கேள்வி :
ஜோதிட தாகத்தை தணிக்கும் மழையே.. எனது இரு மகள்களும் அறுவைச் சிகிச்சை மூலம் ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரப்படி பிறந்தவர்கள். பிறக்கும் நேரத்தை முன்கூட்டியே நிர்ணயித்து அதன்படி அறுவை சிகிச்சை செய்வது சரியா? அல்லது மருத்துவர் குழந்தை பிறப்பது எப்போது எளிதாக இருக்கும் என்று சொல்கிறாரோ அதன்படி பிறப்பது சரியா?
இரண்டாவது குழந்தைக்கு ஜோதிடர் தனுசு லக்னம் என்று நேரம் குறித்துக் கொடுத்தார். அதை சரிபார்க்காமல் மருத்துவரிடம் கூறிவிட்டோம். குழந்தை பிறந்த பிறகுதான் விருச்சிக லக்னம் என்று தெரிந்தது. இதனால் ஜாதகமே தலைகீழாக மாறிவிட்டது. எனக்கு ஜோதிடம் ஓரளவு தெரிந்திருந்தும் குழந்தை பிறக்க குறித்த நேரத்தை ஒரு தடவை சரி பார்த்திருக்கலாம் என்று பிறகு தோன்றியது. ஆகட்டும் இறைவன் விருப்பம் எதுவோ அதுவே நடந்தது என்று நினைத்தேன். இன்றுவரை என் மனதில் இது ஒரு குறையாகவே உள்ளது. இரண்டு மகள்களின் ஜாதகமும் சரியாக உள்ளதா? என் குருதேவரே... பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
பதில் :
தொழில் நுட்ப வளர்ச்சியினால் எப்போதோ ஒருமுறை சிசேரியன் செய்து குழந்தை பிறந்தது போக, இப்போது நார்மல் டெலிவரியில் குழந்தை பிறப்பது அதிசயமாகி விட்டது. மனித வாழ்க்கை எவ்வளவு முன்னேறினாலும் ஜனனமும், மரணமும் பரம்பொருளின் கையில்தான் எப்போதும் இருக்கும். ஒரு ஜோதிடர் குழந்தை பிறக்கும் நேரத்தை முன்கூட்டியே குறித்துக் கொடுக்கிறார் என்றாலும் அந்த நேரத்தில் குழந்தையை பிறக்க அனுமதிப்பது பரம்பொருள் மட்டும்தான். நடக்கும் எதுவும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்றுதான்.
உண்மையைச் சொல்லப் போனால் பெரும்பாலும் ஜோதிடர்கள் கொடுக்கும் நேரத்தில் குழந்தை பிறப்பது இல்லை. பிரசவத்தை கவனித்துக் கொண்டிருக்கும் கடவுளுக்கு நிகரான மருத்துவர், தாயையும், சேயையும் நல்லபடியாக பிரிக்கும் முயற்சிகளில் மட்டும்தான் தன்னுடைய கவனத்தை வைத்திருப்பாரே தவிர, கொடுத்திருக்கும் நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமே என்பதில் அவர் கவனம் இருக்காது. குறைந்தபட்சம் வாரத்திற்கு இரண்டு குழந்தைகள் பிறப்பதற்கு நல்ல நேரம் கொடுக்கும் நான், “பரம்பொருள் இந்தக் குழந்தையை இந்த நேரத்தில் பிறக்க அனுமதிக்குமாயின் இக் குழந்தை சீரும் சிறப்புமாக வாழும்.” என்றுதான் எழுதிக் கொடுக்கிறேன்.
ஜனன நேரம் தரும் விஷயத்தில் ஒரு ஜோதிடருக்கு நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். ஒரு கிரகம் கிழக்கே இழுத்தால், இன்னொன்று மேற்கே இழுக்கும். லக்னம் சரியாக வந்தால், ஐந்து, ஒன்பது சரியாக வராது. மூன்றும் ஒத்து வந்தால், தசாபுக்திகள் சரியாக அமையாது. அனைத்தும் ஓரளவு சரியாக வந்தால் பிறப்பு நேரம் நள்ளிரவாக அமையும். அப்போது டாக்டர் இருக்க மாட்டார், பகலில் பாருங்களேன் என்பார்கள். அல்லது வந்திருப்பவர் தன்னை மிகப்பெரிய ஜோதிடராக நினைத்துக் கொண்டு இந்த நட்சத்திரம் ஆகாதே, இந்த திதி ஆகாதே என்பார். இத்தனை நிர்ப்பந்தங்களையும் தாண்டி குழந்தை பிறப்பதை நிர்ணயிப்பது கடுமையான விஷயம்.
குழந்தை பிறக்கும் நேரம் என்பது பிரசவ நாளைப் பொருத்து சுமார் ஒரு வாரத்திற்குள் கட்டாயமாக நிச்சயிக்கப்பட வேண்டியது. நீங்கள் சொல்லும் அந்த ஒரு வாரத்தில் முக்கியமான கிரகங்கள் வலுவிழந்து இருக்கலாம். ராகு, கேதுக்கள் சுபக் கிரகங்களை பீடித்திருக்கலாம். உங்களுடைய மூத்த குழந்தையின் லக்னாதிபதி குரு, நீசமாகி ராகுவுடன் இணைந்திருப்பதைப் போல. இப்போது குரு நீசமாக இருக்கிறார், இன்னும் ஒரு மாதம் கழித்து டெலிவரியை வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட முடியுமா?
