adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை-D-008-Yezharai Sani Yenum Maha Avasthai..

ஒருவரின் எதிர்காலத்தைச் சொல்லும் மாபெரும் அறிவியலான வேத ஜோதிடத்தின் நிரந்தரமான விதிகளில் ஏழரைச் சனியும் ஒன்று. கோட்சார நிலையில் வரும் ஏழரைச் சனி அமைப்பு சில நிலைகளில் ஒரு மனிதனை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடுகிறது.

இந்திய ஜோதிட முறைகள் அனைத்திற்கும் தாய் என்று சொல்லப்படக் கூடிய பாரம்பரிய ஜோதிட முறையானது மிகப் பெரிய நுணுக்கங்களையும், சூட்சுமங்களையும் தன்னகத்தே கொண்டது. இந்த முறையில் ஒரு மனிதனின் எதிர்காலத்தை அறிவதற்கு அவனது ஜாதகத்தில் லக்னம், ராசி எனப்படும் இரு முக்கிய அமைப்புகளையும் ஒரு சேரக் கணிக்க வேண்டும்.

வேத ஜோதிடம் லக்னம், ராசி எனும் இரு சக்கரங்களைக் கொண்டது. இந்த இரண்டில் ஒன்று இல்லாவிட்டாலும் வண்டி நகராது. ஒரு மனிதனின் எதிர்காலம் என்பது மாறாத பிறந்த ஜாதகத்தின் லக்னத்தையும், மாறிக் கொண்டே இருக்கும் கோட்சார நிலையின் மூல அமைப்பான ராசியையும் இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.

ஜாதகம் என்பது ஒருவரின் பிறந்த நாளன்று, வானில் இருந்த கோள்களின் நிலைதான். இது மாறவே மாறாத ஒன்று. கோட்சாரம் எனப்படுவது மாறிக் கொண்டே இருக்கும் தற்போதைய வான் கிரக நிலையைச் சொல்லுவது. மாறாத பிறந்த ஜாதகத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் கோட்சார நிலைகளையும் இணைத்துதான் ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாக அறிய முடியும். இதுவே ஒரு சுவையான முரண்பாடுதான்.

பாரம்பரிய ஜோதிடத்தை எளிமையாக்குகிறேன் என்று புறப்பட்ட கிருஷ்ணமூர்த்தி பத்ததி எனப்படும் கே.பி சிஸ்டம் உள்ளிட்ட சார ஜோதிட முறைகள் தடுமாறி விழும் இடமும் இதுதான்.

லக்னம் என்பதும் ராசி என்பதும் இருவேறு முனைகளை சுட்டிக் காட்டுபவை. லக்னம், ஒருவரது செயல்திறன், குணநலம், அதிர்ஷ்டம் ஆகியவைகளை காட்டுகின்ற நேரத்தில், ராசி எனப்படும் சந்திரன் இருக்கும் நிலையைக் கொண்டுதான் அவனது வாழ்க்கையில் நடக்க இருக்கும் சம்பவங்களை நிகழ்த்தும் தசா,புக்தி அமைப்புகள் பிறக்கின்றன.

பிறந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் வீடே ஒருவரின் அன்றாட நிகழ்வைக்  குறிக்கும் ராசி எனப்படுகிறது. சந்திரன் மனத்தைக் குறிக்கும் கிரகம் என்பதால் கோட்சார நிலையில் ராசி எனப்படும் சந்திரனை நெருங்கும் கோள்களின் சுப, அசுப நிலைகளை வைத்து நமது மனம் நல்ல, கெட்ட பாதிப்புகளை பெறுகிறது.

நமது மனதைக் குறிக்கும் ராசி எனப்படும், சந்திரன் இருக்கும் வீடு நல்ல கோள்களின் பார்வை, மற்றும் இணைவு எனும் தொடர்பைப் பெறும்போது, நேர்மறை சக்திகள் தூண்டப்பட்டு, மனம் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்தித்து வெற்றிகளைப் பெறுகிறது. இதற்கு சுபக்கோள் என்று சொல்லப்படும் குரு, ராசிக்கு ஐந்து, ஒன்பதில் அமர்ந்து ராசியைப் பார்க்கும்போது நமக்கு நடக்கும் நன்மைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

பாபக் கோள்களான சனி, செவ்வாய், ராகு, கேது ஆகியவை நமது ராசிக்கு பார்வை, இணைவு எனும் தொடர்பைப் பெறும்போது எதிர்மறைச் சக்திகள் தூண்டப்பட்டு மனம் செயலிழக்கிறது. இந்த அமைப்பினால் அந்தக் காலகட்ட வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுத்து தோல்விகளைச் சந்திக்கிறோம்.

