adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
ஜோதிடம் சரியா? தவறா? -D-007- Jothidam Sariya? Thavara?

ஒரு மனிதனின் எதிர்காலத்தை துல்லியமாகச் சொல்லும் மாபெரும் அறிவியலான இந்த ஜோதிடக்கலை பெரும்பாலான ஜோதிடர்களாலும், ஜோதிடத்தை வெறுப்பவர்களாலும் தவறாகத்தான் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இருவேறு தளத்தில் இருப்பவர்களும் அதனை அரைகுறையாக, நேர்மாறாக புரிந்து கொள்ளும் வினோதம் ஜோதிடத்தில் மட்டுமே நடக்கிறது.

எத்தகைய உயர் ஞானமுள்ள மனிதப் பிறவியாலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத மகா அற்புதம் ஜோதிடக்கலை. உண்மையில் ஜோதிடத்தில் பொதுவான பலன்களுக்கோ, ஒரே ஒரு விதியை மட்டும் வைத்து பலன் அறிவதற்கோ இடமில்லை.

ஜோதிடம் என்பது பலவிதமான விதிகளை தெளிவாகப் புரிந்து கொண்டு, தகுந்த இடத்தில் அவற்றைப் பொருத்திப் பார்த்து உண்மையை அறிவதுதான். இங்கே பொதுவான ஒன்று என்பது இல்லவே இல்லை.

ஆனால் ஜோதிடத்தை ஓரளவு மட்டும் அறிந்த, அரைகுறை அனுபவமுள்ள, ஒரு ஜோதிடர் என்ன செய்கிறார்? தனக்குத் தெரிந்த ஒரே ஒரு, அல்லது ஒன்றிரண்டு விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு மனிதனின் எதிர்காலத்தை சொல்ல முயற்சிக்கிறார். அப்போது அங்கே பலன் தவறுகிறது.

ஜோதிடத்தை எதிர்ப்பவர்களும் அப்படித்தான்.

காலவியல் விஞ்ஞானம் என்று நான் பெருமையுடன் குறிப்பிடும் இந்த மாபெரும் அறிவியலின் உள்ளே இருக்கும் நுட்பங்களை பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஜோதிட எதிர்ப்பாளர்கள் தெரிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை. அனுபவமற்ற ஜோதிடர்களால் தவறாக சொல்லப்பட்ட ஒன்றை மட்டும் அறிந்து கொண்டு, முழுமையான மற்றவற்றை தெரிந்து கொள்ள மறுத்து விட்டு இந்தக் கலையை மறுக்கிறார்கள்.

வேதஜோதிடம் என்பது ஒரு மகா சூட்சுமமான அமைப்பு. ஒரு மனிதனின் எதிர்காலத்தை நீங்கள் சுலபமாக தெரிந்து கொள்ள முடியாது. அப்படி எளிதாக தெரிந்து கொள்ள முடியும் என்றால் மனிதகுலம் அறிந்து கொள்ள முயற்சிக்கும் கடந்தகால உண்மையான, பிரபஞ்சம் எப்போது, எப்படித் தோன்றியது என்ற உண்மையை என்றைக்கோ கண்டு பிடித்திருக்க முடியும்.

விலைமதிப்பற்ற, ஈடு இணை சொல்ல முடியாத, ஒரு மனிதனின் எதிர்காலத்தை ஜோதிடத்தில் நீங்கள் அறிய வேண்டுமெனில், உங்களுக்கு அதிநுட்பமான ஞானமும், விதிகளை ஆழமாக உள்வாங்கும் சூட்சும அறிவும், அவற்றை சரியான இடத்தில் பொருத்திப் பார்த்து முடிவுகளை உணரும் திறனும் இருக்க வேண்டும்.

ஜோதிடத்தில் சொல்லப்படும் விதிகளின் நுட்பத்தை தெரிந்து கொள்ளாமல் அல்லது அவற்றை குறைவாகப் புரிந்து கொண்டு பலனறிய முற்படும் போதுதான் இங்கே கணிப்புகள் தவறுகின்றன ஜோதிடமும் பொய் என்று இகழப்படுகிறது.

வேத ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் ஒருவர் பிறக்கும் போது அமையும் கிரக நிலைகளின்படி, பிற்காலத்தில் அவர் எந்தத் துறையில் இருப்பார் என்பதை தெளிவான விதிகளின் மூலம் வகுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமாக புதன் வலுப்பெற்ற நிலையில் ஒருவர் பிறந்திருந்தால் அவர் புத்திசாலியாக கணிதம், புத்தகம், எழுத்து போன்ற துறைகளில் ஜீவிப்பார்  எனவும், சனி வலுத்து பிறந்திருந்தால் அவர் மெதுவாகவும், நிதானமாகவும் செய்யக் கூடிய மெக்கானிசம் போன்ற பொறுமை தேவைப்படும் வேலைகளில் ஆர்வமாக  இருப்பார் எனவும் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பாபக் கிரகங்களைப் பற்றி ஞானிகள் சொன்ன கருத்து, இங்கே காலங்காலமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. சொகுசான வாழ்க்கையை சுக்கிரன் போன்ற சுபக் கிரகங்கள் கொடுக்கும் என்றால், சுபத்துவம் பெற்ற பாபக் கிரகங்கள் ஒருவரை அதிகார உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பது வேதஜோதிட விதி. அதிலும் அதிகாரத்தை தருவதில் முதல்நிலை வகிக்கும் பாபக் கிரகமான செவ்வாய் சுபத்துவமும், சூட்சும வலுவும் அடைந்திருக்கும் நிலையில் ஒருவரை அதிகாரத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்வார்.

அரசுத்துறையில் அதிகாரம் என்றால் நமக்கு சட்டென நினைவிற்கு வருவது உடனடியாகவும், நேரடியாகவும் ஒரு மனிதன் பயப்படும் அளவிற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய காவல்துறைதான். ஜாதகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவரை சீருடை அணிந்து செயல்படும் துறைகளான காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணியில் அமர்த்துவார். செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் அதிகபட்ச சுபத்துவமாகவும், சூட்சும வலுப் பெற்றும் இருக்கும் நிலைகளில் ஒருவரை காவல்துறையில் உயரதிகாரியாக இருக்க வைப்பார். இங்கே செவ்வாயின் சுப வலு என்பது மிகவும் முக்கியமானது

சுபக் கிரகங்கள் நேரிடையாக வலுப்பெற்று இருக்க வேண்டும் எனவும், பாபக் கிரகங்கள் மறைமுகமான வலுவுடன் இருக்க வேண்டும் என்பது ஜோதிடத்தின் மிக முக்கிய ஆதாரமான விதி.  அதிலும் செவ்வாய் என்பவர் அதிகாரம், நெருப்பு, மருத்துவம், விளையாட்டு, கட்டிடம் கட்டுதல், போன்றவைகளுக்கு காரணமான முதன்மை கிரகம் என்பதால் அவர் சுபத்துவமும், எனது “பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சூட்சும வலுவும் அடைந்திருக்கும் நிலையில் காவல்துறை, ராணுவம், சிவில் இன்ஜினியரிங், மருத்துவம் போன்றவைகளில் உயர்நிலையில் ஜாதகரை இருக்க வைப்பார்.

செவ்வாய் சுபத்துவம் அடையாமல், கேந்திர கோணங்களில் ஆட்சி, உச்சம் போன்று நேர்வலுவாக, பாபத்துவமாக இருக்கும் நிலைகளில் ஜாதகரை மிகவும் குறைவான ஏடிம் வாசல் காவலாளி, கல்யாண சமையல்காரர், கட்டிட வேலை சித்தாள் போன்ற பணிகளில் ஈடுபடுத்துவார்.

கீழே ஒரு உயர்நிலையில் இருக்கும், காவல்துறை அதிகாரியின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன். இவர் 21.09.1977, காலை 11 மணிக்கு சேலத்தில் பிறந்தவர். மேம்போக்காக இவரது ஜாதகத்தை பார்த்தால், இது லக்னாதிபதி செவ்வாயும் யோகாதிபதி குருவும் எட்டில் மறைந்து, அதிர்ஷ்டம் இல்லாத, உயர்நிலையை எட்ட முடியாத அவயோக ஜாதகமாகத் தெரியும். சூட்சும விதிகளின்படி கணித்தால் மட்டுமே இந்த ஜாதகத்தின் உண்மைத்தன்மை பிடிபடும்.

அதிகாரத்தைத் தரக் கூடிய செவ்வாயின் விருச்சிக லக்னத்தில் ஜாதகர் பிறந்திருக்கிறார். லக்னாதிபதி பாபக் கிரகமானால் நேர்வலு அடையாமல் 6,8,12 ல் மறைவது நல்லது எனும் விதிப்படி இங்கே லக்னாதிபதி செவ்வாய் எட்டாம் வீட்டில் மறைந்திருக்கிறார்.

லக்னாதிபதி பாபராகி மறைந்தால், கொடிய குணங்கள் இருக்காது எனினும் உயர்வாழ்வு இல்லை என்பதும் ஒரு விதி என்பதால், மறைந்த லக்னாதிபதி செவ்வாய் ராசிக்கு கேந்திரத்தில், குருவுடன் இணைந்து, வளர்பிறைச் சந்திரனின் பார்வையில் மிகுந்த சுபத்துவமாக இருக்கிறார். இந்த அமைப்பு உன்னதமான ஒரு அமைப்பு என்பதோடு சந்திரனும், செவ்வாயும் ஒருவருக்கு ஒருவர் நேரெதிரே 180 டிகிரியில் இருக்கிறார்கள்.. இங்கே வளர்பிறை சந்திரனின் பார்வை செவ்வாய்க்கு முழுமையாகக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

பாபக் கிரகங்கள் தனக்கு அருகில் இருக்கும் சுபக் கிரகங்களின் பார்வையைப்  பெறும்போது மட்டுமே அதிக சுபத்துவத்தை அடையும் என்பதை ஏற்கனவே “ஜோதிடம் எனும் தேவரகசியம்” கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். அதன்படி செவ்வாயை, குரு பார்ப்பதை விட, ஒளி பொருந்திய சந்திரன் பார்ப்பதே  அவரை அதிகமாக சுபத்துவப் படுத்தும்.

இதிலும் ஒரு குறிப்பிட்ட நிலையாக வளர்பிறைச் சந்திரனின் பார்வையில் செவ்வாய் இருப்பதால் இவர் காவல்துறையில் உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார். பார்க்கும் சந்திரன் பூரணச் சந்திரனாக, பௌர்ணமி நிலவாக இருந்திருக்கும் பட்சத்தில், இதைவிட அதிகார உயர் அமைப்புகளான ஐ.ஏ.ஏஸ், அல்லது மந்திரி போன்ற பதவிகளில் இருந்திருப்பார். சந்திரன் தேய்பிறையாக இருந்திருப்பின் காவல்துறையிலேயே கீழ்நிலையில் இருந்திருப்பார்.

எல்லா நிலைகளிலும் பாபக் கிரகங்கள் சூட்சும வலு அடைந்திருக்க வேண்டும் என்கின்ற அவசியமில்லை. இங்கே செவ்வாய், குருவுடன் இணைந்து சந்திரனின் நேர்பார்வையைப் பெற்று அதிக சுபத்துவம் அடைந்திருப்பதே ஒருவரை உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு போதுமானது. உயர்நிலை சுபத்துவம் அடைந்திருக்கும் போது பாபக்கிரகங்கள் சூட்சும வலு இல்லாவிடினும் அதிர்ஷ்டம் தரும்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல அரசில் ஒருவர் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றால் சந்திரனும், சூரியனும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருந்து, சூரியன் பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதன்படி, இங்கே இருவரும் அவ்வாறு அமைந்து சூரியன் பத்தாமிடத்திற்கு அதிபதியாகி, பரிவர்த்தனையும் அடைந்து ராசிக்குப் பத்தில் இருக்கிறார். சூரியனின் பரிவர்த்தனையால் சிம்மம் வலுவாவதோடு, தனது நண்பர்களான புதன், மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால், அங்கிருக்கும் சனி சுபத்துவமாகி, சிம்மத்தில் சனி இருக்கும் தோஷம் விலகுகிறது.

ஒரு உன்னத ஜாதகத்தில் நண்பர்களும், எதிரிகளும் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருப்பார்கள் என்பது விதி. அதன்படி இந்த ஜாதகத்தின் நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய், குரு ஆகியோர் தங்களுக்குள் கேந்திரங்களிலும், எதிரிகளான சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் தங்களுக்குள் கேந்திர, கோணங்களிலும் இருக்கிறார்கள்.

ஒரு யோக ஜாதகத்தில் லக்னப்படியும், ராசிப்படியும் கிரகங்கள் நல்ல அமைப்பில் இருக்கும் என்பதும் இங்கே பொருந்துகிறது. துல்லியமாகச் சொல்லப் போனால், லக்னாதிபதி எட்டில் மறைந்ததால் ராசிப்படி பலன்கள் நடக்கும் ஜாதகம் இது.

தற்போது இவருக்கு ராகுதசை நடந்து கொண்டிருக்கிறது. ராகுவிற்கு வீடு கொடுத்த கிரகம் வலுவாக இருக்க வேண்டும் என்பதும் விதி. கன்னியில் இருக்கும் ராகுவிற்கு வீடு கொடுக்கும் புதன் வலுப்பெற வேண்டும் என்றால் அவர் ராகுவுடன்தான் இணைந்து உச்சமாக வேண்டும். அப்படி இருந்தால் புதன் ராகுவுடன் இணைவதால் பலமிழப்பார். அது சரியான நிலை அல்ல. அதற்குப் பதிலாக இங்கே புதன் பரிவர்த்தனையாகி மறைமுக உச்ச நிலை அடைகிறார். இதுவே அதிர்ஷ்ட நிலை. இதுவே யோக ஜாதகத்தின் எடுத்துக்காட்டு.

ஜாதகம் யோகமாக இருந்தாலும் நடக்கும் தசா,புக்திகளே ஒரு மனிதனின் உயர்வு தாழ்வை நிர்ணயிக்கின்றன. எத்தகைய யோக ஜாதகத்தை ஒருவர் கொண்டிருந்தாலும் அதிர்ஷ்டமில்லாத தசா,புக்திகள் நடக்குமாயின் அவருக்கு உயர்வு கிடைக்காது.ராகுவுடன் சூரியன் இணைவது நல்லதல்லவே எனும் கேள்வி எழுமாயின் இணையும் தூரத்தைப் பொருத்து ராகு பலன் தருவார் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சுபரான குரு இங்கே செவ்வாயுடன் எட்டு டிகிரிக்குள் இணைந்த நிலையில், சூரியன் ராகுவை விட்டு இருபது டிகிரி விலகியிருக்கிறார். இதனால் ராகுதசையில் ராகு, சூரியனின் பலத்தைக் கவர்ந்து இவருக்கு அதிகார அமைப்பைத் தருகிறார்.

இந்த உயரதிகாரியின் ஜாதகப்படி சரியான பருவத்தில் தர்ம, கர்மாதிபதிகளான சூரிய, சந்திர தசைகளும் அடுத்து லக்னாதிபதியான செவ்வாயின் தசையும்  நடைபெற்றதால் படிப்பில் முதல் மாணவனாக இருந்து அரசுத்தேர்வில் வெற்றி பெற்று தற்போது உயர்நிலை அதிகாரியாக இருக்கிறார்.

வேத ஜோதிடம் சொல்லும் சகல விதிகளும் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் அந்த விதி சொல்லும் நிலையை அடைந்தே தீருவார் என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல உதாரணம்.

மீண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை பார்க்கலாம்.

(18-05-2018 மாலைமலரில் வெளிவந்தது) தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888. குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *