adhithyaguruji@gmail.com
+91 8286 99 8888
Astro Answers – Guruji Pathilkal – குருஜியின் மாலைமலர் பதில்கள் – 187 (15.05.18)

விஜயா, வடலூர்.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். திசை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். மூத்தமகன் ஜாதகத்தை அனுப்பியிருக்கிறேன். இவனுடைய ஐந்து வயதில் கணவனை இழந்தேன். இருந்த நிலத்தையும் சொந்தக்காரர்கள் பிடுங்கிக் கொண்டார்கள். தாய்வழி ஆதரவும் இல்லை. துணி தைத்து கூலிவேலை செய்து பிள்ளைகள் இருவரையும் படிக்க வைத்தேன். இவன் பி.டெக் வரை படித்திருக்கிறான். எந்த வேலையிலும் நிரந்தரமாக இருப்பதில்லை. அரசுவேலைக்குச் செல்வேன் என்று படித்துக் கொண்டிருக்கிறான். சில ஜோதிடர்கள் இவனது ஆயுள் கம்மி என்றும் 36 வயதுவரைதான் இருப்பான் என்றும் சொல்கிறார்கள். குழந்தை இல்லை என்றும் சொல்கிறார்கள். கேட்டதிலிருந்து கடந்த நான்கு ஆண்டு காலமாக நிம்மதியும் தூக்கமும் இல்லை. கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியில் பிறந்த எனக்கும் உடல்நிலை சரியில்லை. என் மகனுக்கு ஆயுள் குறைவா? குழந்தை இருக்குமா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

பதில்:
சூ பு ல குரு
17-3-1990, காலை 7.20, பண்ருட்டி) கே
சு  செ ரா
சனி சுக்

ஒரு வீட்டில் இரண்டு விருச்சிக ராசி இருந்தாலே வேதனைகள் அதிகம்தான்  என்பதை கடந்த காலங்களில் மாலைமலரில் தெளிவாக எழுதி இருக்கிறேன். தாய்க்கும் மகனுக்கும் விருச்சிக ராசி என்பதால் கடந்த நான்கு வருடங்களாக உங்களுக்கு தூக்கம் இல்லாத நிலைமைகள் இருந்திருக்கும்.

மகனுக்கு அற்பாயுள் என்று சொன்னால் எந்த தாய்தான் தூங்க முடியும்? நேரம் சரியில்லாத நிலைமையில், அனுபவம் குறைவான ஜோதிடரிடம் சென்று ஜாதகம் பார்த்து ஏன்டா பார்த்தோம் என்று நொந்துதான் போவீர்கள். முறையான ஜோதிடரை சரியான நேரத்தில்தான் பரம்பொருள் அடையாளம் காட்டுவார்.

மகனுக்கு லக்னாதிபதி குரு நான்காமிடத்தில் இருந்தாலும் பரிவர்த்தனை பெற்று லக்னத்தில் அமரும் நிலை இருப்பதாலும், ஆயுள்காரகன் சனி வர்க்கோத்தமம் அடைந்து குருவின் பார்வையில் இருப்பதாலும், எட்டுக்குடையவன் அதிநட்பு ஸ்தானத்தில் அமர்ந்த நிலையில், ராசிக்கு எட்டில் குரு அமர்ந்து லக்னத்திற்கு எட்டாம் இடத்தை பார்ப்பதாலும் தீர்க்காயுள் உண்டு. கல்லைத் தூக்கி தலையில் போட்டாலும் 36 வயதில் இவன் ஆயுள் முடிய வாய்ப்பு இல்லை.

குழந்தை பாக்கியத்தை பொருத்தவரையில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பதுதான்  அதிகமான தோஷம், கேது இருப்பது பெரிய குற்றம் இல்லை. இங்கே ஐந்துக்குடையவன் நீசம் என்றாலும் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்றதால் நீசபங்க வலுவோடு வலிமையாகத்தான் இருக்கிறார். ஜாதகப்படி மகனுக்கு ஆண் வாரிசுத் தடை உண்டு. அடுத்த வருடம் ஆரம்பிக்க இருக்கும் குருபுக்தியில் மகனுக்கு திருமணம் நடக்கும். 2020 முதல் வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற்று நன்றாக இருப்பான்.

ஏ.விக்னேஷ், தேனி.