இந்த நாளுக்குள் குழந்தை பிறக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் ஜனன நேரத்தை அமைக்கும்போது அதில் அனைத்துக் கிரகங்களும் நல்ல நிலைமையில் இருப்பது மிகவும் கடினம். வானில் எல்லா நேரங்களிலும் கிரகங்கள் நல்ல நிலைமைகளில் இருப்பதில்லை. அவை எப்போதோ ஒருமுறை மட்டுமே யோகம் தரும் நிலையில் அமைகின்றன. அந்த நேரத்தில் பிறக்கும் குழந்தையே, வாழ்வில் அனைத்தையும் அனுபவிக்கும் உன்னத அமைப்பை பெறுகிறது. அதை ஜோதிடர் நிர்ணயிக்க முடியாது. பரம்பொருள் மட்டுமே இதை நிச்சயிப்பது மட்டுமல்லாமல், அதை அனுமதிக்கவும் செய்கிறது.
எல்லாவற்றையும் விட மேலாக நேரத்தை குறித்துக் கொடுக்கும் ஜோதிடருக்கு அபாரமான ஞானம் வேண்டும். ஜோதிடர்கள் அனைவரும் ஒரே மாதிரியான திறமை கொண்டவர்கள் இல்லை. சென்றவாரம் தங்கள் பேரனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்த ஒரு வயதான தம்பதி அழுத அழுகையை எழுத்தில் எழுத முடியாது.
பிரசவத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருந்த நிலையில், ஜோதிடர் நல்லநாள் என்று குறித்துக் கொடுத்த நேரத்தில் என் பேரனை முன்கூட்டியே பிறக்க வைத்தோம். (26-4-2013, காலை 7-18 சென்னை). ஆனால் இவனது இரண்டு வயதில் இவன் தாயான எங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டு விட்டார். தந்தை இவனை எங்களிடமே விட்டு விட்டுப் போனவர்தான், திரும்பி வரவே இல்லை. முன்கூட்டியே கணித்து எங்கள் பேரனை பிறக்க வைத்தும், அவனுக்கு ஏன் இந்த கதி என்று அந்த வயதான தம்பதிகள் அழுதபடி கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
உண்மையில் அனைத்து ஜோதிடர்களும் பூரண ஞானம் பெற்றவர்கள் இல்லை. ஒருவருக்கொருவர் வித்தியாசம் இருக்கிறது. இந்தக் குழந்தை பிறக்கும் நேரத்தை ஒரு அரைகுறை ஜோதிடர், கிரகண தோஷ நாளாக குறித்துக் கொடுத்திருக்கிறார். குழந்தையின் ஜாதகத்தில், ரிஷப லக்னமாகி, ஆறாமிடத்தில் சந்திரன், சனி, ராகு இணைந்திருக்க, 12ல் சூரியன், செவ்வாய், கேது, சுக்கிரன் சேர்ந்திருக்கிறார்கள். அன்றைக்கு பௌர்ணமி தினம் என்றாலும் கிரகண தோஷம் அமைவதால் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த இவனுக்கு ராகுதசை முடியும் ஆறு வயதிற்குள் தாயார் இருக்கக் கூடாது என்பது விதி.
மாதாகாரகன் சந்திரன் ஆறில் மறைந்து, சனி, ராகு சேர்க்கையுடன், செவ்வாய் பார்வையில் இருக்கும் நிலையில், தாயார் ஸ்தானாதிபதி சூரியன் செவ்வாய், கேது இணைவில், சனி பார்வையில் இருப்பதால் இவனுக்கு தாய், தந்தை அமைப்பே இருக்காது என்பதை பெரிய அனுபவம் இல்லாத ஒரு சாதாரண ஜோதிடர் கூட சொல்லிவிட முடியும். இதைக் கூட அறிய முடியாத ஒரு ஜோதிடரிடம் போய் இவர்கள் குழந்தை பிறக்கும் நேரத்தை நிச்சயித்திருக்கிறார்கள் என்றால் இது பரம்பொருளின் விருப்பம் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?
கிரகண தோஷம் இருக்கும் நிலையில், அதுவும் சந்திரன் முழுக்க முழுக்க பலவீனமான ஒரு நாளில் குழந்தை பிறக்க நேரம் குறித்துக் கொடுத்த ஒருவரைப் பற்றி என்ன சொல்வது? இதைத்தான் ஜோதிடம் கர்மா என்று சொல்லுகிறது. நல்ல நேரம் இருக்கும்போது முறையான ஜோதிடரிடம் செல்வீர்கள். பரம்பொருள் அதை அனுமதிக்காத போது ஞானம் குறைவான ஜோதிடரைப் பார்ப்பீர்கள். உங்கள் குழந்தைகள் விஷயத்திலும் நான் இதைத்தான் சொல்ல முடியும். உங்களுக்கே ஓரளவிற்கு ஜோதிடம் தெரியும் என்ற நிலையில் இரண்டு குழந்தைகளின் ஜாதக பலம், பலவீனங்களை குழந்தைகள் வளர, வளர புரிந்து கொள்வதே சரியாக இருக்கும்.
ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜியின் மாலைமலரில் வெளிவந்தது .