மகர லக்னத்திற்கு கேது சுபர் இல்லை எனும் நிலையில் அவரால் பெரிய நன்மைகள் எதுவும் இருக்காது. மகர லக்ன நாயகனான சனிக்கு, ராகுதான் நல்ல நண்பர் என்பதால் ராகுவின் இன்னொரு முனையான கேது இந்த லக்னத்திற்கு ஒரு இக்கட்டான சூழல்களில் சூட்சும வலுப் பெற்று, லக்னத்தின் யோகர்களான சுக்கிரன், புதன் ஆகியோருடன் தொடர்பு கொள்ளும் நிலையில் மட்டுமே நன்மைகளை செய்வார்.
அதேநேரத்தில் மகரத்தின் நாயகன் சனியுடன் கேது இணையும் போது தன்னுடைய அசுப நிலைகள் மாறி ஆன்மிக ரீதியிலான சுபத்துவத்தை அடைந்து சுப பலன்களைச் செய்வார். சனியுடன் இணையும்போது மகரத்திற்கு கேது கெடுபலன்களைத் தருவதில்லை.
கேது செவ்வாயைப் போல் செயல்படுவார், ராகு சனியைப் போல் பலன் தருவார் என்று நம்முடைய மூல நூல்களில் கூறப்பட்டிருப்பதை தெளிவாக அர்த்தம் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டுமெனில், சில நிலைகளில் கேதுவைக் கேது என்று பார்க்காமல், செவ்வாயைப் போலக் கற்பனை செய்து கொண்டால் கேது தரும் நன்மை, தீமைகளை அறிய முடியும்.
உதாரணமாக மகர லக்னத்திற்குச் செவ்வாய் பாதகாதிபதியாகச் செயல்படுவார் என்பதையும் கேது செவ்வாயைப் போன்றவர் என்பதையும் பொருத்திப் பார்த்தால் சில உண்மைகள் புரிய வரும்.
லக்னத்தில் இருக்கும் கேது சனியோடு தொடர்பு கொண்டு குருவின் பார்வையிலோ அல்லது இணைவிலோ இருப்பாராயின் இங்கே குரு, சனி, கேது ஆகிய மூன்று ஆன்மிகக் கிரகங்களின் தொடர்பு லக்னத்திற்கு உண்டாகி மேற்கண்ட கிரகங்களின் தசையில் ஜாதகர் ஆன்மிகத் தொடர்புள்ளவராகவும், ஆன்மிக இடங்கள் சம்பந்தப்பட்டவராகவும், பக்தி உணர்வு மிக்கவராகவும் இருப்பார்.
இதுபோன்ற ஆன்மிக பூரண நிலைகளுக்கு இந்த மூன்று கிரகங்களைத் தவிர்த்து மற்ற கிரகங்களின் தொடர்பு இருக்கக் கூடாது என்பது முக்கியம். அப்படி வேறு கிரகங்களின் தொடர்பு கேதுவிற்கு இருக்குமாயின் அந்த கிரகங்களின் ஆதிபத்திய காரகத்துவ அமைப்புகளுக்கு ஏற்ப பலன்கள் கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கும்.
அடுத்து இரண்டாமிடமான கும்பமும், சனியின் வீடு என்பதாலும் சனியின் இன்னொரு ஸ்திர வீடான கும்பம், கேதுவிற்கு நல்ல பலன்களைத் தரும் இடமாக தமது மூல நூல்களில் சொல்லப் படுவதாலும், கேது கும்பத்தில் இருக்கும்போது எந்த ஒரு லக்னத்திற்குமே கெடுபலன்களைச் செய்வது இல்லை.
அதன்படி இரண்டாமிடத்தில் இருக்கும் கேது சுக்கிரன், புதனின் தொடர்பைப் பெற்று, ராகுவின் சதய நட்சத்திரத்தில் இல்லாத பட்சத்தில் நல்ல பலன்களைச் செய்வார்.
ஒரு முக்கிய சூட்சுமமாக ராகு-கேதுக்கள் தங்களின் சுய நட்சத்திரங்களில் இருக்கும் போது நல்ல பலன்களைச் செய்வது இல்லை. மேலும் ராகு கேதுவின் நட்சத்திரத்திலும், கேது ராகுவின் நட்சத்திரத்திலும் இருப்பதும் பெரிய நன்மைகளைத் தராது.
ஏனெனில் ஒரு ஜாதகத்தில் ராகு நன்மைகளைத் தரும் வீட்டில் இருந்தால் கேது அதற்கு நேர்மாறாக கெடுபலன் தரும் அமைப்பில் இருப்பார். உதாரணமாக ராகு-கேதுக்களுக்கு மூன்று, பதினொன்றாமிடங்கள் நல்ல பலன்களைத் தரும் இடங்களாக நமது கிரந்தங்களில் சொல்லப்பட்டுள்ளன. இதில் ராகுவோ, கேதுவோ மூன்று, பதினொன்றாமிடங்களில் இருந்தால் அதன் எதிர்முனைக் கிரகமான மற்றது இந்த மூன்று, பதினொன்றாமிடங்களுக்கு நேர் எதிர் வீடான ஐந்து, ஒன்பதில் இருக்கும்.
மூன்று, பதினொன்றாமிடங்கள் உபசய ஸ்தானமாக அமைவதால் பாபக் கிரகங்களான ராகு-கேதுகளுக்கு நன்மை தரும் இடங்களாக நமது ஞானிகளால் சொல்லப்பட்ட நிலையில் கேந்திர, கோணங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் தங்களது தசை, புக்தியில் அந்த பாவங்களைக் கெடுத்துத்தான் நன்மைகளைச் செய்வார்கள் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.
உதாரணமாக நான்காம் வீட்டில் சர்ப்பக் கிரகங்கள் இருக்குமாயின் கல்வி, தாயார், வீடு, வாகனம் போன்ற நான்காமிடத்து காரகத்துவங்களை கெடுத்துத்தான் நல்ல பலன்களைத் தரும். ஏழாமிடத்துப் பாம்புகள் மண வாழ்வைக் கெடுத்து பொருளாதார மேன்மையைத் தரும். பத்தாமிடத்தில் இருக்கும் போது ஜீவன அமைப்புகளில் பாதிப்பையும், மாற்றத்தையும் கொடுத்துத்தான் நன்மைகளை அளிக்கும்.
அதேபோல திரிகோணங்களான ஐந்து, ஒன்பதாமிடங்களில் இருந்து சர்ப்பக் கிரகங்கள் தசை நடத்தினால் ஐந்தில் இருக்கும்போது புத்திர விரயம், புத்திர விரோதம், புத்திர சோகம் அல்லது புத்திர பாக்கியத் தடை போன்றவைகளை ஏற்படுத்தித்தான் நன்மைகளைச் செய்வார்கள்.
ஒன்பதாமிடத்தில் இருக்கும் நிலையில் தந்தைக்கு பாதிப்பு உண்டு. தந்தைவழி அமைப்புகள் அனைத்தும் வீணாகும் நிலை, தந்தைவழி உறவினர் விரோதம், பூர்வீகச் சொத்தை அனுபவிக்க முடியாத நிலைமைகளை ஏற்படுத்தியே அடுத்த பலன்களைச் செய்வார்கள்.
இந்த அடிப்படையில்தான் ஜாதகத்தில் எப்போதும் ஒரு நல்ல பாவத்திலும், ஒரு கெட்ட பாவத்திலும் ராகு-கேதுக்கள் அமருவார்கள் என்பதன்படி ராகுவின் சாரத்தில் கேதுவோ, கேதுவின் சாரத்தில் ராகுவோ அமர்வது நன்மைகளைத் தருவது இல்லை.
இதையே இன்னொரு விதமாகச் சொல்லப் போனால், மகரத்திற்கு இரண்டாம் வீட்டில் இருக்கும் கேது, சதயம் நட்சத்திரத்தில் இருந்தால் அப்போது ராகு எட்டாம் வீட்டில் இருந்து அஷ்டமாதிபதியாகச் செயல்படுவார். எனவே எட்டில் இருக்கும் ராகுவின் நட்சத்திர சாரம் நல்ல பலன்களைத் தராது.
தசா,புக்திப் பலன்களைப் பார்க்கப் போவோமேயானால் ஒரு கிரகம் தன்னுடைய தசையில், தனக்குச் சாரம் கொடுத்த கிரகம், அதாவது தான் அமர்ந்த நட்சத்திர நாதன், எந்த வீடுகளுக்கு அதிபதியோ, அந்த வீடுகளின் பலனை அந்த நட்சத்திராதிபதி அமர்ந்த வீட்டின் வழியாகச் செய்யும் என்பதே ஆதார மூல விதி.
ஒரு ஜாதகத்தில் பலன் சொல்வதற்கு, ஒருவருக்கு என்ன நடக்கும், அது எப்போது நடக்கும் என்று துல்லியமாகச் சொல்வதற்கு உதவும் இந்த விதிதான் வேத ஜோதிடத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். ஜோதிடத்தின் அடிப்படைக் கட்டமைப்பு விதியான இதை நன்கு புரிந்து கொண்டால்தான் ஒரு ஜாதகத்தின் பலனைத் தெளிவாகச் சொல்ல முடியும்.
இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொல்ல வேண்டுமானால் பாரம்பரிய ஜோதிடமான வேத ஜோதிடத்தின் அடுத்த கட்ட நகர்வுகளாகக் கருதப்படும் சார ஜோதிடம், நட்சத்திர ஜோதிடம் எனும் உப நட்சத்திரத்தை வைத்துப் பலன் சொல்லும் கேபி சிஸ்டம் போன்ற புதிய முறைகள் இந்த விதியில் இருந்துதான் உருவாயின.
உதாரணமாக ஒரு மிதுன லக்ன ஜாதகத்தில் ராகு பனிரெண்டாமிடத்தில், செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் அமர்ந்து, ராகுவிற்கு சாரம் கொடுத்த செவ்வாய் மூன்றாமிடத்தில் இருந்தால், இந்த இடத்தில் ராகுவிற்கு செவ்வாயின் மூலம் மூன்று, ஆறு, பதினொன்று ஆகிய இடங்களின் தொடர்பு கிடைக்கிறது.
ராகுவின் நட்சத்திர நாதன் செவ்வாய் மூன்றில் அமர்ந்திருப்பதாலும், மூன்றாம் வீடான சிம்மம் செவ்வாய்க்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடு என்பதாலும், இந்த வீட்டில் செவ்வாய் சுபத்துவம் பெறுவார் என்பதாலும், ராகு தனது தசையில் மூன்றாம் வீட்டின் சுப ஆதிபத்தியங்களான தைரியம், வீரியம், இசை, எழுத்து, புகழ், ஆபரணம், காது போன்றவைகள் மூலம் நன்மைகளையோ, தீமைகளையோ ஆறு, பதினொன்றாம் வீடுகளின் வழியே செய்வார்.
இதில் ராகு தரும் நன்மைகளையோ, தீமைகளையோ துல்லியமாகக் கணிக்க ராகு இருக்கும் வீடான ரிஷபம் அவருக்கு யோகமான வீடா, அவர் இருக்கும் பனிரெண்டாம் பாவம் நல்லதா கெட்டதா, ராகுவிற்கு வீடு கொடுத்த சுக்கிரனின் நிலை என்ன, ராகுவுடன் யாராவது இணைந்திருக்கிறார்களா, இணைந்திருந்தால் எத்தனை டிகிரிக்குள் இருக்கிறார்கள், ராகுவை யார் பார்க்கிறார்கள், ராகுவின் நட்சத்திர நாதனோ, ராகுவிற்கு வீடு கொடுத்தவனோ, ராகுவிற்கு சஷ்டாஷ்டகமாக இருக்கிறார்களா, நவாம்சத்தில் ராகுவின் நிலை என்ன என்பதை வைத்துச் சரியாகச் சொல்ல முடியும்.
எனவே இதுபோன்ற நிலைமைகளில் ராகு அல்லது கேது அடுத்த கிரகங்களின் நட்சத்திரங்களில் அமரும்போது அவர்கள் தரும் பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணிக்க இயலும். ஆனால் ராகு–கேதுக்கள் தங்களின் சொந்த நட்சத்திரங்களிலோ அல்லது ஒருவர் மற்றவரின் நட்சத்திரங்களிலோ அமரும்போது என்ன பலன்களைத் தருவார்கள் என்று கணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கும்.
உதாரணமாக கும்பத்தில் சதய நட்சத்திரத்திலும், மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்திலும், துலாத்தில் சுவாதி நட்சத்திரத்திலும் அமரும் ராகு நல்ல பலன்களைத் தருவாரா? கெட்ட பலன்களை தருவாரா? என்பதைக் கணிக்க அபாரமான ஞானம் தேவைப்படும். இதேபோலதான் மேஷத்தில் அஸ்வினியிலும், சிம்மத்தில் மகத்திலும், தனுசில் மூல நட்சத்திரத்திலும் அமரும் கேது தரும் பலன்களையும் கணிப்பது சிரமம்.