பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் ஜாதகத்தில் உள்ள யோகங்களை விரிவாக விளக்கி எழுத வேண்டுமென்று ஏராளமான வேண்டுகோள்கள் எனக்கு வந்திருக்கின்றன.
அரசியல் தலைவர்களின் ஜாதகங்களில் எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவரின் ஜாதகங்களை மட்டுமே இதுவரை நான் விளக்கியிருக்கிறேன். அதிலும் எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்த காலத்திலேயே ஜோதிடர்களால் விளக்கப்பட்ட அவரது ஜாதகம் தவறானது என்றும், இதுபோன்ற ஒரு ஜாதகத்தைக் கொண்ட ஒருவர் தமிழ்நாட்டு முதல்வராக வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லி வந்திருக்கிறேன்.
அதன்படியே திரு எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்குப் பிறகு, எல்லோருக்கும் தெரிந்த அவரது பிறந்த தேதியான ஜனவரி 17, 1917 என்பது உண்மையானது அல்ல, அதற்கு ஒரு வருடம் முன்பாக ஜனவரி 11, 1916 இரவு பதினோரு மணி சுமாருக்கு இலங்கை கண்டியில் பிறந்தவர் அவர் என்பது உறுதியானது. இறந்த பிறகு அவரது ஜாதகமும் வெளியிடப்பட்டது.
அதைப்போலவே பிரதமர் மோடி அவர்களின் ஜாதகமும் தவறானது என்றும், அந்த நாள், நேரத்தில் பிறந்திருக்கும் ஒருவர், நூறு கோடி மக்களின் தலைவராக, ஒரு மிகப்பெரிய தேசத்தின் பிரதமராக வருவதற்கு வாய்ப்பில்லை என்பதையும் தற்போது சொல்லி வருகிறேன்.
ஜோதிடம் அறிந்தவருக்கு ஒரு ஜாதகத்தின் தரத்தினை அளவிடத் தெரிய வேண்டியது மிகவும் முக்கியமானது. ஜாதகத்தைப் பார்த்தவுடன் இவர் என்னவாக இருப்பார் என்பதை ஓரளவிற்காவது கணிப்பதில்தான் ஒரு ஜோதிடரின் அனுபவமும், ஞானமும் வெளிப்படுகிறது. கையில் கிடைக்கும் ஜாதகத்தை வைத்து ஒருவரின் யோகங்களை விளக்குவது சரியான ஒன்றல்ல. ஆனால் இங்கே பிரபலங்களின் விஷயத்தில் இதுதான் நடக்கிறது. இது காலுக்குத் தகுந்த செருப்பா என்று இங்கே யாரும் பார்ப்பதில்லை. செருப்புக்கு தகுந்தார் போல காலை வெட்டுகிறார்கள்.
ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய கலைஞர் அவர்களின் ஜாதகத்தை ஒருமுறை விளக்கும்போது, “ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒரு அரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற விதிகளை மெய்ப்பிக்கும் விதமான ஜாதகத்தை கொண்டு பிறந்தவர்” என்று சொல்லியிருந்தேன். வேதஜோதிட விதிகளை ஓரளவு அறிந்தவர்கள் இந்த வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் நன்கு உணர்வார்கள்.
கலைஞருக்கு கிடைத்த அரசியல் வாய்ப்புக்கள் அவரை விட மூத்தவரும், அவரைக் காட்டிலும் வெகுஜன வசீகரம் மிக்கவருமான எம்ஜிஆருக்கு கூட கிடைக்கவில்லை. உணமையைச் சொல்லப் போனால் ஒருநிலையில் எம்ஜிஆரே கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தவர்தான்.
ஆனால் எம்ஜிஆரை தனது குருவாகக் கொண்ட ஜெயலலிதாவிற்கு, கலைஞரைப் போலவே ஒரு அரசை நிர்ணயிக்கும் வலிமையும், இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், மாநிலத்திற்கு வெளியிலும் ஒரு மேம்பட்ட ஆளுமையாக விளங்கும் அமைப்பும் கலைஞரை விட கொஞ்சம் குறைவான ஆண்டுகளுக்குக் கிடைத்தது.
இப்போது நான் சொல்லும் அரசியல் உச்ச நிலைகளின் வித்தியாசங்களை எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதகங்களில் உள்ள யோகங்களின் வாயிலாக உணர முடியும். இந்த நிலையைத்தான் கலைஞரின் ஜாதகம் ஒரு யோகக் குவியல் என்றும், மற்ற இருவரின் ஜாதகத்தை விட எம்ஜிஆரின் ஜாதகம் ஒரு மாற்றுக் குறைந்ததுதான் என்றும் முன்பு குறிப்பிட்டிருந்தேன்.
இதன் ஜோதிடக் காரணம், கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் திக்பலத்திற்கு அருகில் இருந்த சூரியனை வலுப்பெற்ற குரு பார்த்ததும், ஜெயலலிதாவின் ஜாதகத்தில் அதேபோன்று திக்பலம் பெறும் பத்தாமிடத்திற்கு அருகில் இருந்த சூரியனை, குருவிற்கு நிகரான பவுர்ணமிச் சந்திரன் பார்த்ததும்தான். இதுவே அரசியலுக்கும், ஆளுமைத்திறனுக்கும் காரணமான ஒரு மேம்பட்ட அமைப்பு.
ஆனால் எம்ஜிஆர் அவர்களின் ஜாதகத்தில் சந்திரனுக்கு பத்தில் சூரியன் இருந்தாலும், அவர் லக்னத்திற்கு நான்கில் அமர்ந்து திக்பலம் இழந்திருந்ததும், அந்த சூரியனை பரிவர்த்தனை பெற்ற சனி பார்த்ததும் ஒருவிதமான பங்க அமைப்பு. இதில் சனி பரிவர்த்தனை பெற்றிருக்காவிடில், எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அவரது வாழ்க்கை கலைத்துறையோடு முடிவு பெற்றிருக்கும். வேதஜோதிடம் அறிந்தவர்கள் நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
கலைஞர், ஜெயலலிதாவைப் போல எம்ஜிஆர் ஒரு இரக்கமற்ற ஆளுமைத்திறன் கொண்டவர் அல்ல. அவர் மிகவும் கனிவானவர். சில நிலைகளில் மிகுந்த இரக்க குணமும், அளப்பரிய உதவும் தன்மையும் கொண்டவர். நிச்சயமாக அவர் கண்டிப்பானவர் அல்ல. அவரிடம் யாரும் எதையும் பேசலாம். இந்தக் குணம் அவரது ஜாதகத்தில் ஆளுமையைக் குறிக்கும் சூரியன் திக்பலம் இழந்து, முழுமையான வலுவில் இல்லாமல் இருந்த காரணத்தினால் வந்தது. இது அரசியலுக்குப் பொருந்தாது.
உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும். கண்டிப்பில்லாதவர் நல்ல அரசனாக முடியாது என்பதே நிஜம். கேட்க ஒரு மாதிரியாக இருந்தாலும் அதுவே உண்மை. சூரியன் வலுவாக இல்லாத அமைப்பால்தான் மற்ற இருவரையும் போல அகில இந்திய அரசியலில் எம்ஜியாரால் அதிகாரமும், புகழும் பெற இயலவில்லை. மாநிலத்திற்குள்ளேயே அவரது அதிகாரம் சுற்றிச் சுழன்றது.
வேதஜோதிட விதிகள் அனைவருக்கும் பொதுவானவை. மிகவும் துல்லியமானவை. வேத ஜோதிடம் சொல்லும் விதிகள் நூறு சதவிகிதம் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் அந்த விதி சொல்லும் நிலையினை அடைந்தே தீருவார். இது என்றும் மாறாது.
“ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் நான் மருத்துவர், காவல்துறை அதிகாரி, வழக்கறிஞர் போன்றவர்களுக்கான ஜாதக அமைப்பு நிலைகளை விளக்கிய பிறகு எனக்கு வரும் ஏராளமான பின்னூட்டங்கள் என்னை மலைக்க வைக்கின்றன.
நீங்கள் சொல்லிய இந்த விதிகள் என்னுடைய என் தந்தை, என்னுடைய மகள், மகனுடைய ஜாதகத்தோடு அப்படியே பொருந்திப் போகிறது. இது அவரது ஜாதக விபரம் என்பது போன்ற மெயில்களாலும், மெசேஜ்களாலும் என்னுடைய இன்பாக்ஸ் நிரம்பி வழிகிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.
ஜோதிடம் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் காலத்தில் நான்குவிதமான தொழில் முறைகள் மட்டுமே இருந்தன. அவைகளும் நான்கு வருணத்தாருக்குமாக பிரித்து வைக்கப்பட்டிருந்தன. “பத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்” என்ற கட்டுரையில் நான் விளக்கியிருந்தபடி நவீனகால சூழ்நிலைகளுக்கேற்ப ஜோதிட விதிகளை நாம்தான் உருவாக்கி கொள்ள வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே விற்கும் ஒரு வியாபாரிக்கான அமைப்பை நீங்கள் வேதஜோதிட விதிகளில் தேடக் கூடாது. பிளாஸ்டிக் என்பது சமீப காலங்களில் கண்டு பிடிக்கப்பட்டது. அது சனியின் மூலப்பொருளான பெட்ரோல் உருவாகும் கச்சா எண்ணெயில் இருந்து கிடைப்பதால் இது ஒரு சனியின் காரகத்துவப் பொருள் என்பதை நாம்தான் உணர்ந்து. அந்த வியாபாரியின் ஜாதகத்தை ஆராய்ந்தால் அவரின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தோடு சனி சம்பந்தப்படிருப்பதை பார்க்க முடியும்.
வேதஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள், பெருமைமிகு உன்னத கலையான இதில் உள்ள விதிகள் அனைத்தும் மாற்ற முடியாதவை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஞானிகள் ஒருபோதும் தொட்டார்சிணுங்கியாக இருக்கவில்லை. காலம், தேசம், ஸ்ருதி, யுக்தி, வர்த்தமானம் எனும் நிலைகளுக்கேற்ப, அதாவது இடம் சமயம் போன்றவைகளுக்கு ஏற்ப, ஞானமுள்ளவர்கள் இந்த விதிகளை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்றுதான் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
முன்காலத்தில் வெளிநாடு செல்வதற்காக கப்பல் அல்லது விமானத்தில் ஏறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. ஆனால் சமீபத்தில் சில பத்தாண்டுகளில் நம்மில் பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சென்று வரவும், அங்கேயே நிரந்தரமாக வசிக்கவும் ஆரம்பித்திருக்கிறோம்.
குறிப்பாகச் சொல்லப்போனால் தற்போது வீட்டிற்கு ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார், அதுவும் நிரந்தரமாக வேறு நாட்டின் குடிமகனாக இருக்கிறார். புலம் பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் நிலையோ சொல்ல வேண்டியது இல்லை. ஒட்டுமொத்த ஈழச் சமுதாயமும் நிரந்தரமாகவே வெளிநாட்டில் தங்க வேண்டிய சூழல்களில்தான் இருக்கிறது.
இதுபோன்ற நிலைகளில் ஞானமுள்ள ஜோதிடர்களே ஒரு நிலை மற்றும் அமைப்பிற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அனுபவமும், தீர்க்கமான அறிவும் கொண்ட ஜோதிடர்களே ஏராளமான ஜாதகங்களை ஆய்வு செய்து அதில் முழுக்கப் பொருந்தும் விதிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொடரின் ஆரம்பக் கட்டுரைகளில் ஒருவர் மருத்துவர் ஆவதற்கு சுபத்துவ மற்றும் சூட்சும வலுப்பெற்ற செவ்வாய் முதல் நிலையாக ராசி அல்லது லக்னத்திற்கு பத்தாமிடத்தோடும், இரண்டாம் நிலையாக குருவும் தொடர்பு கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
காவல்துறை அதிகாரியாவதற்கு சுபத்துவ, சூட்சும வலுப்பெற்ற சூரியன் ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தில் முதல்நிலையாகவும், செவ்வாய் இரண்டாவது நிலையாக தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், வழக்கறிஞராவதற்கு ராசி அல்லது லக்னத்திற்கு இரண்டு, பத்தாமிடங்களோடு சுபத்துவ, சூட்சும வலுப் பெற்ற சனி மற்றும் குரு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.
அதேபோல ஒருவர் நாட்டை ஆளும் அளவிற்கு அல்லது ஒரு மாநிலத்தை நிர்வகிக்கும் அளவிற்கு அரசு உயர்பதவியை வகிக்க வேண்டுமெனில், சிம்மமும் சூரியனும் மிகுந்த சுபத்துவமாக இருக்க வேண்டும். சிம்மத்தின் சுபத்துவம் குறைந்திருக்கும் நிலையில் ராசி அல்லது லக்னத்தின் பத்தாமிடங்களோடு சூரியன் தொடர்பு கொண்டோ, சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திரங்களில் அல்லது லக்ன கேந்திரங்களில் அமர்ந்தோ இருக்க வேண்டும். இதுவே ஆளுவோருக்கான மிக முக்கியமான விதியாக இருக்கும்.
சிம்மம் அல்லது சூரியன் சுபத்துவம் அடையாத நிலையில் பிறந்த ஒருவர் நிச்சயமாக அரசியல்வாதியாகவோ, ஐஏஎஸ் போன்ற உயரதிகாரியாகவோ ஆகவே முடியாது. ஜோதிடத்தில் தலைமைப் பண்பைக் குறிக்கக் கூடிய, அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தலைவராக ஒருவரை மாற்றுகின்ற கிரகம் சூரியன் மட்டுமே. இதனை அடுத்த அதிகார உயர்நிலை கிரகமாக செவ்வாய் அமைவார்.
சூரியனின் வீடான சிம்மம், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களின் ஆளுமையில் இல்லாமல் இருந்து, ஒருவேளை அப்படி இருக்குமாயின் அவற்றின் தசைகள் இளம் வயதிலேயே முடிந்து, சூரியன் மிக அதிகமான சுபத்துவ, சூட்சும வலுவோடு இருக்கும் ஒருவர் அதிகாரத்தில், ஆளுமையில் மிக உயர் நிலைக்கு செல்வார்.
கீழே பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் விருச்சிக ராசியில் பிறந்ததாக இணைய தளங்களில் வெளிவந்திருக்கும் ஜாதகத்தையும், மிக முக்கிய நபர் ஒருவரால், அதற்கு முன் வருடத்தில் பிரதமர் அவர்கள் துலாம் ராசியில் பிறந்ததாக சொல்லப்பட்ட ஜாதகத்தினையும் தந்திருக்கிறேன்.
இவை இரண்டில் எது உண்மையான ஜாதகம், அல்லது இரண்டுமே தவறாக இருக்குமா என்பதையும், இந்த ஜாதகங்களோடு வேறு சில அரசியல் பிரபலங்களின் உண்மையான ஜாதகங்களையும் ஒப்பிட்டு, வேத ஜோதிடத்தின் மாண்பை வரும் வாரங்களில் அலசுவோம்.
அடுத்த வெள்ளி தொடருவோம்.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
தங்கடில்பிரகாசிக்கடட்டடும்!
பெரு மதிப்பிற்குரிய ஜோதிட ஆசான் குருஜி அவர்களுக்கு..வணக்கம்… அற்புதமான விளக்கங்கள்…மிக்க நன்றி ஐயா…தாங்கள் குறிப்பிட்ட விதிகளின்படி ஆய்வு செய்து பார்க்கும் போது பிரதமர் மோடி இரண்டாவதாக உள்ள ஜாதகம் (29.8.1949. 6.00 Am) பொருந்தி வருவதாக கருதுகிறேன்….
காரணங்கள்:
1. சிம்ம லக்னம்.. லக்னகேந்திரத்திலேயே சூரியன்…
2.5மிடத்தில் ஆட்சி பெற்ற குரு பார்வை பெற்று சிம்மம் மற்றும் சூரியன் சுபத்துவம் அடைகின்றன..
3. லக்னத்துக்கு 10 மிடத்தை சூரியன் பார்வை..
4.ராசிக்கு 10 மிடத்தில் செவ்வாய் நீச
பங்கம் பெற்ற)
5.5 . லக்னத்துக்கு 10 க்குரிய சுக்கிரன் உச்ச புதனுடன் நீசபங்க ராஜ யோகம்..
6..சூரியன் சனி பகவானுடன் இணைந்தும்.. ராஜ கிரகங்களான சூரிய சந்திரர்கள் ராகு கேது சாரம் பெற்றதும் ஒரு குறை.. எனினும்..அவற்றின் தசைகள் முன்பே முடிந்து விட்டன…
7..லக்னத்துக்கு 10 க்குரிய சுக்ர தசை சூரிய புத்தியில்..பிரதமர் ஆனார்..(26.5.2014).என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்..
8..10 க்குரிய சுக்கிரன் சந்திரன் சாரம் பெற்றதால்.. அவர் முன்பு தேநீர் வியாபாரம் செய்துள்ளார்…
இது எனது கணிப்பு ஐயா.. பிழை இருந்தால்.. மன்னிக்கவும்.. திருத்தி அருளும்.. வேண்டுகிறேன்.. ஐயா…நன்றி…
OnlyHero.Through out Sree.NarendiraModiji OnlyOne Person intha WOULD.