மகர லக்னத்தின் ஒன்பதாமிடமான கன்னி ராசி எப்போதுமே கேதுவிற்குப் பிடித்த வீடு என்பதால், எந்த லக்னமாக இருந்தாலும் கன்னியில் இருக்கும் கேது ஒருவருக்குத் தீய பலன்களைத் தருவது இல்லை. அதிலும் மகர லக்னத்திற்கு இங்கிருக்கும் கேதுவால் புதன் தரும் நல்ல பலன்கள் போன்ற தன்மைகள் இருக்கும்.
இந்த இடத்தில் அமரும் கேது, புதனைப் போலச் செயல்படுவார் என்பதால் ஜாதகத்தில் புதன் இருக்கும் வலுவைக் கொண்டு தனது பலன்களைக் கூடுதல் குறைவாகச் செய்வார்.
அடுத்து பத்து, பதினோராமிடங்களில் அமரும் கேதுவும் மகரத்திற்கு நன்மைகளையே தருவார். பத்தாமிடம் இந்த லக்னத்தின் ராஜயோகாதிபதியான சுக்கிரனின் வீடு என்பதால் ஜீவன ஸ்தானத்தில் அமரும் கேது ஒருவருக்கு தனது தசை, புக்திகளில் தொழில் அமைப்புகளை அமைத்துத் தருவார்.
இந்த லக்னத்தின் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரனின் தசை, கேது தசைக்கு பின் நடக்க இருக்கும் நிலையில், கேதுதசை அல்லது புக்தி அடுத்து வர இருக்கும் சுக்கிர தசை, சுக்கிர புக்தியில் ஒருவர் தொழில் முன்னேற்றங்களை அடைவதற்கான ஆரம்ப நிலைகளை அமைத்துத் தரும்.
நிறைவாக மகர லக்னத்தின் இறுதி வீடான பனிரெண்டில் அமரும் கேது இங்கே குருவின் பார்வையும் தொடர்பும் கிடைக்கும் பட்சத்தில் வெளிநாடு, ஆன்மீகம், ஞானம், தனம் ஆகிய பலன்களோடு ஒருவருக்கு முக்தி எனப்படும் இனிப் பிறவாத மோட்ச நிலையையும் அருளுவார்.
எந்த ஒரு லக்னமாயினும் பனிரெண்டாமிடத்தில் அமரும் கேது கெடுதல்களைத் தரமாட்டார் எனும் நிலையில், இங்கே பனிரெண்டாம் வீடான தனுசு ராசி இயற்கைச் சுபரான குருவின் மூலத் திரிகோண வீடாக இருப்பதால் நன்மைகள் கூடுதலாகவே இருக்கும். இந்த இடத்தில் லக்னாதிபதி சனி மற்றும் புதன், சுக்கிரனின் தொடர்புகளை கேது பெறும் நிலையில் ஜாதகருக்கு தன லாபங்களும் இருக்கும்.
அடுத்து கும்ப லக்னத்திற்கு கேது நன்மைகளைத் தருவதற்கு விதிக்கப்பட்டவர் இல்லை என்றாலும் கும்பம் அவருக்குப் பிடித்த வீடு என்பதால் லக்னத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு ஆன்மிக உணர்வுகளையும், நல்ல குணங்களையும் தருவார்.
பொதுவாக சனியின் ஸ்திர வீடான கும்பம் ஞான உணர்வுகளுக்குக் காரணமான வீடு என்பதால் லக்னத்தில் குரு மற்றும் சனியின் தொடர்பைப் பெறும் கேது ஒருவரை முழுமையான ஆன்மிக ஞானத்திற்குச் சொந்தக்காரராக்குவார்.
லக்னத்தோடு கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் ஒரு ஜாதகர் ஆன்மிக ஈடுபாட்டுடன் இருப்பார் என்றாலும் கும்பம் லக்னமாகி அங்கே இந்த மூன்று கிரகங்களின் தொடர்பு உள்ள நிலையில் ஜாதகர் அதீதமான ஆன்மிக எண்ணங்களுடன் இருப்பார்.
இரண்டாமிடமும் இந்த லக்னத்திற்கு குருவின் வீடாவதால் இங்கே இருக்கும் கேது தனம், ஞானம், லாபம் போன்ற பலன்களைத் தனது தசை, புக்திகளில் செய்வார். மூன்றாமிடம் உபசய ஸ்தானம் என்பதால் கும்ப லக்னத்திற்கு ஜீவனாதிபதியான செவ்வாயின் பலன்கள் அப்படியே இங்கு இருக்கும் கேதுவால் கொடுக்கப்படும். அவை நல்ல பலன்களாகவும் இருக்கும்.
கும்பத்திற்கு நான்காமிடமான சுக்கிரனின் வீட்டில் அமரும் கேது இந்த இடம் கேந்திரம் என்பதால் தனது தசையில் தாயின் நலனைக் கெடுத்துப் பலன்களைத் தருவார். ஆயினும் தாயாருக்கு என்ன வகையான கெடுதல்கள் நடக்கும் என்பதற்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் வலுவை அறியவேண்டியது அவசியம்.
ஐந்தாமிடமான புதனின் வீட்டில் இருக்கும் கேது ஐந்தின் காரகமான புத்திர பாக்கியத்தை தாமதப்படுத்துவார் அல்லது தர மறுப்பார். இந்த இடத்தில் இருக்கும் கேதுவால் ஆண் வாரிசு தோஷம் உண்டாகலாம்.
குரு மற்றும் புதனின் சுப வலுக்களைப் பொருத்து இங்கே அமரும் கேதுவால் புத்திர தோஷம் அமையும். அதேநேரத்தில் சுபர்களின் தொடர்பை மட்டும் இவ்விடத்தில் கேது பெறுவாராயின் தனது தசையில் புத்திரம் உள்ளிட்ட அனைத்து அதிர்ஷ்டங்களையும் தடையின்றித் தருவார்.
கும்பத்திற்கு ஆறாமிடத்தில் கேது அமருவது அவரது தசை, புக்திகளில் நன்மைகளைத் தராது. இங்கே இருக்கும் கேது சந்திரனைப் போல கடன் நோய் எதிரி எனும் பலன்களைத் தருவதற்கு விதிக்கப்பட்டவர் என்பதால் இங்கே கேதுவால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது.
அதேநேரம் குரு, சுக்கிரன் போன்ற சுபர்களின் தொடர்போ இணைவோ இங்கு கிடைக்கும் நிலையில் அவர்களைப் போன்ற சுபராக கேதுவும் மாறி தனது தசையில் தனலாபங்களைத் தருவார். இன்னும் ஒரு சிறப்புப் பலனாக இங்கே இருக்கும் கேது ஜாதகரை வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவைகளுக்கு அனுப்பி தனது தசை, புக்திகளில் வேலை செய்ய வைப்பார்.
ஏழாமிடமான சிம்மத்தில் இருக்கும் கேதுவால் கும்ப லக்ன ஜாதகருக்கு மண வாழ்க்கை தாமதமாகலாம். அல்லது திருப்தியற்ற மணவாழ்க்கை அமையும். சூரியனின் சுப-அசுப நிலைகளைப் பொருத்து இங்கிருக்கும் கேது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட திருமண அமைப்புகளைத் தருவார்.
பொதுவாக எந்த ஒரு லக்னத்திற்குமே ராகு-கேதுக்கள் ஏழில் இருப்பது நல்ல நிலை அல்ல எனும் நிலையில் சிம்மத்தில் இருக்கும் கேதுவால் அன்னிய மத, இன, மொழி பேசும் வாழ்க்கைத் துணை அமையலாம். இந்த இடத்தில் கேது என்ன பலன்களைத் தருவார் என்று துல்லியமாகக் கணிப்பதற்கு இங்கே அவரோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களின் வலுவைக் கணிக்க வேண்டியது அவசியம்.
எட்டாமிடமான கன்னி கேதுவிற்கு பிடித்த வீடு என்பதாலும் எட்டு எனப்படுவது சுபத்துவம் பெற்றால் வெளிநாடு, வெளிமாநிலம் போன்றவற்றைக் குறிக்கும் என்பதாலும் இங்கே சுபத்துவம் பெற்று அமரும் கேது ஜாதகரை பிறந்த இடத்தை விட்டுத் தூர அனுப்புவார்.
இந்த வீட்டின் அதிபதியான புதனும் வலுவாக இருந்து சனி, சுக்கிரன், குரு ஆகியவரின் தொடர்புகளும் கேதுவிற்கு கிடைக்கும் பட்சத்தில் கேதுதசை, புக்தி யோகங்களையும் செய்யும்.
ஒன்பதாமிடமான சுக்கிரனின் வீட்டில் அமரும் கேது ஏற்கனவே ஐந்தாமிடத்திற்குச் சொன்னதைப் போலவே இந்த வீட்டின் உயிர்க் காரகத்துவமான தந்தையைப் பாதித்து தனது தசை, புக்தியில் நற்பலன்களைச் செய்யும்.
இங்கே அமரும் கேது பாபர்களின் தொடர்பைப் பெற்றிருப்பின் ஜாதகருக்கு தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைப்பது கடினம். சில நிலைகளில் ஜாதகரின் தந்தை இருந்தும் இல்லாதவராக இருப்பார். அதாவது உயிரோடு இருந்து ஒரு தந்தைக்குரிய கடமைகளைச் செய்யாமல் பொறுப்பற்றவராக இருப்பார்.
சில நிலைகளில் கேதுதசை ஆரம்பித்ததும் தந்தைக்குப் பின்னடைவுகள் இருக்கக் கூடும். இங்கே நான் சொல்லும் பலன்கள் அனைத்தும் இந்த வீட்டின் அதிபதியான சுக்கிரனின் வலுவையும், இங்கே நீசமடையும் தந்தைக்குக் காரகனான சூரியனின் வலுவையும், கேது இந்த இடத்தில் பெறும் சுப அசுபத் தொடர்புகளைப் பொருத்தே அமையும்.
பாதக ஸ்தானத்தில் அமரும் கேது பாதகம் செய்வாரா?
மகர லக்னத்தின் பதினொன்றாமிடமான விருச்சிகம் கேதுவிற்கு நல்ல இடம் என்பதாலும், உபசய ஸ்தானங்களான மூன்று, பதினொன்றில் ராகு-கேதுக்கள் நன்மைகளைத் தருவார்கள் என்பதாலும் பதினொன்றில் கேது இருப்பது மகரத்திற்கு நன்மையான அமைப்புத்தான்.
எனினும் விருச்சிக கேது எவ்வளவு கூடுதல், குறைவான நன்மைகளைத் தருவார் என்பது செவ்வாயின் சூட்சும, சுபத்துவ வலுவைப் பொருத்தது. அதேநேரம் இந்த லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியாயிற்றே? அதிலும் பதினொன்றாம் வீடு பாதக வீடுதானே? ஏற்கனவே கேது செவ்வாயைப் போல பலன் தருவார் என்றுதானே சொன்னீர்கள். அப்படியானால் மகர லக்னத்திற்கு பதினொன்றில் அமரும் கேது பாதகத்தைச் செய்வாரா என்று கேட்கக் கூடாது.
ராகு,கேதுக்கள் ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை மட்டும் செய்வார்களே தவிர அந்தக் கிரக வீட்டின் ஆதிபத்தியத்தை அல்ல. அதாவது ஒரு கிரகம் தரும் உயிர்ச் செயல்பாடுகளை மட்டும்தான் ராகு,கேதுக்கள் தருவார்களே தவிர அந்தக் கிரகம் எந்த வீட்டிற்கு அதிபதியோ அந்த வீடு தரும் பலன்களைத் தர மாட்டார்கள்.
கேது செவ்வாயைப் போல பலன் தருவார் என்றால் ஒரு லக்னத்திற்கு கேது செவ்வாயின் ஸ்தான பலனைச் செய்வார் என்று அர்த்தம் அல்ல. மேலும் ராகு,கேதுக்கள் இருக்கும் பாவம் கெடும் என்பதால் பதினொன்றாம் பாவத்தில் அமரும் கேது அந்த பாவத்தின் பாதகாதிபத்தியத்தை கெடுக்கவே செய்வார்.
ஒரு சூட்சும நிலையில் ஒரு கிரகத்தின் காரகத்துவத்தை ராகு,கேதுக்கள் தருவார்கள் அல்லது பாதிப்பார்கள் என்பதன் உண்மையான அர்த்தம் என்னவெனில், அந்தக் கிரகத்தின் மனித உறவுமுறைக் காரகத்தை மட்டுமே ராகு கேதுக்கள் ஆளுமை செய்வார்கள் என்பதுதான்.
உதாரணமாக செவ்வாய் பூமி மற்றும் சகோதர காரகன் எனும் நிலையில் ராகு கேதுக்களால் செவ்வாயின் காரகத்துவம் பாதிக்கும் நிலை ஒரு ஜாதகத்தில் இருக்குமானால் அந்த ஜாதகரின் சகோதரன் மட்டுமே அதிகமாக பாதிக்கப்படுவார். அல்லது சகோதரனால் பிரச்னைகள் இருக்கும். அவரின் பூமி எனப்படும் சொத்துக்கள் பாதிக்கப் படுவது இரண்டாவது நிலைதான்.
அதேபோல ராகு,கேதுக்களால் குரு பாதிக்கப்படுவாரேயானால் குருவின் காரகத்துவமான புத்திரம்தான் முதன்மையாகப் பாதிக்கப்படும். தனம் அப்புறம்தான். எந்த ஒரு அமைப்பிலும் ஒரு கிரகத்தின் உயிர்க் காரகத்துவம்தான் முதலில் பாதிக்கப்படும். உயிரற்ற ஜடக் காரகத்துவம் பிறகுதான்.