இதில் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் இருக்கக் கூடிய, மிக மெதுவாக நகரும் தன்மை கொண்ட பாபக் கோளான சனி, ஒரு மனிதனின் ராசிக்கு முன்பின் இடங்களான 12, 2 மற்றும் அவனது ராசியில் இருக்கும் ஏழரை ஆண்டு காலமே ஏழரைச்சனி  என்று குறிப்பிடப்படுகிறது.

உங்கள் ராசி என்பது உங்களின் மனதை இயக்கும் ஒரு மேம்பட்ட ஒளி அமைப்பு. இப்படிப்பட்ட ராசியை ஒரு சுப ஒளி நெருங்கும் போது, அல்லது பார்க்கும் போது மனம் சுறுசுறுப்படைந்து நல்லவைகளை நிகழ்த்தும் தகுதி பெறுகிறது. ராசியை இருள் நெருங்கும் போது உங்கள் மனம் பாதிப்படைந்து தடுமாறுகிறது.

இருள்கோளான சனி, ஒரு மனிதனின் ஜென்மராசி எனப்படும் ஒளிக்கு முந்தைய  பனிரெண்டாமிடத்தில் ஏழரைச்சனியாக துவங்கி, அவனது எண்ணங்களை ஆக்கிரமித்து, செயல்திறனைக் குறைத்து, அடுத்த இரண்டரை வருடங்களில் அவனது மனம், மற்றும் இயக்கத்தை குறிக்கும், ராசியை முழுவதுமாக இருளாக்கி, ஜென்மச் சனியாக மாறி வாட்டி வதக்குகிறது.

மனம் என்பது ஒருவருக்கு வயதுக்கு ஏற்றபடிதான் செயல்படும். இருபது வயதில் உங்களுக்கு முக்கியமாகப் படுகின்ற ஒரு விஷயம் ஐம்பது வயதில் சாதாரணமாகத் தெரியும். சனி ராசியை இருளாக்கி ஆக்கிரமிக்கும் போது ஒருவரின் மனம் அழுத்தம் தரும் சம்பவங்களைச் சந்திக்க வேண்டும் என்பதால் இருபது வயதுகளில் ஏழரைச்சனி நடக்கும்போது ஒருவர், இளம்வயதிற்கே உரிய காதல், படிப்பு போன்றவைகளில் மன அழுத்தத்தை அடைகிறார்.

இதுவே முப்பது வயதுகளில் இருப்பவருக்கு திருமணம், குழந்தை போன்றவைகளிலும், நாற்பதுகளில் உள்ளவருக்கு அந்த வயதிற்கே உரிய வேலை, தொழில் போன்றவைகளிலும் சங்கடங்கள் நிகழ்கின்றன.

ஒரு ஜோதிடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் எண்பது சதவிகிதம் பேர் விருச்சிக ராசிக்காரர்கள் என்பதை நான் முன்பே எழுதியிருக்கிறேன். என்னுடைய இந்த அனுபவம் அனைத்து ஜோதிடர்களுக்கும் இருந்திருக்கும். அஷ்டமச் சனி நடந்ததால் மேஷராசிக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்புகள் இருந்தன. இந்த இரண்டு ராசியினர்தான் கடந்த காலங்களில் அதிகமாக ஜோதிடத்தை நாடியவர்கள்.

அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு துலாம் ராசியினர் ஜோதிடம் பார்க்க வந்து கொண்டிருந்தார்கள். குறிப்பாக 2012, 13, 14 ஆம் ஆண்டுகளில் துலாம் ராசிக்காரர்கள் பட்ட அவஸ்தைகள் அதிகமாக இருந்தது.

ஜோதிடத்தை மறுப்பவர்கள் மேற்கண்ட மூன்றாண்டு காலத்தில் விருச்சிகத்தினர் மட்டும் ஏன் மகா அவஸ்தைகளையும், வேதனைகளையும் அனுபவித்தார்கள் என்பதை அறிவியல்ரீதியாக ஆராய்ந்து பார்த்து விட்டு பிறகு ஜோதிடத்தை மறுக்கலாம்.

நானும் தொலைக்காட்சி நேரடி நிகழ்வுகளில் நாற்பது வயதுகளில் இருக்கும் எந்த ஒரு விருச்சிக ராசிக்காரராவது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நிரூபித்தால், அதனை ஜோதிட ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று பலமுறை சொல்லியும் ஒருவர் கூட கடந்த ஆண்டுகளில் நான் நிறைவோடு மட்டும் இருக்கிறேன் என்று வரவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு அரசு உயரதிகாரியிடம் இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு கீழே பணிபுரிந்த ஒருவர் தொலைபேசியில் “அய்யா.. என்னை சஸ்பென்ட் செய்து விட்டார்கள்” என்று முறையிட, அதிகாரி விளையாட்டாக “என்னய்யா.. நீ விருச்சிக ராசியா என்று கேட்டவுடன் “ஆமாம், அய்யா.. நான் அனுஷ நட்சத்திரம்” என்று பதில் வந்ததும் அசந்து போனார். அதன்பிறகு இதனை ஒரு ஆய்வாக எடுத்துக் கொண்டு அவரைச் சுற்றியுள்ள விருச்சிகத்தினர் யாரும் ஏதோ ஒரு விதத்தில் நன்றாக இல்லை என்பதை என்னிடம் உறுதிப்படுத்தினார். 

ஜோதிடத்தை ஆய்வு நோக்கோடு பார்க்க விரும்புபவர்கள் மற்றும் இந்த மாபெரும் கலையை மறுக்கின்ற பகுத்தறிவாளர்கள் அனைவருமே உலகில் பிறக்கும் மனிதர்களின் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களை நடுநிலையோடு ஆராயும்போது நிச்சயமாக அவர்களுக்கும் இந்த உண்மை புலப்பட்டே தீரும். ஆனால் ஜோதிடத்தை விமர்சிப்பதற்குத்தான் இங்கே நாம் தயாராக இருக்கிறோமே தவிர உண்மையைத் தெரிந்து கொள்ள அல்ல.

உண்மையில் கடுமையான ஏழரைச் சனி மற்றும் அஷ்டம சனி காலங்களில் ஒரு மனிதனின் ஜாதகம் எத்தனை பெரிய யோகமான அமைப்பில் இருந்தாலும் செயலற்றுப் போய்விடும்

ஏழரைச்சனி பற்றி பாரம்பரிய ஜோதிடத்தில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒரு தகப்பன் அல்லது குடும்பத் தலைவனின் நேரம் நன்றாக இருந்தாலும், அவனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு, அல்லது குழந்தைகளில் ஒருவருக்கு கடுமையான ஜென்மச்சனி நடப்பில் இருக்கும் போது அந்தக் குடுமபத்தில் கெடுபலன்கள் நடக்கின்றன.

குறிப்பாக குடும்பத் தலைவனின் தொழில் மற்றும் வேலைகளில் சிக்கல்கள் உண்டாகி, அவனை பொருளாதார சிக்கல்களில் சிக்க வைத்து கடன், நோய் போன்ற சிரமங்களைத் தருகின்றன. இதை நான் அடிக்கடி எனது மாணவர்களுக்கு சொல்லுகிறேன்.

குடும்பம் என்பது ஒரே உயிர் போன்றது. கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்ற குடும்பத்தில் ஒருவருக்கு நடக்கும் கெடுபலன் இன்னொருவரை பாதிக்கவே செய்யும். ஆகவே ஜோதிடப்படி ஒருவருக்கு துல்லியமான பலன் சொல்ல வேண்டும் என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவரின் ஜாதகத்தையும் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் எவருக்காவது ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடக்கிறதா என்பதைக் கருத்தில் கொண்டுதான் பலன் சொல்ல வேண்டும்.

கடந்த காலங்களில் என்னிடம் பலன் கேட்க வந்தவர்களில் விருச்சிக ராசியினை மனைவி- கணவனாகவோ, குழந்தைகளில் ஒருவராகவோ கொண்டவர்கள்தான் அதிகம். தெளிவாகச் சொல்லப் போனால் விருச்சிக ராசிக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் 2012ஆம் ஆண்டு முதலே கடுமையான சோதனைகள் நடந்து வருகின்றன.

பலர் ஒருவருடைய வாழ்க்கையில் வரும் ஏழரைச்சனியே கடுமையான கஷ்டங்களைத் தரும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் நமது மூல நூல்களில் அஷ்டமச் சனியே, ஒருவருக்கு மிகப்பெரிய கஷ்டங்களைத் தரும் என்றும், ஏழரைச்சனி அதற்குக் குறைவான கெடுபலன்களைத் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் அஷ்டமச்சனியே நெருங்கிய உறவினர் மரணம், கடுமையான இழப்பு போன்ற கெடுதல்களை அதிகம் தருகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு குருப்பெயர்ச்சி விழாவில் “இந்த வருட குருப்பெயர்ச்சி யாருக்கு நன்மை, தீமைகளைச் செய்யும்” என்ற தலைப்பில் பேசும்போது “ஒருவருக்கு கடுமையான ஜென்மச் சனி மற்றும் அஷ்டமச்சனி நடக்கும்போது, மற்ற எந்தக் கிரகப் பெயர்ச்சியும் பலன் தராது, சனியின் கொடுமைகள் மட்டுமே முன் நிற்கும். சனியின் ஆதிக்கத்தின் முன் மற்ற கிரகங்கள் சாதகமான இடத்தில் இருந்தாலும் பலன் தராது” என்று பேசினேன்

உதாரணமாக விருச்சிகத்தினருக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தபோது, ஒன்பதாமிடத்தில் உச்சகுருவாக இருந்த கோட்சார குரு எந்த நல்ல பலன்களையும் தரவில்லை. அதேபோல பதினொன்றாமிட குருவும் பலன் தராது  எனவும், இது எனது நீண்டநாள் ஆய்வு முடிவு என்றும் பேசினேன்.

இந்தக் குருப்பெயர்ச்சி விழாவிற்கு தலைமை தாங்கிய பெரு ஆசான், எழுபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்த, 94 வயது மூத்த ஜோதிடர்  நக்கீரன் நடராஜன் அய்யா அவர்கள், பக்கத்தில் இருந்தவரிடம் நான் யார்  என்று விசாரித்து விட்டு, பேசி முடித்ததும் என்னை அழைத்து, “எனது எழுபது ஆண்டு ஜோதிட அனுபவத்தில் கடுமையான ஏழரைச்சனி காலங்களில் மற்ற கிரகப் பெயர்ச்சிகள் பலன் தராது என்று நீ பேசியது புதிதான ஒன்று. ஆனால் நீ பேசிக் கொண்டிருக்கும் போது இதனை நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நீ சொன்னது முற்றிலும் சரிதான் என்று கூறி என்னை ஆசீர்வதித்தார்.

கடுமையான ஜென்மச் சனி, அஷ்டமச் சனி காலங்களில் ஒருவருக்கு சனியின் எதிர்மறை ஆதிக்கம் மட்டுமே மேலோங்கி நிற்கும். அந்த மனிதர் எத்தகைய ராஜயோக ஜாதகத்தைக் கொண்டிருந்தாலும் அது பலன் தராது.

இந்த உண்மையினை நல்ல யோக ஜாதகத்தைக் கொண்ட ஒருவர். ஏழரைச் சனியினால் பட்ட துன்பங்களை உதாரண ஜாதகத்துடன் அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்.

(25-05-2018 மாலைமலரில் வெளிவந்தது) தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

2 thoughts on “ஏழரைச் சனி எனும் மகா அவஸ்தை-D-008-Yezharai Sani Yenum Maha Avasthai..

  1. அற்புதம் ஐயா.வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *