adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ராகுல் காந்தி ஜாதக விளக்கம்.D-033 – Explanation of Rahul Gandhi horoscope.

பல்வேறு விதமான பிறந்த நேரங்களைக் கொண்டு விளக்கப்படும் பிரதமர் மோடி அவர்களின் ஜாதகங்களில் எது உண்மையான ஜாதகம் என்பதை ஒரு ஜோதிட ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு, அதிகாரம் உள்ளவரின் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் எனும் வேத ஜோதிட விதிகளோடு இதனை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சென்ற வாரம் தற்போது மத்திய மந்திரியாக இருக்கும் ஒருவரின் ஜாதகத்தையும், ஏற்கனவே மத்திய மந்திரியாக இருந்தவரின் ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அதில் வேத ஜோதிடம் சொல்லும் விதிகளையும், செப்டம்பர் 17, 1950, காலை 11 மணிக்கு பிறந்ததாக குறிப்பிடப்படும் மோடி அவர்களின் ஜாதகத்திற்கும் உள்ள வித்தியாசங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

தற்போது பிரதமர் மோடி அவர்களுக்கு போட்டியாளராகவும், பிரதமரின் கட்சிக்கு இணையாக இந்தியா முழுக்க விரவியிருக்கும் பழம்பெரும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவராகவும் உள்ள திரு. ராகுல்காந்தி அவர்களின் ஜாதக விளக்கத்தைப் பார்க்கலாம்.

திரு. ராகுல் காந்தி அவர்கள் எம்.பி பதவியைத் தவிர நேரடி அரசு உயர் பதவியில் இதுவரை இருந்ததில்லை. ஆயினும் என்றேனும் ஒருநாள் பாரதப் பிரதமராவார் என்று அவரது கட்சியினராலும், அரசியல் விமர்சகர்களாலும் நம்பப்படுகிறார்.

இயல்பாகவே ராகுல் காந்தி பிறந்தது முதல் ஒரு அதிகார குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். அந்தக்கால பாணியில் சொல்லப் போனால் ராகுல், எதிர்காலத்தில் ஒரு நாள் மன்னனாகக் கூடும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ள ஒரு இளவரசர்தான். எனவே இவரும் வேதஜோதிடம் சொல்லும் அதிகார அமைப்பு விதிகளைக் கொண்ட ஜாதகத்தோடுதான் பிறந்திருக்க வேண்டும்.

வரும் தேர்தலில் மோடி அவர்கள் ஜெயித்து மீண்டும் பிரதமராவாரா அல்லது ராகுல்காந்தி பிரதமர் ஆவாரா என்று ஆராய்வது நம்முடைய நோக்கம் அல்ல. அதனை பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம். இப்போது நாம் எடுத்துக் கொண்டிருப்பது, பல்வேறு வித பிறந்த நேரங்களில் சொல்லப்படும் இன்றைய பிரதமரின் ஜாதகங்களில் எது உண்மையாக இருக்கக்கூடும் என்பதை வேதஜோதிட விதிகளின்படி நிரூபிக்க முயற்சிப்பதுதான்.

சென்ற வாரம் மாலைமலர் கேள்வி-பதில் பகுதியில் ஒரு வாசகர் “என்னால் அரசியலில் அதி உச்ச பதவியை அடைய முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரது ஜாதகநிலைகளை விளக்கி அவரால் உள்ளாட்சி அமைப்புகளில் உயர் பதவியில் அமர முடியும் என்று பதில் கொடுத்திருந்தேன்.

தற்போதைய “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் பிரபலமானவர்கள், கோடீசுவரர்கள், அதிகார அமைப்பில் உள்ளவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களின் ஜாதக விவரங்களை, வேத ஜோதிட விதிகளை ஒப்பிட்டு நான் தந்து கொண்டிருப்பதே ஜோதிடம் என்பது ஒரு விஞ்ஞான ரீதியிலான எதிர்காலம் சொல்லும் கலை என்பதை மெய்ப்பிக்கத்தான்.

ஜோதிடம் கூறும் முழுமையான விதிகளோடு பிறந்தவர், அது போன்ற தொழில் அமைப்புகளில் இருக்கிறார் என்பதை, ஜோதிடத்தை நம்பாதவர்களுக்கும் எடுத்துக்காட்டவே இந்தக் கட்டுரைகளை நான் எழுதி வருகிறேன். இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள், இந்தக் கலையில் எதிர்காலம் பற்றிய “ஏதோ ஒன்று” பொதிந்திருக்கிறது என்பதை ஆராய முனைவோருக்கு எனது கட்டுரைகளும், விளக்கங்களும் மிகவும் உதவிகரமாக இருக்கக்கூடும்.

அதன்படியே மிக உயர் அதிகாரத்தில் உள்ளோரின் ஜாதகங்கள் எப்படி இருக்கின்றன என்பதற்கு இன்னொரு உதாரணமாக, பிரதமருக்கு போட்டியாளராக கருதப்படுவதோடு, சரியான பிறந்த நாள், நேர விபரங்களைக் கொண்ட ராகுல்காந்தி அவர்களின் ஜாதகத்தை கீழே விளக்கி இருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளின் ஆரம்பத்தில் நான் எழுதியதைப் போல எவ்வித பின்னணியும் இல்லாத, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த காரணத்தினால், பிரதமரின் உண்மையான பிறந்தநாள். நேர விபரங்கள் அவருக்கே கூட உறுதியாகத் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

ஆனால் ராகுல்காந்தி மோடியைப் போல அல்லாமல் பெரும் பாரம்பரிய பின்னணியுள்ள, இந்தியாவின் தலைமைக் குடும்பத்தில் பிறந்தவர். இன்றும் பாரத மக்களால் மறக்காமல் நினைவு கூரப்படும், இரும்புப் பெண்மணியான திருமதி இந்திராகாந்தியின் பேரன் அவர்.  ராகுல் பிறக்கும் போது அவரது பாட்டி பிரதமராக இருந்தார்.

ஒருவகையில் பார்த்தால் அகில இந்தியாவும் “இந்திராதான் இந்தியா, இந்தியாதான் இந்திரா” என்ற கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்த காலம் அது. எனவே அகில இந்தியாவும் இந்திராகாந்தியின் பேரனின் பிறப்பை அறிந்திருந்தது என்று கூடச் சொல்லலாம். எனவே மோடி அவர்களின் பிறந்தநாள் விபரங்களைப் போல அல்லாமல் ராகுல்காந்தியின் பிறந்த நாள் மிகவும் உறுதியானது.

கீழே ராகுல்காந்தி அவர்களின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன்.

ராகுலின் பிறந்த நாள் 19-6-1970, பிறந்த இடம் டெல்லி. (சில காரணங்களால் அவரது பிறந்த நேரத்தை இங்கே நான் தர முடியாது.)

கன்னி லக்னம், தனுசு ராசியில் பிறந்த இவருக்கு, லக்னாதிபதி புதன் பூரணச் சந்திரனின் ரோகினி நட்சத்திரத்தில் அமர்ந்து, திரிகோண யோக பாவகமான ஒன்பதாமிடத்தில் வர்கோத்தம நிலையில் இருக்கிறார். எவருடனும் சேராத தனித்த புதன் குருவுக்கு நிகரான சுபர் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. அதன்படியே இங்கே லக்னாதிபதி மிகுந்த வலிமையான சுபத்துவ அமைப்புடன், எவ்வித பாபத் தொடர்புகளும் இன்றி இருக்கிறார்.

இந்த ஜாதகத்தில் மிகவும் சிறந்த ஒரு அம்சமாக சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் திக்பல நிலையில் இருக்கின்றன. குரு, சனி, ஆகிய  இரண்டு கிரகங்கள் திக்பலத்திற்கு மிக அருகில் இருக்கின்றன. ஆகவே இந்த ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் மிக வலுவான ஒரு சுப நிலையில் இருக்கின்றன.

அதிகாரத்தைக் குறிக்கின்ற சூரியனும், சந்திரனும் மிக வலுவாக இருக்கும் பூரண பௌர்ணமி நிலையில் ராகுல் பிறந்திருக்கிறார். இவர் பிறந்த அன்று பரிபூரண பவுர்ணமி நிலை. ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் முழுமையான சுபத்துவ வலுவுடன் இரண்டு டிகிருக்குள் நேரெதிரே இருக்கிறார்கள்.

என்னிடம் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கும் நேரத்தை முன்கூட்டியே குறிக்க வருபவர்களிடம் நான் “ஒரு குழந்தை பிறப்பு என்பது பரம்பொருள் நிர்ணயிப்பது. அதை ஜோதிடரோ, மருத்துவரோ நிச்சயிக்க முடியாது. எப்போது எவர், எங்கே, எதற்காகப் பிறப்பார் என்பது பரம்பொருளின் கையில் மட்டுமே இருக்கிறது.” என்று சொல்வதுண்டு.

அதேபோல ராகுல் இதுபோன்ற பவுர்ணமி நிலையில்தான் பிறக்கவேண்டும் என்பதை அவரது தந்தையான ராஜீவோ, அல்லது தாய் சோனியாகாந்தியோ நிர்ணயித்திருக்க முடியாது. ஏன்.. அன்றைய சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்த அவரது பாட்டி இந்திரா காந்தி கூட தன்னுடைய பேரன் இந்த நாள், இந்த நேரத்தில்தான் பிறக்க வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்க முடியாது.

ஒரு உயர்குடி பிறப்பு என்பது கர்மாவின் அடிப்படையில் நிகழ்கிறது. அதிகாரமுள்ளவர்கள் இப்படிப்பட்ட ஜாதக அமைப்பில்தான் பிறக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்து நான் விளக்க இருக்கும் ஜாதக அமைப்பிலும் நீங்கள் உணர  முடியும்.

ராகுலின் ஜாதகத்தில் வேதஜோதிடம் விளக்கியிருக்கும் அதிகாரத்தின்  அடையாளமாக, ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களாகவும், லக்னத்திற்கு கேந்திர நிலையிலும் இருக்கிறார்கள். மிகவும் உன்னதமாக, சந்திரன் நான்கில் திக்பலம், சூரியன் பத்தாமிடத்தில் திக்பலம் என்ற அமைப்பிலும், இயல்பான அதிகார மனதைத் தரக்கூடிய செவ்வாய், சுபச் சூரியனுடன் இணைந்து, பவுர்ணமிச் சந்திரனின் பார்வையிலும் சுபத்துவமாகி, திக்பல அமைப்பிலும் இருக்கிறார்.

ராகுலின் ஜாதகத்தில் லக்னமும் வர்கோத்தம அமைப்பில் மிக வலுவாக அமைந்திருக்கிறது. மேலும் நான் அடிக்கடி குறிப்பிடும் சந்திராதி யோகம் இங்கே எழுபது சதவிகிதம் முழுமை பெற்ற நிலையில் இருக்கிறது. அதாவது பூரணச்சந்திரனுக்கு ஆறில் புதனும், எட்டில் சுக்கிரனும் இருக்கிறார்கள். இங்கே புதன், சுக்கிரனோடு குருவும் இருந்திருந்தால் இது முழுமையான சந்திராதி யோகமாக அமைந்திருக்கும்.

ஆக இந்த ஜாதகத்தில் வேதஜோதிடம் வலியுறுத்தி சொல்லும் சூரியனின் பத்தாமிட இருப்பு, சூரியனின் திக்பலம், பூரணச் சந்திரனின் பார்வை, மற்றும் வர்கோத்தம வலுப்பெற்ற குருவின் பார்வை என சூரியன் அதிகமான சுபத்துவமாகி இருக்கிறார்.

இரண்டு கிரகங்கள் திக்பலம் பெற்றிருக்கும் நிலையில், மேலும் மூன்று கிரகங்கள் திக்பலத்திற்கு வெகு அருகில் இருக்கின்றன. அதாவது குருவும், சனியும் அப்போதுதான் திக்பல நிலையை விட்டு விலகிய அமைப்பில் இருந்தாலும் திக்பலத்திற்கு வெகு அருகில்தான் இருக்கிறார்கள். இதில் குரு வர்க்கோத்தம அமைப்பிலும் இருக்கிறார். இவரது பாட்டியான இந்திராகாந்தி அவர்களின் ஜாதகத்தில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் என்னுடைய “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு தியரி” யான ஒருவர் அளவற்ற சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமானால், உடல் உழைப்பைத் தரும் சனி, நேர்வலு இழந்து சூட்சுமவலு அடைய வேண்டும் என்பதன்படி ராகுலின் ஜாதகத்தில் சனி நேர்வலு இழந்து நீசமாகி, வர்கோத்தம வலுப்பெற்ற குருவின் பார்வையைப் பெற்றிருக்கிறார்.

ஒரு முக்கிய நிலையாக 48 வயதாகியும் இதுவரை ராகுல்காந்தி நேரடியாக திருமண அமைப்பில் இல்லாமல் இருக்கிறார். அதோடு அவருக்கு குழந்தை பாக்கியமும் இதுவரை இல்லை. இதற்கு அவருடைய ஜாதகப்படி லக்னத்திற்கு எட்டில் அமர்ந்த நீச சனியும், ராசிக்கு ஏழில் அமர்ந்த செவ்வாயுமே காரணம்.

மேலும் லக்னத்தின் ஏழாமிடத்திற்கு எவ்விதமான சுபத்தொடர்புகளும் இன்றி அதன் அதிபதியான குரு அந்த பாவகத்திற்கு 8-ல் மறைகிறார். தவிர புத்திர ஸ்தானமான லக்னத்திற்கு ஐந்தாமிடத்தை நீச சனியும், செவ்வாயும் பார்க்கிறார்கள். ராசிக்கு ஐந்தில் நீசசனி இருக்கிறார். புத்திரகாரகனாகிய குருவிற்கு நீசசனியின் பார்வையும் இருக்கிறது. கடுமையான களத்திர தோஷமும், புத்திர தோஷமும் கொண்ட ஜாதகமாக இருப்பதால்தான் ராகுல்காந்திக்கு இதுவரை  திருமணம் அமைப்பு இல்லை.

இத்தனை இருந்தாலும் ராகுல்காந்தி இன்னும் நேரடி உயர் அதிகார அமைப்பில் இல்லையே என்ற கேள்வி எழுவது எனக்குப் புரிகிறது. நேரடியான அதிகார அமைப்பில் ராகுல் இல்லாவிட்டாலும், தற்போது சர்வ அதிகாரமுள்ள, பிரதமர் பதவிக்கு நிகராக சொல்லப்படும், ஒரு மிகப்பெரிய கட்சியின் தலைவராக இருக்கிறார். அதைவிட மேலாக இவரது பாட்டி பிரதமர், தந்தை பிரதமர் என பிறந்தது முதலே ஒரு மறைமுகமான அதிகார அமைப்பில்தான் ராகுல் இருந்து வருகிறார்.

இத்தனை ஜாதகச் சிறப்புகள் இருந்தும், அவரது தந்தையான ராஜீவ் காந்தியைப் போல இளம் வயதிலேயே ஏன் இன்னும் ராகுலால் பிரதமராக முடியவில்லை, அவரது திறமையைப் பற்றி மாறுபட்ட விமர்சனங்கள் ஏன் வைக்கப் படுகின்றன என்பதை ஜோதிட ரீதியாக அடுத்த வாரம் பார்க்கலாம்.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

One thought on “ராகுல் காந்தி ஜாதக விளக்கம்.D-033 – Explanation of Rahul Gandhi horoscope.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *