adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
பிரதமர் மோடியின் ஜாதக விளக்கம் D- 031 – Prime Minister Modi’s interpretation of Modi…

பெரும்பாலான ஜோதிடர்கள் பிரதமரின் ஜாதகம் என்று சொல்லும் கீழ்கண்ட ஜாதகத்தின் உண்மை நிலை விளக்கங்களை இந்த வாரமும் தொடருவோம்... 

மேலே குறிப்பிட்ட ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ராசிசந்தியில் இருக்கின்றன. “ராசிசந்தி” எனப்படும் இரண்டு ராசிகள் இணையும் இடத்தில் இருக்கும் கிரகங்கள் நற்பலன்களைத் தராது என்பது பாரம்பரிய ஜோதிடத்தின் ஒரு முக்கியமான விதி.

பிரதமர் மோடி அவர்களின் ஜாதகம் என்று இணையதளத்தில் விவாதிக்கப்படும் இந்த ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் ஒரு டிகிரிக்கும் குறைவான ராசி சந்தி அமைப்பில் இருக்கின்றன. மிக முக்கியமாக ஒருவருக்கு ஆளுமைத் திறனைக் கொடுக்கக் கூடிய சூரியன் சிம்ம ராசியை விட்டு கன்னிக்குள் நுழைந்து ஒரு டிகிரி கூட முழுமை பெறாமல் 35 கலையில் இருக்கிறார்.

மிகுந்த பேச்சுத் திறமையையும், நிர்வாகத் திறனையும் தரும் புதன், உச்ச வக்ரம் பெற்ற நிலையில் சூரியனைப் போலவே ஒரு டிகிரி கூட முழுமையடையாமல் 47 கலையில் இருக்கிறார். லக்னாதிபதி என்று குறிப்பிடப்படும் செவ்வாயும் ஒரு பாகையைக் கூட முடிக்காமல், தனது சொந்த ராசியான விருச்சிகத்தில் 55 கலையில் அமர்ந்திருக்கிறார்.

ஆயுள்காரகனான சனி, சூரியனுடன் மிக மிக நெருக்கமாக ஒரே டிகிரிக்குள் இணைந்து அஸ்தமனமும் ஆகி, சிம்மத்தை விட்டு வெளியேற இன்னும் 20 கலைகள் மட்டும் மீதம் இருக்கும் நிலையில், சிம்மத்தின் இறுதிப் பாகையில் இருக்கிறார். லக்னத்தை தவிர்த்து சூரியன், புதன், செவ்வாய், சனி ஆகிய நான்கு கிரகங்களும் இந்த ஜாதகத்தில் ராசி சந்தியில் அமைந்திருக்கிறார்கள். 

இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில், கடுமையான ராசிசந்தி அமைப்பிலும், அஸ்தமன நிலையிலும் உள்ள சனியும், புதனும் இந்த ஜாதகத்தின் ஆயுள்காரகனும், அஷ்டமாதிபதியும் ஆவார்கள். இவர்கள் இருவரின் தசைகளும் பிறந்தது முதல் ஏறத்தாழ 28 வயதுவரை பிரதமருக்கு நடந்திருக்கிறது. லக்னத்தை சுபர் பார்க்காமல், லக்னாதிபதி செவ்வாய் ராசியில் நீசனுடன் இணைந்து, அம்சத்தில் செவ்வாயே நீசமாகியுள்ள நிலையில் இது ஆயுள் அமைப்பில் நல்ல பலன்களைத் தந்திருக்காது.

ராசிக்குள் நுழையும் நிலையில் இருக்கின்ற ஒரு கிரகமும், ராசியை விட்டு வெளியேறும் நிலையில் இருக்கின்ற கிரகமும் பூரண நற்பலன்களை தருவதில்லை என்று நம் கிரந்தங்களில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தவிர்த்து மிக முக்கிய அமைப்பாக, ஒரு மிகப்பெரிய நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தும் அளவிற்கு அதிர்ஷ்டமுள்ள ஒருவரின் ஜாதகத்தில் பதவியை தரக்கூடிய பத்தாமிடம் மற்றும் அதன் அதிபதி மிகுந்த வலுவுடன் சுபத்துவமாக இருக்க வேண்டும். 

மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகத்தில் இதனை தெளிவாகக் காணலாம். கலைஞருடைய ஜாதகத்தில் ராசிக்கு 10க்குடைய சனியும், லக்னத்திற்கு பத்திற்குடைய செவ்வாயும் உச்சம். எம்ஜிஆரின் ஜாதகத்தில் ராசிக்கு 10-க்குடைய குரு ஆட்சி, லக்னத்திற்கு 10-க்குடைய புதன் பரிவர்த்தனை மூலம் ஆட்சி, ஜெயலலிதாவின் ஜாதகத்தில் தெள்ளத்தெளிவாக ராசிக்கு 10-க்குடைய சுக்கிரன் உச்சம், லக்னத்திற்கு 10-க்குடைய குரு ஆட்சி என்ற நிலை இருக்கிறது.

வேத ஜோதிட விதிகளின்படி ஒருவர் பிரதமர் போன்று மிகப்பெரிய தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டுமெனில் பத்தாமிடமும், சூரியனும் மிக வலுவாக இருக்க வேண்டும். குறிப்பாக சூரியன் மிகுந்த சுபத்துவமாக திக்பலத்திற்கு அருகில் அமைந்தோ அல்லது பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டோ இருக்க வேண்டும். நான் மேலே சொன்ன முன்னாள் முதல்வர்கள் அனைவரின் ஜாதகத்திலும் இந்த அமைப்பு தெளிவாக இருக்கிறது. நான் சொல்லும் இந்த விதியினை இப்போது ஆளுகின்ற அரசியல்வாதிகள் அனைவரின் ஜாதகங்களிலும் காண முடியும்.

அனைத்திலும் மேலாக அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது என்ற நிலை மாறி, அனைத்தும் வணிக மயமாகிவிட்ட இந்தக் காலத்தில் லக்னாதிபதி மிகுந்த சுபத்துவமாகி, வலிமை பெற்றிருப்பவரே மிகவும் பிரபலமான மக்கள் தலைவராக, பெரும்பான்மை மக்களின் செல்வாக்கு பெற்ற நீடித்த புகழுடைய தலைவராக இருக்க முடியும். 

மோடி அவர்கள் பிரதமராவதற்கு முன்பே குஜராத் முதல்வராக, மிகுந்த புகழுடன், தோல்வியே அறியாதவராக இருந்திருக்கிறார். இப்படிப்பட்டவருடைய ஜாதகத்தில் லக்னம், லக்னாதிபதி எவ்வித பாபத் தொடர்புகளும் இன்றி மிகுந்த வலிமையுடன் சுபத்துவமாக இருக்கவேண்டும்.

ஆனால் கொடுக்கப்பட்டிருக்கின்ற ஜாதகத்தில், லக்னாதிபதி செவ்வாய் ராசியில் ஆட்சி பெற்று வலிமையாக இருப்பதைப் போல தோன்றினாலும் நவாம்சத்தில் நீசமாக இருக்கிறார். ராசி, லக்னம் இரண்டும் ஒன்றாகி இங்கே சுபகிரக தொடர்புகளே இல்லை குறிப்பாக எவ்வித சுப கிரக பார்வையும் லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ, ராசிக்கோ இல்லை.

இன்னும் சிலர் குறிப்பிடும்படி ஒருவேளை மோடி அவர்கள் இரண்டு மணி நேரம் முன்னதாக ஒன்பது மணியளவில் துலாம் லக்னத்திலேயே பிறந்திருக்கலாம் என்று எடுத்துக்கொண்டாலும் அனைத்து கணக்குகளும் தடுமாறுகின்றன. பிரதமர் காலை 9 மணி, 9.22, 10.12, மதியம் 12.30 என காலையிலிருந்து மதியத்திற்குள் பிறந்ததாக ஒவ்வொரு ஜோதிடரும் தங்கள் இஷ்டத்திற்கு ஒரு ஜாதகத்தை இங்கே விளக்குகிறார்கள். 

சரி... லக்னாதிபதி வலுவிழந்த நிலையில் வாழ்ந்த தலைவர்களே இல்லையா என்ற கேள்வி எழுமாயின், சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் வாழ்ந்த தியாக மனப்பான்மை கொண்ட வெகு சில தலைவர்களின் ஜாதகங்களில் மட்டுமே லக்னாதிபதி குறைப்பட்டு இருந்தார். அதற்கேற்றார்போல அவர்கள் சொகுசு வாழ்க்கையினை அனுபவிக்கவில்லை.

கர்மவீரர் காமராஜர் அவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அவரது ஜாதகத்தில் கடக லக்னமாகி, லக்னாதிபதி சந்திரன் எட்டில் மறைந்திருந்தார். தன் வாழ்வில் பெரும்பகுதியை காமராஜர் அவர்கள் சுதந்திரத்திற்காக சிறையிலேயே கழித்தார். ஒருநாளும் அவர் ஆடம்பரங்களை விரும்பியதில்லை. இறக்கும்போது அவரிடம் இருந்தவை இரண்டு பழைய வேட்டி, சட்டைகளும் நூறு ரூபாய் பணமும்தான் என்பது நாம் அறிந்த வரலாறு.

ஆனால் இன்றைய அரசியலாளர்களின் நிலை அவ்வாறில்லை. நாடும், மாநிலங்களும் முன்னேறியுள்ள நிலையில் அனைத்து அரசியல்வாதிகளும் சொகுசு வாழ்க்கையே வாழ்கிறார்கள். கால்நடையாகவே நாடு முழுவதும் சுற்றிய தலைவர்களின் மத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொகுசுக் கார்களில் வலம் வரும் இன்றைய அதிகார மனிதர்களை நீங்கள் ஒப்பிட முடியாது. 

சொகுசு வாழ்க்கை வாழ வேண்டுமெனில் உங்கள் லக்னாதிபதி சுபத்துவமாக இருந்துதான் தீர வேண்டும். வாரம் முழுவதும் ரேஷன் அரிசி சோறும், வெறும் கத்திரிக்காய் சாம்பாரும் சாப்பிட்ட பெருந்தலைவர் காமராஜரின் ஜாதகத்தில் லக்னாதிபதி மறைந்திருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒருவருக்கு லக்னாதிபதி கெட்டால் அரசியல் தலைவராக முடியாது.

மிக முக்கியமாக ஜாதகத்தில் சூரியன் மிகுந்த சுபத்துவத்துடன், வலிமையாக இருக்கும் ஒருவர்தான் பல கோடி மக்களின் தலைவராக இருக்க முடியும். இந்த ஒரு காரணத்தினால்தான் தலைமைக்கு காரணமான சூரியனை, இயற்கைச் சுபரான குரு பார்க்கும் யோகத்தினை சிவராஜயோகம் என்று நம்முடைய வேதஜோதிடம் அழைத்தது.

பிரதமரின் ஜாதகத்தில் சூரியன் திக்பலத்திற்கு அருகில் இருந்தாலும், சனியை பூரணமாக அஸ்தமனம் செய்து பாபத்துவமாக இருக்கிறார். மூல விதிகளின்படி அஸ்தமனம் செய்த கிரகங்களின் தன்மையை சூரியன் அப்படியே தருவார். குருவை சூரியன் அஸ்தமனம் செய்திருக்கும் அநேக ஜாதகர்கள் அரசு ஊழியராக இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது குருவின் நெருக்கத்தால் சூரியன் சுபத்துவம் அடைவதால் வருவது. தலைமை தாங்க வைக்கும் சூரியனுக்கு அருகில் பாபரான சனி இருக்கக் கூடாது. 

மற்றொரு கோணமாக, சிம்மத்தில் சுக்கிரன் இருக்க, சிம்மத்திற்கு குருபார்வை இருப்பதால் ஒரு மன்னரைத் தரக்கூடிய ராஜராசியான சிம்மம் வலுவாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும், இங்கே கும்பத்தில் இருக்கும் குருவிற்கு அதிகாரத்தை விட ஆன்மீகத்தை தரும் வலிமைதான் அதிகம். குரு, ஆட்சி உச்சம் பெற்று அல்லது நட்பு வீடுகளில் இருந்து பார்ப்பதே ஒரு ராசியை பிரதமர் ஆக்கும் அளவிற்கு வலிமையாக்கும். மேலும் சிம்மத்தில் சனி இருப்பதும், அவர் தனது ஏழாம் பார்வையால் குருவைப் பார்ப்பதும் குருவிற்கு வலிமைக் குறைவு.

பிரதமருக்கு என்று ஒரு தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையும், குழந்தைகளும் இல்லாத அமைப்பும் இந்த ஜாதகத்தில் ஒத்து வரவில்லை. ஐந்தில் ராகு இருப்பது மட்டும் புத்திரதோஷம் ஆகிவிடாது. மேலே காட்டப்படும் ஜாதகத்தில் குடும்பத்தைக் குறிக்கும் இரண்டாம் பாவகம் பாபத்தொடர்புகள் இன்றி இருக்கிறது.

இது பிரதமரின் ஜாதகம்தானா என்று விளக்குவதைக் காட்டிலும், அரசியலில் அவருடன் இருப்பவர்களின் ஜாதகங்களை ஒப்பீடு செய்து, இது அவரது ஜாதகம்தானா என்று ஒரு முடிவுக்கு வர முடியும். எனவே பிரதமரின் இரண்டாவது ஜாதகத்தை பார்க்கும் முன், இன்றைய மத்திய அரசியல்வாதிகள், மந்திரிகள் சிலரின் ஜாதகங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

அடுத்த வெள்ளி தொடருவோம். 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *