கே. கார்த்திகேயன், சிவகங்கை.
கேள்வி :
ஜோதிடத்தின் சக்கரவர்த்திக்கு பணிவான வணக்கம். வாழ்க்கையில் ஏதேனும் சாதித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் இருக்கிறது. எப்போது சாதனை மனிதனாக வலம் வர முடியும்? வாகனம் மற்றும் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிலை சொந்தமாக செய்ய ஆசைப்படுகிறேன். இத்துறையில் பெரும் கோடீஸ்வரனாக வருவேனா? என்னுடைய சுய முயற்சியில் முன்னேறி தாய், தந்தையை காப்பாற்றுவேனா? ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா?
பதில் :
சனி கே | செ சூ | பு சுக் | ல |
2-5-1996
காலை
9-30
சிவகங்கை
|
|||
குரு | சந் | ரா |
ஒருவர் பெரும் கோடீஸ்வரன் என்ற நிலையை அடைய ஜாதகத்தில் தன, பாக்கிய, லாபாதிபதி என்று சொல்லப்படக்கூடிய 2, 9, 11க்கு அதிபதிகள் தங்களுக்குள் சம்பந்தம் பெற்று, சுபத்துவமாக அமைய வேண்டும். இவர்களின் இணைவு மற்றும் வலுவின்படி ஒருவர் பில்கேட்ஸ், அம்பானி போன்ற மெகா கோடீஸ்வரர் ஆக அல்லது உள்ளூரிலேயே கோடீஸ்வரராக இருப்பார். இந்த அமைப்பிற்கு துணை புரிய தொழிலை திறம்பட செய்ய அனுமதிக்கும் ஜீவனாதிபதியும், சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க லக்னாதிபதியும் வலுவாக இருக்க வேண்டும்.
ஜாதகப்படி இரண்டிற்குடைய தனாதிபதி சந்திரன் ஐந்தாமிடத்தில் வர்கோத்தமம் பெற்று, சுபத்துவமாக பௌர்ணமிச் சந்திரனாக அமர்ந்து, பதினொன்றாமிடத்தில் ஆட்சி வலுப்பெற்றிருக்கும் செவ்வாயைப் பார்ப்பது பணம் சம்பாதிப்பதற்கு சிறந்த அமைப்பு. எனவே உன்னால் நிச்சயமாக கோடீஸ்வரன் ஆக முடியும். பெரும் பணம் சம்பாதிப்பதற்கு ஏற்ற ஜாதகம்தான் உன்னுடையது.
“விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பதன்படி ஜாதகத்தில் பணக்காரன் ஆகும் அமைப்பு இருப்பதால்தான் 22 வயதில் காதலிக்கும் பெண்ணைப் பற்றி கேள்வி கேட்காமல் எதிர்காலத்தில் செய்யப் போகும் தொழிலைப் பற்றி கேள்வி கேட்கிறாய். வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிலுக்கு காரணமான சனி, தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் கேதுவுடன் இணைந்து சூட்சும வலுப் பெற்று, அவருக்கு வீடு கொடுத்த தொழில் ஸ்தானாதிபதி குரு ஆட்சி பெற்றுள்ளது நீ தொழிலில் சாதிப்பாய் என்பதை நிரூபிக்கிறது.
பறவையின் கழுத்தை மட்டும் அர்ஜுனன் குறி பார்த்ததைப் போல ஒரு இலக்கை நோக்கி மனதைச் செலுத்தியவர்கள் அதை அடையாமல் விட்டதே இல்லை. என்ன தொழில் செய்தால் நான் பணக்காரன் ஆவேன் என்று கேட்காமல், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிலில் நான் முன்னேறுவேனா என்று நீ கேட்டதே இலக்கை நீ தேர்ந்தெடுத்து விட்டாய் என்பதைக் காட்டுகிறது.
பௌர்ணமி யோகத்தில் பிறந்துள்ளதாலும், ஜீவனாதிபதி குரு மூலத்திரிகோண வலுவில் உள்ளதாலும், மூன்று கிரகங்கள் திக்பலத்திற்கு அருகில் உள்ளதாலும், அடுத்தடுத்து ஆட்சி பெற்ற கிரகத்தின் வீடுகளில் அமர்ந்த தசை நடக்க உள்ளதாலும், எதிர்காலத்தில் நீ பெரும் கோடீஸ்வரனாக வருவாய். லக்னாதிபதி புதன் 12ம் இடத்தில் அதிநட்பு ஸ்தானத்தில் திக்பலத்திற்கு அருகில் உள்ளதால் வலுவாகத்தான் இருக்கிறார். லக்னமும் வலுப்பெற்ற குருவின் பார்வையில் இருக்கிறது. ஜெயிப்பாய். வாழ்த்துக்கள்.
(21.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)