கேள்வி:

ஜோதிடத்தின் நம்பிக்கை இல்லாத நான் கடந்த ஆண்டு எழுதிய கடிதத்திற்கு தாங்கள் அளித்த பதில் மிகவும் சரியாக நடந்தது. அன்றுமுதல் உங்களது குரலுக்கும், எழுத்துக்கும் நான் என்றுமே அடிமை. என் அண்ணனின் வாழ்க்கை சகட தோஷத்தால் ஏறுமுகமாகவும், இறங்குமுகமாகவும் சுழல்கிறது. நிரந்தர  வேலை இல்லாமல் இருக்கிறான். சொந்த ஊரில் வேலை செய்ய முடியுமா?

பதில்:
சந்  குரு
(11-12-1989, அதிகாலை 3.23, தேனி) கே
சு ரா
பு சனி சூ செவ்  ல

சகடதோஷம் என்பது மிகப்பெரிய குற்றமாக மூலநூல்களில் சொல்லப்பட வில்லை. குருவுக்கு 12-ல் சந்திரன் மறைந்தாலும் அவர் உச்சநிலையில் பவுர்ணமி சந்திரனாக இருப்பதால் தோஷம் கிடையாது. பத்தாம் அதிபதி எட்டில் உச்சமாகி ராகுதசையும் நடப்பதால் உள்ளூரில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. அண்ணனின் ரிஷபராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதால் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வாழ்க்கையில் செட்டில் ஆவார்.

டி.ராஜாராம், விழுப்புரம்.

கேள்வி:

குருஜி அவர்களுக்கு வணக்கம். பலமுறை கடிதம் எழுதியும் பதில் எனக்கு வரவேயில்லை. என் ஜாதகத்தில் சிக்கல்கள் உள்ளதா? கடுமையான மனக் குழப்பத்தில் இருக்கிறேன். திருமணம் பற்றியும், சொந்தத் தொழில் அமைப்பை பற்றியும் இந்த வாரமாவது விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பதில்:

தனுசு ராசி இளைஞர்கள் எல்லோரும் ஏதாவது ஒருவகையில் குழப்பத்தில்தான் இருக்கிறீர்கள். அதிலும் உங்களுடைய சொந்த நட்சத்திரமான மூல நட்சத்திரத்திலேயே தற்போது சனி சென்று கொண்டிருப்பதால் தொழில் நிலைமையில் இன்னும் இரண்டு வருடங்களுக்கு நல்லபலன் சொல்வதற்கு இல்லை. இரண்டு வருடம் கழித்து சொந்தத் தொழில் செய்து கொள்ளலாம். அதுவரை வேலைக்குச் செல்ல வேண்டும். திருமணமும் கொஞ்சம் தாமதமாகும்.

எனக்கும்  மனைவிக்கும் பொருத்தம் இருக்கிறதா? இல்லையா?

எம்.பிரசன்னகுமார், கோவை.

கேள்வி:

2015-ல் எங்களுக்கு திருமணம் நடந்து ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. நானும் மனைவியும் ஓராண்டு காலமாக பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் மலையாளிகள். எங்கள் ஜாதகத்தை தமிழ் ஜோதிடர்கள் பார்க்கும்போது பொருத்தம் நன்றாக உள்ளது என்கிறார்கள். ஆனால் மலையாள பணிக்கரிடம் காட்டினால் ஜாதகம் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். கடைசியாக பார்த்த தமிழ் ஜோதிடர் என் மனைவியுடையது பாவஜாதகம் என்றும், அவர் எங்கிருந்தாலும் அந்த வீட்டில் பணம் விரயமாகும் என்றும் கூறினார். இதை கேட்டதில் இருந்து என் மனைவி என்னிடம் டைவர்ஸ் வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார். நாங்கள் சேர்ந்து வாழ்வோமா?

இதுவரை நான் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சரியான வேலையும் இல்லை. ஒரு கேவலமான வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறேன். ராகுதசையில் நன்றாக வருவேன் என்று சொன்னார்கள். ராகு ஆரம்பித்து நான்கு வருடமாகியும் ஒரு மாற்றமும் இல்லை. இப்போது என்னடாவென்றால் மனைவி ஜாதகமும் ஒத்துப் போகவில்லை என்கிறார்கள். யாருக்கும் உபயோகம் இல்லாமல் ஒரு ஆண் இந்த உலகத்தில் இருக்கிறான் என்றால் அது நானாகத்தான் இருக்கும். செத்து விடலாம் என்று தோன்றுகிறது. என் குழந்தையை நினைத்து மனம் அமைதியாகிறது. அந்தக் குழந்தையையும் பார்த்து ஆறுமாதமாகிவிட்டது.

மனைவி, குழந்தையுடன் சேர்ந்து வாழ்வேனா? ஒழுங்கான வேலை, தொழில் அமையுமா? வாழ்க்கையில் முன்னேறி மதிப்பு, மரியாதை கிடைக்குமா? என்னுடைய ஜாதகமும், மனைவி ஜாதகமும் பொருந்தாமல்தான் இருக்கிறதா? ஏன் பிரிந்து வாழ்கிறோம்? அல்லது டைவர்ஸ் செய்வோமா? பைத்தியம் பிடித்தார்போல் இருக்கிறது. என் குழந்தைக்காக எழுதுகிறேன். தயவு செய்து தெளிவு படுத்தவும்.

பதில்:
 செவ்  சூ  சு   பு
(கணவன் : 23-5-1981, அதிகாலை 1.25, கோவை ரா
கே
சந் குரு சனி
 

திருமணம் என்பது பரம்பொருளால் நடத்தப்படும் ஒரு தெய்வீக நிகழ்வு. பொருத்தம் பார்க்கிற ஒரு ஜோதிடர் திருமணத்தை நிச்சயிப்பது இல்லை. ஒரு ஆணுக்கும், பெண்ணிற்கும் திருமணம் நடந்த பிறகு இருவருக்கும் பொருத்தம் இருக்கிறதா? என்று பார்ப்பது பாவச் செயல். காரணம் இல்லாமல் இருவர் கணவன், மனைவி ஆவதில்லை. இருவர் இணைவது முன்ஜென்ம கர்ம வினைப்படியும், எதிர்காலத்தில் இருவருக்கும் பிறக்கப் போகும் குழந்தையினாலும் என்றுதான் ஜோதிடம் சொல்கிறது.

 
சந் கே
மனைவி: 7-8-1991, இரவு 8.36, திருப்பூர் சூ குரு
சனி பு சு செவ்
ரா
 

இன்னாரைத்தான் மனைவியாக எனக்கு வேண்டும். இன்னார்தான் எனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும். நான் இவர்களுக்குத்தான் பிறப்பேன் என்று யாரும் பிடிவாதம் பிடிக்க முடியாது. இவைகள் மூன்றும் பரம்பொருளின் கையில் இருக்கின்றன. இவைகளில் ஒன்றைக் கூட மனிதன் தீர்மானிக்கவோ, நடத்தவோ முடியவே முடியாது. அப்படிப்பட்ட நிலையில், நடந்துவிட்ட ஒரு திருமணத்தை ஒரு ஜோதிடர் பொருத்தம் இல்லாமல் நடந்து விட்டது என்று சொன்னால் அவர் கடவுளுக்கும் மேலாவார். எவ்வளவு பெரிய ஜோதிடனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான்.

ஜோதிடத்தின் விதிகள் அனைத்தும் மாறாதவை. நிரந்தரமானவை. இந்த அமைப்பில் இந்தக் கிரகம் இருக்குமாயின் நீ இப்படித்தான் இருப்பாய் என்ற பலன் ஒருபோதும் மாறாது. ஆனால் இந்த பத்துப் பொருத்த விஷயங்கள் மிக, மிக சாதாரணமானவை. உண்மையில் ஞானிகள் இந்த விதிகளைத் தந்திருந்தால் பத்துப் பொருத்தம் பார்க்கும் அத்தனை தம்பதிகளும் நீடூழி வாழ வேண்டும். ஆனால் சமீபகாலங்களில் பெருகி வரும் விவாகரத்துகளே பத்துப் பொருத்தங்கள் தவறானவை என்பதை நிரூபிக்கின்றன.மலையாள பணிக்கருக்கும், தமிழ்நாட்டு ஜோதிடர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று நீங்கள் சொல்லும் இந்த திருமணப் பொருத்தம் சமீபமாக ஒரு 50 ஆண்டு காலமாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் இந்தப் பொருத்தங்கள் ஞானிகள் சொன்ன விதிகளே இல்லை. ஜோதிடர்கள் தாங்களே உருவாக்கிக் கொண்டவை. வேதஜோதிடத்தை பரம்பொருளிடம் இருந்து தவம், தியானம் போன்ற மனதை ஒருமுகப்படுத்திய நிலையில் பெற்றுத் தந்த நம் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் இந்த பத்துப் பொருத்தத்தை சொல்லி இருக்கவே முடியாது. அப்படி  இருந்தால் அது இடைச்செருகல்.

டைவர்ஸ் கேட்டு விண்ணப்பித்திருக்கும் தம்பதிகளிடம் போய் பொருத்தம் பார்த்தீர்களா? என்று கேளுங்கள். ஜோதிடரை அடிக்க வருவார். பத்துப் பொருத்தமும் இருக்கிறது என்று சொன்னதால் திருமணம் செய்தோம். பத்தாவது நாளே விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறோம் என்பார். ஆகவே ஜோதிடர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பத்துப் பொருத்தங்களை பத்தோடு பதினொன்றாகத்தான் கருத வேண்டும். ஒரு ஆணையும், பெண்ணையும் இணைப்பதற்கு ஜாதக அனுகூல பொருத்தம்தான் பார்க்கப்பட வேண்டும்.

பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்த உங்கள் தாத்தாவும், பாட்டியும், நன்றாகத்தான் இருந்தார்கள். நாம்தான் இன்றைக்கு திருமண பந்தத்தை மெதுவாக தொலைத்துக் கொண்டிருக்கிறோம். எனவே திருமண விஷயத்தில் குழப்பம் வந்தால் பொருத்தம் மட்டும் பார்க்கும் ஜோதிடரிடம் போகாமல் நல்ல அனுபவம் உள்ள எதிர்கால பலனை நன்கு கணிக்கக் கூடிய ஜோதிடரைப் பார்ப்பது நல்லது.

உங்கள் விஷயத்தில் கணவன்-மனைவி இருவருக்கும் கும்ப லக்னமாகி, இருவருக்கும் சம சப்தம ராசிகளான தனுசு, மிதுனம் என்பதால் நீங்கள் இருவரும் நல்ல மனப்பொருத்தம் உள்ள தம்பதிகளாக இருப்பீர்கள். கணவன் படும் துன்பத்தை சகிக்காமல் நான் எப்படி வேண்டுமானாலும் போய்க் கொள்கிறேன். நீங்களாவது நன்றாக இருங்கள் என்று சொல்லக் கூடிய வகையில், டைவர்ஸ் தந்து விடுகிறேன் என்று சொல்லக் கூடிய அருமையான மனைவியை நீ அடைந்திருக்கிறாய்..

உன் மனைவியின் ஜாதகத்தை பாவ ஜாதகம் என்று சொன்ன ஜோதிடர் சரியானவர் அல்ல. உண்மையில் லக்னாதிபதி சனி பனிரெண்டில் மறைந்து ஆட்சியாகி, உச்ச குருவின் பார்வையையும் பெற்று, அம்சத்தில் குருவோடு இணைந்து தசை நடத்தும் அருமையான யோக ஜாதகம் உன் மனைவியுடையது. உண்மையைச் சொல்லப் போனால் உன்னுடைய ஜாதகத்தை விட உன் மனைவியின் ஜாதகமே வலுவானது.

நடக்கும் குழப்பங்களுக்கும் உனக்கு வேலை நிலைமைகள் சரியில்லாமல் இருப்பதற்கும் தற்போது உனக்கு ஜென்மச்சனி நடந்து கொண்டிருப்பதும், அதுவும் கடந்த சில மாதங்களாக உன்னுடைய பூராட நட்சத்திரத்திலேயே சனி சென்று கொண்டிருப்பதும்தான் காரணம். நேரம் நன்றாக இல்லாதபோது சரியில்லாத ஜோதிடர்களிடம் தான் போக முடியும். நல்லகாலம் வரும்போதுதான் முறையான ஜோதிடரைப் பார்க்க முடியும். இதுவும் பரம்பொருளின் விளையாட்டுதான்.

கடுமையான ஜென்மச்சனி நடக்கும் போது ஜாதகத்தில் எந்த யோகமும் வேலை செய்யாது. முப்பது வயதுகளில் இருக்கும் மனிதன் இதுபோன்ற நேரங்களில் பயனற்றுத்தான் போவான். இன்னும் இரண்டு வருடம் பொறு. அடுத்த வருடக் கடைசியில் பிரச்சினைகள் தீர்ந்து மனைவி, குழந்தையுடன் இணைய முடியும். சனி விலகியதும் உலகிற்கே பயன்படும் ஆண்மகனாய் இருப்பாய்.. அதுவரை கிடைக்கும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு பொறுத்திரு. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *