர்ணமி நாளில் பிறந்திருக்கிறார். அவரது ஜாதகத்தில் சிம்மாதிபதியாகிய சூரியன் லக்னத்தில் உச்சமாகி, வர்கோத்தம அமைப்பில் இருக்கிறார். அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் இருக்கும் ஒரு கிரகம் வர்க்கச் சக்கரங்கள் அனைத்திலும் அதே இடத்திலேயே இருக்கும். இது ஒரு மிக உன்னதமான நிலை.

அதன்படி சந்திரசேகருக்கு பௌர்ணமி சந்திரனின் பார்வையை வாங்கிய சூரியன் உச்ச வர்கோத்தமம் பெற்ற நிலையில், வேறு எவ்வித பாபத் தொடர்புகளும் இல்லாமல் இருக்கிறார். சிம்மாதிபதி உச்சம் பெற்ற நிலையில் சிம்மம் குருவால் பார்க்கப்படுகிறது.

ஒரு பலவீன நிலையாக சிம்மத்தை தனது பத்தாம் பார்வையாக சனியும் பார்க்கிறார். ஆனால் அந்தச் சனிக்கு ராசியில் ஆட்சி, அம்சத்தில் உச்சம் பெற்று தனித்திருக்கும் சுக்கிரனின் பார்வை இருக்கிறது. சனியின் பார்வை எப்போதும் கெடுக்கும் என்றாலும், சுபத்துவம் பெற்ற சனியின் பார்வை கெடுதல்களை குறைத்து செய்யும் அல்லது கெடுதல் செய்யாது. பார்க்கும் கிரகத்தின் சுப வலிமையைப் பொருத்து, சனி பார்வையின் குறை நிறைகள் இருக்கும்.

சனி என்பது சுப ஒளியற்ற ஒரு இருள் கிரகம். அது மற்றொரு சுப கிரகத்திடமிருந்து சுப ஒளியைக் கடனாகப் பெறும் போது சுபத்துவம் அடைந்து, ஒரு மனிதனுக்கு நன்மைகளை தரும் தகுதி பெறுகிறது. சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாத சனி, ஒருநாளும் நன்மைகளைச் செய்ய மாட்டார். மாறாக கடுமையான தீய பலன்களைச் செய்வார். பாபத்துவம் மட்டுமே அடைந்து, தனது இயற்கைத் தன்மையோடு மட்டுமே இருக்கின்ற சனியின் பார்வை சம்பந்தப்பட்ட பாவகங்களுக்கு மிகக் கடுமையான கெடுபலன்களைத் தரும்.

சந்திரசேகரின் ஜாதகத்தில் சனியை சுபத்துவப்படுத்தும் சுக்கிரன் ஆட்சி பெற்ற நிலையில் தனித்து இருக்கிறார். சுக்கிரன், சூரியன் போன்ற கிரகங்களுடன் சேர்ந்திருக்கும் நிலையில் அவருடைய சுபத்தன்மை குறைந்து பிறரை சுபத்துவப்படுத்தும் அவரது பார்வைக்கும் வலு இருக்காது. இங்கே சுக்கிரன் தனித்து ராசியில் ஆட்சியாகவும், அம்சத்தில் உச்சமாகவும் இருக்கும் அமைப்பில் சனியைப் பார்ப்பதால், சனியின் பார்வைபடும் இடங்கள் அனைத்தும் சுப பலனையே செய்யும்.

மேலும், இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஏறத்தாழ ஒரே டிகிரியில் ராகுவுடன் இணைந்து கிரகண நிலையில் இருக்கிறார். லக்னாதிபதிக்கு  வீடு கொடுத்த புதனுக்கும் நீசநிலை இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் ஆறுக்குடையவன் வலுவிழப்பது மேம்பட்ட நிலை என்றாலும், லக்னாதிபதி ராகுவுடன் இணைந்து மிக நெருக்கமாக கிரகணம் அடையக்கூடாது.

சனிக்கு சுக்கிரனின் பார்வை இருப்பது போலவே லக்னாதிபதியின் இந்த பலவீனத்தையும் குருவின் பார்வை இங்கே ஈடு செய்கிறது. ஒரு ஜாதகத்தின் பலவீன அமைப்புகளை நேர்ப்படுத்துவதில் குருவுக்கு நிகர் குருவாகவே அமைவார்.

எந்த ஒரு நிலையிலும் ஒளியிழந்த, நீசமான, கிரகணமான அமைப்புகளை நல்ல நிலைக்கு மாற்றித் தருவது குருவின் பார்வை மட்டுமே. கடுமையான பலவீன நிலைகளில் குருவே இருந்தாலும் அவரது பார்வைக்கு  ஓரளவிற்கேனும் திறன் இருந்தே தீரும்.

உதாரணமாக அஸ்தமனமான கிரகங்களுக்கு பார்வைத் திறன் இல்லை என்று நம்முடைய கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அந்தக் கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தே இது கணக்கிடப்பட  வேண்டும். உச்சம், ஆட்சி, மூலத்திரிகோணம் போன்ற ஸ்தான பலம் பெற்றிருக்கும் நிலையில், ஒரு கிரகம் சூரியனோடு மிக நெருக்கமாக இணைந்திருந்தாலும், அந்தக் கிரகத்தின் பார்வை பலம் குறைந்திருக்குமே தவிர அது முழுக்க பார்வையை இழந்து குருடாகி இருக்காது.

ஜோதிடமே மகா நுணுக்கமான ஒரு கலைதான். இங்கே விதிகளை விட விதிவிலக்குகளை ஓரளவுக்கு அறிந்து கொள்ளும் திறன் உள்ளவனே, கிரகங்களின் உண்மை நிலையை சரியாக கணிக்க முடியும்.

சந்திரசேகரின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய், ராசி இரண்டும் பங்கமற்ற குருவின் பார்வையைப் பெறுகிறது. லக்னாதிபதி நேரடியாக வலுவிழந்து, பின் குருவின் பார்வையால் வலுப்பெற்ற அமைப்பால், இவரது வாழ்க்கை சொகுசாக அமையாமல், முழுக்க முழுக்க போராட்டமாக இருந்தது. சந்திரசேகர் ஆடம்பர சொகுசு வாழ்க்கையை அனுபவித்தவர் இல்லை. தன்னுடைய இறுதிக் காலம் வரை ஒரு தூய்மையான அரசியல்வாதியாகத்தான் அவர் இருந்தார். நாட்டிற்காக போராடியவர்கள் மற்றும் சிறை சென்றவர்களின் ஜாதகங்களில் லக்னாதிபதி அமைப்பு ஒரு சிக்கலான நிலையில்தான் இருக்கும்.

பதவியைத் தரும் பத்தாமிடத்தைப் பொருத்தவரையில், இவரது ஜாதகத்திலும் லக்னத்திற்கு 10-க்குடைய சனி மிகுந்த சுபத்துவம் அமைப்பில் இருக்க, ராசிக்கு 10-க்குடையவர் பூரணச் சந்திரனாக இருக்கிறார். இது பிரதமர் போன்ற ஒரு உச்ச பதவியை வகிப்பதற்கான வலிமையான அமைப்பு.

அடுத்து பிரதமராக சிலகாலம் இருந்து, தற்போதும் மாநில அரசியலில் அதிகாரத்துடன் இருக்கும் திரு. தேவகவுடா அவர்களின் ஜாதகத்தை பார்க்கலாம்.

சந்திரசேகருக்கும் இவருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. மற்றவர்களைப் போல அல்லாமல் பிரதமர் பதவியை விட்டு நீங்கிய பிறகும் மாநில அரசியலில் செல்வாக்குடன் இருப்பவர் தேவகௌடா. இளமைக் காலம் தொட்டே அரசியல் செல்வாக்கு கொண்டவர். மாநில அரசியலில் படிப்படியாக வளர்ந்து, மத்திய அரசின் உச்சம் தொட்டவர். தற்போதும் அதிகாரம் செய்யக் கூடிய நிலையில்தான் இருக்கிறார்.

தேவகவுடா 18-5-1933 மதியம் 12-30-க்கு கர்நாடக மாநிலம் ஹாசனில் பிறந்தவர். இவரது ஜாதகப்படி சிம்ம, லக்னம், கும்ப ராசியாகி லக்னாதிபதி சூரியன் சுக்கிரனை 7 டிகிரிக்குள் அஸ்தமனம் செய்து சுபத்துவமாகி, சுக்கிரனின் வீட்டிலும் அமர்ந்து பத்தாமிடத்தில் முழு திக்பல அமைப்பில் இருக்கிறார். இது ஆட்சி உச்சத்தை விட மேம்பட்ட நிலை. சூரியனும் சந்திரனும் லக்னத்திற்கு கேந்திரங்களிலும் தங்களுக்குள் கேந்திரங்களாகவும் இருக்கிறார்கள்.

சிம்மத்தோடு ராகு,கேதுக்கள் தொடர்பு கொண்டிருந்தாலும், எதையும் வளர்க்கக் கூடிய கேதுதான், குரு, செவ்வாயுடன் இணைந்திருக்கிறார். சிம்மத்தில் ராகு இருப்பதுதான் பலவீன நிலை. கேது இருப்பது அல்ல. ராகு சிம்மத்தில் இருப்பின் ஒருவர் அதிகார பதவி அடைவதற்கு தடை இருக்கும்.லக்னாதிபதி வலுவடைந்திருக்க, அதிகாரத்தைக் குறிக்கும் ராஜராசியான சிம்மம் குருவின் இருப்பால் சுபத்துவமடைந்திருக்கிறது. சிம்மத்தில் செவ்வாயும், குருவும் இணைந்த நிலையில் செவ்வாய் இங்கே வர்கோத்தமம் அடைந்திருக்கிறார். செவ்வாய்க்கும் குருவிற்கும் சிம்மம் அதிநட்பு வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்மத்தில் ராகு இருந்தும் ஒருவர் உயர்பதவியில் இருக்கிறார் எனில் அவருக்கு சிறு வயதிலேயே ராகுதசை முடிந்திருக்கும். அல்லது ராகு மிகுந்த சுபத்துவம் அடைந்திருப்பார். ஒரு கிரகம் கெடுபலனைத் தரும் அமைப்பில் இருந்தால் கூட அந்த பலன் அதன் தசையில்தான் நடக்கும். தனக்கு அதிகாரம் தரும் தன்னுடைய தசை வராத நிலையில் தனது நல்ல, கெட்ட பலன்களை ஒரு கிரகத்தால் தர இயலாது.

தேவகவுடாவின் ஜாதகத்தில் சூரியனும், சிம்மமும் அதிகமான சுபத்துவம், மற்றும் சூட்சும வலு அடைந்திருக்கின்ற காரணத்தினால்தான், பிரதமர் பதவியை அவர் இழந்திருந்தாலும் கூட மாநில அரசியலில், அதிகார அமைப்பில் இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.

தற்போது கர்நாடகாவில் அவரது மகன் முதல்வராக இருந்தாலும், மகனைவிட செல்வாக்குள்ளவர் அவர்தான். அவரை வைத்துத்தான் அவரது கட்சி அமைப்புகள் இருக்கின்றன. சிம்மாதிபதி சூரியன் வலுப்பெற்ற அவரது ஜாதகமே இதனை உறுதிப்படுத்தும்.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

2 thoughts on “ராஜ அதிகாரம் தரும் பவுர்ணமி நிலை..!-D-037-குருஜியின் விளக்கம்.

  1. ஐயா வணக்கம்..தங்கள் கட்டுரையில் ஒரு கிரகம் தன்னுடைய பலன்களை தனது தசா காலத்தில்தான் தரும் என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் புக்தி,அந்தரத்தில் எவ்வாறு செயல்படும்?

  2. My son was born on chitra pournami 2017 11.17am at palani nw v r going through hard time bcoz of raghu dasa … Wil that be resolved

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *